இலக்கியக்காரனின் இளமைக் காலம்-சிறுகதை-ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்அலாவுதீனுக்குள் அற்புதமாய் உள்நுழைந்த இலக்கியப் பேய் அவனுக்குள் உக்கிரமாக உருவேறி ஆடத்தொடங்கிற்று. அது ஆடிய ஆட்டத்தில் அவனுக்குள் அற்புதமான இலக்கியக் கனவுகள் ஒவ்வொன்றாக வந்து குமியத் தொடங்கின.

பள்ளிப் பருவத்தில் தன்னை ஒரு மாபெரும் இலக்கியக்காரனாக கற்பனை செய்துகொண்டு, இனி இலக்கியமே தன் வாழ்வு எனவும் எண்ணத் தொடங்கினான். அது அவனைக் குறித்து அவனது தந்தையின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.

அலாவுதீனுக்குள் இந்த இலக்கியப் பேய் உருவெடுத்துக்கொண்டு வந்ததை அவனது தந்தை அப்போது அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார். கிள்ளி எறிந்தெல்லாம் சாகடிக்கக்கூடிய செடியா அது?

தந்தையின் கனவு பாடசாலைக் கல்வியில் அலாவுதீன் வெற்றிபெற்று அரசதுறையில் ஓர் உயர் அந்தஸ்துள்ள பதவியை வகிப்பதுதான். அவன் என்ன பதவி வகிக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் திட்டவட்டமான முடிவுகள் இருக்கவில்லை. அவர் வைத்தியசாலைக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் அலாவுதீனை ஒரு வைத்தியராக்க வேண்டும் என விரும்பினார். வங்கிக்குச் சென்று வரும் சந்தர்ப்பங்களில் ஒரு எக்கவுன்ட்டனாக்க வேண்டும் என விரும்பினார். ஒரு தடவை நீதி மன்றத்துக்கு சென்று வந்தபோது அலாவுதீனை நீதிபதியாக்க விரும்பி இருந்தார். அலாவுதீனின் தந்தை ஒரு போர்க்களத்துக்கு சென்று வந்திருப்பாரேயானால் நிச்சயம் அவனை ஒரு இராணுவத்தளபதியாக்கவே விரும்பி இருப்பார்.

எழுத்தாளர்கள் சம்பளத்துக்கு பணியாற்றக்கூடிய இலக்கிய நிறுவனங்கள் எதையாவது அவர் தன் வாழ்நாளில் கண்டிருந்தால் ஒருவேளை அவனை எழுத்தாளராக்க வேண்டும் என விரும்பி இருப்பாரோ என்னவோ?

ஆனால் அப்படியான அமைப்புகளையோ, தொழில் நிறுவனங்களையோ அலாவுதீனின் தந்தை தனது வாழ்நாளிலேயே காணாதவராய் இருந்தார். அவர் அறிந்தவரையில் ஊரில் கவிதைகள் எழுதிய ஒருவர் தொழில் எதுவுமின்றி, ஊரிலுள்ள கொஞ்சம் பிலபலமானவர்களிடம் போய் “உங்களைப் பற்றி பேப்பரில் எழுதப்போறன்” என்று  சொல்லி அவர்களிடம் ஏதேனும் உதவியைப்பெற்றே வாழ்ந்து வந்தார். இதனால் அவர் பலரின் கேலிக்கும் உள்ளாகி இருந்தார். அநேகமாக அலாவுதீனின் ஊரில் இலக்கியத்துறைக்கு தனது வாழ்வு மூலம் குறிப்பிடத்தக்க ஒரு களங்கத்தை ஏற்படுத்துபவராக சாகும் மட்டும் இருந்து வந்தார்.

