விஷம்-கவிதை-பாலைவன லாந்தர்

விஷம்

மிடறு இறக்கிய முதல் துளியில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்து கொண்டீர்கள்
சட்டென விழுங்காமல் தொண்டைக்கும் உதட்டுக்கும் இடைப்பட்ட மீச்சிறு பள்ளத்தாக்கில் பதுக்கி கொண்டீர்கள்
பொறுமையாக யாரும் காணாத ஒருநொடிக்காக காத்திருந்து உமிந்து விட்டீர்கள்

இப்போது
இந்தக் கூட்டத்தில் யார் உங்களுக்கு விஷம் தந்தார் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்க தொடங்குகிறீர்
நீங்கள் உற்றுப்பார்க்கும் ஒவ்வொருவருமே கலவரமாகத்தான் காட்சி அளிக்கிறார்கள்
இதில் யாரை தேர்ந்தெடுப்பது
சப்தமாக சிரிப்பவர்களை
உங்கள் பெயரை அதிகமாக உச்சரிப்பவர்களை
எதிலும் பங்கேற்காமல் தனித்து அமர்ந்திருப்பவர்களை
எல்லோரையும் சந்தேகிக்கிறீர்கள்
உங்கள் கடந்த கால தோல்விகளை நினைத்து பார்க்கிறீர்கள்
வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டு ஓடிப்போன தோல்விகளை
யாரோ சூனியம் வைத்திருக்கிறார் என அடிக்கடி பிதற்றிக் கொண்டே இருப்பீர்கள்
ஏதோ ஒரு துரோகத்தின் பொருட்டு எல்லோர் மீதும் சந்தேகத்தீ எரியத் தொடங்குகிறது
ஒரு தோல்வியின் பொருட்டு மற்ற வெற்றிகளை கொண்டாட மறுக்கிறீர்கள்
ஒரு விரோதியின் பொருட்டு நண்பர்களை தள்ளி வைக்கிறீர்கள்
உலகத்தின் பழுத்த தாள்களில் உங்களை போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
இந்தக் கலவரத்தில் விஷம் கொடுத்தவன் காணாமல் போய் விடுகிறான்
இப்போது விஷம் சித்தாந்தத்தில் ஏறிக் கொண்டது

0000000000000000000000000000

நிலவு

பாலைவன லாந்தர்

இரண்டாமாட்டம் பார்த்துவிட்டு தள்ளாடியபடியே தாமதமாக வருகிறது நிலவு
பூங்காவில் பதுங்கிக் கிடந்த நாய்களின் மீது பாய்கிறது ஒளி
கண்கள் கூசிக் கலைந்த நாய்கள்
குரைத்தப்படி நிலவை விரட்டுகின்றன
மையல் தடைபட்ட காகங்கள் நாய்களின் மீது சிறிய குச்சிகளை வீசுகின்றன
நள்ளிரவு வாகனம் ஓட்டுபவர்களின் முகப்புக் கண்ணாடியில் துள்ளித் துள்ளிக் குதிக்கிறது நிலவு
மகிழுந்து ஒன்றில் பரவும் நிலவொளி
மூன்று நிறுத்தங்கள் தள்ளி இறங்கிக் கொள்கிறது
கையூட்டு பெற கைகளை நீட்டும் அதிகாரியின் மீது பாய்கிறது
கோபத்துடன் நிலவை சிறைப்பிடிக்கிறார்
நிலவு கம்பி எண்ணுகிறது
ஒன்று மூன்று ஐந்து
நெடுஞ்சாலையில் குல்பி ஐஸ் விற்பவர் மணி அடிக்கிறார்
சிறைக்காவலாளி சன்னல் வழியாக செல்கின்ற குல்பிகளை வாங்குகிறார்
நிலவுக்கு நாக்கு வரண்டுப் போகிறது
காற்று நிலவை காப்பாற்றி ஜாமீன் எடுக்கிறது
சோர்ந்தபடி சாலையில் நடக்கும் நிலவை
இளையராஜா இசையில் இணையுமாறு அழைக்கிறார்
கொஞ்சம் மகிழ்வோடு இசைந்து கொடுக்கிறது
இரவு முடிவுக்கு வரும்போது வீட்டின் நினைவு அதிகமாகி வேகமாக ஓடுகிறது
வீட்டுக்குள் பாயும் நிலவை ஷ்ஷ்ஷ் என்று சொல்லி
குடுவைத் தண்ணீருக்குள் அடைத்து வைக்கிறாள் சிறுமி
விடிந்தவுடன் சூரியன் பரவிய முற்றத்தில் தெளித்து
முகம் கழுவுகிறாள்
மைக்ரோ புள்ளியில் சூரியனை முத்தமிட்டு உறங்கிப் போகிறது நிலவு
மீண்டும் இரவு வரும்

பாலைவன லாந்தர் – இந்தியா

பாலைவன லாந்தர்

(Visited 180 times, 1 visits today)
 

2 thoughts on “விஷம்-கவிதை-பாலைவன லாந்தர்”

Comments are closed.