அகநதி-சிறுகதை-ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்வாப்பா எப்போதும் படுத்துக்கிடக்கும் கட்டிலை அலாவுதீன் விரக்தியாகப் பார்த்தபடி இருந்தான். அவர் இப்போது இல்லாவிட்டாலும் அந்தக் கட்டிலில் அவர் படுத்துக்கிடப்பது போலவே அவனுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. அவர் கட்டிலில் அசைவற்றுப் படுப்பது போன்றும், அசைவது போன்றும் காட்சிகள் மாறி மாறி அவனுக்குத் தோன்றின. இத்தனை நாளும் அவருக்காக வீசிக்கொண்டிருந்த ஸ்டேன்ட் ஃபேன் தூசுபடிந்து அவனைப் போலவே அநாதையாகி நின்றது. அதன் கழுத்து உடைந்து கூனிக்குறுகி ஒரு மனிதன் நிற்பதைப் போல வாப்பாவின் கட்டிலுக்கருகில் இயக்கமற்று நின்றிருந்தது.

பிறவியிலிருந்தே வாய் பேச முடியாத அலாவுக்காக வாழ்ந்து கொண்டிருந்த, அவனுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஒரேயோரு மனிதன் அவனது தந்தைதான். அவரது மரணத்துக்குப் பின் அலாவு தனித்துவிடப்பட்டவன் போல் வீட்டையே விரக்தியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்கள் வீட்டை விட்டு அவன் வெளியே செல்லவே இல்லை. சாப்பாட்டுக்காக சகோதரங்களின் வீடுகளுக்கு மாறி மாறிப் போவான். இன்று எங்கேயும் வெளியாகவில்லை. பக்கத்து வீட்டுப் பையன் மனாஃப் மட்டும் ஓரிரு தடவை அலாவுவை வந்து பார்த்துவிட்டுச் சென்றான். இப்போது அலாவுக்கு இருக்கும் ஒரே நண்பன் அவன்தான். திடீரென்று வாப்பா எழுந்து, “போடா போய் அனிபாட்ட காச வாங்கிட்டு வா“ என்று தன் உடல்மொழியில் பேசுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படவே வீ்ட்டை விட்டு வெளியேறி வழமையான தனது பாய்ச்சல் நடையில் அனீபாவின் வீட்டை நோக்கி நடந்தான்.

அனீபாவின் வீடு அவனது வீட்டுக்கு சற்று அருகில்தான் இருந்தது. வேகமாக நடந்து சில எட்டுகளிலேயே அனீபாவின் வீட்டின் முன்னால் போய் நின்றான். இது போல் பல தடவைகள் அலாவு அனீபாவிடம் பணம் கேட்டுப் பார்த்துவிட்டான். ஆனால் அனீபா அவனைக் கலாய்த்தே விரட்டிவிடுவான்.

“ப்..ஆ..ப்ஆ…காச்சி…ப்ஆ…”  அனீபாவின் வீட்டு முன்னால், அலாவுதீன் கைகளாலும், முகபாவனையாலும் பேசிக்கொண்டு நின்றிருந்தான். தான் சொல்ல வரும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக தன் அத்தனை உடல்மொழியையும் நுட்பமாகப் பாவிக்கும் திறன் அவனிடமிருந்தது. வழமை போன்று சிறுவர்கள் கூடி அலாவு பேசுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

“என்னடா, ஊமையன் சொல்றாய்..?”

அனீபா சற்று எள்ளலுடனும், எரிச்சலுடனும் கேட்டபடி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தான். அப்போதும் அவனது வழமையான ஏமாற்றுத் தோரணை அவன் முகத்தில் சித்திரமாகத் தெரிந்தது. அலாவுவைக் கண்டதும் அவனது வழமையான குறும்புத்தனமும் துளிர்த்தது. அனீபா ஒருபோதும் அலாவுவை பேர் சொல்லி விளிக்கமாட்டான். ஊமையன் என்றே விளிப்பது அவன் வழக்கம்.

