சூரியக்குருவி-கவிதை- கவிஞர் திருமாவளவன் நினைவாக

சூரியக்குருவி

திருமாவளவன்

இலை உதிர்த்த
வில்லோ மர எலும்புக் கூட்டின் மேல்
குந்தியிருக்கிறது
சூரியக் குருவி
சன்னலின் விலகிய திரையினூடு
படுக்கையறையில்
பெருகி வழிகிறது
அதன் கழுகுப் பார்வை
அறை நிறைக் சூரியக் குருதி

வெய்யில் ஊறி
என் போர்வை முழுவதும்
ஈரம்

ஈரம் சுட
என் தூக்கம் கலைய
இமை அவிழ்ந்தது
பகல் விரிந்தது

ஒரு கண் கொத்திப் பாம்பென
விழிமேற் குறிவைத்துப் பாய்கிறான்
வெய்யோன்
விழிச்சிறகுகளால் அடித்து வீழ்த்துகிறேன்
மூலையிலே சுருள்கிறான்

வெளியே
சொட்டுநீலத்தில் அலசி
உலர்த்தி வைத்த பின்முற்றம்
மரங்களில் மலர்ந்தும்
மண்ணில் மல்லார்ந்தும் கிடக்கிறது
பனிப்ப+

சாயமிடு நாளாகி
வெண்மை மின்னலடிக்கும்
தாடியை தடவிக் கொள்கிறேன்
மனக் குவளையில் ததும்புகிறது
இளம் காலை

சோம்பல் முறித்து சன்னல் திறந்தேன்
மூஞ்சியிலே
காறித் துப்பிவிட்டுப் போகிறது
பாலைக் குளிர்

அறைந்து மூடினேன்

முரண்களை எதிர் கொள்ள
கைகுலுக்கிச் சுகிக்க
இன்னமும்
நெடுந்தூரம் நடக்கவேண்டும்
நான்.

இலையுதிர்காலம் 2006

திருமாவளவன்-கனடா

திருமாவளவன்

(Visited 47 times, 1 visits today)