அனுபவவாதமும் அறிவுத்தேடலும்-கட்டுரை-யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்அனுபவம் என்பது ஐம்புலன்களால் உணரக்கூடியது. பகுத்தறிவு என்பது இயல்பான உணர்வுகள் குறித்த தர்க்கம். அறம், உரிமை போன்றன மனிதனது இயல்பான உணர்வுகள். அடிமைத்தனம் பிற்போக்கானது என அறிந்ததும், சிறுபான்மையினர் உரிமை அவசியம் என அறிதலும் இதன் பாற்பட்டது. இந்த இயல்பான உணர்வுகள் என்பது மனிதகுல வரலாற்றில் அகமும் புறமுமாக மனிதன் பற்றிய அறிதல். இதனையே உயிர்க்கூற்று ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

இயக்கவியல் என்பது,  (அ).கருதுகோள்  (ஆ). அதன் வளர்ச்சி மற்றும் சிதைவு  (இ).எதிர்கருதுகோள், என இவை மூன்றையும் இணைத்ததொரு தொகுப்புமுறை. இதனை முரண்பாடு குறித்த பகுப்பாய்வு எனவும் கோட்பாட்டுத் தொகுப்பு எனவும் முன்வைக்கலாம்.

கருத்தியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சாதிக்கப்படக் கூடியன குறித்த ஒரு கோட்பாட்டுச் சட்டகம். நம்பிக்கைகளின் தொகுப்பு. கட்சிகளது திட்டங்களை இந்த வகையில்தான் கட்சிக் கருத்தியல்கள் என்கிறோம். கருத்தியல்கள் மனிதனது தோற்றமும் வளர்ச்சியும் இறப்பும் குறித்த தத்துவ தரிசனத்தைக் கொண்டிராதபோது அவை ஒரு சாராரின் நம்பிக்கைகள் எனும் அளவில் குறுகிப் போய்விடுகின்றன.

மார்க்சியம் ஒரு தத்துவப் பார்வை. அரசியல், பொருளியல், கலாச்சாரம் என மூன்றும் தழுவிய மனிதனது விடுதலை குறித்த ஒரு தரிசனம். அது வரலாற்று ரீதியிலான ஒரு கருத்தியல். அது ஒரு நடைமுறைக் கோட்பாடு. இதனைச் சாதிப்பதற்கு அது ஒரு வரலாற்றுப் பாத்திரமாக உழைப்பு வர்க்கத்தை முன்னிறுத்தியது. முன்னேறிய வர்க்கம், பாட்டாளி வர்க்கப் பிரக்ஞை, உயிர்ப்புள்ள அறிவுஜீவி என்றெல்லாம் இந்த வர்க்த்தினதும் வர்க்கச் சார்பினதும் புரட்சிகர உணர்வை மார்க்சியர் பேசுகின்றனர்.

‘தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் முழு மனித குலத்தையும் விடுவிக்கும்’ என்கிறது மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதி வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எனும் விடுதலைப் பிரகடனம்.

சோவியத் அனுபங்களுடன் இப்போது நாம், தொழிலாளி வர்க்கப் பிரதிநிதி என்பதற்கு அப்பால் விளிம்புநிலை மக்கள், உள்தள அடுக்குகள் கொண்ட அரசியல் எனப் பேசுகிறோம். சாதி, இனம், நிறம், பால் வேறுபாடுகள் என்பன பரஸ்பரம் நாம் பேசுகிற எல்லா விடுதலை அடிப்படைகளிலும் ஊடாடி இருப்பதைப் பேசுகிறோம். லெனின் பேசிய ‘சோசலிசத்தில் ஜனநாயகம்’ என்பதன் விரிவாக்கமும் சமகால அர்த்தமும் இதுதான்.

அனுபவவாதம் என்பதை ஐம்புலன் சார்ந்த அனுபவம் என்றோம். புலனுனர்வே அறிதலின் அடிப்படை என்பது அனுபவவாதம். அரசியல் அடிப்படையில் அதனை நேர்க்காட்சிவாதம் எனலாம். புலனுணர்வால் அனுபவித்து அறிவதுதான் உண்மை. உலகு குறித்த பார்வை என்பது இதனால்தான் உருவாகிறது என்பது இதனது வாதம்.

ஒருவரது புலனுணர்வால்தான் அறிவு உருவாகிறது எனில் அறம், உரிமை, நன்மை, தீமை, விடுதலை போன்ற கருத்தாக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன? அடிமைத்தனம் தீமை, அடிமைத்தனம் நீங்கிய வாழ்வு விடுதலை என்கிற மதிப்பீடுகள் எவ்வாறு உருவாகின்றன? இந்த கருத்தாக்கங்கள் பொருண்மையான மனிதனது அனுபவங்களை பகுத்தறிவுக்கு உட்படுத்தியதன் வழியிலேயே இந்தக் கருத்தாக்கங்கள் உருவாகின்றன.