அலாவுதீன் இலக்கிய ஆர்வம்கொண்டு அலையத்தொடங்கிய போது அந்தக் கவிஞரை முன்னுதாரணங்காட்டியே பலரும் அவனை ஏசத்தொடங்கினர். அவனது தந்தையும் அடிக்கடி அந்தக் கவிஞரையே முன்னுதாரணங்காட்டி அலாவுதீனை ஏசினார். அந்தக்கவிஞர் மரணித்து பலவருடங்களாகியும் அவரைக்கொண்டு அலாவுதீனின் இலக்கியத் தாகம் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. எந்தத்தந்தைதான் தனது மகன் தன் கண்முன்னாலேயே வீணாய்ப் போவதை விரும்புவார்!

எனினும் அலாவுதீனுக்கென்றும் அவனது வகுப்பறையில் சில வாசகர்கள் முளைத்தனர். அலாவுதீனுக்கு அது ஒரு மாபெரும் அங்கீகாரமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. இதனால் அலாவுதீனுக்குள் ஊடுறுவியிருந்த இலக்கியப் பேய் தறிகெட்டு ஆடத்தொடங்கியது. அந்நாட்களில் அலாவுதீன் தனிமையை விரும்புபவனாக மாறினான். எந்நேரமும் புத்தகங்களைச் சுமக்கத்தொடங்கினான். நண்பர்களைத் தவிர்ந்துகொள்ளத் தொடங்கினான். கலகலப்பாகவும் அரட்டையாகவும் பேசித்திரிந்தவன் திடீரென்று தனது சுபாவத்தை மாற்றிக்கொண்டான். தன்னை ஒரு மாபெரும் எழுத்தாளனாகவும் சிந்தனையாளனாகவும் கனவுகள் காணத் தொடங்கினான். அது அவனது தந்தையின் கனவுகளுக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.

வகுப்பறையில் திடீரென்று மாயமாய் மறைந்துவிடுவது, நண்பர்களுடன் வீதி உலாக்கள் செல்லவதிலிருந்தும் தவிர்ந்துகொள்வது, ஏதேனும் ஒரு நூலகத்திலேயே தஞ்சம் அடைவது என அவன் போக்குகள் முற்றாக மாறிய போதுதான் அவனபை்பீடித்திருப்பது விரட்டவே முடியாத பேய்களின் அரசி என்பதை நண்பர்களும் உணர்ந்துகொண்டனர்.

இப்போது அலாவுதீனின் உலகம் மிகவும் சுருங்கி இருந்தது. ஆனால் அவன் கனவுகள் மிகவும் விரிந்திருந்தன. அவனது நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் சிறுத்துப் போனது. புத்தகங்களுடனான உறவு அதிகரித்திருந்தது. அவன் பெரிதும் இப்படியொரு உலகத்தையே விரும்பினான். அது அவனது தந்தை விரும்பிய உலகத்துக்கு முற்றிலும் வேறானதாக இருந்தது.

அலாவுதீனுக்குள் இந்த இலக்கியப் பேய் ஊடுறுவுவதற்கு அவனது தந்தையின் இளைய சகோதரனான சாச்சா ஒருவர்தான் காரணமாக இருந்தார். அலாவுதீனின் சாச்சாமார்களில் ஆகவும் இளையவர் அவர். அதனால் அலாவுதீன் அவரை சின்னச்சாச்சா என அழைத்தான். அலாவுதீனின் கிராமத்தில் சின்னச்சாச்சாதான் ஓ.எல். வரைக்கும் படித்தவர். ராணிகாமிக்ஸ், கண்ணதாசன், அப்துல்ரகுமான், மு.மேத்தா, பாலகுமாரன், ரமணிச்சந்திரன் புத்தகங்களெல்லாம் அவன் கிராமத்தில் முதன் முதலில் வாசித்தவர் அவர்தான்.  அதுமட்டுமா? அந்தக் கிராமத்தில் அவர்தான் முதன்முதல் ட்ரவுசர் அணிந்து கொழும்புக்குப் போய் வந்தவர். அவர் மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பணிப் பெண்களை வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி ஒன்றுக்கு “சப்-ஏஜென்டாக” இருந்தார். இதனால் கிராமத்தவர்கள் அவரை “சப்பு” என அழைத்தனர். கிட்டத்தட்ட கிராமத்திலுள்ள அரைவாசிப் பெண்கள் அவர் மூலம் வெளிநாடு சென்று வந்தவர்கள்தான். இதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தியதிலும், நாட்டின் அந்நியச்செலவானியை அதிகரித்ததிலும் அவருக்கென ஒரு சிறு பங்களிப்பு இருந்தது.