“ப்ஆ…காச்சி…” மீண்டும் உடல்மொழியாலும், ஒலிக்குறிப்புகளாலும் அலாவு பேசினான்.

அனீபாவுக்கு அவன் “வாப்பா காசி தரட்டாம்” என்று சொல்வது புரிந்து விட்டது. அனீபா ஒரு வருடத்துக்கு முன்னர் அலாவுவின் தந்தையிடம் மூவாயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கி இருந்தான். அவர் உயிருடன் இருந்த நாட்களில், அதனைப் போய் வாங்கி வரும்படி அலாவுவை அனீபாவிடம் அனுப்பிக் கொண்டிருப்பார். பெரும்பாலும் இப்படியான வேலைகளுக்குத்தான் அலாவு பயன்படுத்தப்பட்டான். அலாவுவால் வாய் பேச முடியாவிட்டாலும் மிகவும் விவரமானவன். அந்தத் தெருவிலுள்ள பலருக்கும் அவன் தான் கடைக்குச் சென்று கொடுப்பான். என்ன வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும் என்று சைகை மொழியில் சொன்னால் இஞ்சியும் பிசகாமல் சொன்னபடி வாங்கி வரும் திறன் அவனிடமிருந்தது. மிகவும் நுண்ணுர்வு மிக்கவன்.

இப்போது அவனுக்கு முப்பது வயதாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவன் பொலிவிழந்த ஒரு முதியவரின் தோற்றத்தில் இருந்தான். கொக்குப் போல உயர்ந்து மெலிந்த தேகம். வாழ்க்கையின் முடிவைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்புகளுமற்ற முகம். தந்தத்தோடு ஒட்டிய கன்னத்தில் ஐதான தாடி மயிர்கள் வளர்ந்து சுருண்டு கிடந்தன. பிக்ரேசர் படாத கன்னங்கள் என்பது புலனாகிற்று. தலைமுடியை வாராமல் அப்படியே ஒழுங்கு குலைந்த தலையுடன்தான் அலைவான். தலையில் ஆங்காங்கே நரைத்த மயிர்கள் வெளிப்படத் தொடங்கி இருந்தன. அவை எல்லாம் சேர்ந்து அவன் வயதை சற்று மிகுதியாகக் காட்டின.

அவன் தனது 20 வயதுவரை வீட்டையே உலகமாகக் கொண்டு வாழ்ந்தான். அவனது தந்தை அப்படித்தான் அவனை வளர்க்க விரும்பினார். வாய்பேச முடியாத குறைபாட்டைத் தவிர அவனுக்குள் வேறு குறைபாடுகள் இருக்கவில்லை. ஆனால் அவனது தந்தையால் அவன் சிறுபிள்ளையாகவே கருதப்பட்டு சமூக வாழ்க்கையிலிருந்தும் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டுவிட்டான். அவனது சிறுபராயம் அவனை சமூகத்திலிருந்து தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது. சமூகத்திலிருந்து அவனால் எதையுமே பெற முடியவில்லை. சமூகத்துக்கும் அவனால் எதையும் கொடுக்க முடியவில்லை. எனினும், அலாவு ஒரு முழுமனிதனாகவே இருந்தான். மற்ற மனிதர்களைப் போல் அவனாலும் பார்க்க முடிந்தது. மற்ற மனிதர்களைப் போல் அவனாலும் நடக்கவும் ஓடவும் முடிந்தது. மற்ற மனிதர்களைப் போல் அவனாலும் சிந்திக்க முடிந்தது. சிரிக்க முடிந்தது. மற்ற மனிதர்களைப் போல் அவனாலும் அவமானப்பட முடிந்தது. அழ முடிந்தது. மற்ற மனிதர்களைப் போல் அவனாலும் உண்ண முடிந்தது. உடுக்கவும் முடிந்தது. அவனுக்குள் இருந்த ஆற்றல்கள்,கனவுகள், அங்கீகாரத்துக்கான ஏக்கம், எல்லா மனிதர்களையும் போல் தன்னாலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை அனைத்தும் தந்தையால் அவன் இதயவறைக்குள் போட்டுப் பூட்டப்பட்டு விட்டது. அவனது தந்தையைப் பொறுத்தவரை அவன் எதற்கும் லாயக்கற்றவன். கடைசியில் அதுவே அவனது குடும்பத்தின் நிலைப்பாடாகவும், சமூகத்தின் நிலைப்பாடாகவும் ஆனது. அவன் வாழ்வு ஒரு குடத்துள் விளக்காயிற்று. அது அணைவது வரைதான் அவன் வாழ்வு. அது அணையும் காலத்தைத்தான் அவன் குடும்பமும் ஆவலாக எதிர்பார்த்திருந்தது.

