எமது நிலம் எமக்கு வேண்டும்- கட்டுரை-சபேசன்

சபேசன் அந்த மக்கள் இரவானால் நான்கு, ஐந்து குடும்பங்களாக ஒன்று சேர்கிறார்கள். சுள்ளிகளைக் கொண்டு வந்து நடுவில் தீ மூட்டுகிறார்கள். பின்னர் தம்மைச் சுற்றி மண்ணெண்ணெய் அல்லது கழிவு எண்ணெய்யை ஊற்றி ஒரு வட்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்கு நடுவில் பாயையோ துணியையோ விரித்து வெறும் தரையில், மேலே நட்சத்திரங்களைப் பார்த்தபடி படுத்து உறங்குகிறார்கள். இது ஒன்றும் ஆதிகாலத்து மனிதர்கள் பற்றிய குறிப்பு அல்ல. காட்டுப் பயணம் போனவர்கள் பற்றியதும் அல்ல. சில வாரங்களுக்கு முன்னர் தமது ஓர்மம் மிக்க போராட்டத்தினால் உலகத்தையே தம்மை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த கேப்பாப்புலவின் புலக்குடியிருப்பு மக்களின் தற்போதைய நிலை இது.

ஒரு காலத்தில் கேப்பாப்புலவு என்கின்ற பெயர் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. கேப்பாப்புலவு என்பது சூரியபுரம், சீனிமோட்டை, புலக்குடியிருப்பு, கேப்பாப்புலவு என்கின்ற நான்கு கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசம். இது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பிரதேசச் செயலகத்திற்குள் அடங்குகிறது.

சபேசன் கேப்பாப்புலவு என்பதன் சரியான பெயர் “கேப்பைப்புலவு” என்பதாகும். கேப்பைப் பயிர் செய்கின்ற புலம் என்கின்ற அர்த்தத்தில் “கேப்பைப்புலம்” என்கின்ற பெயர் அமைந்தது. பின்னர் காலப் போக்கில் மருவி “கேப்பாப்புலவு, கேப்பாப்பிலவு” என்று பலவாறு அழைக்கப்படுகிறது. புலக்குடியிருப்பு என்பதும் அரச ஆவணங்களில் “பிலக்குடியிருப்பு” என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கேப்பாப்புலவு கொண்டிருக்கிறது. விவசாயத்தின் பொருட்டு வன்னியின் வேறு இடங்களில் இருந்து குடியேறிய மக்கள், மலையகத்தில் இருந்து குடியேறிய மக்கள், போர்க்காலத்தில் குடியமர்த்தப்பட்ட மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒரு பிரதேசமாக கேப்பாப்புலவு இன்று விளங்குகின்றது.

முள்ளிவாய்க்காலின் கோரம் மிகுந்த முடிவின் பின்னர் கேப்பாப்புலவு மக்களும் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். பின்னர் இவர்களை சொந்தக் கிராமத்தில் குடியேற்றுவதாக சொல்லி விட்டு, அவர்களின் சொந்த இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர்கள் தள்ளி அமைந்துள்ள சூரியபுரத்தில் கொண்டு போய் இலங்கை அரசாங்கம் குடியேற்றியது. அந்தக் குடியேற்றத்திற்கு “கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம்” என்று பெயரும் வைக்கப்பட்டது.

ஆயினும் மக்கள் தமது சொந்த இடங்களே தமக்கு வேண்டும் என்று பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். போராட்டங்களின் போது அவற்றை முடித்து வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். மீள்குடியேற்ற அமைச்சர் வந்தார். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வந்தார். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் யாராவது வந்து உறுதிமொழி தந்து போராட்டத்தை முடித்து வைத்துச் சென்றார்கள். எழுத்து மூலமான உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

ஜனவரி மாதத்தின் கடைசிப் பகுதியில் இராணுவ அதிகாரிகள், வனப்பாதுகாப்புத்துறையினர், நில அளவைத் திணைக்களத்தினர் ஆகியோர் கேப்பாப்புலவு பிரதேசத்தில் காணி அளவீட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவியது. 31.01.2017 அன்று காணி அளவீடு சம்பந்தமாக அதிகாரிகளை சந்திப்பதற்காக புலக்குடியிருப்பிற்கு மக்கள் சிலர் சென்றனர். இராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. மக்கள் தம்மை அனுமதிக்கும் வரை போக மாட்டோம் என்று அதிலியே அமர்ந்து கொண்டனர். இப்படித்தான் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் போராட்டம் திடீரென்று ஆரம்பமாகியது.

2009இற்குப்  பின்னர் வலுவாக முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டமாக புலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் அமைந்தது. இராணுவ முகாமின் முன்னாலேயே மக்கள் அமர்ந்து கொண்டார்கள். எந்த மிரட்டல்களுக்கும்  அவர்கள் அடிபணியவில்லை. அவர்கள் நின்று போராடிய தெருவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தண்ணீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது. நேரடியாக அச்சுறுத்தல் விடப்பட்டது. மக்கள் வருவது வரட்டும் என்று எதற்கும் துணிந்து நின்றார்கள்.

