தி.சோ.வேணுகோபாலன்-சிறப்பு எழுத்துகள்

கவி வேதனை

தி.சோ.வேணுகோபாலன்

சின்னஞ் சிறிய திரி,
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு,
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்,
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது!
போகட்டும்.
சின்னஞ் சிறு விட்டில்,
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது!
போகட்டும்.
ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது
வட்டங் குறுகியது.
சொட்டாமல்த்
திரி நுனியில்
நிற்கும் ஒளித்திவலை
மெய் தீண்டும் காட்சி
‘சொய்’ என்னும் விசும்பல்.
ஒளியின் குரலா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.
என்னடா இதிலும்
தத்துவ மயக்கா?
தெரியாது!
போகட்டும்.
மீண்டும் ஒரு விட்டில்,
தூண்டாத் திரியின்மேல்
பாய்ந்து விழுந்தது.
‘சொய்’ என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது,
‘மை’யாச்சு சிறகு.
வெட்ட வெளிவட்டம்
முட்டிச் சிதறி விழும்
சுடர்த்தலை அழுந்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில் ‘மை’ச்சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள் கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப் பொருளா?
தெரியாது!
போகட்டும்.

00000000000000000000

தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்.
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது!
போகட்டும்.
எழுத்தாளன் எங்கே ?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது;
பதில் ஒரு குழறல்.
இருட்குகை ஒன்றில்
இலக்கியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்.
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?

000000000000000000000000

எனக்குத் தெரியவே
தெரியாது!
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.

எழுத்து, பிப்ரவரி 1959.
(புதுக்கவிதை முன்னோடிகளுக்குப் பின்
எழுத்து‘வில் தோன்றிய முதல் புதுக்கவிதை

0000000000000000000000000

நான் கவியானேன்

முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்: கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!

கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:

பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
‘கவி-யானேனே!’

தி சோ வேணுகோபாலனின் கோடைவயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது.

தி.சோ.வேணுகோபாலன்- இந்தியா

0000000000000000000000000000000000

 

தி.சோ.வேணுகோபாலன் பற்றிய குறிப்பு:

தி.சோ.வேணுகோபாலன்7.11.1929-ல் பிறந்த திருவையாறு சோ. வேணுகோபாலன், சென்னை லயோலாவில் பி.எஸ்சி., ராஜஸ்தானிலுள்ள பிலானில் மெக்கானிக்கல் என்ஜினீரிங்கில் பி.இ. படித்தவர். கர்நாடகாவில் உள்ள மணிப்பால் நகரில் பொறியியல் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியாகப் பணியாற்றியவர். 1959-ல் சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ என்ற முதல் இலக்கியச் சிறுபத்திரிகையில், முதன்முதலில் ஒரு புதுக்கவிதையை எழுதிய (எழுத்து தலைமுறையின் முதல் கவிஞர்) தி.சோ.வே. தமது இறுதிக்காலத்தில் குடும்பப் பராமரிப்பற்று, தனியாக ஒரு முதியோர் இல்லத்தில் திருவானைக்காவில் இருந்தார். அன்று மிக முக்கியமான கவிஞராக புதுக்கவிதைக்கு உந்துசக்தியைத் தந்தவர் என்றாலும் பின்பு அவர் சி.மணியை விட அதிகம் கைவிடப்பட்டவரானார். வெளிவந்த கவிதைத் தொகுதிகள் ‘கோடை வயல்’ (எழுத்து பிரசுரம், 1965), ‘மீட்சி விண்ணப்பம்’ (க்ரியா).

(Visited 2,959 times, 1 visits today)