அனீபா வழமை போன்று அன்றும் அவனை ஏமாற்றினான். அலாவுவை ஏமாற்றுவது அனீபாவுக்கு கைவந்த கலை. அலாவுவை தாறுமாறாகக் கலாய்த்தால் அலாவு அங்கிருந்து அகன்றுவிடுவான் என்பதை அனீபா அறிந்திருந்தான்.

“டேய் அலாவு, நீ குளிக்கிரலியாடா செரியான நாத்தமடிக்குது..” என்று மூக்கைச் சுண்டி தன் கைகளால் முகத்துக்கு நேரே வீசிக் காட்டினான்.

அப்படியொரு வாடையை அவன் முன்னெப்போதும் நுகர்ந்திருக்கவில்லை என்பதைப் போல் இருந்தது அவன் பாவனை. அலாவுவிடமிருந்து துர்வாடை வீசுவது உண்மைதான். ஆனால் அனீபாவின் மூக்கு சற்று அதிகமாகவே சுளித்துச் சுருங்கியது.

அலாவுக்கு அவன் சொல்லும் செய்கையும் புரிந்து விட்டது. “பே..பே…” என்று நாக்கைக் கடித்து நெருப்பு முகத்துடன் எச்சரிக்கை செய்வது போல் ஆட்காட்டி விரலை நீட்டிக் காட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான். அனீபா குறும்பாகச் சிரித்தபடி நேராக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அலாவுவின் வாப்பா மரணித்து சில மாதங்களே ஆகியிருந்தன. அனீபா வாப்பாவுக்குத் தர வேண்டியதை வாங்கி மனாஃபுடன் சேர்ந்து செலவு செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் நீண்ட நாட்களாக அவன் அனீபாவைச் சுற்றி வருகிறான். அனீபாவோ காசைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணமின்றி, அவனைச் சீண்டி காயப்படுத்தி குளிர்காய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அலாவு இனி இவனைச் சந்திப்பதில்லை என்ற முடிவுடன் தான் அங்கிருந்து திரும்பிச் செல்வான். ஆனால் வாப்பாவின் நினைவு வரும் போதெல்லாம் நேராக அனீபாவைச் சந்திக்கச் சென்றுவிடுவான். காசி கேட்டு சிறிது நேரம் மல்லுக்கட்டிவிட்டு அனீபாவின் கிண்டலால் உடைந்து திரும்புவான். அனீபாவிடம் காசைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்பதைப் போலவே அலாவுவிடம் அதை திரும்ப வாங்காமல் விடும் எண்ணம் இல்லை.

அன்றும் அதே ஏமாற்றத்துடன் திரும்பினான். நேராக அலாவு மனாஃபின் வீட்டுக்குச் சென்றான். மனாஃப் பட்டம் விடுவதற்காக ஒரு ஆயத்த முயற்சியில் தனியாக ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அலாவு வாசற்படியில் நின்று “ம்னா..ம்னா..” என்றான்.

