பிச்சைக்காரன் – மொழிபெயர்ப்புச் சிறுகதை-லலித கோபன்

 

லலித கோபன்

துன்பங்களிடையியும் இயலாமைகளிடையும் அவனின் தற்போதைய   ஜீவிதம் இருந்தபோதிலும்  வாழ்வில் அழகிய தருணங்களையும் அவன் சந்தித்திருந்தான்.

அவனின் பதினைந்தாவது வயதில் “வர்வில்” நெடுஞ்சாலையில் பயணித்த இரும்பூர்த்தி ஒன்றின் நான்கு  சக்கரங்கள் அவனின் இரு கால்களையும் காவு கொண்டன.அன்றிலிருந்து அவனது சீவியம் இரத்தலினால் வாழ்வுற்றது. இரத்தலுக்காய் நீண்ட சாலைகளையும் பண்ணை நிலங்களையும் கடந்து செல்ல உதவிய அவனுடைய ஊன்றுகோலின் நிமித்தம் அவனின் இரு தோள்களும் காது வரை உயர்ந்திருந்தன. இரு பெரிய மலைகளிடையே நசுங்குபடுவது போல அவனின் முகத்தின் தோற்றம் அமைந்திருந்தது.

அனைத்து புனிதர்களுக்குமான திருநாள் ஒன்றின் அந்தியில்  “லெஸ் பிளீட்ஸ்’ நகரத்துக்கான மதகுரு ஒருவரினால் அகழி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டு ஞானஸ்தானம் செய்யப்பட்டதனால் அவனின் நாமம் ‘நிகோலஸ் டோசையின்ட்” என்று அழைக்கப்படலாயிற்று. தர்ம ஸ்தாபனம் ஒன்றில் கல்வியறிவு அற்ற ஒருவனாய் அவன் வளர்க்கப்பட்டதனாலும் நாள்தோறும் இனாமாக வழங்கப்பட்ட மதுக்குவளைகளை அருந்தி வளர்ந்ததன் காரணத்தினாலும் இவற்றுக்கு மேலதிகமாய் அவனின் வாழ்வு நாடோடித்தனமாக இருந்தமையினாலும் அவன் அறிந்திருந்த ஒரேயொரு விடயமானது இரத்தலுக்காய் எவ்வாறு கையேந்துவது என்பதை மாத்திரமே.

சில காலங்களின் முன்னர் அந்த பகுதியின்  சீமாட்டி ஒருத்தியினால் அவன் உத்தியோகபூர்வமற்ற காவல்காரனாய் நியமிக்கப்பட்டிருந்தான். அது எவ்வாறெனில் அந்த சீமாட்டியின் மாளிகையினை ஒட்டியிருந்த கால்நடைபண்ணை ஒன்றின் ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த வைக்கோலினால் அமைக்கப்பட்ட தங்குமிடம் ஒன்றில் உறங்குவதற்காய் அவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். இதற்கான அவனது கூலி அப்பிள் கனிகளினால் செய்யப்பட்ட மதுசாரமும் பாணின் மேற்பகுதியில் இருக்கும் தடித்த துரிசுமாகும். இதற்கு மேலதிகமாய் சாளரத்தினூடே அவளினால் எறியப்பட்ட சில சில்லறைகளும் இருந்தன. ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லை.

 கிராமத்திலுள்ள யாராவது அவனுக்கு ‘அபூர்வமாக’ எதையாவது உண்ணத்தருவார்கள். இந்த “அபூர்வமாக’ என்பதன் பின்னணி கூட சுவாரிசியமானதே. ஏனெனில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு குறையாதது அவனின் வெகுஜன அனுபவம். மேலும் தினந்தோறும் அவனை காண்பதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் களைப்படைந்திருந்தனர். ஆனால் அவன் இந்த புறக்கணிப்புக்களினால்  மனம் தளர்ந்தானில்லை. ஏனெனில் அவனது உலகம் இந்த சில கிராமங்களிலேயே நிலை பெற்றிருந்தது. இந்த பரந்த பூமியில் தனது வாழ்விடத்தினை சூழவிருந்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அவனுக்கு சூனியமாகவே இருந்தன.

