ஜெம்சித் ஸமான் கவிதைகள்

ஜெம்சித் ஸமான்

இன்று ஒரு
ஓவியனை சந்தித்தேன்
முதலில்
காட்டை வரைந்தான்
பின்
ஒவ்வொரு மிருகங்களாக
வரைய ஆரம்பித்தான்
மான் குட்டியின் பக்கத்தில்
ஒரு சிறுத்தையை வரைந்த போது
இரண்டும்
உயிர்பெற்றுக் கொண்டன
உயிருக்குப் பயந்த மான் குட்டி
காடு மேடெல்லாம் ஓடியது
பசியோடிருந்த சிறுத்தை
வேட்டையாட துரத்திச் சென்றது
ஓவியன் அதனை
விளையாட்டைப்போல
ரசித்து ரசித்து
சிரித்துக் கொண்டிருந்தான்
தீராப் பசியோடு
மான் குட்டியை நெருங்கிய சிறுத்தையை
நொடிப் பொழுதில்
மான் குட்டியாக மாற்றிவிட்டான்
சிறிது சிறிது நேரத்திற்குள்
அவன் சிறுத்தையாகவும்
மான் குட்டியாகவும்
மாறிக்கொண்டிருந்தான்.

00000000000000000000000

பொழுது போகவில்லை
கற்பனையால்
ஒரு குளம் அமைத்து
கரையில் அமர்கிறேன்
தூண்டில் கணையோடு
ஒருவன் வருகிறான்
முள்ளில் இரைகோர்த்து
நீரில் போடுகிறான்
நீருக்கு அடியில்
மீன்களும்
இரை புழுவும்
முதல் சந்திப்பிலேயே
தோழமைகளாகின
ஒவ்வொரு முறை
தூண்டிலிடப்படும் போதும்
உரையாடித் திரும்பின
இது
மீன்களை வேட்டையாட முடியாத
குளம் என்பதை
மிக மிக தாமதமாகத்தான்
அவன் புரிந்து கொண்டான்.

00000000000000000000000

நீரில்
எங்கோ
நீர் துளி விழும் சப்தம்
நான்
நீர்க்குமிழியாகிறேன்
நீரில்
எங்கோ
நீர்க் குமிழ் வெடிக்கும்
மௌனம்
நான்
நீர்த் துளிகளாகிறேன்
நீரில்
எங்கோ
நீர்த் துளிகள் விழுகின்ற சப்தம்
நான் நீர்க்குமிழ்களாகிறேன்
போதும் போதும்
நான்
வெடித்து சிதறுவதற்கு முன்
இந்த விளையாட்டை
நிறுத்தி கொள்கிறேன்

ஜெம்சித் ஸமான்-இலங்கை

ஜெம்சித் ஸமான்

(Visited 97 times, 1 visits today)