மனாஃபை அவனால் அப்படித்தான் அழைக்க முடிந்தது. மனாஃப் அங்குமிங்கும் நோட்டமிட்டுவிட்டு அலாவுவை பதட்டமாகப் பார்த்தான். அலாவு மனாஃபைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தான்

மனாஃபைத் தேடி அலாவு வருவதை அவன் உம்மா விரும்புவதில்லை. முப்பது வயதுக்காரனோடு  12 வயதுக்காரனுக்கு என்ன நட்பு என்று எப்போதும் அவர் ஏசிக்கொண்டே இருப்பார். அதனால் அந்த நட்பை மனாஃப் இரகசியமாகப் பேணவே விரும்பினான். ஆனால் அந்த சங்கடத்தை அலாவுவால் புரிந்து கொள்ள முடியாது. அவன் சகஜமாக நின்றிருந்தான். அப்போது ஒருவித துர்நாற்றத்தால் மனாஃபின் மூக்கு சுளித்திச் சுருங்கியது.

“நீ போ..நான் புறவு வாரன்” மனாஃப் சைகை மொழியில் சொன்னான். அதைப் புரிந்துகொண்டவனைப் போல் அலாவு தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அலாவுவின் நடையும் வித்தியாசமானதாகத்தான் இருந்தது. புதிதாக நடைபயிலும் ஒரு கன்றுக்குட்டி தளர்வாகவும் கோணலாகவும் கால்களை மண்ணில் மெதுவாகப் பதித்து பாயும் தோரணையில் நடப்பதைப் போல கிளம்பிக் கிளம்பி அவன் நடந்து செல்வான். அவனது அந்த நடை சிறுவர்களின் கேலிக்குரியதானது. அவனைக் கலாய்ப்பதற்கென்றே சிறுவர்கள் கூட்டமொன்று எப்போதும் அவனைப் பின்தொடர்ந்தபடி இருக்கும். அநேகமாக இத்தகைய சந்தர்ப்பங்களில் அலாவுக்கு உதவுவது மனாஃப்தான். அவன் நடையின் வேகத்தாலோ என்னவோ இலகுவில் வியர்த்து விடுவான். வியர்வைத்துளிகள் முகத்தில் அரும்பி வழிந்தோடுவதை அவன் நடந்து ஓயும் போது காணலாம். அவன் உடலிலிருந்து அதன் வாசம் வீசிக் கொண்டே இருக்கும்.

எம்பிக் குதித்து பாய்ந்து செல்லும் ஒரு குதிரையைப் போல் வேகமாக அலாவு நடந்து வருவதைப் பார்த்துக் கொண்டு இரண்டு பெண்கள் தங்கள் வீட்டுக் கேட்டடியில் நின்றிருந்தனர். அது அலாவுவின் வருகைக்கான காத்திருப்பு என்பதை அலாவு சற்றுத் தொலைவிலேயே புரிந்து கொண்டான். அவர்களுக்கு கடைக்குப் போக வேண்டி இருந்தது. அலாவுவுக்கு இதில் ஒரு பத்து, இருபது கிடைக்கும். இதனால் அலாவுவின் நடை இன்னும் சற்று வேகமாகியது.

அந்தப் பெண்களையடுத்து நான்கைந்து ஆண்களும் அங்கே குந்தி இருப்பது தெரிந்தது. அலாவு அவர்களை அவதானமாகப் பாரத்தபடி நடந்தான். அதில் ஒருவன் அனீபா. வேறு குறுக்கு வீதி ஒன்றால் மாறிச் செல்லத்தான் அவன் மனம் விரும்பியது. இருந்தாலும் கிடைக்கவிருக்கும் பத்து, இருபதை ஏன் இழப்பான் என்று எண்ணிக் கொண்டே தளர்வாக நடந்து சென்று சேர்ந்தான்.