‘தீ சுடும்’ என்பதனை குழந்தைகள் அனுபவத்தில் அறிய வேண்டும் என நாம் நினைப்பதில்லை. நமக்கு முன்னவர் வாழ்ந்த அனுபவத்தில் இருந்து பெற்ற பகுத்தறிவில் நாம் குழந்தைகளுக்கு இதனைப் பயிற்றுவிக்கிறோம். மனித குலம் இந்த நினைவில், பகுத்தறிவில்தான் முன்னோக்கிச் செல்கிறது. இதனையே கோட்பாட்டறிவு என்கிறோம்.

கோட்பாட்டறிவு என்பது ஒரு குறிப்பிட்ட அனுபவம், ஒரு காலம், ஒரு நிலப்பரப்பு, ஒரு கலாச்சாரம் சார்ந்தது மட்டும் அல்ல. அது பற்பல அனுபங்கள், பற்பல நிலங்கள், காலங்கள், கலாச்சாரங்கள் சார்ந்த கோட்பாட்டறிவு. இந்தக் கோட்பாட்டறிவு பல சமயங்களில் சோதனைக்கு உட்படுத்தபட்டு நிருபணம் ஆகி இருக்கின்றன. நிரூபணம் ஆனதை எவரும் மறுபடியும் அனுபவமாக ஆக்கிப் பார்க்க வேண்டும் எனச் சொல்வதில்லை.

பகுப்பாய்வு, தொகுப்பாய்வு, விஞ்ஞான அணுகல் என்பது இவ்வாறுதான் உருவாகிறது,

அனுபவவாதம் என்பதை பிற்போக்கு அல்லது எதிர்ப்புரட்சித் தத்துவம் என்பார் லெனின். அனுபவவவாதம் ஒரு மூடநம்பிக்கையாகப் பரவி வருகிறது என்பார் மொழியியலாளரான நோம் சாம்ஸ்க்கி. அனுபவவாதத்தை ஏன் இவ்வாறு லெனினும் சோம்ஸ்க்கியும் வரையறை செய்கிறார்கள்?

அனுபவவாதம் என்பது ஒருவரது வாழ்ந்துபட்ட அனுபவம் எனில், அதுதான் உண்மை எனில், பிறரது வாழ்ந்துபட்ட அனுபவத்தின் உண்மையை பரஸ்பரும் சகமனிதர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு உரையாடல் என்பதும் எப்போதும் சாத்தியமில்லை.

ஆண் பெண், உயர்ந்தவன் தாழ்ந்தவன், முதலாளி தொழிலாளி, தலித் பார்ப்பனன், வெள்ளை நிறவெறி அடிமை வியாபாரம் போன்றவற்றை நாம் அவ்வாறே விட்டுவிட முடிகிறதா? இல்லையெனில் ஏன்? ஒருவரது அனுபவத்துக்கு அப்பால் மனிதர்க்கிடையில் முரண்பாடுகளும் வேறுபட்ட வாழ்ந்த அனுபவங்களும், அணுகூலங்களும் வலிகளும் என ஏன் மனிதர் முரண்படுகிறார்கள்? பிளவுபடுகிறார்கள்?

அனுபவங்கள் முற்றுண்மைகள் எனும் வகையில் நின்றுவிடுவதில்லை. தனிநபரின் அனுபவத்திற்கு அப்பால் நாம் நகர்கிறோம். உடன்பாடும் முரண்பாடும் கூட்டுப் பிரக்ஞையும் எதிர்மையும் தோன்றுகின்றன. அனுபவத்திற்கு அப்பால் செல்வதன் மூலமே உலகு குறித்த அறிதலும் வாழ்தலும் சாத்தியமாகிறது. அனுபவம், பகுத்தறிவு, கோட்பாடு, இயங்கியல் என்பன மனித குலத்தின் அறிதலின் கட்டங்கள்.

அனுபவத்தை மட்டுமே வலியுறுத்தி அதனை முற்றுண்மை என்பவன் தங்கி விடுகிறான். அவன் வரலாற்றை மறுக்கிறான். மற்றமையை மறுக்கிறான். சமூகத்தை மறுக்கிறான். அனுபவவாதத்தை உயர்த்திப் பிடித்த எல்லாக் கோட்பாட்டாளர்களும் வலதுசாரிச் சிந்தனையாளர்களாக இருக்க இதுவே காரணம்.

அனுபவவாதத்தை நமது சூழலில் நாம் பலதளங்களில் எதிர்கொள்கிறோம்.

