குரும்பட்டித் தேர்-கவிதை-மாலினி மாலா

 

மாலினி மாலா

இணைத்துக் குத்திய
குரும்பட்டிகள் இன்னும்
காயாமலே காத்திருக்கின்றன
நடந்து வந்த மனப் பாதை
மருங்குகளில்,

குத்திக் கோர்த்த
ஈர்க்கங் குச்சிகளின்
பிஞ்சுப் பாத ஞாபகங்களை
பசுமை மாறாமலே பாதுகாக்கின்றன
உதிர்த்த தென்னங் கீற்றுக்களின்
வரியோடிய வடுக்கள்.

அன்னை வயிற்றுப்பனிக்குடத்து
ஜீவநீருக்குப் பின் நீராடிச் சுவாசித்த
கோடிவேலி சங்குப் பூவும்
பூனை முடி வருடி தலைநுரைத்த
கிணற்றடிச் செவ்விரத்தையும்
எல்லாவிடியல்களிலும் என்
முதற் புன்னகையை மலர்த்திய
வாசற்கரைப் பொன்னரளியும்
கடவுளின் காலடியில்
உதிர்ந்து கொண்டே காத்திருக்கின்றன,

என்றும் மறக்கவொண்ணாத
ஆத்மாவைத் தீண்டிய
நாதஸ்வரத்தின் ஓசைக்காய் ஏங்கும்
வேலியோரப் பூவரசுகள்
ஒரு திருவிழாக் கனவின்
மயக்கத்தில் இன்னும்
துளிர்த்துக் கொண்டிருக்கின்றன.

சீனி மூடிவைத்த
அம்மாவின் லக்ஸ்பிறே பேணிகள்
கறல் அப்பி உக்கி
உதிரத் தொடங்கியபின்னும்
குப்பை மூடிய கோடிக் கிடங்கிற்குள்
சீவனின் கடைசி மூச்சை
இழுத்துப்பிடித்து கிழுவஞ்சுள்ளிக்கருகே
தவமிருக்கின்றன
ஒரு தாளம் தப்பாத காலத்து
தவிற்பாடலுக்காய்

தேரை இழுத்து
தெருவில் விட்ட
நீயும் ,நானும் , அவர்களும்
இருப்பிடம் சேர்க்க
வந்துவிடுவோமென்ற
மாறாத நம்பிக்கையுடன்
காத்திருக்கும் அவற்றுக்கு

நீயும், நானும், அவர்களும்
காலங்களைக் கல்லறைக்குள்
வைத்து விட்டுக் கடந்து
சென்று விட்ட
காலத்தின் கட்டாயச்சேதியை
அவற்றின் மொழியில் இனி
எப் பிஞ்சுக் குரலுரைக்கும் ?

மாலினி – ஜெர்மனி
13.01.18

மாலினி மாலா

(Visited 166 times, 1 visits today)