சின்னச்சாச்சா தனது தொழில் நிமித்தம் அடிக்கடி கொழும்புக்குப் போய் வருபவராக இருந்தார். இதனால் பிரயாணங்களின் போது பொழுது போக்குக்காக வாசிப்பதற்கென்றுதான் அவர் அந்த புத்தகங்களை எல்லாம் வாசித்து வந்தார். அந்தப் புத்தகங்களை அவரது வீட்டு அலுமாரியில் ஒழுங்கீனமாகப் போட்டுக்கிடப்பார். அதை ஒரு நூலகமாக்கியதும் அவற்றுடன் அதிக நேரத்தை செலவழித்ததும் அலாவுதீன்தான். சின்னச்சாச்சா வாங்கி வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் சின்னவயசிலேயே அலாவுதீன் வாசித்து முடித்து விட்டான். சின்னச்சாச்சாவுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்த அந்தப் புத்தகங்கள் அலாவுதீனுக்குள் வேறொரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கின. அந்த மாற்றம் பிற்பட்ட நாட்களில் அலாவுதீனை ஒரு பித்துநிலைக்கு கொண்டுசென்றது. ஆனாலும் அவனில் அவனது தந்தை காண விரும்பிய மாற்றம் அதுவல்ல. பின்னர் சாச்சா கொழும்புக்குச் செல்லும்போது இன்னும் புத்தகங்கள் வாங்கிவருமாறு சொல்லி தன்னிடமுமுள்ள சில சில்லறைகளைக் கொடுப்பான். சாச்சா அதை வாங்கிக்கொள்வார். அப்போது அவர் வாசிக்கும் புத்தகமொன்றின் எளிய விலை இருபது, முப்பது ரூபாய்கள்தான் வரும். அலாவுதீன் காசு சேர்த்து அவரிடம் கொடுப்பான்.

காலப்போக்கில் புத்தகங்களே அவனுக்கு உற்ற நண்பர்களாயின. ஊரிலுள்ள எல்லா நூலகங்களிலும் உறுப்பினரானான்.

பள்ளிக்கூடப்படிப்பும் பாடப்புத்தகங்களும் அலாவுதீனுக்கு கசக்கத் தொடங்கின. பள்ளிக்கூடத்தை தனது கனவுகளுக்கு மிகப்பெரிய எதிரியாக அலாவுதீன் கருதினான். தன்னைப் போல் ஒருவனுக்கு பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. பள்ளிக்கூடத்துக்குள்ளும் ஒரு நூலகம் இருந்தது. அதுமட்டுமே அவனுக்கு அங்கு உவப்பான இடமாக இருந்தபோதும் அதை அவனைப் பயன்படுத்த விடாமல் பாடசாலைச் சட்டங்களும், நேரசூசிகையும் தடுத்தது. உண்மையில் நேரசூசிக்கு இயங்கும் நிறுவனமொன்றுக்குள் கனவுகளோடு வாழ்பவனால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை அலாவுதீன் அறிந்துகொண்டது அங்குதான்.  அதனால் பள்ளிக்கூடத்திலிருந்து அலாவுதீன் அடிக்கடி ஒழித்தோடத் தொடங்கினான். பள்ளிக்கூட நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட எந்தவொரு சட்டத்தாலும் அலாவுதீன் ஒழித்தோடுவதிலிருந்தும் அவனைக்கட்டுப்படுத்த முடியாதிருந்தது.

