ஏரி முதிரா இளநாம்பன் கன்றுகள்-சிறப்புஎழுத்துகள் -கல்வயல் வே.குமாரசாமி

ஏரி நிமிரா இளநாம்பன் கன்றுகள்

கல்வயல் வே.குமாரசாமி

ஊர் நிமிர
நாளை உழைக்க வளர்த்து எடுத்த
ஏரி நிமிரா இளநாம்பன் கன்றுகள்
பாரா முகமாய் இருக்க முடிஞ்சிடுமே!
வேலி பிரிச்சு
அவற்றை வெளியாலை கொண்டு போய்
காலித்தனம் பண்ணக் கண்டும்
பொறுக்கிறதே!
நாளுக்கு நாளாக
நாற்பது ஐம்பதுவாய்
ஆளுக்காளாய் வந்து
கொண்டெல்லே போறாங்கள்
பச்சை உயிராகப் பார்த்திருக்கக்
கொண்டு போய்ப்
பிச்சுப்
பிடுங்கி உயிரும் எடுத்து….
“விடுகாலி நாம்பன் கதையை
விடுங்கோ” வாம்!
“பயிரழிவு” என்று
பழி சுமத்திப் போட்டவங்கள்
உயிரழிவும் செய்தல்லே
ஊருலகைப் பேய்க்காட்டி
நீதிக்குச்
சீலை உரிஞ்சு பறிச்செடுத்து
வீதியெல்லாம்
நிர்வாண வேடிக்கை செய்யிறதைப்
பார்த்து
நெடுகப் பெருமூச்சு விட்டென்ன?
ஊர்த்துளவாரம் எமக்கேன்?
என இருந்தால்
எல்லோரும் ஏன்
சும்மா ஏங்கிப் போய் நிற்கிறியள்?
பல்லைக் கடிச்சு
நெருடி அவன் பார்த்தால்
உண்மைகளைக் கட்டி ஒழிச்சால்
முடிஞ்சிடுமே!
மாட்டைப் பிடிச்சவங்கள்
வீட்டைப் பிடிக்க
மணிக்கணக்கே செல்லும்
எழும்புங்கோ வன் கெதியாய்

கல்வயல் வே.குமாரசாமி (மரண நனவுகள்)

கல்வயல் வே.குமாரசாமி

(Visited 70 times, 1 visits today)