இல்மஸ் குணே-Yilmaz Guney-கட்டுரை-யமுனா ராஜேந்திரன்

கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் உலகு பற்றி சரியான அரசியல் நிலைபாடுள்ள கலைஞன் தனது படைப்பு மூலம் பரந்துப்பட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும். அந்தக்கண்ணி அரசியல்தன்மை வாய்ந்ததாகலாம். அந்த அர்த்தத்தில் அரசியல் பிரச்சாரத்துக்கு அரசியல் எழுச்சிக்கு கலை உபயோகமாகும். ஆனால் அதன் வறட்டு அர்த்தத்தில் பிரச்சாரத்திற்கும் போராட்டத்துக்கும் பயன்படவேண்டுவது கலை என்று சொல்வதை நான் மறுதலிக்கிறேன். கலை, தனக்கேயுரிய தனிமொழியைக்  கொண்டது. அது கலைக்கே உரிய மொழி. அந்த மொழியை முழுமையாக, முற்ற முழுதாக எவரும் மதிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் மதிக்கவில்லையானால் பின்னர் அந்த ஆயுதம் உங்களைக் கொல்லும்படி அது திருப்பித்தாக்கும் வலுக்கொண்டது.

இல்மஸ் குணே

  யமுனா ராஜேந்திரன்

குர்திஸ் மக்களைப் போன்றே இல்மஸ் குணே சிறையிலடைப்பட்டிருக்கும் ஒரு துருக்கிய மனிதன். ஒரு மனிதன் சிறைப்பட்டிருக்கும்போது அதை உடைத்துக் கொண்டு வெளிவர அவன் பல்வேறு வழிகளில் முயல்வான். ஜன்னல்களை உடைத்துக் கொண்டு, அறை முகட்டை உடைத்துக் கொண்டு, கதவுகளை உடைத்துக் கொண்டு, வெளியேற முயல்வான். ஆகவே இல்மஸ் குணே கம்யூனிஸம் மூலம் முயற்சித்தார், அவர் முயற்சிப்பார். பிறிதொரு நாளில் அவர் விடுதலைக்கான சரியான வழியைக் கண்டடைவார். இல்மஸ்ஸை நான் இவ்வாறுதான் கருதுகிறேன். முயற்சிக்கிறார். அவரது நிலைப்பாடு சரியானது. ஏனெனில் அவரது நிலைப்பாடு அறிவுபூர்வமானது. நிஜமான உணர்ச்சி சார்ந்தது. அவரது மக்களையும் அவரைத் தன்னளவிலும் விடுவித்துக் கொள்வதற்கான தேவையினின்றும் எழுந்தது அவரது நிலைப்பாடு.”

கோஸ்டா காவ்ரஸ்

1984 செப்டம்பர் 7 ஆம் தேதி பாரிஸில் மருத்துவமனை யொன்றில் கான்ஸர் நோயினால் மரணமுற்றார் இல்மஸ் குணே. துருக்கி மக்களைப் பிரிந்த சோகத்துடனேயே தன் நாட்டுக்குத் திரும்பவும் வெற்றியாளனாகத் திரும்புவோம் என்ற நம்பிக்கையுடனேயே நாடு கடந்து வாழ்ந்த அம்மனிதன் கண்மூடினான். மிக அரிதாகவே காணக்கிடைக்கிற அவரின் மிகப் பிரபலமான இறுதிப் படங்கள் மூன்றையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச் சிரமப்பட்டே தேடவேண்டிய அவரின் நேர்முகங்கள் சிலவும் சில கட்டுரைகளும் மிகுந்த தேடுதலுக்குப் பின் கிடைத்தன. அவர் பற்றியோ அவர் எழுத்துக்கள், திரைப்படங்கள் பற்றியோ முழுமையான எந்தப் புத்தகமும் நானறிந்த வரையில் ஆங்கில மொழியில் இல்லை. மார்ச் – ஏப்ரல் 1993 ஆம் ஆண்டு இரண்டு மாதங்களிலும் லண்டனில் பல்வேறு இடங்களில் குர்திஸ் மக்களின் கலாச்சார விழாவாக ‘நெருப்பின் திருவிழா’ நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியையொட்டி குர்திஸ் மக்களில் ஒருவரான இல்மஸ் குணேவுக்கு அஞ்சலியாக அவரின் மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆட்டிடையன், பாதை, மதில் எனும் படங்கள் லண்டனில் புகழ் வாய்ந்த ICA அரங்கில் இவை காண்பிக்கப்பட்டது. முழுக்கவும் ஐரோப்பியர்களே, பிரெஞ்சு பிரிட்டிஸ்காரர்களே பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். அக்காட்சியின் முதல் நாள் ஒரு குர்திஸ் ஆண் கலந்து கொண்டார். இரண்டாம் நாள் ஒரு குர்திஸ் பெண்ணைப் பார்த்தேன். அதை தவிர்த்து கலந்து கொண்ட ஒரே பழுப்பு நிறத்தவன் நான் மட்டுமே. முதல் நாள், குர்திஸ் ஆண் கேட்டார் ‘நீங்க குர்துவா’ ‘இல்லை’ என்றேன். ‘இது குர்துப்படம்’ என்றார். ‘தெரியும் நண்பரே’ என்றேன். சத்யஜித்ரே மிருணாள் சென் படைத்த இந்தியப் படங்களுக்கு வரும் பிற கறுப்பு, பழுப்பு இனத்தவர்க்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும். இவைகளை நான் சொல்வது சூழலைப் புரிந்து கொள்ளும் நோக்கம் கருதித்தான். ஐரோப்பிய மதிப்பீடுகளோடு நம் கலாச்சாரங்களை வேடிக்கை பார்ப்பவர்கள் நிறைய வருவதும், நாம் நம் மரபுகளில், சகோதரர்களில் அக்கறையற்றும் இருக்கிற சூழலைக் சுட்டுவதே என் இலக்கு. நிறவெறி ஐரோப்பிய சூழலில் இந்தப் புரிதல் மிக மிக முக்கியமானது.