பாடசாலையிலிருந்து இவ்வாறு ஒழித்தோடுவதற்கு மைதானத்தை அண்டியிருந்த பள்ளிக்கூடக் கட்டடத்தின் உட்புறத்திலிருந்து வெளி வீதிக்கு வந்து சேரும் காய்ந்துகிடந்த வடிகால் வழியாகவே அலாவுதீன் ஒழித்தோடும் வழக்கத்தைக்கொண்டிருந்தான். இதுவெல்லாம் அலாவுதீன் ஒரு பித்துநிலையில் செய்தவைதான். அவனுக்குள் குடிகொண்ட இலக்கியம் பேயின் ஆட்டம்தான் அது. உண்மையில் அலாவுதீன் ஒரு அப்பாவி. இலக்கியம் என்ற வேதத்தின் பக்தன். அதைப் பற்றி எதுவும் தெரியாதவர்களால் சூழப்பட்ட கட்டடமொன்றுக்குள் தனது எதிர்பார்ப்புகள் கருகிவிடக்கூடாது என்று நினைத்து அவன் செய்த சிறுபிள்ளைத்தனங்கள்தான் அவை. அவை குற்றங்களலல்ல. என்பதை அலாவுதீனின் மனசாட்சி அவனுக்கு தெளிவுபடுத்திற்று.

பள்ளிக்கூடம் அலாவுதீனின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்ததால் பாடசாலை அமைந்திருக்கும் ஊரில் நண்பர்கள் படிக்கும் ரூமில் அலாவுதீனும் ஒட்டிக்கொண்டான். அங்கு தந்தையின் கண்காணிப்பற்ற சூழல் அலாவுதீனின் இலக்கிய ஆட்டத்தை மேலும் சுதந்திரப்படுத்திற்று. பலநாட்கள் பாடசாலைக்குப் போகாமலும் ரூமுக்குள் ஒளிந்திருந்து அலாவுதீன் புத்தகங்கள் வாசித்தான். எழுதினான். இலக்கிய போதையில் சஞ்சரிக்க அலாவுதீனுக்கு அந்த அறை மிகவும் வசதியாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு நாவல் என அலாவுதீன் மேய்ந்து தள்ளினான். அலாவுதீன் அவன் வாசித்த நாவல்களின் கதாபாத்திரங்களாகவே தன்னை நம்பத் தலைப்பட்டான். அந்த நம்பிக்கையும் அந்த சுதந்திரமும் அவனது தந்தைக்கு இந்தநிலைமை தெரிய வரும்வரை தொடர்ந்துகொண்டிருந்தது.

யாரோ ஒரு நண்பன் ஒரு நாள் அலாவுதீனின் வீட்டுக்கு செய்தி காவி இருந்தான். இதனால் ரூம் வாழ்க்கை தடைப்பட்டது. மீண்டும் வீட்டில் தந்தையின் தீவிர கண்காணிப்பின் கீழ் அலாவுதீனின் கல்விப் பயணம் தொடர்ந்தது.

“எழுதி இங்க என்னெத்தடா கிழிக்கிற..?” என தந்தையின் கோபக் குரல் ஓங்கியது. அலாவுதீன் மௌனமாக இருந்தான். அவன் மௌனம் சாதித்தது தந்தையை எதிர்க்கும் சக்தி அவனிடம் இல்லை என்பதற்காக அல்ல. தந்தையின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை என்பதற்காக.

