ரத்தம் சரணம் கச்சாமி-கவிதை-பிரகாசக்கவி

ரத்தம்  சரணம்  கச்சாமி………

பிரகாசக்கவி
இரவுக்கும் எனக்கும் முப்பது வருடபபழக்கம்
நேற்றிரவு
இரவின் நீண்ட நாள் ஆசைக்கு அமைவாக
இரவை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
காலாற கடலோரம் நடந்தேன்
அங்கே புத்தன்
தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தான்
ஓடிச்சென்று
நானும் இரவும் அவனைப் பிடித்து
கரைக்கு இழுத்து வந்தோம்
நீண்ட கண்ணீருக்கும்
பெரும் அமைதிக்கும் பின் அவன்
தற்கொலைக்கான தன் காரணங்களை
விபரித்தான்
நெடிய தன் தவத்தின்
பலனை அனுபவிப்பதற்காக
கனவு வாகனம் ஏறிய அவன்
யாசகன் வேடமிட்டு
பர்மாவுக்கு சென்றதாகவும்
அங்கே அவனுக்கு
பருகுவதற்காக அவர்கள்
இரத்தத்தைப் பானமாகக் கொடுத்ததாகவும்
பசிக்கு உணவாக
நரமாமிசங்களை பரிமாறி
பசியாறச் சொன்ன துறவிகள்
இளம் பெண்களின் மானத்தை
காற்றில் பறக்கவிட்டு வன்புணர்ந்து 
அப்பெண்களின்  உடல்களைப் பந்தாடி
வேடிக்கை  காட்டியதாகவும்
மனமுடைந்த அவன்
தற்கொலைக்கு முயன்றதாகவும்
தன் கதையைச் சொல்லி மூச்சுமுட்டவும்
அவனது கதைகைளை
செவிதாழ்த்திக் கேட்ட கடலலைகள்
ஆக்ரோசமாக மேலெழுந்து
இலங்கையில் இப்போதும்
ரத்தஞ் சரணங் கச்சாமிதான் என்பதாக
அவனது கதையின் மிகுதியைத் தொடர்ந்தன.

பிரகாசக்கவி-இலங்கை 

 

பிரகாசக்கவி

(Visited 93 times, 1 visits today)