இல்மஸ் குணேவின் படைப்புலகம் அடிப்படையில் அடக்கு முறைக்கு எதிரான மனிதர்களின் உலகம். இல்மஸ் விரிந்த அளவில் உலகக் கட்டமைப்பையும் அதிகார உறவுகளையும் மாபெரும் சிறைகளாகவே காண்கிறார். இல்மஸின் கலாச்சார வாழ்க்கையானது துருக்கி மக்களின், அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் விளைவால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இல்மஸ் குணே துருக்கிய சமூகத்தின் மிக மிக ஒடுக்கப்பட்ட சமூகப் பகுதியான குர்திஸ் மக்களிடையே இருந்து வந்தவர். இவரது பெற்றோர் நிலமற்ற குர்திஸ் விவசாயிகள். குர்திஸ் மக்கள் ஈரான், ஈராக், துருக்கி, சோவியத் யூனியன் போன்ற எல்லா நிலப்பரப்புகளிலும் பரந்து வாழ்கிறார்கள். எல்லா நாடுகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழும் அம்மக்கள் தமக்கென்றொரு சொந்த நிலம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட வெவ்வேறு நாடுகளில் பல்வேறு குழுக்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தாலும், ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத் தலைமைக்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் இருந்துதான் இல்மஸ் குணே துருக்கியையும் உலகத்தையும் தரிசிக்கிறார்.

இல்மஸ் குணே துருக்கி வெகுஜன சினிமாவின் வெகுஜன கதாநாயகன். எகிப்து, துருக்கி, இந்திய தமிழ் படங்களின் இயல்புக்கும் வளர்ச்சிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. உலகச் சினிமா தயாரிப்பில் ஹொலிவுட்டுக்கு அடுத்தது இந்தியா இரண்டாம் இடத்தை வகித்தபோது, துருக்கி நான்காவது இடத்தை வகித்தது. இல்மஸ் குணேவை அனுபவம் கொள்ளும்போது ஒரு தமிழனாக, வெகுஜன சினிமாவின் மாபெரும் பாதிப்புக்குள்ளான கலாச்சார அரசியலுக்கிடையில் மூச்சு முட்டும் ஒரு இடதுசாரி அரசியல்காரனாக எம்.ஜி.ராமச்சந்திரன் படங்கள் பற்றிய எதிர்மறை சிந்தனை எனக்குத் தோன்றுவது இயல்பே. இல்மஸ் குணேவின் மரபும், துருக்கிய சினிமாவின் மரபும் நடிகனாக அவர் வளர்ச்சியும் அவர் இறுதியில் வந்தடைந்த உன்னதங்களும் நமது ‘புரட்சி நடிகர்’ எம்.ஜி.ஆரின் மரபார்ந்த வளர்ச்சிக்கு எதிர்திசையிலானது.

யமுனா ராஜேந்திரன்

இருபத்தி நான்கு ஆண்டுகளாக துருக்கியின் தேசிய சினிமா நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் குணே. இந்த ஆண்டுகள் துருக்கியின் அரசியலோடு இரண்டறக் கலந்தது. இதில் 12 ஆண்டுகளைச் சிறையில் கழிந்தார் குணே. குணேவின் மூன்றாவது சிறைவாசம் மிக நீண்டது. 1974இலிருந்து அவர் சிறையிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறும் காலமான 1981 வரை 7 ஆண்டுகள் நீண்டது. 1978-1979 ஆம் ஆண்டுகளில் சிறைக்குள் இருந்தவாறுதான் ஆட்டிடையன்/Herd, பகைவன்/Enemy போன்ற படங்களுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் குணேவினால் மேற்கொள்ளப்பட்டது. 1980ஆம் ஆண்டு. பாதை/Yol படத்திற்கான படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அதன் முதல் பூர்வாங்கப் பிரதி நாட்டிலிருந்து ரகசியமாக கடத்தப்பட்ட பின்பு, பிரான்ஸிற்கு வெளியேறினார். சுவிட்சர்லாந்தில் அந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் முடித்து, 1983ஆம் ஆண்டு நடைபெற்ற கேனஸ் உலகத் திரைப்பட விழாவில்  அப்படம் தங்கப்பனை  விருதைப் பெற்றது. குணேவின் இறுதிப்படமான சுவர்/Wall அல்லது மதில் 1982ஆம் ஆண்டு பிரான்ஸில் படமாக்கப்பட்டது. குணேவின் பாஷையில் அப்படம் ‘பாஸிஸ்ட் சர்வாதிகாரத்தின் முகத்தில் ஓர் அறை’ போன்றது.

குணேவின் அரசியல் அகராதியில் துருக்கியின் ஜனநாயக விரோத அரசியல் 1923ஆம் ஆண்டு தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ‘ஆதா துர்க்’ ஓட்டோமான் பேரரசிலிருந்து துருக்கியை விடுவித்து குடியரசை நிறுவினார். இன்றளவும் துருக்கியின் தேசத் தந்தை ஆதாதுர்க் தான். துருக்கியின் வரலாறு ராணுவ அடக்கு முறையின் வரலாறு. இன்றளவும் துருக்கியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்டுத்தான் இருக்கிறது. மார்க்ஸீய புத்தகங்களுக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது.  ஆதா துர்க்கை சர்வாதிகாரி என்று வரையறை செய்கிறார் குணே. குணேவின் படங்களிலிருந்து பெறப்படும் துருக்கி இன்றைய யதார்த்தமும் கூடத்தான். தொடர்ந்து மேற்கத்திய மதிப்பீடுகளுக்குள் தன்னை இருத்திக் கொள்ள விரும்பும் நாடு. ஐரோப்பிய சமூக கட்டமைப்பின் அங்கத்தவராக விண்ணப்பித்திருக்கும் நாடு. நிஜத்தில் மேற்கத்திய அழகியல், சினிமா அரசியல் வரையறைகளுக்கும் ரசனைகளுக்கும் எதிராக மூன்றாம் உலக யதார்த்தத்துடன் நமது சொந்த அழகியல், அரசியல் ரசனைகளை உருவாக்கிக் கொள்வது முக்கியம். குணேவைப் பற்றிய மேற்கத்திய விமர்சகர்களின் விமர்சனமானது அவர் படங்களில் வரும் மனிதர்கள் தவிர்ந்த புல்வெளிகள், பனித்தரைகள், அகண்ட வானத்தின் கீழ் விரியும் பாதைகள், ரயில் பிரயாணத்தின் அழகு போன்றவை குறித்ததாகும். ஆனால் குணேவின் இயற்கை, மனிதர்களின் சந்தோஷத்துடனும் துயரத்துடனும் தொடர்புடையது. குணேவை வெறுமனே சினிமாக்காரராகப் புரிந்து கொள்வது இயலாதது. குணேவின் சினிமா அவரின் விடுதலை சார்ந்த அக்கறைக்கான சாதனம்.