அலாவு வருவதைக் கண்டதுமே அனீபா அவனைக் கலாய்ப்பதற்கு தயாராக இருந்தவனைப் போல,

”டேய், அலாவு உனக்கு எப்படா கலியாணம்?” என்று ஒரேநேரத்தில் எல்லோருக்கும் கேட்பதைப்தைப் போல் உரத்தும், அலாவுக்குப் புரிவதைப் போல் சைகை மொழியிலும் கேட்டான். அப்போது அந்த இடத்தில் “ஹோ“வென்ற சிரிப்பு ஓங்கி அடங்கியது. வழமை போன்று சிறுவர்கள் கூடி அலாவு பேசுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

ஆனால் என்ன இருந்தாலும் கலியாணம் என்ற கதை வந்ததால் சிரிப்பதற்காக அலாவுவின் வாய் காதுவரை நீண்டது. அவன் பாஷையில் திருமணத்துக்கான அடையாளமாக இரண்டு கைகளைாலும் மாலை ஒன்றைத் தூக்கி கழுத்தில் போடுவது போன்று போட்டுக்காட்டுவான். அப்படியென்றால் திருமணம் என்று அர்த்தம். மதில் ஓரத்தில் கிடந்த மரக்குற்றியில் உட்கார்ந்து கொண்டு தன் திருமணக் கனவுகளை தன் சைகை மொழியில் விரிவாக விளக்கத் தொடங்கினான்.  முதலில் பெண் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று தன் பற்களைத் தொட்டுக்காட்டினான். தலைமுடியைத் தொட்டுக்காட்டி “ச்சீ..பே..” என்றான். அதாவது கருப்புப் பொண் வேண்டாமாம்.

அலாவு ஏறிச் செல்வதற்கு மாடிப்படிகளுள்ள வீட்டிலிருந்துதான் பெண் எடுப்பானாம். சுவிட்சைப் போட்டுவிட்டால் அப்படியே மின்குமிழ்கள் பளிச் சென்று எரிய வேண்டும். பெண் வீட்டார்தான் அவனை மாப்பிள்ளை கேட்டு வரவேண்டும். தலையில் ஏழு பெட்டிகளில் சொப்புக்கட்டி சுமந்து வர வேண்டும். குரவைகளும், சீனடிகளும் பொல்லடிகளும் தெறிக்க விட வேண்டும். அவனது கனவுகளை அவன் மொழியில் சொல்லி முடித்த போது சபையே நிலைகுலைந்து சிரித்தது.

”டேய், ஊமையா..உனக்கு முதல் யார்ரா பொண் தரப்போறா..ஆசயப் பாரு..” என்று அனீபா கூட்டத்துக்குள்ளிருந்து சத்தம் வைத்தான். ஆனாலும் அன்றிலிருந்து அலாவுவின் கலியாணக் கதையை கேட்பதற்கென்று இரசிகர் எண்ணிக்கை ஊரில் அதிகமாகி வந்தது.

அனீபா உணர்த்தியது உண்மையாகி விடுமோ என்ற அச்சம் அவனை அழுத்தத் தொடங்கி இருந்தது. இரண்டு நாட்களாக அலாவு வாப்பாவின் கட்டிலை வெறித்துப் பார்த்தபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். அவனுள் எழுந்த உணர்ச்சிகளும், அவனுக்கு வெளியிலிருந்து எழுந்த கேலிகளும் திருமணத்துக்கான ஆசையை அவனுக்குள் அதிகப்படுத்தின. ஆயினும் அது ஒரு சாத்தியமற்ற கனவு போல் அவனுக்குத் தோன்றியது.

வாசலில் ஒரு சின்ன நிழலுரு அசைவதை அலாவு கண்டான். மனாஃப் நின்றிருந்தான். மனாஃப் இணக்கமாகச் சிரித்தான். ஆனால் அலாவிடம் மனாஃபைக் கண்டால் மலரும் வழக்கமான சிரிப்பு ஏனோ அன்று மலரவில்லை.

“நான் ஏன் ஊமையாகப் பிறந்தேன்”  தன் வழக்கமான சைகை மொழியில் ஒரு மாபெரும் புதிருக்கான விடையைத் தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் மனாஃபிடம் கேட்டான். அப்போது அலாவுவின் மொத்த உருவமும், பாவனையும் ஒரு பிச்சைக்காரனுடையதைப் போல் இருந்தன.

