உமாவரதராஜனின் கதையுலகு: அகத்தை அறியும் கலை-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்

 

உமா வரதராஜன்1970 களில் தமிழில் உருவாகி வந்த எழுத்தாளர் உமா வரதராஜன். ஈழத்தின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெறுபவர். ஒரு காலகட்ட ஈழ இலக்கியத்தின் சிறுகதை இரட்டையர்களில் ஒருவர். மற்றவர் ரஞ்சகுமார். அப்போது உமா வரதராஜன்- ரஞ்சகுமார்  என்ற குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்த வண்ணமிருந்தன. ஒரு படைப்பாளி தான் உணர்ந்ததை, அனுபவித்ததை எந்தப் பம்மாத்துமின்றி இயல்பாக எழுத வேண்டும் என்ற கருத்து இந்த இரட்டையர்களிடமும் காணப்பட்டது. ரஞ்சகுமார் அதிகமும் அரசியல் புனைவுகளை எழுத, உமா வரதராஜனோ வாழ்வியல் அனுபவப் புனைவுகளை எழுதினார். எனினும் உமாவின் கதைகள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை என்று இதற்கு அர்த்தமல்ல. போர் அரசியலை மட்டுமே முன்வைத்து தன் புனைவுகளை அவர் எழுதுவதில்லை. பல ஈழப்படைப்பாளிகளைப் போன்று அவர் ஒரே வரிசையிலேயே நிற்கும் மரம் போல் போரும் வாழ்விலும் மட்டுமே காலூன்றி நில்லாது சுதந்திரமாக படைப்புவெளியில் சஞ்சரித்தார்.

அவரது வெகுசில கதைகளே அரசியலை நேரடியாகப் பேசுகின்றன. மேலும் சில கதைகளில் அரசியல் ஓர் உப அம்சமாக உள்ளடங்கிச் செல்வதாகவுள்ளது. அந்த அரசியல் நோக்குகள் கதைக்குள் ஓர் இடைச்செருகலாகவும், அரசியல் நிலவரம் மீதான நுண்மையான விமர்சனங்களாகவும், கிண்டல்களாகவுமே முன்வைக்கப்படுகின்றன. கதைக்கு ஒரு சுவாரஸ்யத்தை கொடுக்கும் உத்தியாகவே அவரால் அது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதுவே அவரது கதைகளின் (ஒரு சில கதைகளைத் தவிர) மையமாக இருந்ததில்லை. அரசனின் வருகை போன்ற ஒரு சில கதைகளைத் தவிர அரசியல் அவரது கதைகளின் மைய முகமாக ஆகி இருக்கவில்லை.

உமா வரதராஜன் ஈழத்து இலக்கியத்தில் முற்போக்குக் கருத்தியலின் செல்வாக்கும், ஆதிக்கமும் மேலோங்கி இருந்த காலகட்டத்தின் தலைமுறையைச் சேர்ந்தவர். அல்லது அதனையடுத்து உடனடியாக வரும் தலைமுறையின் பிரதிநிதி அவர். எனினும் முற்போக்கு இலக்கியத்தின் செல்வாக்கு தன்னில் முழுமையாகப் படிவதை அவர் விரும்பி இருக்கவில்லை. “முற்போக்கு எழுத்தாளர்கள், முற்போக்கு இலக்கியம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஈழத்தில் விஷேசமான அழுத்தங்களுடன் உச்சரிக்கப்படுபவை. இந்தவகை எழுத்துகளில் எனக்கு அவ்வளவு ஈர்ப்போ, ஆர்வமோ இருந்ததில்லை” என தன்னை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டார். முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமே ஈழத்து விமர்சனப் பூதந்தேவர்களால் படைப்பாளிகளாக விஷேச கவனங்களுடன் முன்வைக்கப்பட்ட சூழலில் இப்படி ஒரு படைப்பாளி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தன் ஆற்றல் மீது நம்பிக்கையும், துணிச்சலும் தேவை. அதேநேரம், கதையின் ஆழ்தளம், ஆழ்புனைவுத் தன்மை, கலைத்தரம் போன்ற குரல்களை பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளாது ஒருவித கலகத்தன்மையுடன் தமிழ் இலக்கியவெளியில் பயணிக்கத் தொடங்கிய படைப்பாளியாக உமாவைக் கருதலாம்.