குணே பற்றின அறிமுகம் என்பது இரண்டு தளங்களிலேயே நிகழ முடியும். ஒன்று, மனிதனாக அவருக்குள் உருவான மானுட விடுதலைக்கான தத்துவக் கண்ணோட்டம். இரண்டாவதாக, இந்த விடுதலைக்கான கண்ணோட்டத்தை முயற்சித்துப் பார்த்த சினிமா சாதனம். துருக்கிய சினிமாவில் இரண்டு வகையான போக்குகளைக் காண்கிறார் குணே. இந்தப் போக்குகள் எந்த நாட்டிலும் அரசியலிலும் சினிமாவிலும் பொதுவானதுதான். ஒன்று மேற்கத்திய ஹொலிவுட் கனவுலக சினிமா அல்லது  அரசியல் அதிகாரத்தை மையமாகக் கொண்ட சினிமா. மற்றையது தேசிய மரபுகளை உட்கொண்டு தனித்தன்மையுடன் வளர எத்தனிப்பது. இந்த இரண்டாவது தனித் தன்மையை சினிமாவில் எவ்வாறு எம் இயக்குனர்கள் கையாளுகின்றனர் என்பதுவே முக்கியம்.

யமுனா ராஜேந்திரன்“சினிமா பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் புத்திக்கும் நான் என்னை வெளிக்காட்டுகிறேன். அதே சமயத்தில் பார்வையாளர்களுக்கு தங்கள் சொந்த யதார்த்தம் பற்றிய புரிதலை தொடர்பு கொள்ளவும் முயல்கிறேன்” என்கிறார் குணே. தேசிய அளவில் மக்களுடன் சினிமா மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பின்பு குணே அடுத்த கட்டத்துக்குப் போகின்றார். “விவசாயிகள் திரைக்குள் நுழைகிறார்கள். நிலப்பசி கொண்ட விவசாயிகள் அணிதிரண்டு போகிறார்கள். வேலை தேடி நகரம் வந்து குவிகிறார்கள். எல்லைகளில் விவசாயிகள் கடத்தல்காரர்களாகிறார்கள். கொலை செய்கிறார்கள். இம்மக்கள் எவ்வாறு வாழ்கிறார்களோ அவ்வாறே என் சினிமாவுக்குள் நுழைந்தார்கள்” என்கிறார் குணே.

நண்பரொருவர் குணேவிடம் கேட்கிறார்: “உங்கள் கதாநாயகர்கள் எவ்வாறு வித்தியாசமானவர்கள் என்று சொல்வீர்களா?” குணே சொல்கிறார். “மரபு ரீதியான கதாநாயகனை நான் நிராகரிக்கிறேன். எனது புதிய கதாநாயகன் அநீதியை எதிர்ப்பவன். அடக்கப்பட்டவன். அடக்குமுறைக்கு எதிரானவன் எனும் அர்த்தத்தில் சுதந்திரத்தின் குறியீடாகிறான்.” இந்த மாதிரியை ஒரு தொடக்கமாக நான் தேர்ந்தேன். ஆனால் இந்தப் புதிய மாதிரிகள் தோற்றுப் போகிறார்கள். அவர்கள் ஏன் தோற்றுப் போகிறார்கள் என்றால் அவர்கள் தனிமைப்பட்டிருப்பதால், எனது படங்களின் கதாநாயகர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. இந்தக் கதாநாயகன் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுகிறான். ஏனென்றால் அவன் இயக்க பூர்வமாகத் தன்னைத் திரட்டிக் கொள்ளவில்லை. இவன் தன் சொந்தத் தீர்வுகளைத் தேடிப் போனான். மக்களோடு தொடர்பில்லாது போனான். இதைத்தான் நான் முதன்மையாகக் கொண்டிருந்தேன். தனிநபர் கிளர்ச்சியை / தீர்வை கடுமையாக மறுதலித்தேன். ஒரு கோஷத்தின் மூலம் இதை நான் சொல்வதானால் இவ்வாறு சொல்லலாம்,தனி நபர் தீர்வு என்பது இல்லை. தனி நபர் விடுதலையின் பாதை என்பது சவக்குழிதான்.”

கலைக்கும் அரசியலுக்குமான உறவை குணே மிகத் தெளிவாக வரையறை செய்து கொண்டிருந்தார். கலை என்பது மக்களோடு உரையாடுவதற்கான ஒரு ஊடகம். அரசியல் என்பது நம்பிக்கையின் மீதெழும் நடவடிக்கை. அதேவேளையில் கலையானது  தனது பங்களிப்பை வெளியிடும் எல்லையில் தொடங்குகிறது. அவரின் இறுதிப் படங்களான ஆட்டிடையன், பாதை  மற்றும் மதில்  பற்றி அவரின் விமர்சகர்கள் சொல்லும்போது, “அவர் படங்கள், நிலப் பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவ சமூகத்திற்கும் உள்ள உறவில் நிகழ்பவை என்கிறார்கள். குறிப்பாகச் சொல்வதானால் கிராமிய விவசாய சமூகத்தின் கலாச்சார மதிப்பீடுகளும், மாறிவரும் நகரமயமான தொழில் மயமான சமூகத்தின் கலாச்சார மதிப்பீடுகளும் கொள்ளும் மோதலில் விளைகின்றன அவர் படங்கள் “ என்கிறார்கள்.

யமுனா ராஜேந்திரன்

நிலப் பிரபுத்துவ சமூகம் நிர்மூலமுறுவதால் நகரம் நோக்கிச் செல்லும் மனிதர்களின் பிரச்சினைகளை வெளியிடுகிறது. அவரது ‘ஆட்டிடையன்’ மற்றும் ‘பாதை’ படங்கள். சிறை அமைப்பின் குரூரத்தை வெளியிடுகிறது. ‘மதில்’ படம். குணேவின் இந்த மூன்று படங்களிலும் அவதானிக்கத்தக்க இன்னொரு முக்கியமான அம்சம். இராணுவ அடைக்குமுறையின் குரூரம் எவ்வாறாய் துருக்கிய மக்களின் அன்றாட வாழ்வில் புரையோடிப் போயிருக்கின்றது என்பதுதான். இந்த வாழ்வியல் யதார்த்தத்தை துருக்கியின் யதார்த்தம் என்பதை விடவும் மூன்றாம் உலக யதார்த்தம் என்று சொல்வதே பொருத்தமானது என்கிறார்கள் குணேவின் விமர்சகர்கள். கிராமிய வாழ்விலிருந்து வெளியேறும் மக்கள் மிகப் பெரிய சிறைச்சாலைகளான நகர வாழ்வுக்குள் சிறைப்படுகிறார்கள் என்கிறது இப்படங்கள்.