“அல்லாதான் உன்ன அப்புடிப் படைச்ச” மனாஃப் அப்பாவித்தனமாக தனக்கு என்ன தெரியுமோ அதை சைகையில் சொன்னான். மேலே கையைக் காட்டினாலே அலாவுவின் அகராதியில் அது கடவுளைத்தான் குறித்தது.

அலாவுக்குள் இருந்த கொதிப்பை அது கிளரியது. உள்ளுக்குள் தணல் கனன்று எரிவது முகத்தில் தெரிந்தது. எரியும் தீச்சுவாலைக்கு அருகில் நிற்பது போன்று ஒரு கணம் மனாஃப் உணர்ந்தான். அது அலாவுவை கடவுள் மீதான தீராப் பகைக்கு கொண்டு சென்றது. மேலே கைகளை உயர்த்தி அங்கு யாருமில்லை எனக் கத்தினான். மேலே ‘த்தூ’ என எச்சிலை அண்ணாந்து துப்பினான். அது மீண்டும் அவன் முகத்திலேயே வந்து விழுந்தது. தன் கைகளால் துடைத்துக் கொண்டு கிறுக்கு முத்தியவனைப் போல தொடர்ந்தும் மேலே துப்பிக்கொண்டே இருந்தான். வழக்கம் போல் சிறுவர்கள் அவனைச்சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவனது கோபத்தையும், துயரத்தையும், விரக்தியையும் அவர்கள் ஒரு போதும் புரிந்து கொண்டதே இல்லை. ‘அலாவு’ என பெருங்குரலில் கத்துவதும், கேட்டில் ஓங்கி அடித்துவிட்டு ஓடுவதுமாக இருந்தார்கள்.

அலாவுவை மனாஃப்தான் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

அன்றிரவு கதவைச் சாத்தாமலே அலாவு துக்கமும், களைப்பும் கொடுத்த அயர்ச்சியில் தூங்கிவிட்டிருந்தான். காலையிலும் தாமதமாகத்தான் எழுந்திருந்தான். வாப்பாவின் கட்டிலில் ஒரு நிழலுருப் போல இப்போதும் அவர் படுத்துக்கிடப்பது போலவே கற்பனை செய்தான். கட்டிலினருகில் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த ஸ்டேன்ட் ஃபேன் மேலும் புழுதி படிந்து தன் சுயத்தை முற்றாகவே இழந்து விட்டிருந்தது. அதை தூசுதட்டிப் பராமரித்து பயன் பெற யாருமில்லை. அதனால் அது தோப்பில் தனித்து நிற்கும் ஒற்றை மரமாய் சோகத்தில் நின்றிருந்தது.

பசி கடலின் குமுறலைப் போல் பலத்த ஓசையுடன் அலாவுவின் வயிற்றைக் குடையத் தொடங்கி இருந்தது. நேராக எழுந்து அனீபாவிடம் பணம் கேட்பதற்காக கிளம்பினான். அனீபா கஞ்சாச் சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா ஊமையா, இத இழுடா” என்று அவன் வாய்க்குள்ளேயே சுருட்டைத் திணித்து விட்டான்.

“கலியாணம் நடக்கும் இழுடா” என்று சைகை மொழியில் உற்சாகமூட்டினான்.

நண்பகல் வேளை அலாவுவைத் தேடிக்கொண்டு மனாஃப் அலாவுவின் வீட்டுக்கு வந்தான். பலநாட்கள் தூக்கமற்றவனின் சிவப்பேறிச் சோர்ந்த கண்களைப் போல் அலாவுவின் கண்கள் செந்தணல் போலிருந்தன. மனிதக் கண்களால் இப்படியும் மருதானி போல் சிவக்க முடியுமா என மனாஃபுக்கு குழப்பமாக இருந்தது. அவன் முன்னால் சில சுருட்டுக் குறைகள் வரிசை குலைந்து சிதறிக்கிடந்தன. ஒரு சுள்ளிக் கம்பால் அந்த சுருட்டுக்குறைகள் மீது அலாவு ”ப்பே..பே..” என கத்திக் கொண்டே அடித்துக்கொண்டிருந்தான். சுருட்டு வாசனை வயிற்றைக் குமட்டுமளவு அந்த வெளியை நிறைத்திருந்தது.