2

அப்போது தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த  அலாவுதீனின் பள்ளிக்கூட நண்பன் ஒருவனின் பாட்டனாருடன் அலாவுதீனுக்கு ஒரு நட்பு நண்பன் மூலம் உருவாகியது. அந்த நண்பனின் தந்தை மூலம் மூன்று நேர சாப்பாடு அவருக்கு கிடைத்து வந்தது. மற்றப்படி அவர் தனிமையிலேயெ இருந்தார். அவரது குடிசை முற்றத்தில் ஒரு ஊஞ்சலில் அவர் எப்போதும் ஆடிக்கொண்டிருப்பார். அவருக்கு சரிவரக் கண் தெரிவதில்லை. நண்பனும் அலாவுதீனும் பாடசாலையிலிருந்து ஒழித்தோடி அவரிடம் சென்று கதைகேட்பார்கள். அவர் நிறையக்கதைகள் சொல்வார். இப்போது அவரிடம் கதைகேட்பது புத்தகம் வாசிப்பதை விட அலாவுதீனுக்கு மிக மிக சுவாரஸ்யமானதாக மாறி இருந்தது.

கிழவரும் தனது தனிமையைப் போக்கிய அந்த சிறுவர்களின் நட்பை இழக்க விரும்பாதவராக தொடர்ந்தும் கதைகள் சொல்லிக் கொண்டே இருப்பார். “ஆயிரத்தோர் இரவுகள்” எனும் அராபியக் கதை போல் சிறுவர்களின் தொடர் வருகையை உறுதிப்படுத்துவது போல் அவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவனது நண்பன் கதை கேட்பதில் அவ்வளவு ஆர்வமற்றிருந்தான். இடையிடையே கதையை குழப்பிவிடுபவனாகவும் இருந்தான். ஆனால் கிழவரும் அலாவுதீனும் அவனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவனை வேலிகளில் திரியும் ஓணான்களை சுருக்கு வைத்துப் பிடித்து வருமாறு அலாவுதீன் அவனுக்கு ஆலோசனை கூறி அனுப்பி வைப்பான்.

எனினும் அலாவுதீனின் போக்கில் அவனது தந்தைக்கு தொடர்ந்தும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. பள்ளிப் படிப்பை விடவும் அவன் இலக்கிய வாசிப்புக்கும், எழுத்துக்குமே அவன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை அவர் துல்லியமாக கணக்கிட்டிருந்தார். இதனால் வீட்டில் அலாவுதீன் மீதான உள்ளக கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். எந்த தந்தைதான் தன் கண்முன்னாலேயே தன் மகன் வீணாய்ப் போவதை விரும்புவார். அலாவுதீனும் தன்போக்கில் உறுதியானவனாகவே இருந்தான். வாப்பாவின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு எழுத்தில் மும்முரமாகவே இருந்து வந்தான்.

பாடப்புத்தகங்களுக்குள் கதைப் புத்தகங்களை வைத்து வாசிப்பது, ஒப்படை எழுதுவது போல் கதை எழுதுவது என ஒரு பாசாங்கான படிப்பு நடவடிக்கை மூலம் தந்தையை தொடர்ந்தும் ஏமாற்றி வந்தான் அலாவுதீன். தந்தையிடம் மாட்டிக்கொண்டால் அறை விழும் என்பதை அவன் நன்கறிவான். ஒரு முறை அது நடந்தும் விட்டது. ஒரு சஞ்சிகையிலிருந்து அவசரமாக அவனிடம் ஒரு கதை தருமாறு கேட்டிருந்தனர். அன்றும் வழமை போன்று தந்தை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எப்படியாவது அவரை ஏமாற்றி கதையை எழுதிவிட அலாவுதீன் தீர்மானித்து விட்டான். இதனால் ஒப்படை எழுதுபவனைப் போல் புத்தகங்களை எல்லாம் பரப்பி வைத்து விட்டு யோசித்து யோசித்து கதையையே எழுதிக் கொண்டிருந்தான். எனினும் அவன் வழமையான ஒப்படை எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை விட மிக அதிகமாகவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததால் சற்றே அவன் மீது சந்தேகங்கொண்ட தந்தை திடீரென்று அவன் முன்னால் தோன்றி அவன் எழுதியவற்றை தட்டுத்தடுமாறி வாசித்து உண்மையைக் கன்டறிந்து கொண்டார். ஆத்திரத்தில் ஓங்கி ஒரு அறையும் விட்டார். வழக்கம் போலவே,

“எழுதி என்னடா கிழிக்கப் போறாய்..?” என்று ஆவேஷமாகக் கத்தவும் செய்தார். அப்போதும் வழக்கம் போலவே அலாவுதீன் மௌனமாகவே இருந்தான். இன்னும் அவனால் தந்தையின் கேள்விக்கான பதிலை கண்டு பிடிக்க முடியவில்லை.

பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர் ஒருவர் அவன் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த போதும் அருகில் வந்து “விடை எழுது கதை எழுதிராத” என்று கிண்டலடித்து விட்டுச் சென்றார். குடும்பம் தொடங்கி பள்ளிக்கூடம் வரை தனது கனவுகளுக்கு எதிரியாக இருப்பதாகவே அலாவுதீன் கருதினான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனை ஒரு உயர் அந்தஸ்துள்ள உத்தியோகத்தனாக மட்டுமே காண விரும்பினர் என்பதையும் அலாவுதீன் அறிந்தே இருந்தான்.

அலாவுதீன் வெளிநாட்டு சஞ்சிகைகளுக்கும் அப்போது எழுதி வந்தான். இதனால் வெளிநாடுகளிலிருந்து அலாவுதீனுக்கு சஞ்சிகைகள், புத்தகங்கள் எல்லாம் தபாலில் வந்து கொண்டிருக்கும். இதனால் அவன் கிராமத்துக்கு அடிக்கடி தபால்காரனுக்கும் வந்து செல்ல வேண்டி இருந்தது. தபால் நிலையம் அவன் கிராமத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இருந்ததாலும், தபால் மாமாவும் சற்று வயதானவராக இருந்ததாலும் அவரை கிராமத்துக்கு வரவேண்டாம் என்றும் தானே தபால் நிலையம் வந்து தபால்களைப் பெற்றுக்கொள்வதாகவும் அலாவுதீன் அவரிடம் சொன்னான். ஆனால் அது தன் கடமை என்று சொல்லி அவர் மறுத்துவிட்டார். அலாவுதீன் அவரிடம் அப்படிச்சொன்னதற்கும் ஒரு உள்நோக்கம் இருந்தது. அவனுக்கு அடிக்கடி புத்தகங்கள் வருவது அவனது தந்தைக்கு உவப்பானதாக இருக்கவில்லை. இதனால் அவருக்குத் தெரியாமல் அவற்றை அமுக்கிவிடும் எண்ணமும் அலாவுதீனுக்கு இருந்தது. இந்த புத்தகங்களுக்காக அலாவுதீன் பணத்தை வீண்விரயம் செய்கிறான் என்ற எண்ணம் அவன் தந்தைக்கு வந்தால் செலவுப் பணத்தை கட் பண்ணிவிடுவார் என்ற எண்ணம் அலாவுதீனுக்கு வந்திருந்தது.

அலாவுதீனை சந்திப்பதற்கு பலரும் அவன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். பெரிய உத்தியோகத்திலிருப்பவர்கள், புலம்பெயர்நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் எல்லாம் எப்படியும் அலாவுதீனின் கிராமத்துக்கு வந்து அவனைச் சந்தித்துச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் அலாவுதீனுக்கு அது பெருமையாக இருக்கும்.

“நான் எழுதுறத்தாலதான் இவங்கெல்லாம் என்னத் தேடி வாராங்க..” என்று தன் தந்தையிடம் அவன் பெருமிதமாகச் சொல்லும் போது மட்டும் அவன் தந்தையிடமிருந்து சிறு புன்னகை உதிர்வதைப் பார்த்திருக்கிறான். அந்தப் புன்னகையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே ஒரு கவிதையை எழுதிவிடுவான் அலாவுதீன். கெப்பில் கடா வெட்டுவதில் அவன் ஆள் கெட்டி.

தொடரும்

ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை 

 ஜிஃப்ரி ஹாஸன்

(Visited 130 times, 1 visits today)