சங்கரின் பெண்டகன்-கவிதை-பாலைவன லாந்தர்

அப்பா

பாலைவன லாந்தர்

கிழிந்தே போகாத காலணிகளும்
உடைந்தே போகாத வளையல்களும்
வெய்யிலில் மண்டியிடச் சொல்லாத வாத்தியாரும்
எப்போதப்பா கிடைக்கப் பெறுவேன்
“நாளை இரவு வரை பொறுத்திரு மகளே”
அலைபேசியை முடுக்கி
“ நாளை நானும் சம்பவத்திற்கு வருகிறேன் “ என்றான்

நண்பா

பாலைவன லாந்தர்

இந்த பாவப்பட்ட மனிதனின்
சின்னஞ்சிறு மனசாட்சியை
அதைவிட சிறிய மதுக்கோப்பைகள்
தின்று விடுகின்றன பார்த்தாயா
விரல்கள் நடுங்காமல் ஒருவனின்
குரல்வளையை அறுக்க
இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொடு
நாளை சம்பவம் இருக்கிறது

பாவி மகளே

பாலைவன லாந்தர்

ஆயிரமாயிரமாண்டுகளானாலும்
எனது ஆதிக்க வெறியைத் தூண்டும் குருதியிலிருந்து
அடிவயிற்றுக் கொதிப்பை எங்கனம் பிரித்தெடுப்பேன்
நாளை வெட்டி வீசும் திசுக்களிலிருந்து
இந்த வெறியை விதைத்த மூதாதையனை கண்டறிந்தால்
எனது சார்பிலும் காறி உமிழ்ந்துவிடு

சங்கர்

பாலைவன லாந்தர்

நீயும் நானும்
நரம்புகளால் கட்டப்பட்ட குடுவைகளில்
நிரம்பியிருக்கும் உயிரென்னும் திரவங்கள்
உன்னை ஊற்றி என்னை நிரப்ப
யாரை கேட்க வேண்டும்
இந்த மதிகெட்ட சமூகத்தில்
இன்னும் எத்தனை நொடிகள்
நமக்கென எழுதப்பட்டிருக்கின்றனவோ
அதுவரை நீட்சி செய்

தம்பி

பாலைவன லாந்தர்

பார்த்து சூதானமாக நடந்துகொள்
மறக்காமல் உனது இருதயத்தை வீட்டிலேயே விட்டுச்செல்
ஊர் கெட்டுப்போச்சு
உலகம் நாசமாக போச்சு
கண்களில் காண்பதற்கெல்லாம்
பொங்கித் தொலைத்துவிடாதே
யாரோ யாரையோ என்னவோ
செய்துவிட்டுப்போகட்டுமே
நீ கண்டும் காணாமல் கடந்துப் போய்விடு
ஏனெனில்
நமக்கு நாம் முக்கியமப்பா

பாலைவன லாந்தர்-இந்தியா

பாலைவன லாந்தர்

(Visited 85 times, 1 visits today)