”அலாவு, என்ன இது..?”

மனாஃப் சைகை மொழியில் கேட்டுக்கொண்டு நின்றான். அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமலே “ப்பே..ப்பே..” என ஒரு காட்டு மிருகம் போல் கத்திக்கொண்டே சுருட்டுக்குறைகளை தொடர்ந்தும் அதே வேகத்தில் விளாசிக்கொண்டிருந்தான். அப்போது அவனது ஒட்டுமொத்த உடலும் புயலுக்காடும் மரம் போல் ஆடிக்கொண்டிருந்தது. சுருட்டுக்குறைகள் மீது அலாவுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்ற குழப்பத்தில் மனாஃப் அலாவுவையும், சுருட்டுக் குறைகளையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றிருந்தான். அலாவு ஓய்ந்த பின் அவனாகவே சொல்லட்டும் என்ற எதிர்பார்ப்பில் அங்கிருந்து அகன்றான்.

மாலைப் பொழுது. இருள் இன்னும் தடிப்பாகவில்லை. அலாவு இந்நேரம் சாப்பிட்டு விட்டு வந்திருப்பான். அவன் ஏன் சுருட்டுக்குறைகளுக்கு அந்த அடி அடித்தான். அவன் கண்கள் ஏன் அப்படிச் சிவந்திருந்தன என மனாஃப் அறிந்து வரும் எண்ணத்துடன் அலாவுவின் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் முன் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து சுருட்டு நெடி வேண்டாத வாசனையாக வெளியேறிக்கொண்டிருந்தது. மனாஃபுக்கு இலேசாக வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. உள்ளே இருந்து அலாவு வேகமாக சைகை செய்து அவனை அழைத்தான். மனாஃபைப் பார்த்து இணக்கமாகச் சிரித்தான். வாய் வழமையைவிடக் கோணலாகி ஒரு இளிப்புப் போல அது ஆனது. அவன் சாரன் மட்டுமே அணிந்திருந்தான். மனாஃப் உள்ளே சென்றதும் சுவரில் சாய்ந்துகொண்டு ஒரு காதலியைக் கட்டியணைப்பது போல அவனைக் கட்டியணைத்தான். சுருட்டு வாசனை மிக நெருக்கமாக அவனைத் தொந்தரவு செய்தது. தனது பிடரி  அலாவுவின் நெஞ்சில் பட்ட போதுதான் அவன் நெஞ்சு வரை தான் வளர்ந்திருப்பதை உணர்ந்தான்.

மனாஃபை இறுக கட்டி இருந்த கைகளை சற்றுத் தளர்த்தி உடலெங்கும் அலைய விட்டான். அப்போது அவனிடமிருந்து ஊளை போன்ற ஒருவித அணுங்கல் சத்தம் வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவன் உடல் திணறி நடுங்கியது. பிடி இறுகியது. உடல் ஒரு சில விநாடிகள் அதிர்ந்து அடங்கியது. அதோடு ஊளைச்சத்தமும் அடங்கியது. அவனது உடலின் நிறைவேறாத நீண்ட கால வேட்கை ஒன்று நிறைவேறி அடங்கிய திருப்தியுடன் அவன் உடல் ஒடுங்கி வழமைக்குத் திரும்பியது. அலாவு மனாஃபை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். மேலும், அலாவு வெட்கப்படுவதை மனாஃப் முதன்முதலாகப் பார்த்தான்.

ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

 

 

(Visited 330 times, 1 visits today)