கருணாகரனின் ‘இரத்தமுமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான் கரைக்க குறிப்புகள்”: போர்க்காலத் துயரத்தின் கவிதைகள்-நூல் விமர்சனம்-ஜிஃப்ரி ஹாசன்

ஈழப்போரின் வலி நிறைந்த அனுபவங்களைப் பதிவு செய்யும் கவிதைச் செயற்பாட்டோடு மேற்கிளம்பிய இலங்கையின் வடபுலக் கவிஞர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர் கருணாகரன். வடக்கின் போர் சூழலை இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த சேரன், திருமாவளவன்,அஸ்வகோஸ், எஸ்போஸ் போன்ற கவிஞர்களின் வரிசையில் இடம்பெறுபவர் கருணாகரன்.

இவரது அண்மைய கவிதைத் தொகுதியான “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்” காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 50க்கு மேற்பட்ட கவிதைகளையும், படுவான்கரைக் குறிப்புகள் எனும் தனியான நெடுங்கவிதையையும் கொண்டதாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய ஆறாதவடு, மனித அவலத்தின் முன் கைகட்டி நின்ற அவலங்கள் அல்லது எதையாவது செய்யத் துடித்த தருணங்களை தனது கவிதை மொழியில் பதிவு செய்கிறார் கருணாகரன்.
கருணாகரனின் கவிதைகளில் வரும் மனிதர்களும் அவர்களின் வாழ்வும் போரினால் முற்றாக சிதைக்கப்பட்டுவிட்டன. யுத்தம் என்ற பெருந்துயரிலிருந்து மீள முடியாத ஒரு மக்கள் திரளின் துயர வாழ்வின் கோட்டுச் சித்திரங்களாக தோற்றங் கொள்கின்றன கருணாகரனின் கவிதைகள். எந்த நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாத ஒரு கவிஞனின் தவிப்பும் இத்தொகுதி எங்கும் பரவிக்கிடக்கிறது.

“நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் நெருப்பு
என்னைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது”

என்று தனது கவிதை ஒன்றில் எழுதுகிறார் கருணாகரன். இந்த இரு வகையான மனநிலையுடன் தான் கருணாகரன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது இந்த வரிகள் உணர்த்துகின்றன.

“நம்பிக்கையானவர்கள் நம்மை
விட்டுச் சென்றார்கள் ஒரு பாழடைந்த வீட்டில்
நாங்கள் தனித்து விடப்பட்டோம்..”

என்றுதான் தனது மக்களின் இருப்பை உலகுக்கு கருணாகரனால் வெளிக்காட்ட முடிகிறது. எல்லா முனைகளிலும் கைவிடப்பட்ட மக்களுக்கு தன்னால் எந்தளவு நம்பிக்கையூட்ட முடியும் என்ற கேள்வி எல்லாக் கவிதைகளிலுமே தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.

கருணாகரனின் கவிதைகளில் வரும் ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது.

“எப்போது வருவார் அப்பா?” என்ற எதிர்பார்ப்புத்தான் அநேக குழந்தைகளின் கனவாகவுள்ளது. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த நம் அனைவரினதும் கேள்வியை கருணாகரனின் குழந்தைகள் அவரது கவிதைகளில் கேட்டுக் கொண்டிருப்பதையே இந்த வரிகள் சுட்டுகின்றன.

கருணாகரனின் கவிதைகளில் வாழும் மனிதர்கள் கொண்டாடப்பட முடியாத அவலத்தில் வாழ்பவர்கள். யுத்தம் அவர்களின் விதியை அப்படித்தான் வரைந்திருக்கிறது. அவமானங்களாலும், அவலங்களாலுமான ஒரு வாழ்வையே யுத்தம் அவர்களுக்குப் பரிசளித்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்களைப் பாடும் கவிஞனின் குரல் “பொய்யுரையின் காலம்“ எனும் கவிதையில், இப்படி ஒலிக்கிறது

“கணத்தில் உருகி பாறையாகும் மனிதர்களை
நானெப்படிக் கொண்டாடுவேன்?”