அவனின் பார்வைக்கு தெரியும் மரங்களுக்கு அப்பாலும் இந்த உலகம் விரிந்து செல்கிறதா என்பதைபற்றி கூட அவன் அறிந்திரான். தனக்குள் கூட இந்த “ஞானதேடல்’ பொதிந்த கேள்வியை அவன் எழுப்பியதில்லை. ”இங்கே அலைந்து திரிந்து உழல்வதை விட்டுவிட்டு ஏன் நீ வேறு இடங்களை தேடிப்போககூடாது” என வயல் நிலங்களிலும் பாதைகளிலும் அவன் சந்திக்கும் உழவர்களின் வினவுகையினால்  ஒன்று உழவர்கள் களைப்புற்றனர் அல்லது கேட்டலினால் அவன் களைப்புற்றான். அவன் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவி விடுவான். அந்த நழுவுதலில் புரியாத மனிதர்களை குறித்த வெறுமை கலந்த பயம் ஓட்டியிருந்தது. ஒரு கடைநிலை குடியானவனின் குழப்பத்துக்கும் அச்சத்துகுமான ஓராயிரம் விடயங்கள் குடிகொண்டிருந்தன. புதிய முகங்கள் , பழிப்புரைகள், அவமதிப்புக்கள், மக்களின் சந்தேகப்பார்வைகள் மற்றும் வீதியில் சோடிகளாய் பவனி வரும் காவலர்கள். இறுதியில் அவன் அந்த உழவர்களை திட்டமிட்டே தவிர்க்க தொடங்கினான். அவர்கள் வரும் நேரத்தில் பாதை ஓரமாய் வளர்ந்திருக்கும் பற்றை ஒன்றோ அல்லது கற்குவியலின் ஒதுக்குப்புறமோ அவனுக்கு அடைக்கலம் வழங்கும்.

 உழவர்களின் வருகையினை தனது புலன்களினால் உணரத்தொடங்கிய மறுகணமே அல்லது அவர்களின் ஆடைகளில் சூரியஒளி பட்டு தெரிக்கதொடங்கிய அந்தக்கணத்தில் அவனிடம் வழக்கத்தில் அற்ற அல்லது அதிகம் புழக்கமுறாத விரைவுத்தன்மை ஒன்று அவனிடம் தொற்றிக்கொள்ளும். அந்த விரைவுத்தன்மையானது தனது குகையை அல்லது வளையினை ஆபத்திலிருந்து தப்பிக்க தேடும் ஒரு விலங்கினை ஒத்திருக்கும். தனது ஊன்றுகோலினை தூர எறிந்து விட்டு துண்டிக்கப்பட்ட அவயம் ஒன்று நிலத்தினில் வீழ்வது போல வீழ்வான். நிலத்தில் ஊர்ந்து சென்று ஒரு திடீர் புகலிடத்தை தேடும் அவனின் கந்தல் ஆடைகள் புழுதி படிந்து இறுதியில் அந்த நிலத்தின் வர்ணத்துக்கே மாறி விடுதலும் வழமை.

 அவனுக்கு போலீஸ்காரர்களுடன் எதுவித முன்பகைகளும் இருந்ததேயில்லை. ஆனால் அவர்களை தவிர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வென்பது அவனின் இரத்தத்தில் படிந்து கிடந்த ஒன்று. ஒருவேளையில் இந்த உணர்வு அவன் கண்ணால் கண்டிராத அவனின் பெற்றோரிடமிருந்து மரபணுவின் மூலம் கடத்தப்பட்ட ஒன்றாயிருக்கலாம்.

