“பாத்திமா மின்ஹா”வின் கவிதைகள்

ரீங்காரம்

பாத்திமா மின்ஹா

உச்சிமுகர்ந்த இரவின் வாசனை
பகல் சிந்திய அயர்ச்சியைக்
களிப்புறச் செய்திருந்தது

மங்கலுக்கு அடுத்த நிலை
பிரகாசத்திலும் மிக குறைவு
தனிமையின் திரியும்
விளக்கின் ஒளியும்
பேனா மைக்கிறுக்கலும்
புயலென மையம் கொண்ட
சுழற்படையாகின

வீண்மீன்கள் உதிர்ந்த சிறுகற்குவியலுக்கு
எறிந்து கலைக்க நிசப்தமான குட்டை கேட்கிறது விரல்கள்-அன்று மட்டும்
ஈரத்திற்கு விடுமுறை
வரட்சிக்குக் கோடை

அடிக்கடி இசைக்கும் வண்டுகள்
தலைக்குள் முகாமிட்டிருந்தன
துருவிக்கிடக்கும் மனதின் பூக்களைப்
பிழிந்த சாரத்தில் போதையுற்று
அவை மயங்கிக்கிடந்தன

உள்ளிருந்த எதிரொலிகள்
உறைநிலை எய்திய கைகளை
மெல்ல அசையச்செய்த போது தான்
இறுகப்பற்றியிருந்த நுதல்
பெரும்வாதையிலிருந்தும்
விடுபட்டிருந்தது

இப்போது நான் எங்கே என
பல முறை வினவிக்கொண்டு நிற்கிறேன் ஆனாலும்
அவள் பதிலளிக்கவில்லை

0000000000000000000000000

செம்மழை

என்னுடன் எரிகிறது
அக்கினி வெயில்

இளமஞ்சள் நிறப்பூக்களுக்கு
கடுமை ஏற்றி அழுத்துகின்ற – செம்மை
பதிந்த பற்களின் தடங்கள்
அதரமெங்கும் செஞ்சந்தணத்தீட்டு

மௌனித்து விழுங்கிய எச்சிலுக்குள்
மரணத்திருக்கின்றன
வார்த்தைகள்

ஒட்டிப்போன உடலம்
எலும்புகளுக்குள்
செரித்து செரித்து
வெறுமையின் இருப்பில்
மணல் நிரப்புகின்றது

தன் தணல் தணிக்கும்
காற்றின் ஆற்றாமைக்குள்
மௌனித்திருக்கும் புயலின்
வீச்சுக்குள் கசிகிறது வதம்

சுவாசிக்க அவகாசம் கேட்டு
மண்டியிட்டுச் சரணடையும்
திமிரின் இறுதிப்புன்னகைக்குள்
ஒடுங்கியிருக்கிறது மழை

பாத்திமா மின்ஹா(மின்மினி )-இலங்கை

(Visited 130 times, 1 visits today)
 
பாத்திமா மின்ஹா

கவிதை -பாத்திமா மின்ஹா

நிறுத்தி வைக்க அவகாசமற்றுத் திணறுகின்றது அகாலம் கனவொன்றினைப் பிணைந்துள்ள விரல்களை மெதுவாகத் தளர்க்கின்றேன் இமைகளுக்குள் புரளும் அலைமடிப்புகள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குவிகின்றன கண்களுக்கு வெளியே பெருகுகின்றது நீலக்கடல் நீர்ச்சுனைகளாகப் பிரிந்து […]