இருப்பைத் தொலைத்தவன்-கவிதை-வாகைக்காட்டான்

இருப்பைத் தொலைத்தவன்

வாகைக்காட்டான்

செம்புழுதி தெருக்களில்
அருகாக கண்ணாப்பற்றைகள்…
வானம் பார்த்த பூமியெங்கும்
வளர்ந்திருக்கும் நாணல்கள்…
குமரி ஒருத்தியின் கொலுசைப்போல
சத்தமிட்டு சங்கீதம் பாடி
கடக்கும் ஆறுகள்…
தாமரையும் அல்லியும்
தாராளமாக மிதக்கும் ஊர்க்குளம்…
பங்குனியிலும்
பச்சைகட்டிய வயல் வெளி…
விளையாடி மகிழ்ந்த திடல்…
மாணவர்கள் வகுப்பேறி
பக்கத்து ஊர் பள்ளிக்கு
போய் விடுவார்கள்
அந்தோ பரிதாபம் எனப்படும் படியாக
ஐந்தாம் ஆண்டை விட்டு
வகுப்பேறாத பள்ளிக்கூடம்…
குந்தியிருந்து
பழசுகள் கதைபேசும் மதகு…
நாற்று நடவும் களை பிடுங்கவும்
கலகலத்து பேசி சிரித்தபடி
நடைபோடும் கூலியாட்கள்…
சேற்று வாசனையை காற்றில் கலந்தபடி
வற்றிப்போய்கிடக்கும் சிற்றோடைகள்…
கும்பாபிசேகத்துக்கு பின்
வர்ணமடிக்காத பிள்ளையார் கோவில்…
சுடுகாட்டு வைரவர் சூலம்…
ஆண்டையாரின் பட்டிமாடு…
நான் மாடுமேய்த்த புற்தரவை…
அத்தனையும் முகம் மாற்றாமல்
வந்து போகும் என்கனவில்…
இன்றைக்கும் போய்
தொட்டுத்  தொட்டுக் கதைபேச ஆசைதான்…
என்ன செய்ய???
நான்தானே வெளிநாட்டில்
விசாவற்ற ஏழை!

வாகைக்காட்டான்-பிரான்ஸ் 

வாகைக்காட்டான்

 

(Visited 61 times, 1 visits today)