ஜெயதர்மன் கவிதைகள்

ஒற்றைச் செருப்புடன் திரியும் இளவரசன்

ஜெயதர்மன்

பச்சையும் பனியும்
பகிரப்படாத தட்டுகளில்
அவனுக்கான பங்கு
நிறைந்து வழிந்தோடியது

அள்ள அள்ள குறையாத
அமுதசுரபிகளை
அவனுடைய தாத்தா
பிட்டங்களின் பின்னே
மறைத்து வைத்திருந்தார் …

தாத்தாவின்
இரு வர்ண செருப்புகளை
அணிந்து கொண்டால்
அவை
வசப்படக்கூடும்?

ஒரு நாள்
தாத்தாவின் துர்மரணம்
அவனை
இளவரசனாக்கியது

எதையும்
கற்றுக் கொள்ள முடியாதபடி
பிதுங்கிவழியும்
அமுத சுரபிகள்
சதா அவனை அலைக்கழித்தன ……

அதிகாரத்தின்
வெகு நாட்களின் மதியம்
இரு வர்ண செருப்புகளிலொன்று
காணாமல் போயிற்று …..

அவன் இளவரசன்….!

ஒற்றைச் செருப்பின்றி
அமுத சுரபிகள்
ஒவ்வொன்றாய்
ஓடி மறைந்தன

வெகு நாட்கள்
ஒற்றைச் செருப்புடன்
மலைக் காடுகளில்
அலைந்து திரிந்தான் …
போனது வரவேயில்லை.

ஒருநாள்
அது அவனது
அகால மரணத்தின்
அடுத்த நாள் …

காணாமல் போன
ஒற்றைச் செருப்பு
லயத்தின் கோடி மூலையில்
சகதியில்
கேட்பாரற்று கிடந்தது…!

– ஜெயதர்மன் –

000000000000000000000000000000

பனியும் அவளும்

ஜெயதர்மன்

பின் ஜாமத்தின் மதியத்தில்
மலையின்
உச்சியிலிருந்து கீழிறங்கியது
பனி ……

கூர்மையான ஈட்டிகளையும்
அறுக்கும் வாள்களையும்
ஏந்திய படி
போர் வீரனாய் விரைந்திறங்கியது

மொட்டுகளின்
பனிக்குடங்களை
உடைத்து எக்காளமிட்டபடி …

இலைகளின் விளிம்புகளை
சாணைப் பிடித்து
கூர்மையாக்கியபடி …..

பாறைகளுக்குள் பதுங்கியிருக்கும்
சூரிய குஞ்சுகளை
மிதித்து மிரட்டியது …..

சலசலக்கும் ஓடைகளை
உறைய வைத்து
கடந்துச் சென்றது …….

லயத்துக் கூரைகளில்
அமர்ந்து
ஓட்டைகளால் ஒழுகி
அந்தரங்கம் தேடும்
களவானியாய் காத்திருந்தது ……

ஆனால்

கூடையுடன் மலையேறும்
அவளிடம் மட்டும்
எஜமானை பின்தொடரும்
நாய்க்குட்டியாய்
வாலாட்டிச் சென்றது.

ஜெயதர்மன் -இலங்கை 

 

(Visited 56 times, 1 visits today)
 
ஜெயதர்மன்

தலைவனது மரணம்- கவிதை- ஜெயதர்மன்

தலைவனது மரணம் அவன் பல நண்பர்களை உருவாக்குவதில் வல்லவனாகயிருந்தான்,,,,,, எதிரிகளின் பாசறைகள் தோறும் நண்பர்களுக்கான விதைகளை தூவி விட்டான்,,,,! எவரிடமும் வளைந்து கொடுக்காத ஆயுதங்கள், அவர்களிடம் இருப்பதாக தட்டிக் கொடுத்தான்,,, […]