 அவனுக்கு எந்த புகலிடமும் இல்லை. தலையினைப்  புகுத்திக்கொள்ள கூரையும் கிடையாது. எதுவித மறைவிடங்களோ அல்லது வளைகளோ கூட கிடையாது. கோடைநாட்களில் அவன் எங்காவது வெளிப்புறங்களில் தங்கினான். மாரிப்பருவங்களில் யாரும் அறியாதபடி தானியக்களஞ்சியம் ஒன்றிலோ அல்லது கால்நடை தொழுவம் ஒன்றிலோ தங்குதலில் அல்லது ஒதுங்குதலில் தனித்தேர்ச்சி பெற்றவனாய் அவன் இருந்தான். மற்றவர்களினால் கண்டுபிடிக்கப்படும் முன்னரே ஓரிடத்தினை விட்டு நீங்குதலும் கூட அவனின் குறிப்பிடத்தக்க இன்னொரு இயல்பு. பண்ணை நிலங்களில் ஓராள் நுழைந்து அல்லது ஊர்ந்து செல்லக்கூடியதான அனைத்து வழிகளையும் அவன் அறிந்திருந்தான். ஊன்றுகோல்களின் பாவனை அவனின் தோள்மூட்டுக்களை பிரமிக்கத்தக்க வகையில் சக்திமிக்கதாய் வலுவூட்டியிருந்தது. சேமித்த உணவுகளை வைக்கோற்போர் ஒன்றுள் பதுக்கியபடி தொடர்ந்தார்ப்போல் நான்கு அல்லது ஐந்து தினங்களை கூட அதனுள் கழித்து விடும் நாட்களும் அவனின் அனுபவக்குறிப்புக்களில் இருந்தன.

 அவன் வயல்நிலங்களில் திரியும் ஊர் ஜந்துவைப்போலவே வாழ்ந்தான். ஆனால் அவன் மனிதர்களிடையே இருந்து கொண்டிருந்தான். யாரையும்  பிரத்தியேகமாய் அறியாது யாரையும் நேசியாமல் அவனைப்  பகைமை  உணர்வுடனும் அக்கறையற்றும் கடந்து செல்பவர்களாக உழவர்களே இருந்தனர். அந்த உழவர்கள் அவனை “பெல்” என்றே குறியீட்டு பெயர் கொண்டழைத்தனர். ஏனெனில் இரண்டு ஊன்றுதடிகளினிடையே தொங்கும் அவனது உருவம் ஆலயத்தில் இரண்டு தூண்களிடையே தொங்கும் கோவில் மணியினை ஒத்திருந்தது.

 இரண்டு தினங்களாக அவன் எதுவுமே புசிக்கவில்லை. அவனுக்காய் யாரும் எதுவும் கொடுக்கவும் இல்லை. அனைவரினது பொறுமையும் தீர்ந்து போயிருந்தது. வாசலினூடே அவன் நுழைவதை கண்டு பெண்கள் சத்தமிட்டனர்.

 ‘இங்கிருந்து சென்று விடு நாடோடியே! மூன்று நாட்களுக்கு முன்னர் தந்த ரொட்டியை தவிர இன்று புதிதாய் தருவதற்கு எதுவுமேயில்லை”

 அடுத்த வீட்டுக்கு செல்கையிலும் முன்னர் கிடைத்த அதே பதிலே கிடைத்தது.

 தங்களின் வாசலில் நின்றபடியே அந்த பெண்கள் அனைவரும் ஏகதீர்மானம் ஒன்றினை பிரகடனப்படுத்தினர்.

 “சோம்பல்தனம் மிகுந்த இந்த பிராணியை வருடம் பூராகவும் உணவு கொடுத்து பராமரிக்க எங்களால் இயலாது’

 ஆனால் “சோம்பல்தனம்’ மிகுந்த அந்த பிராணிக்கு உணவென்பது தினந்தோறும் தேவையாய் இருந்தது.

 புனித – ஹிலாரி , வேர்வில், பில்லட்ஸ் போன்ற பகுதிகளில் அலைந்து திரிந்து ஒரு அப்பமோ அல்லது காய்ந்த ஒரு துண்டு ரொட்டியோ பெறுவதில் அவன் தோல்வியுற்றிருந்தான். அவனது இறுதி நம்பிக்கை “டோர்னில்’ பகுதியில்தான் இருந்தது. ஆனால் அவன் அங்கு செல்வதற்கு  சுமார் ஐந்து கல் தொலைவினை நெடுஞ்சாலை வழியே கடக்கவேண்டியிருந்தது. ஆனால் அவனோ மிகுந்த சோர்வுற்றிருந்தான். ஓர் அடி தூரம் கடப்பதே அவனுக்கு மிகுந்த அயர்ச்சி ஊட்டும் செயலாய் இருந்தது. அவனது வயிறும் பையும் வெறுமையையாயே இருந்தது. ஆனாலும் அவன் பயணிக்கத்தொடங்கி இருந்தான்.