முற்போக்குச் சட்டகத்துக்குள் மட்டுமே மனித வாழ்க்கையைக் கொண்டு நிறுத்தாது, வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் வாசகன் முன் கொண்டுவர முயற்சித்தார். ஈழத்தில் இந்த வகைப் படைப்பாளிகளின் வரிசை மு.தளையசிங்கம், எஸ்.பொ, உமா வரதராஜன் என வளர்ந்து செல்லக்கூடியது. (டொமினிக் ஜீவா, கே.டானியல் போன்றோர் சாதியத்தை முன்னிபை்படுத்தினர். அவர்களது கதைகள் குறித்தும் ஒரு விரிவான வாசிப்பும் கருத்தாடலும் இன்று தேவைப்படுகிறது).

சூழலோடு போராடிப் பெற்ற வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களின் கதைகள் உமாவினுடையவை. வாழ்க்கையை அதன் அசலான தன்மையோடு வெளிப்படுத்தும் மனிதர்களை அவரது கதைநெடுகிலும் காண முடியும். சமூகப் போக்குகள் மீதும், சாராசரி மனிதர்களின் வாழ்க்கையை, எண்ணங்களைத் தீர்மானிக்கும் சக்திகள் மீதும் அவர் முன்வைக்கும் கிண்டலான விமர்சனங்கள் அவரை ஒரு புதுவித முற்போக்குவாதியாக நிறுவுகின்றன. இதனால் முற்போக்கின் எல்லைகளை அவரால் முற்றாக கடக்க முடிவதில்லை.

இலக்கியரீதியாக, மொழிசார்ந்து, விபரணங்கள் சார்ந்து படைப்பு ஆழங்கொள்ளாவிட்டாலும் மனித மனங்களின் ஆழத்தை, மத்தியதர மக்களின் வாழ்க்கையின் ஆழங்களை கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார்.

சில கதைகள் கதை எனும் வடிவம் பெறாது சிதறலான நிகழ்வுகளால் வாழ்க்கையை காட்ட முனையும் போக்குடன் இருக்கின்றன. அத்தகைய கதைகளில் ஆழ் புனைவு, ஆழ்தளம் என எதுவும் இல்லாவிட்டாலும் இலக்கிய வாசகனுக்குத் தேவையான இரசனையும், புனைவும், ஆழமும் உள்ளடங்கி இருக்கின்றன. ஒரு கதையை அளவுக்கு மீறிய வார்த்தை ஜாலங்களால் மிகைப்படுத்திச் சொல்லும் போது அது தன் வாசகத் தன்மையை விட்டும் கீழிறங்கிச் செல்கிறது என்பதை படைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒரு குவளைத் தேனீர்க்கு தேவையானளவுதான் சீனி சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதை அருந்த முடியும். குவளையின் முக்கால்வாசிக்கு சீனியைக் கொட்டிக் கலக்கி சும்மா தேன் காய்ச்சக்கூடாது. ஒரு கதைக்கு அளவுக்கு மீறிய விபரணங்களும், சொல்விளையாட்டுகளும் ஒரு கதையை இப்படித்தான் அதன் நிலையிலிருந்து அதனை கீழிறக்கி விடுகின்றன. ஆயினும் விபரணங்களும்,சொல்விளையாட்டுகளும் ஒரு கதையில் தேவையைவிடக் குறையும் போது அக்கதை தட்டையானதாக ஆகிவிடும்.