திரும்பத் திரும்ப இம்மூன்று படங்களும் அக்கறையுடன் பரிசீலிக்கும் விசயங்கள் இவைதான்: நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பெண்களின் நிலை. ஆண் பெண் பாலுறவின் தன்மை. இவர்களுக்கிடையில் ஏற்படும் வன்முறை உணர்ச்சி. மனித உறவுகள் முற்றிலும் வன்முறை சார்ந்து இயங்கும் அவலம். நிறுவன அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக மாறிப்போன குரூரம். நகரம் சார்ந்த மதிப்பீடுகள் இம்மக்களை அசுத்தப்படுத்தும் கொடுமை, இவைகளினூடே சிறிய சிறிய நம்பிக்கைகளை  வெளிப்படுத்தும் மக்களின் எதிர்ப்புணர்வு. உண்மையில் இவைகளை இரத்தமும் சதையுமாய்ச் சித்தரிப்பதன் மூலம் குணேவின் இந்த மூன்று படங்களும் நாடு, மொழி, எல்லைகளைக் கடந்து பிரபஞ்சத் தன்மையை அடைந்து விடுகிறது. கலாச்சார அடையாளத்துடன் சொல்வதானால் மூன்றாம் உலக யதார்த்தத்தைத் தொட்டு நிற்கிறது.

1979இல் வெளியான ‘ஆட்டிடையன்’ படம் துருக்கியின் தென்கிழக்கு அனதொலியாவைச் சார்ந்த நாடோகளின் சோகக் கதையைச் சொல்கிறது. 1982இல் வெளியான ‘பாதை’ படம் ஐந்து வித்தியாசமான சிறைக் கைதிகளின் கதையைச் சொல்கிறது. 1983இல் வெளியான ‘மதில்’ படம் துருக்கியின் சிறைச்சாலையின் கொடூரத்தைச் சொல்கிறது.

‘ஆட்டிடையன்’ மூன்று பகுதிகளாக நிகழ்கிறது. முதல் பகுதி அந்த நாடோடி மக்களுக்குள் உள்ள இரண்டு இனக்குழுக்களுக்குள் இருக்கும் பகைமையைச் சொல்கிறது. இந்தக் குழுக்களுக்குள்ளான பகைமையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு குழுவைச் சார்ந்தவர் தனது மகளை இன்னொரு குழுவைச் சார்ந்த ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறார். அவர்களுக்கிடையில் காதல் மலர்கிறது. அவர்களின் குழந்தையொன்று செத்துப் பிறக்கிறது. நிரந்தரமாக உடல் நோய்க்கு ஆளாகிறார் அந்த இளம் மனைவி. அவளைக் காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து முயல்கிறான் கணவன். அவளுக்கு வைத்தியம் செய்வதற்காக நகரம் போகவும் யோசிக்கிறான். ஆரம்பத்திலிருந்தே மணமகனின் தந்தை மிக மிக மூர்க்கக் குணம் கொண்ட விவசாயிகளாகவே சித்தரிக்கப்படுகிறார். அந்தப் பெண் ஒரு தீயசக்தி என்று சபிக்கிறார். அவளைக் கைவிடுமாறு மகனை நிர்பந்திக்கிறார்.

இந்தச் சூழல் கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த அவர்கள் வாழ்வு வறட்சி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் நிர்மூலமாகிறது. அடிப்படை வாழ்வே பிரச்சினையாகிப் போகிறது. நிலங்களைக் கொத்திக் கலைத்து குரூரமாகப் புரட்டிப் போடும் டிராக்டரின் காதடைக்கும் சத்தம் மூலம். அந்த குறியீட்டின் மூலம் நம்மை உலுப்புகிறார் குணே. கால்நடைகளை விற்பதற்காக துருக்கியின் தலைநரான அங்காரா நோக்கிக் கிளம்புகிறது அக்குடும்பம்.

யமுனா ராஜேந்திரன்இரண்டாவது பகுதி அக்குடும்பத்தின் அங்காரா நோக்கிய ரெயில் பிரயாணம். அமைதியும் அழகும் பூச்சும் அற்ற கிராமங்கள் விலகிப் போகிறது. ஆர்ப்பாட்டமும், எங்கு நோக்கினும் இராணுவ நடமாட்டமும், அழுக்கும், நெருக்கடியும், விபச்சாரமும் மலிந்த நகரத்தின் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டு போகிறது ரெயில். பயணத்தில் அக்குடும்பத்தின் இளைய மகன் ரயில் பெட்டியிலேயே காசு கொடுத்து ஒரு ஊனமுற்ற பெண்ணை ஆடுகளுக்கிடையில் அவசரமாகப் புணர்கிறான். ஆடுகள் பயணத்தின் நெருக்கடி தாங்காமல் மரணமுறுகின்றன. வறுமை, அசிங்கம், நம்பிக்கையின்மை, கைவிடப்பட்ட அவலம் போன்றவை ரெயில் பயணத்துக்குள் வருகிறது. ரெயில் பெட்டியிலிருந்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஒரு கவிஞன் இராணுவத்தினரால், எதிர்ப்புப் பாடலைப் பாடியதற்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறான். நகரமே சிறையின் மிகப்பெரிய குறியீடாக விரிகிறது.

மூன்றாவது பகுதி அங்காராவில் அவர்கள் எதிர்கொள்ளும் நகரத்தின் பொய் முகம் பற்றியது. கால்நடைகளை நினைத்தபடி விற்க முடியாது போகிறது. இளம் மனைவி கனிப்பாரற்று மௌனமாக மரணமுறுகிறாள். அவள் கணவன் இராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறான். இளைய மகன் காணாமல் போகிறான். மூர்க்கமான அந்த விவசாயக் குடும்பத் தலைவன் தனது மருமகளின் அனாதைப் பிணத்தை ஏற்க மறுக்கிறான். அப்போது மற்ற குழுவின் மீது துவேஷத்தோடேயே நிற்கிறான். அந்தப் பிணம் தரையில் தரதரவென்று இழுத்துக் கொண்டு போகப்படுகிறது. வெளியில் ஊர்வலம் போன தொழிலாளிவர்க்க இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தொலைந்துவிட்ட மகனுக்காக அந்த நகரத்தின் ஜனக் கும்பலுக்குள் நின்று கத்திக் கொண்டிருக்கிறான் அந்த விவசாய குடும்பத்தின் மூர்க்கமான தலைவன். படம் முடிவடைகிறது.