சபேசன் புலக்குடியிருப்பு மக்களின் இந்தப் போராட்டம் மற்றைய தமிழ் மக்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. மக்கள் போராட்டம் வெடித்து விட்டது என்று ஊடகங்கள் இதை வர்ணித்தன. முள்ளிவாய்க்காலின் பின் போராட்டத்தின் திசையறியாது தவித்து நின்றவர்களுக்கு கேப்பாப்புலவு மக்கள் போராடுவதற்கான வழியைக் காட்டியிருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் எழுதினார்கள்.

இந்த முறை போராட்டத்தின் போது அரசியல்வாதிகள் மட்டும் வரவில்லை. வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து, மட்டக்களப்பில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் வந்தார்கள். முஸ்லீம் மக்கள் வந்து ஆதரவு கொடுத்தார்கள். தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரி இயக்கங்கள் வந்தன. கலைஞர்கள் வந்தார்கள். இலக்கியம் பேசுபவர்கள் வந்தார்கள்.

2009இற்கு பின்னர் தமிழ் மக்களின் எழுச்சிமிகு போராட்டம் ஒன்று தனது வெற்றியை பெற்றது என்கின்ற செய்தி அங்கே பதியப்பட்டது.

ஆனால் இன்றைக்கு அந்த மக்களின் நிலை என்ன? வீடுகள் அற்ற நிலையில் வெறும் தரையில், நெருப்பை மூட்டி விட்டு, பாம்புகள் போன்ற விசப் பிராணிகள் தம்மை தீண்டி விடாத வண்ணம் தம்மை சுற்றி மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு படுத்துறங்கும் நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

அந்த மக்கள் ஒரு திரிசங்கு நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதிரிக் குடியிருப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு எந்த ஒரு பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. வீடுகளுக்கான சாவி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரிக் குடியிருப்பில் அவர்கள் சொந்த வீட்டில் இருக்கிறார்களா? வாடகை வீட்டில் இருக்கிறார்களா என்று எதுவும் அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

இப்பொழுது அவர்களின் சொந்தக் காணிகள் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகளை அரசாங்கம் கட்டித் தருமா? அதுவரை மாதிரிக் குடியிருப்பில் இருக்க அனுமதிக்குமா? என்கின்ற கேள்வி அவர்களுக்குள் இருக்கிறது. ஒருவரே இரண்டு தடவைகள் வீட்டுத் திட்டத்தின் கீழ் பலன் அனுபவிக்க முடியாது என்று சில அரச அதிகாரிகள் சொல்கிறார்கள். தமது காணிகளை பெற்றுக் கொண்டு விட்டதால், தற்பொழுது மாதிரிக் குடியிருப்பில் அவர்கள் இருக்கும் வீடுகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று சில அரச அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சபேசன் தமது நிலம் வேண்டும் என்று போராடிய மக்கள் மீது ஒருவகையான உளவியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. விளைவு போராடியவர்களில் ஒரு பகுதியினர் மாதிரிக் குடியிருப்புக்கு திரும்பி அங்கே வசிக்கின்றனர். மறு பகுதியினர் ஓலைக் குடிசைகளை அமைத்தும், வெறும் தரையிலும் தமது சொந்தக் காணிகளில் தங்குகின்றனர்.

இதற்கிடையில் புலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றி அடைந்த பிற்பாடு, கேப்பப்புலவுக் கிராம மக்களின் ஒரு பகுதியினர் தமது காணிகளுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை ஊடகங்கள் “கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்” எனக் குறிப்பிட்டு வந்தன. ஆனால் கேப்பாப்புலவுக் கிராம மக்கள் அந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்குபற்றவில்லை. புலக்குடியிருப்பு மக்களின் காணிகள் திரும்பக் கிடைத்து விடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது கேப்பாப்புலவு மக்களின் ஒரு பகுதியினரும் தமது காணிகளுக்கான போராடி வருகிறார்கள். ஆனால் முன்னர் கிடைத்த ஊடக வெளிச்சம் அவர்களுக்கு இப்பொழுது கிடைக்கவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் இப்படியான போராட்டங்களை தமது அரசியலுக்குப் பயன்படுத்தவே முன்நிற்கின்றனர். வந்த அந்த மக்களுடன் படம் எடுத்தவுடன் அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. ஊடகங்கள் இந்தப் போராட்டங்களை தமது சார்புநிலைக்கு எதிரானவர்களை சாடுவதற்கே பயன்படுத்துகின்றன. பரபரப்பான செய்திகள் எதையாவது பெற முடியுமா என்பதிலேயே முக்கிய கவனம் எடுக்கின்றன.

புலக்குடியிருப்பு மக்கள் தற்பொழுது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளைப் பற்றி கவனிப்பார் யாருமில்லை. கேப்பாப்புலவு மக்கள் நடத்துகின்ற காணி மீட்பிற்கான போராட்டத்தைப் பற்றி பேசுவாரும் யாரும் இல்லை. இதன் விளைவாக பெரும் கவனத்தை ஈர்த்து பெரிதும் விதந்துரைக்கப்பட்ட ஒரு போராட்டம் மெது மெதுவாக தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்கின்ற துயரம் மிகுந்த செய்தியை இதில் பதிய வேண்டிய அவலம் நேர்ந்திருக்கிறது.

சபேசன்-ஜெர்மனி 

சபேசன்

 

(Visited 80 times, 1 visits today)