ஈழத்துப் படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோர் தமிழக வாசகர்களாலும் அதிகம் கொண்டாடப்படுகின்றனர். அவர்களின் கதைகளிலும் ஆழம், அதீத விபரணங்கள் இல்லை. படைப்புகள் அதன் சமூக, அரசியல் தளங்களில் தன்னை சரியாக நிலைப்படுத்தும் போது அது இலக்கியப் படைப்பாகிறது. அதீதகற்பனையான மொழி விளையாட்டுக்கள் ஒரு படைப்புக்கு இரண்டாம் பட்சமானவைதான்.

உமாவின் பெரும்பாலான கதைகள் ஒரு நகர்ப்புற- மத்திய தர மக்களின் வாழ்க்கைக் கோலங்களை சித்தரிப்பவை. அதனால் அவரிடம் கிராமியச் சுவையை, கிராமிய மொழியை, மண்வாசனையைக் காண முடிவதில்லை. அது ஒரு படைப்பாளியின் ஆற்றல்சார்ந்த விடயமல்ல. அவரது இலக்கிய நிலைப்பாடு சார்ந்தது.

வாழ்வு பற்றிய அச்சங்களுடனும், அதிக கேள்விகளுடனும் வாழும் மனிதர்களைத்தான் அவர் கதைகள் நெடுகிலும் நாம் சந்திக்கிறோம். ஒரேவகையான வேட்கையையும், எரிச்சலையும் கொண்டவர்கள் திரும்பத்திரும்ப வருகின்றனர். ஒரு கதைக்குள் நிகழும் மனத்துயரும் வாழ்வுபற்றிய அச்சமும், விபரணங்களும் மறுகதைக்குள்ளும் நிகழ்கிறது. திட்டமிட்டபடி வாழ்க்கை நகராத அல்லது திட்டமே செய்துகொள்ளா மனிதர்கள் தற்செயல் நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்படும் ஓர் எளிய நிகழ்வாக இதை நாம் வரையறை செய்து கொள்ள முடியும். இதைத் தவிரவும் அதற்கு வேறு அர்த்தங்கள் கிடையாது என்றே சொல்வேன்.

கதைகள் அனைத்தும் இயல்பாக மனித வாழ்வை அதன் புறவயத்தையும் அகத்தையும் பேசுபவை. யதார்த்தத்தை மீறிய தர்க்கங்களோ, வெறும் குதர்க்கங்களோ அற்றவை. சில பாசாங்கான மனிதர்களை, வாழ்வின் போலியான பக்கங்களை சமரசமற்று நையாண்டிசெய்பவை. இதனால் உமாவின் படைப்புலகின் ஒரு பகுதி மென்மையானதாகவும் மீதி வன்மையாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு முரண்நிலைகளில் வாழும் மனிதர்களை, அனுபவங்களை புனைவின் அதீதச் சிடுக்குகள் குறைந்த இயல்பான சுவாரஸ்யமான மொழியில் கதையாடுகிறார் உமா.

“தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்” கதையில் வரும் மையக் கதாபாத்திரமான “அவன்” பெறும் சிதறலான அனுபவங்கள் மூலமே கதை நகர்ந்துசெல்கிறது. அவரது சுய வெளிப்பாட்டு அறிவிப்புக்கு மிக நெருக்கமாக வரும் கதை. சமூகத்தில் பொது மனிதர்களோடு, அவர்களது உலகத்தோடு ஒட்டி உரசி வாழ விரும்பாது விலகி நிற்க விரும்பும் ஓர் இளைஞனின் கதை. உமா தனது சொந்த மனநிலையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக அந்த இளைஞனை உருவாக்கி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. “அவனுக்கு “ஏற்படும் பல்வேறு அனுபவங்கள் கிளைத்துப் பெருகி ஒரு கதையாக வார்த்தெடுக்கும் நுட்பம் உமாவின் அதிக கதைகளில் காணமுடிகிறது. வெயிலும் வெறுமையும்” சமூகத்தில் மாணவர்கள், யுவதிகள் எனும் தரப்பாரின் மனதின் உட்சிடுக்குகள், சமூகவெளியில் அவர்களின் எதிர்பார்ப்புகள், கனவுகளை பேசும் கதை.