‘பாதை’ படம் துருக்கியின் மேற்கு அனதொலியாவின் சிறைக் கைதிகள் பற்றிச் சொல்வது. அச்சிறையிலிருந்து ஐந்து கைதிகள் விடுமுறைக்காக தங்கள் குடும்பங்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். குடும்பங்களை நோக்கிப் போகும் பயணத்தையும், அவர்கள் திரும்பவும் சிறை நோக்கி வருவதற்கான பயணத்தையும் விவரிக்கிறது இப்படம். இந்தப் படத்திலும் ரெயில் பிரதான குறியீடாக வருகிறது. பாதையெங்கும் இராணுவ வாகனங்கள் நிற்கின்றன. பயணிகள் சோதனை இடப்படுகிறார்கள். இந்த ஐந்து கைதிகளின் கதைகளில் இரண்டு கைதிகளின் கதைகள் துணைக் கதைகளாகப் போக, மூன்று கைதிகளின் கதைகள் படத்தின் பிரதான மையமாக வருகிறது.

ஸையத் அலி, விபச்சார விடுதிக்கு ஓடிப்போன தனது மனைவியைப் பார்ப்பதற்காகப் போகிறான். அவள் ஸையத் அலியின் சகோதரனால் பிடிக்கப்பட்டு, இவனால் கொல்லப்பட வேண்டும் என்று தண்டிக்கப்பட்டிருக்கிறான். அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அவன் மனைவியை நேசிக்கிறான். அவன் அவளைக் கொல்ல விரும்பவும் இல்லை. ஆயினும் அவன் வாழும் சமூக மதிப்பீடுகள் அவளை அவன் வெறுப்பதற்கான நியாயங்களாகின்றன. அதன்படி அவளை வெறுக்கவும் செய்கிறான். அவளை பனிப் புயலுக்கிடையில் கைவிட்டுவிட்டு வருகிறான். திரும்பவும் அவளை மீட்டு வர பின் போகிறான். ஆனால் காலம் கடந்துவிட்டது. அவள் விறைத்து பிணமாகி விடுகிறாள். அவன் தன் மகனுக்கு முத்தமிட்டு விட்டு திரும்பவும் சிறை நோக்கிப் பயணமாகிறான்.

யமுனா ராஜேந்திரன்ஸையத் அலி, அவளைத் தேடிப் போகும் சந்தர்ப்பத்தில் அவனின் பயணத்தில் அவனைச் சுமந்து போகும் குதிரை பனிப்புயலில் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் பனியில் உடல் புதைகிறது. இவன் மிக முயன்றும் குதிரையை எழுப்ப முடியவில்லை. இறுதியில் குதிரையைச் சுட்டுக் கொல்கிறான். சிவப்பு இரத்தம் வெள்ளைப் பனியில் மெல்லப் பரவி உறைகிறது. அன்பும், குரூரமும், பாதுகாப்பும் கைவிடுதலும் ஆன வாழ்வின் இரட்டைத் தன்மையின் குறியீடாக குதிரையின் மரணம். மனைவி பிணமாகிறாள். அகண்ட வானத்தின் கீழ் பனிவெளி. வெள்ளைப் பனிவெளி. மகனோடு முன்னோக்கி நடக்கும் ஸையத் அலி. இரத்தம் பரவி உறைந்த மரணமுற்ற குதிரை. மனைவியின் சில்விட்ட புதைந்த உடல். ஒரே காட்சிக்குள் ஒரு பிரேமுக்குள் இதைக் கொண்டு வருகிறார் குணே. அச்சமூக அமைப்பின் குரூரத்தை, பெண்கள் மீதான வன்முறையை இவ்வாறாய் காட்சி ரூபப்படுத்துவதன் மூலம் நம்மை உலுக்கி விடுகிறார் குணே.

இன்னொருவன் முஹமத். பொய்யன். திருடன். திருடப் போன இடத்தில் தன் மனைவியின் சகோதரனை காட்டிக் கொடுத்து கைவிட்டு அவன் சாவுக்கு காரணமானவன். உண்மையை ஒப்புக்கொள்கிறான். தான் பொய்யன் என்பதை ஒப்புக் கொள்கிறான். முஹமத் தன் மனைவி, குழந்தைகளைப் பார்க்கப் போகிறான். அவன் மாமனாரும், மனைவியின் சகோதரர்களும் அதை மறுக்கிறார்கள். அவர்களை மீறி மனைவி, குழந்தைகளுடன் அவனோடு வந்து விடுகிறான். ரெயில் பயணம் தொடர்கிறது. ரெயில் பெட்டிக்குள் ஆண்களுக்கான கழிப்பறையில் மனைவியோடு உடலுறவு கொள்ள முற்படுகிறான். முஹமத் பிடிபட்டு அவன் குழந்தைகளுக்கு முன்பாகவே கேவலப்படுத்தப்பட்டு, அவள் தன் மனைவிதான் என்று அடையாளம் மூலம் நிரூபிக்கிறான்.

மூன்றாமவன் உமர். குர்திஸ் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் தன் கிராமத்தை நோக்கிப் போகின்றான். குர்திஸ் கொரில்லாப் போராளிகளுக்கும், அரசின் இராணுவ ஒடுக்கு முறையின் தாக்குதலுக்கும் இடையில் வாழத்தலைப்படுகிறான். முதியவர்கள் சுடுபட்டுச் சாவதும், குழந்தைகளின் மரணமும் அவன் கண்ணெதிரில் நிகழ்கிறது. ஒரு இரவு முழுக்கவும் துப்பாக்கிச் சத்தம் அந்த கிராமத்தைச் சுற்றிலும் கேட்கிறது. அதிகாலையில் ஒரு இராணுவ வாகனம் நிறைய, குர்திஸ் போராளிகளின் பிணங்களோடு வருகிறது. இராணுவம், போராளிகளை அடையாளம் காட்டச் சொல்கிறார்கள். கணவனை அடையாளம் காட்ட முடியாது தவிக்கிறாள் மனைவி. தங்கள் சொந்தங்களை அடையாளம் காட்ட முடியாது நிற்கிறது அம்முழுக் கிராமமும். சாவு அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இவற்றுக்கிடையிலும் அன்பும் காதலும் வாழ்கிறது. இவன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்கும் காதலுள்ள பெண்ணின் விழிகளை அடிக்கடி எதிர் கொள்கிறான் உமர். அவன் திரும்ப வேண்டிய நாள் வருகிறது. அவன் குதிரையின் மீதேறி மலையொன்றின் மறுபுறம் மறைகிறான்.

