காகங்களின் கவனத்திற்கு-கவிதை-பிரகாசக்கவி

காகங்களின் கவனத்திற்கு

பிரகாசக்கவி

முன்னொரு காலத்தில்
மலம் தின்று உயிர்வாழ்ந்த காகங்கள்
மனித நாகரீக வளர்ச்சியின் பயனாக
சோறு கறி
இறந்த பிராணிகளின்
மாமிசங்களை தின்றன

பின்னர் அவை
கொத்துரொட்டி பிரைட்ரைஸ்
பீட்சா பர்கர்
சான்வீச் போன்றவற்றை தின்றன

ஆனால்
மனிதன் மீண்டும் மீண்டும்
நவ நாகரீகமடைந்ததன் விளைவாக

காகங்கள் சொப்பின் பேக்குகளையும்
லஞ் சீட்களையும்
உணவாக உண்ணுகின்றன இன்று

காகம் பற்றி
எனது நினைவேட்டில் எழுதப்பட்டிருந்த
குறிப்புக்களை தூக்கிக்கொண்டு
மனைவியிடம் ஓடினேன்

அதனை வாசித்த அவள்
வழமையாக
எங்கள் வீட்டுக்கு வரும் சில காகங்களை
இரண்டு நாட்களாக
காணவில்லை
என்கின்ற முறைப்பாட்டை பதிவுசெய்தால்

சம்பவம் பற்றி அறிந்து கொள்ள
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த
நேற்று இன்று நாளை என்கின்ற
திரைப்படத்திற்குள் துள்ளிக்குதித்த நான்

கதாநாயகனின் உதவியோடு
அங்கிருந்த டைம் மெசினில் ஏறி
இரண்டு நாட்கள் முன்னோக்கி நகர்ந்தேன்

லஞ்சீட்டை தின்று
ஸ்தலத்திலேயே செத்துப்போன
காகங்களின் நிலை கண்டு
பரிதாபம் நெஞ்சடைத்ததால்

இன்னும் பத்தாண்டுகளில்
இந்த காகங்களின்
நிலை என்னவென்று அறிய
ஆவல் கொண்டு பார்த்தேன்

அங்கே

உலக அதிசயங்களின் வரிசையில்
புதிதாக இணைந்து கொண்ட
பறவையின் பெயர் காகம் என்பதாக
பிள்ளைகள் தங்களது வினாத்தாளில்
விடை எழுதிக்கொண்டிருந்தார்கள்

0000000000000000000000000

கூகுள் என்னும் பழைய கல்வெட்டு

நீண்ட
கடும் தவத்தின் பயனாக
இன்று அதிகாலை
நானொரு கனவுக்குள்
தடுக்கி விழுந்தேன்

அங்கே

கனவின் முதலாம் காட்சிக்குள்
அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்ட
தூக்கத்தின் ஒரு பாதியை
காணவில்லையென்று
பொலிஸார் தேடிக்கொண்டிருந்தார்கள்

மீண்டும்

கனவின் அடுத்த காட்சிக்கு செல்லும் வழியில்
அன்ரோயிட் போன்களின் கைகளில்
செல்ல நாய்குட்டிகளாக
மனிதர்கள் தவழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு புது அதிசயத்தை
தொழில்நுட்ப வளர்ச்சி
தன் நெஞ்சில் பச்சை குத்தி
என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தது

தொடர்ந்தும்

இரண்டாவது காட்சிக்குள்ளும் நுழைந்தேன்
அங்கே
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட
மரத்தின் ஆணிவேர்கள் சிலவற்றை
பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள்
அவை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
பூமியில் வாழ்ந்த
மரமெனும் அரியவகை மழை சுரப்பிகள் என்று
தங்கள் முடிவை அறிவித்ததும்
ஒப்பாரி வைத்து அழுத
அந்த மனிதர்களை பார்க்க
மிக பரிதாபமாக இருந்தது

அழுகின்ற
அவர்களது கண்களில் இருந்து
கண்ணீருக்கு பதிலாக
கண்ணீர் என்று எழுதப்பட்ட
எழுத்துக்கள் முத்து முத்தாக வீழ்ந்தன

அவர்கள் என்னை
அடையாளம் கண்டுவிடக்கூடாதென்று
கனவுக்குள்
காகமாகி அலைந்த என்னை
வினோதமாக பார்த்த அம்மக்கள்
காகம் பற்றி தெரிந்துகொள்ள
தங்கள் பழைய கல்வெட்டான
கூகுளை புரட்டிப்பார்த்து வியந்தார்கள்

மூன்றாவது காட்சிக்குள்
நுழைய முற்பட்ட எனக்கு
மூச்சு முட்டியதால்
என்னிடம் இருந்த
ஒரு கிளாஸ் தண்ணீரை
அங்கிருந்த மனிதர்களிடம் கொடுத்துவிட்டு
அதற்கு பகரமாக
ஒரு சிலிண்டர்
ஒட்சிசனை வாங்கி மாட்டிக்கொண்டு
அங்கிருந்து எனது அறைக்கு
வேகவேகமாக திரும்பிய நான்
இப்போதெல்லாம் அதிகம் அதிகமாக
இயற்கையை நேசிக்கின்றேன்

பிரகாசக்கவி- இலங்கை

பிரகாசக்கவி

(Visited 94 times, 1 visits today)