சின்னஞ்சிறு சிறகுகள் கம்யூனிஷ இயக்கம் ஒன்றின் மீதான நுண் விமர்சனங்களை மையமாக கொண்டு நகரும் கதை. 1980ல் எழுதப்பட்ட இக்கதை அப்போதைய இலக்கியத்தின் மீதான மார்க்ஸிய விதந்தோதல்களுக்கு அதாவது முற்போக்குவாதத்துக்கு எதிரான குரலாக பார்க்கப்பட முடியும். கதையின் மையத்தளம் மார்க்ஸிசம் மீதான ஒரு படைப்பாளியின் அகநோக்கிலான விமர்சனமேயாகும். செம்பறவைகள் எனும் அமைப்பு ஒழுங்கு செய்த இலக்கிய நிகழ்வொன்று குறித்த தன் மௌனமான, எள்ளலான விமர்சனத்தை பதிவுசெய்யும் கதை. இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி தமிழில் அதிகம் எழுதியவர் அசோகமித்ரன்தான். அவரது விழா மாலைப்போதில்”, மற்றும் ஒற்றன்” நாவலே மையமாக இதைத்தான் பேசுகிறது. இதை ஒரு தகவலுக்காகசொல்கிறேனே ஒழிய இவ்விரு படைப்பாளிகளின் பார்வைகளும் சமாந்தரமானதோ, உட்தொடர்புகள் கொண்டதோ அல்ல. தங்களளவில் இருவரும் வேறுவேறு பார்வையைக்கொண்டவர்கள். வேறு மொழிப்பாவனையை உடையவர்கள்.

இக்கதையில் செம்பறவைகள் இயக்கம் அல்லது கம்யூனிசம் மீது உமா முன்வைக்கும் விமர்சனங்கள் ஓர் ஆழமான கோட்பாட்டு மறுவிசாரணையாகவோ, நிராகரிப்பாகவோ இருப்பதில்லை. ஒரு படைப்பாளியின் அகநோக்கிலான அனுபவ உண்மைகளின் அடிப்படையிலான நிராகரிப்பாகும். இக்கதையை மார்க்ஸிய கோட்பாட்டுரீதியான பார்வைப் புலங்களுக்கூடாக மிக எளிதில் நிராகரிக்க முடியும். அது மார்க்ஸியத்தின் ஆழமான பிரச்சினைகள் மீது கதையாடுவதில்லை. ஆழமான அதன் கோட்பாட்டுத் தளங்கள் மீது விசாரணைகளை முன்வைப்பதில்லை. அது அக்கோட்பாட்டைப் பேசும் சில தனிமனிதர்கள் மீதான பகடியாகவே தோன்றுகிறது. அவர்களது முதிர்ச்சியற்ற சில நடத்தைகளை முன்வைத்து கிண்டலடிக்கிறது.