மதில் அல்லது சிறைச் சுவர் படம் அங்கார நகரத்தின் சிறையொன்றின் அடக்கு முறைக் கட்டமைப்பைச் சொல்கிறது. இப்படைப்புக்கான அடிப்படைகள் குணேவின் சொந்த வாழ்க்கை அனுபவம்தான். இந்தப் படத்திற்காக பாரிஸ் புறநகரிலிருந்த ஒரு பழைய பண்டக சாலை சிறைச் சாலையாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் மூன்று வகையான கைதிகளின் வாழ்க்கை பற்றி விவரிக்கப்படுகிறது. பெண்களின் சிறை பற்றி, அரசியல் கைதிகளான ஆண்களின் சிறை பற்றி, சிறுவர்களின் சிறை பற்றி இப்படம் பேசுகிறது. படத்தின் மையமாக சிறுவர்களின் சிறை அனுபவம் பற்றியே சொல்லப்படுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வதாகச் சொல்லி இருவரையும் ஒன்றாக தூக்குக் கயிற்றுக்கு கொண்டு போகிறது அரசு. சிறையிலிருந்து முதல் முறையாக பள்ளிக் கூடம் போகும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு சிறைக் கூடமே சந்தோசத்தின் குறியீடாகி வழியனுப்புகிறது.

சிறையதிகாரியொருவன் ஒரு சின்னஞ் சிறுவனின் மூலம் தனது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறான். வாய்வழி மூலம் தன்னினச் சேர்க்கைக்கு சிறுவனை தினமும் நிர்ப்பந்திக்கிறான் அதிகாரி. தப்பிச் செல்ல முயற்சிக்கும் சிறுவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்தச் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்று எனக் கோரி சிறுவர்கள் நடத்தும் போராட்டமும், எதிர்ப்புணர்வும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சத்தத்தில் அமுக்கப்படுகிறது.

கைதிகள் கடிதங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறையில் இருப்பவனின் மனைவி அடுத்தொரு ஆணோடு உறவு கொள்வதை அங்கீகரிக்க முனைகிறான் சிறையிலுள்ள ஒருவன். அடக்கு முறையின் குரூரத்தை அதன் மொத்தத் தன்மையோடு காண்பிக்கிறது மதில் படம். நம்பிக்கை நம்பிக்கையின்மை இவைகள்தான் இப்படத்தின் மொழி. அடக்குமுறை பற்றிய பிரக்ஞை என்ன என்பதுதான் இப்படத்தின் செய்தி. இப்படம் வெளிவந்த போது துருக்கிய சமூகம் பற்றிய ஒரு புதிய சித்திரம் மேற்கத்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. துருக்கிய யதார்த்தத்தையும் தாண்டிய மூன்றாம் உலக அடக்கு முறை அமைப்பின் தரிசனம்தான் இது.

யமுனா ராஜேந்திரன்இம்மூன்று படங்களைப் பற்றியும் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வெளிவந்தது. ‘துருக்கிய சமூகத்தை மிக மோசமாக குணே சித்தரிக்கிறார். அது அவ்வளவு மோசமானது இல்லை’ துருக்கிய அரசை ஜனநாயக அரசாக பார்க்கும். பாதுகாக்கும் மேறகத்திய அழகியல் விமர்சகர்களிடம் இருந்து வந்த விமர்சனம் இது. அதி தீவிர இடதுசாரிகள், குணே அரசியல் தீர்வை தெளிவாக முன் வைக்கவில்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தார்கள். குணே இவர்களின் விமர்சனத்துக்கெல்லாம் பதிலிறுத்தார். சினிமா பற்றி, அரசியல் பற்றி, கலைஞனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் தொடர்பு. அரசியலுக்கும் கலைஞனுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி தெளிவான பதில்கள் முன்வைத்தார்.

இல்மஸ் குணேயின் மறைவினால் மூன்றாம் உலக சினிமாவுக்கு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது. தனித்துவமான இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்த வெகுஜன இடதுசாரி சினிமாவின் பிதாமகன் அவன். இடதுசாரி கலைஇலக்கிய சினிமா வரலாற்றுக்கு நேர்ந்திருக்கும் இன்னொரு மகத்தான சோகம். அவருடைய படைப்புகள் துருக்கி ராணுவ அடக்குமுறை அரசினால் அழிக்கப்பட்டு விட்டது என்பதுதான். வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட அவருடைய 10 படங்களைத் தவிர- இதில் ஆட்டிடையன், பாதை, சுவர் மூன்றும் அடங்கும். பிற அவரது 300க்கும் மேற்பட்ட படங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இல்மஸ் குணே சினிமா இயக்குனர் கம்யூனிஸ்ட்டு போராளி, துருக்கி மக்களின் கதாநாயகன்.

குணேவின் மூன்று படங்கள்தான் மேற்குலகுக்கு பரவலாகக் காணக் கிடைத்த படங்கள். மற்றவை பார்க்கக் கிடைப்பது மிக மிக அரிது. குணே பற்றிய மேற்கத்தியர்களின் பார்வையும் இந்த மூன்று படங்களிலேயே அடிப்படை கொள்கிறது. குணேவின் படைப்புகளில் பல்வேறு பார்வையுடையோர் பல்வேறு தனித்தன்மைகளைக் காண்கிறார்கள். பிரபஞ்சமயமான குறியீட்டுத்தன்மை, யதார்த்தத்தை மறுபடைப்புச் செய்யும் அவர் பாணி. அரசியலின் சாராம்சத்தை மனித உறவுகளுக்கிடையில் வெளியிடும் நுட்பத்தன்மை, இயற்கைக்குள் முகிழ்த்த மனிதர்கள் என இவ்வாறு அற்புதமான கலாசிருஷ்டிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் இவர் படங்களில் தரிசிக்கிறார்கள்.

