ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

வாசகன்

ஏ.நஸ்புள்ளாஹ்

சில சொற்களை தேடியலைந்து
இறுதியாய்
யாரோ நூலகத்தில் அடிக்கி வைத்திருந்த
சொற்களை சந்திக்க கிடைத்தது
பின் அச்சொற்களை அழைத்துக் கொண்டு
எனக்கு விருப்பமான பூங்காவுக்குள் நுழைந்தேன்
எனக்கு வாசகனை பிடிக்குமென்றன சொற்கள்
எனக்கு சொற்களைப் பிடிக்குமென்றேன்
இவ்வளவு காலமாய் எங்கிருந்தாய் என சொற்கள் கேட்டன
இவ்வளவு காலமாய் உங்களைத்தான்
தேடியலைந்தேன் என்றேன்
எங்களைப் படைத்தவன் மரணித்துவிட்டான்
என்றன சொற்கள்
நீங்கள் மரணிக்கவில்லை என்றேன்
இரவின் மீதும் பகலின் மீதும் சத்தரியமாக
சில தசாப்தங்களாக இருளில் இருக்கிறோம் என்றன சொற்கள்
நீங்கள் தனித்திருந்த
இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியமாக
மீதமிருக்கும் காலமெல்லாம்
வாசகனின் பிரதியாய் புழக்கத்திலிருப்பீர்கள் என்றேன்
சாத்தானின் பெயரால் பொய் சொல்லாதே
என்றன சொற்கள்.

00000000000000000000000

இடம்பெயர்வு

காடுகளை விட்டும் பறவைகள் வெளியேறி
நகரங்களுக்குள்
வசிக்க விரும்பி அங்கு
கூடுகளை அமைக்க இடம் தேடியலைந்தது
மனிதர்கள் பறவைகளை
நாடோடிகளைப் போல்
ஒப்பனை செய்து பார்க்கத் தொடங்கினார்கள்
ஆலையங்கள்,உயர்ந்த கட்டிடங்கள் என
பறவைகள் தமது இருப்பிடங்களை
அமைத்துக் கொண்டன
பறவைகளின் ரெக்கைகளில்
நாடோடிகள் என்ற வாசகத்தை பொருத்தி
பறக்க விட்டார்கள் மனிதர்கள்
நாள்தோறும் சம்பவம் வளரத்தொடங்கியது
அக்கணங்களில் கண்ணாடித் துண்டுகளாய்
பறவைளின் மனங்கள் உடைந்து
தலைகளில் இறங்கின
மறுகணமே பறவைகள் நகரங்களை விட்டும்
வெளியேறி காடுகளை வந்தடைந்தன
ஒரு நாள்
நகரங்கள் அனர்தத்தில் அழுகி சடலமாய் கிடந்தன
மனிதர்கள் காடுகளை நோக்கிய
நெடும் பயணிகளானார்கள்.

0000000000000000

பட்டாம் பூச்சி

மலை உச்சியின் மீது
அந்த பட்டாம் பூசி எப்படி பறந்து
வந்திருக்குமென்பதில்
எனக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன
பட்டாம் பூச்சியால் எப்படி
ஒரு மலையை அடையமுடியும்
பட்டாம் பூச்சி
கழுகு போன்றதொரு பறவையோ
அப்படியில்லையெனில்
குறைந்த பட்சம் சிட்டுக் குருவியை ஒத்த
ஒரு இனம்கூட இல்லை
ஒன்று மலையை நகர்த்தி
பட்டாம் பூச்சியை அதன் மேல் வைத்திருக்க வேண்டும்
அப்படியுமில்லையெனில்
பட்டாம் பூச்சியை தூக்கி
மலை மேல் வைத்திருக்க வேண்டும் மகள்
அதன் அழகுதான் கோட்டோவியம்
நன்றாக வந்திருக்கிறது.

ஏ.நஸ்புள்ளாஹ்-இலங்கை

ஏ.நஸ்புள்ளாஹ்

(Visited 83 times, 1 visits today)