இங்கு இறந்து போன மனிதர்களை விடவும் உயிரோடிருப்பவர்களை எண்ணும் போதே ஒரு வாசகனுக்குள் பெருத்த துயரம் பீறிடுகிறது. மனிதனாக வாழ்வதில் ஒரு குற்றவுணர்ச்சிக்குள்ளாகி விடுகிறான். போர் மீதும் அதன் சூத்திரதாரிகள் மீதும் தீராக் கோபங் கொள்கிறான்.

பலஸ்தீனக் கவிஞர்களின் குரலுக்கு மிக நெருக்கமாக ஒலிக்கிறது கருணாகரனின் குரலும்.

‘ரத்தத்தில் மிதக்கும் காஸாவில்
என்னுடைய குழந்தை தீயில் எரியக் கண்டேன்”

என்கிறார் ரத்தப்பெருக்கு எனும் கவிதையில். அடக்குமுறைக்குள்ளும் யுத்தத்துக்குள்ளும் சிக்கிக்கொண்ட மக்களின் வாழ்வு உலகெங்கிலும் ஒரேவிதமாகவே சிதைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையையே கருணாகரனின் இந்த வரிகள் உணர்த்தி நிற்கின்றன.

மனித வாழ்வின் அவலங்களைக் கவிஞன் பாடும்போது அதற்கு நெருக்கமான சொற்களையே கவிஞன் தேர்ந்தெடுக்கிறான். இத்தொகுதியிலுள்ள கவிதைகளும் மனித வாழ்வின் போர்க்கால அவலங்களைப் பேசுவதால் துயரம் கசிந்து கொண்டிருக்கும் சொற்களைத்தான் இங்கும் கவிஞன் தேர்வு செய்திருக்கிறான்.
கருணாகரனின் கவிதைகளில் முரண்பட்ட நிகழ்வுகளும் முரணிணைவு கொள்வதையும் காணலாம்.
“பறவையின் வீடு” எனும் கவிதையில்,

“மழையில் நனைந்து கொண்டிருக்கும் மரத்தில்
எரிந்து கொண்டிருக்கும் காட்டில்”

எனும் வரிகளில் மழையில் நனையும் காடு எரிந்து கொண்டிருப்பதான முரண் நிகழ்வு கவிதையின் அழகியலாகத் தெரிகிறது. ஒரு கவிதைக்குள் ஒலிக்கும் குரல் ஏனைய கவிதைகளிலும் ஒலிப்பதை வாசகன் உணர்கிறான். தொகுதியிலுள்ள முழுக்கவிதைகளினதும் பேசு பொருள் ஒன்றாக இருப்பதனால் அது தவிர்க்க முடியாததாகிறது. சலிப்புத் தட்டாத கவிதை மொழியும், போரில் வெந்த சொற்களின் தனிமையும் இணைந்து விகசிக்கும் கருணாகரனின் கவிதைகள் போரின் சித்திரமாகவும், விசித்திரமாகவும், அவலத்தின் குரலாகவும் ஒலிக்கக் கூடியவை.

படுவான்கரைக் குறிப்புகள் எனும் நெடுங்கவிதை கடைசிக்கட்ட ஈழப்போரில் சிக்குண்டு மடிந்த சிறுவர் போராளிகளின் வாழ்வையும் கனவையும் இரத்தமும், சதையுமாக வெளிப்படுத்தும் கவிதை. அந்தக் கவிதைக்குள் போரின் உக்கிரமும், பலிக்கடாவாக்கப்பட்ட ஒரு இளைய தலைமுறையின் காற்றில் கலந்து விட்ட கடைசிக் கதறல்களும் ஒலித்தபடி இருக்கிறது.

ஜிஃப்ரி ஹாசன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

(Visited 310 times, 1 visits today)