கிராமியம் சார்ந்த குழலில் வடிவமைக்கப்பட்ட சித்தாந்தம் அவரது இளமைக்கால உலக நோக்கு. தனது பள்ளி நாட்களிலேயே ஒரு சிறுகதை எழுதியதற்காக ராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். ஆரம்ப காலத்தில், தான் சந்தித்த கம்யூனிஸ்ட்டுகள் அனைவருமே தனக்கு ஏமாற்றத்தையே தந்தார்கள் என்கிறார் குணே.

தனது திரைப்படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பரிசுபெற்ற ஏற்பு விழாக்களில் தன்னை, அவர் எப்போதும் ஒரு கம்யூனிஸ்ட்டு என்றும் மார்க்ஸிய வெலனினியவாதி என்றும் அடையாளம் காட்டிக் கொண்டார். மாவோவின் மறைவுக்குப் பின் கலாச்சாரப் புரட்சி தொடர்பாக மாவோ மீது வீசப்பட்ட அவதூறுகளை எதிர்த்து விவாதித்தார் குணே. சிறையிலிருந்த காலங்களில்தான் தன் வாழ்க்கைப் பார்வை முழுமையாக வடிவமைக்கப்பட்டது என்கிறார். மார்க்ஸ், லெனின், மாவோ போன்றவர்களின் புத்தகங்களை அவர் சிறை வாழ்வில்தான் படித்தார்.

தான் நடித்த எல்லா படங்களும் ஜனநாயக ரீதியானதோ புரட்சிகரமானது என்றோ அவர் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆயினும் எல்லாப் படங்களும் வெகுஜன தளத்தை எட்டிய பிரபலமான படங்கள் என்கிறார். எப்போதும் குறிப்பிட்ட உயர்ந்த தர ரசிகர்களுக்காகப் படம் எடுப்பதை அவர் மறுதலித்தார். எவ்வளவுதான் உயர்மட்ட ரசனை கொண்டிருந்தாலும் அந்தச் சிறுபான்மையும் தங்களளவில் வெவ்வேறு உலகப் பார்வைகளைக் கொண்டவர்கள்தான் என்கிறார் குணே. 1968 துவங்கி 1970 வரை ராணுவ சேவையில் இருந்தார் குணே. அப்போதும் அவர் மார்க்ஸிய நூல்களைப் படித்துக் கொண்டுதான் இருந்தார். 1970 ராணுவ சேவையின் முடிவில் அவரது முதல் படத்தை ‘நம்பிக்கை’  எனும் சினிமாவைத் தயாரித்தார்.

ஒரு தயாரிப்பாளராக அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக அவர் கேங்ஸ்டர் படங்களில் நடித்து பணம் ஈட்டினார். அக்கால கட்டத்தில் அவர் பல்வேறு அரசியல் குழுக்களோடு தொடர்பு கொண்டார். மாணவர் எழுச்சிகளில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களில் கலந்து கொண்டார். ‘சோவியத் நாடு ஒரு சோசலிச நாடு அல்ல’ எனும் நிலைபாட்டுக்கு வந்திருந்தார்.

‘நண்பன்’ எனும் ஒரே ஒரு படத்தை தயாரித்திருந்த அக்கால கூட்டத்தில் மறுபடியும் அவர் 1974 முதல் 1981 வரை சிறையிலடைக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் திரைப்பட கருத்துருவம் பற்றி இறுதியான புரிதலுக்கு வந்திருந்தார். சிறையில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருந்தார். ஐந்து முறை திரைப்படங்கள் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இருமுறை தோல்வியில் முடிந்த அவர் முயற்சி பின்னர் மூன்று முறை வெற்றிபெற்றது. அந்த மூன்று படங்கள் தான் அவர் இறுதிப் படங்களான பாதை, மதில், ஆட்டிடையன் போன்றவை.

சிறையில் இவரோடு இருந்தவரும் 1974 முதல் 1981 வரை காலகட்டங்களில் இவரது படைப்புகளை நாவல், சிறுகதை, திரைப்படங்களை போன்றவற்றை வெளியுலகுக்கு கொண்டு வந்தவருமான நிஹாத் பஹ்ரம் எனும் சக துருக்கிய எழுத்தாளர் தனது நினைவுகளில் குணே பற்றி இன்னும் சில தகவல்களைத் தருகிறார். சித்தாந்த ரீதியில் அரசியல் அமைப்பு ரீதியில் இவர் தனது படைப்புகளை ஒருங்கிணைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.  துருக்கியில் நிலவிய அகபுற தன்மைகளை கம்யூனிஸ்ட் இயக்கம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  ஆகவேதான் குணே கம்யூனிஸ்ட் இயக்கத்தை முற்றிலும் தழுவிக் கொள்ளவில்லை என்று விளங்குகிறார் இவர். குணே அரசியல்பற்றியும் கலைவெளியீடு பற்றியும் தெளிவான நிலைபாடுகளைக் கொண்டிருந்தார்.  அதுதான் அவரை ஒரு வறட்டுத்தனமான பிரச்சாரக்காரராக இல்லாமல் கலைஞனாக ஆக்கியிருக்கிறது.

பாதை, மதில், ஆட்டிடையன், படங்களில், யதார்த்தம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளிக்கிறார். இம்மூன்று படங்களில், ஆக்கபூர்வமான அரசியல் விமர்சனம் தெளிவாக இருக்கிறதா எனும் கேள்வி. வாழ்க்கை இருக்கின்றவாறு அவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் மீதான அடக்குமுறை விமர்சனமற்று உள்ளபடியே சொல்லப்பட்டிருக்கிறது என்கின்ற  விமர்சனம். துயரத்தையும் விரத்தியையும் அவநம்பிக்கையையும் வெளியிடுகிறது என்கின்ற  குற்றச்சாட்டுக்கள் படங்கள் முழுக்க எதிர்மறையாக முன்வைக்கப்படுகிறது எனும் வாதம். இவைகளுக்குத் தெளிவாகப் பதிலறுத்தார் குணே. இதுதான் வாழ்வுக்கும் கலைக்குமான உறவு பற்றிய முழுமையான பார்வை என்று நான் கருதுகிறேன். அவர் சொல்கிறார் :