“முகங்கள்மாதத் தவணைமுறையில் பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் பொருட்கொள்வனவு செய்தவர்களிடம் கட்டணத்தை அறவிடச் செல்லும் கம்பனி முகமையாளனான நகுலன் சந்திக்கும் பல்வேறு மனிதர்களின் முகங்கள் பற்றிய கதை. நகுலனின் மனப் போராட்டமும், தொழில்சார் நெருக்கீடுகளுமே கதை. கதையின் சில இடங்களில் நகுலனின் ஆற்றாமையும், சில இடங்களில் அதனை வெற்றிகொள்ளவதற்கான அவனது துணிச்சலும் கதையை நகர்த்திச் செல்லும் விசைகளாக வெளிப்படுகின்றன.   கதையில் உள்ளார்ந்தமான ஓர் அரசியல் விமர்சனம் இருக்கிறது. அது சில இடங்களில் மட்டும் தோன்றி மறைந்துவிடுகிறது. உதாரணமாக நகுலன் ஜயசேகர எனும் பொலிஸ் அதிகாரியை சந்திக்கும் போது, டாக்டர் நெவில் பெர்னான்டோவை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவது சரியான முடிவு எனக்கூறி நகுலனுடைய அபிப்ராயத்தைக் கேட்டார் ஜயசேகர என்ற அரசியல் விவரணம் கதைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக மேலதிகமாகச் சேர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இக்கதையில் உள்ளடங்கி இருக்கும் அரசியல் விமர்சனங்கள் இந்த நோக்கத்தை நிறைவுசெய்யும் உத்தியாவே தெரிகின்றன.

அதேநேரம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நிகழ்ந்த ஈழப் போராட்டத்தின் மத்தியில் நகுலன் போன்றவர்கள் கண்டுகொள்ளப்படாத பிரச்சினைகளின் குறியீடாக வருகின்றனர். பெரும் அரசியல், உரிமைப் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்ல நிகழும் தனிமனிதப் போராட்டங்கள் பற்றியும் பேச வேண்டிய பொறுப்பு அந்த சூழலில் வாழும் ஒரு படைப்பாளிக்கு இருப்பதை இக்கதை மூலம் உமா நினைவூட்டுகிறார்.

“அரசனின் வருகை” ஈழப் போரையும், அதனுள் சிக்குண்ட மக்களின் அவலத்தையும், ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளையும் நையாண்டி செய்யும் கதை. குறியீடுகளால் அரசியலைப் பேசும் கதை. இக்கதை வெளிவந்த காலப்பகுதியில் தமிழ் இலக்கியச் சூழலில் அதிக கவனிப்பை பெற்ற கதையாக அறிய முடிகிறது. ஈழ இலக்கிய சூழலிலும் தொடர்ச்சியாக இக்கதை பற்றிய பேச்சுகள் நிலவின. இன்று வரைக்கும் உமா வரதராஜன் என்றால் அவரது அரசனின் வருகை, எலியம் போன்ற கதைகள் நினைவுக்கு வரும் அளவுக்கு அதிகமாக இக்கதை பேசப்பட்டது. ஆயினும் அவை அரசியலை நேரடியாகவன்றி குறியீடுகளால் பேசும் கதைகள். ஆயினும் அவரது அரசனின் வருகையைவிட வேறு சில கதைகளில் வெளிப்படும் அழகியல் மொழியோ, அங்கதமோ, நுண்ணிய சித்தரிப்புகளோ இக்கதைக்குள் இல்லை. இருந்தாலும் அது அதிக கவனிப்பை பெற்றது.

000000000000000000000

உமா வரதராஜனின் கதைமாந்தர்கள் எவரும் நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு புதிய அனுபவத்தை திறக்காமல் முடிந்துவிடுகின்றனர். நடுத்தர மக்களின் அகநெருக்கீடுகள் மட்டுமே கதைகளை இயக்கும் மைய விசை. அவர் படைப்புமனம் கவனங்கொள்ளும் வெளியும் அதுதான். அதற்கு அப்பால் புதிய அனுபவங்களைத் திறக்கும் பயணத்தை தன் படைப்புகளின் வழியே அவர் நிகழ்த்துவதில்லை. ஆனால் அதற்கான எத்தனிப்புகள் சில கதைகளுக்குள் தெரிகின்றன.