பெண்ணிலைவாதம் பற்றிப் பெண்களே பேச வேண்டும். தலித்துகள் பற்றி தலித்துகளே பேச வேண்டும். தமிழகம் பற்றி தமிழகத்தவர்களே பேச வேண்டும். மூன்றாம் பாலினம் பற்றி மூன்றாம் பாலினத்தவரே பேச வேண்டும். சினிமா பற்றி சினிமா இன்டஸ்ட்ரியில் இருப்பவரே பேச வேண்டும். பார்ப்பனர் பற்றிப் பார்ப்பனரே பேசவேண்டும். கறுப்பர் பற்றி கருப்பர்களே பேச வேண்டும். இலக்கியம் பற்றி இலக்கியவாதியே பேச வேண்டும்.

இந்த வாதங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?

இவர்களுக்கு மட்டுமே தாம் பேசும் விஷயம் சார்ந்த புலனனுபவம் இருக்கிறது. இவர்கள் குறித்து இவர்கள் பேசுவது மட்டுமே ஆதார உண்மை.

இவர்கள் தனித்தனியாகவா வாழ்கிறார்கள்? சமூகத்தின் அங்கமாக இவர்கள் இல்லையா? வுரலாற்றின் பகுதியாக இவர்கள் இல்லையா? பிற மனிதர்களோடு இவர்கள் ஊடாடுவது இல்லையா? அனைத்துக்கும் மேலாக இந்த அனுபவ அடையாளங்கள்தான் முற்றுண்மை எனில், பிறரோடு தோன்றும் பரஸ்பர முரண்பாட்டில் இவர்கள் தமது சகாக்ளையும் எதிரிகளையும் கண்டுபிடிப்பது இல்லையா?

இப்போது இவர்களது முற்றுண்மைகளுக்கு என்னவாகிறது? அதே வடிவத்தில் இருக்கிறதா? மாறுதலுக்கு உள்ளாகிறது எனில் ஏன்?

ஒருவன் பலதளங்களில் பெண்ணோடு வாழ்கிறான். திரைப்படம் பார்க்கிறான். இலக்கியம் வாசிக்கிறான். அண்டை வீட்டுக்காரர்கள் பல்கலாச்சாரம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் நம்மோடு நெருங்குகிறார்கள். பலர் விலகுகிறார்கள். இங்கு நமது  அனுபவம் பிறரது அனுபவத்தோடு கலந்து மதிப்பீடுகள் உருவாகிறது. இதன் அடிப்படையில்தான் நமது சமூகத்துடனான உறவும் பிரிவும் நேர்கிறது.

மதிப்பீடு, கோட்பாடு என்பது பற்பலரது அனுபவங்களின் தொகுதி. தனிமனித அனுபவம் இங்கு பின்போய் கூட்டு அனுபவமே சமூக உறவாகப் பரிமாணிக்கிறது.

கியூபாவையும், ஈழத்தையும். குர்திஸ்தானையும் ஒப்பிட, தேசிய விடுதலைக்குப் போராடும் இந்த நாடுகளில் தலையிடும் அமெரிக்காவைப் புரிந்து கொள்ள ஒருவர் கியூபாவுக்கும் ஈழத்திற்கும் குர்திஸ்தானுக்கும் போய் புலனனுபவம் பெற அவசியமில்லை.

தேசிய விடுதலை, அவற்றின் சுயசார்பு, அமெரிக்கத் தலையீடு பற்றிய மதிப்பீடுகளையும் கோட்பாடுகளையும் ஒருவர் அறிந்திருத்தலே போதுமானது. இவ்வாறுதான் பல தளங்களில் அன்றாடும் இயங்கும் வேறு வேறு மட்டங்களில் வாழ நேரும் ஒருவர் கோட்பாட்டுத் தேடலினால் அறிவைப் பெற முடிகிறது. அனுபவவாதத்தின் எல்லை இதுதான். மதிப்பீடுகளின், கோட்பாட்டின், இயங்கியல் புரிதலின் தவிர்க்க இயலாமையும் வல்லமையும் இதுதான்.

இன்றைய உலகில் தேடல் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப மனிதன் உலகக் குடிமகனாக இருக்கிறான். கோட்பாட்டுத் தேடல் கொண்ட ஒருவன் தனித்தனி அனுபவவாத அடையாளங்களைக் கடந்து மனிதகுல விடுதலையின் வேர்களையும் விழுதுகளையும் கனிகளையும் கண்டடைய முடியும்.

யமுனா ராஜேந்திரன்-பெரிய பிரித்தானியா

யமுனா ராஜேந்திரன்

(Visited 69 times, 1 visits today)
 

இல்மஸ் குணே-Yilmaz Guney-கட்டுரை-யமுனா ராஜேந்திரன்

கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் உலகு பற்றி சரியான அரசியல் நிலைபாடுள்ள கலைஞன் தனது படைப்பு மூலம் பரந்துப்பட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும். அந்தக்கண்ணி அரசியல்தன்மை […]