யமுனா ராஜேந்திரன்முரண்பாடு, ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் முரண்பாடுகளின் இணைவு என்றும் நாம் புரிகிறோம். மனிதனும் வாழ்வும் இத்தகையதுதான். பாதை படத்தில் வருகிற ஸயத் பாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். அவன் தன் மனைவியைப் பனியில் சாகவிடுகிறான். இறுதி நேரத்தில் காப்பாற்றவும் ஓடுகிறான். காப்பாற்ற வேண்டும் எனும் உள்விருப்பம் அவனுக்கு இருக்கிறது. அவள் இறந்த பின்னால் அதற்காக மிகவும் துயரமுறுகிறான். அவனுக்குள் உறுத்தல் இருக்கிறது. அவனுக்குள் இருக்கும் அந்த உறுத்தல் ஒரு தனிநபராக அவனைச் சீரழிக்கிறது. அவன் ஆன்மாவை உடைக்கிறது. இதுதான் எனக்கு மிகவும் ஆக்கப்பூர்வமானது. அந்தப் பொய்யன் திருடன் மொகத்தை எடுத்துக்கொள்வோம். அவன் சிறைக்குத் திரும்பிப் போக மறுக்கிறான். சுட்டுக்கொல்லப்பட்ட தமையனைத் தொடர்ந்து தானும் போராடப் போவதாக சொல்கிறான். எத்தகைய சிரமங்களையும் ஏற்பதாக சொல்கிறான்!  என்னளவில் ஆக்கப்பூர்வமானது என்று நான் காட்ட விரும்புவது வாழ்வு மாறிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான், மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான், வாழ்வு செழுமைப்படுகிறது. வேறுவிதமாக வளர்கிறது. இயங்குகிறது என்பதைத்தான்.

புரட்சிகர இயக்கத்தில் உங்கள் கலையின் பங்கு என்ன என்பது ஒரு கேள்வி. எனது நோக்கம் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது இதற்கு,

  1. அரசியல்.

      2.பொருளாதாரம்.

  1. கருத்துருவ கலாச்சார களம்,

என்று மூன்று உண்டு. கலாச்சார போராட்டம் என்பது கருத்துருவப் போராட்டமும்தான். ஒரு வகையில் அரசியல் போராட்டமும்தான். ஆனால் அரசியலின் எல்லாக் கூறுகளையும் அது கொண்டிருக்க வேண்டுமெனப் பாசாங்கு செய்ய முடியாது. கலையின் பங்களிப்பை அரசியல் போராட்டம் நிறைவு செய்யவேண்டும். கலையின் வீச்சை, அதோடு சேர்ந்த அரசியல் வேலை நிறைவு செய்யவேண்டும்.

கலைப்படைப்புக்குள் அரசியல் போராட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் அனைத்து இலட்சியங்களையும் தேடிக் கொண்டிருப்பது சரியல்ல, கலைப்படைப்பு அரசியல் இயக்கத்தை எளிமையானதாக்கும். அரசியலின் முழு வேலையையும் கலைப்படைப்பின் மீது ஒருவர் சுமத்த முடியாது. கலைப்படைப்பு சில ஸ்தூலமான அரசியல் நடவடிக்கைகள் எழுத்துக்கள், விளக்கங்களை வியாக்கியானங்கள் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும். சில தோழர்கள் என்மீது அரசியல் தொடர்பாக கடுமையாக விமர்சனங்கள் வைக்கிறார்கள்.அந்த விமர்சனங்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவை அல்ல.

கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் உலகு பற்றிய சரியான அரசியல் நிலைப்பாடுள்ள கலைஞன், தனது படைப்பு மூலம் பரந்துபட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும். அந்தக் கண்ணி அரசியல் தன்மை வாய்ந்ததாகலாம். அந்த அர்த்தத்தில் அரசியல் பிரச்சாரத்துக்கு அரசியல் எழுச்சிக்கு கலை உபயோகமாகும். ஆனால் அதன் வறட்டு அர்த்தத்தில் பிரச்சாரத்திலும் போராட்டத்துக்கும் பயன்படவேண்டுவது கலை என்று சொல்வதை நான் மறுதலிக்கிறேன் என்கிறார் குணே. குணே மேலும் சொல்கிறார், இந்த அர்த்தத்தின் படி புரட்சிகரமான கலையை நீங்கள் கொண்டிருக்கும் போது நீங்கள் மக்களை மட்டும ஆகர்ஷிப்பதில்லை. பிற கலைஞர்களையும் ஆகர்ஷிக்கிறீர்கள். அரசியல் பிரக்ஞைக்கு களத்தை நீங்கள் தயார் செய்கிறீர்கள். இந்த அர்த்தத்தில் கலை ஒரு ஆயுதம் ஒரு படைக்கலம் போன்றது.

ஆனால் கலை, தனக்கேயுரிய தனிமொழியைக்  கொண்டது. அது கலைக்கே உரிய மொழி. அந்த மொழியை முழுமையாக, முற்ற முழுதாக எவரும் மதிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் மதிக்கவில்லையானால் பின்னர் அந்த ஆயுதம் உங்களைக் கொல்லும்படி அது திருப்பித்தாக்கும் வலுக்கொண்டது.

1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 துருக்கி அரசியல் அகதியாக பாரிஸில் கான்ஸர் நோயினால் மரணமுறும் விநாடியில் குணேயின் இறுதி வார்த்தைகள் இவைதான்: “ எனக்குக் குளிருகிறது, பாரிஸ் கம்யூன் தோழர்களின் போர்வையை எனக்கு போர்த்துங்கள்.”அவர் விருப்பப்படியே பாரிஸ் கம்யூன் தோழர்களின் கல்லறைக்கு அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

யமுனா ராஜேந்திரன்-ஐக்கிய இராச்சியம்

யமுனா ராஜேந்திரன்

(Visited 66 times, 1 visits today)
 
யமுனா ராஜேந்திரன்

அனுபவவாதமும் அறிவுத்தேடலும்-கட்டுரை-யமுனா ராஜேந்திரன்

அனுபவம் என்பது ஐம்புலன்களால் உணரக்கூடியது. பகுத்தறிவு என்பது இயல்பான உணர்வுகள் குறித்த தர்க்கம். அறம், உரிமை போன்றன மனிதனது இயல்பான உணர்வுகள். அடிமைத்தனம் பிற்போக்கானது என அறிந்ததும், சிறுபான்மையினர் உரிமை […]