உமாவின் படைப்புலகு ஒருபடித்தான மனிதர்களாலானது. தன் சொந்த ஆன்மாவின் கனவுகளினதும், எதிர்பார்ப்புகளினதும் பிரதிபலிப்பாகவே கதைகள் உள்ளன. பெரும்பலான கதைளில் அவர் வெளியேறாமல் தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் கூடவே வந்துவிடுகிறார். படைப்பிலிருந்து படைப்பாளியை நீக்கிப்பார்க்க விரும்பும் வாசகனுக்கு கதையில் அவரது “இருப்பு“ எதிர்மறை உணர்வுகளைக் கிளர்த்தக்கூடும்.  அத்துடன் ஒவ்வொன்றின் மீதும் பிடிப்பற்ற ஒவ்வாமையைக் கொண்ட மனிதர்களை கதை நெடுகிலும் வாசகன் சந்திக்கிறான். சூழலில் ஒருவன் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சவால்களை திடமான மனநிலையோடு எதிர்கொண்டு வாழ்க்கையை இன்னொரு தளத்துக்கு நகர்த்த முடியாமல் தடுமாறும் மனிதர்களாக உமா அவர்களை முன்னிறுத்துகிறார். எனினும் நகுலன் போன்ற ஒரு சில விதிவிலக்கான மனிதர்களையும் உருவாக்கி இருக்கிறார்.

நாம் அன்றாடங்களிலிருந்து அறிந்துகொள்வதை விடவும் விஷேசமாக ஓர் அனுபவத்தை வாசகனுக்கு படைப்பாளி கொடுத்துவிடுகிறான். அந்த புதிய அனுபவக்கையளிக்கையைத்தான் ஒரு படைப்பாளி தன் படைப்புகளுக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அதைத்தான் அவன் தனது எழுத்தின் கடமையாகவும், பணியாகவும் கருதுகிறான். அந்த அனுபவம் அறம்சார்ந்ததாக, உண்மையை நோக்கியதாக நீதியை நிலைநாட்டும் போர்க்குணம் கொண்டதாக இருக்கிறது. ஒரு நிகழ்வில் ஒரு சாதாரண வாசகனால் அறிந்துகொள்ள முடியாத ஒரு புதிய அறிதலை அவனுக்கு படைப்பாளி வழங்குகிறான். அந்த அறிதல் ஒரு படைப்பாளிக்கு அவனது புற அனுபவங்களும், அக நோக்கும் சேர்ந்தே வழங்கியதாகும்.

அன்றாட மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிய வழக்கமான கதையாடலை மாற்றி மீபுனைவுக் கதையாடலை நிகழ்த்தி மொழியியல் விளையாட்டுக்கள், சிலேடைகள், வரலாறு, மண்வாசனை பற்றிய பூடகமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் கதைமொழியை தேவையற்றுச் செறிவூட்டுவதோ அல்லது தன் சூழலை விட்டுப் பாய்ந்து சென்று அதீத கற்பனையால் விசித்திரமான கதைக்கருக்களை உருவாக்கி வாசகர்களையும், விமர்சகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் பரிசோதனைகளையோ உமா நிகழ்த்துவதில்லை. எனினும் அவர் கதைக்குள் குறியீடுகளின் பாவனைகள் புதுவடிவம் கொண்டுள்ளன. எலியம், அரசனின் வருகை போன்ற கதைகளில் அதனைக் காணலாம்.

உமாவரதராஜனின் கதைமொழியும், அவர் கதையாக வெளிப்படுத்திய சம்பவங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும் உரியவை அல்ல. வெறும் அரசியல் நிகழ்வுகளுமல்ல. அதனால் அவரது படைப்புகள் இலக்கிய வெளியில் ஒரு நிலைத்த தன்மையைப் பெற்றிருக்கின்றன. போர்-அரசியல்-அதுசார்ந்த வாழ்க்கை என்ற முக்கோணச் சுற்றுக்குள்ளிருந்து முற்றிலும் விலகி நிற்கும் ஒரு படைப்புலகு உமாவினுடையது.

ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

(Visited 117 times, 1 visits today)
 

2 thoughts on “உமாவரதராஜனின் கதையுலகு: அகத்தை அறியும் கலை-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்”

Comments are closed.