 அது டிசம்பர் மாதமாய் இருந்தது. வயல் வெளிகளின் இடையே குளிர் காற்று பலமாய் இருந்தது. வானம் கறுத்த மேகங்களை நிரப்பியபடி பேரச்சத்தினை ஊட்டுவதாய் இருந்தது. ஒவ்வொரு அடியினையும் மிகுந்த சிரமத்துடன் எடுத்து வைத்தவாறே அவன் ஊர்ந்து சென்று கொண்டிருந்தான்.

 வீதியில் அங்குமிங்குமாய் சில கணங்கள் அவன் இளைப்பாறினான். பசி அவனின் உயிரின் கணுக்கள் அத்தனையையும் சித்திரவதை செய்தபடி இருந்தது. மனம் குழம்பிக்கிடந்தது. அவனின் ஒரே இலக்கு எதையாவது சாப்பிட வேண்டும் என்பதே. ஆனால் அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதில்தான் அவன் குழப்பமுற்றிருந்தான்.

 மூன்று மனிதியாலங்களாய் அவனின் பயணம் தொடர்ந்தபடி இருந்தது. அவன் தேடிவந்த கிராமத்தின் தொலைவில் தெரிந்த மரங்களில் இருந்து வீசிய காற்று அவனுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாயிருந்தது.

 கிராமத்தில் முதலில் தென்பட்ட குடியானவனிடம் அவன் யாசித்தான்.

 ‘ஆ மீண்டும் நீயா? முன்னர் நான் உனக்கு ஈந்தது உன் நினைவில் இல்லையா கிழட்டு நொண்டி குதிரையே’

‘பெல்” பதிலேதும் கூறாது பயணத்தை தொடர்ந்தான். எல்லா வாசல்களிலும் கடும் வசையினை தவிர வேறெதையும் பெற்றானில்லை. அந்த முழுக்கிராமத்தை சுற்றிய போதிலும் அவனின் முயற்சிக்கும் வலிக்குமாய் அரைக்காசும் தேறவில்லை.

அடுத்திருந்த பண்ணைகளுக்கு அவன் விஜயம் செய்தான். சேறு நிரம்பிய பாதைகளினூடே ஊன்றுதடியுடன் நகர்வதென்பது மிகுந்த அயர்ச்சியை அவனுக்களித்தது. ஆனால் அவனுக்கு கிடைத்த வரவேற்பில் எதுவித மாற்றமும் இருக்கவில்லை. அது குளிர் மிகுந்த டிசெம்பர்  மாதம். எல்லா இதயங்களும் இறுகிக்கிடந்தன அல்லது உறைந்து கிடந்தன. பணத்தையோ அல்லது உணவினையோ ஈந்து கொடுக்குமளவில் எந்த கரங்களும் திறக்கவுமில்லை.

அந்த பண்ணைவெளியின் வீடுகளுக்கு விஜயம் செய்து திரும்புகையில் அந்த வீடுகளின் ஓரமாக இருந்த அகழிகளில் வீழ்ந்து எழும்பி அவன் நனைவுற்று சோர்வுற்றிருந்தான். தனது ஊன்றுதடியினை தவறவிட்டு கீழே விழுந்து மீண்டும் எழும்பி அசைவுகள் ஏதுமின்றியபடி அவன் நின்றிருந்தான். பசியின் கொடுமையினால் அவன் சித்திரவதைக்குள்ளானபோதும் வார்த்தைகளால் உரைக்க முடியாத அவனின் வறுமையினை முழுமையாய் உணர முடியாத பேதை போல இருந்தான் அவன்.

மனித மனங்களில் அனைத்தையும் தாண்டி ஒரு மூலையில் கானல் நீராய் படர்ந்திருக்கும்  ஒரு வெற்று நம்பிக்கையுடன் அவன் காத்திருந்தான். குளிரின் கொடுநாவுகள் மேனியை தீண்டிய போதிலும் அந்த பண்ணை வெளியில் மிகுநம்பிக்கையுடன் அவன் காத்திருந்தான். எங்காவது  சொர்க்கத்திலிருந்து மனிதரோ அல்லது தேவரோ ஒரு துண்டு ரொட்டியுடன் வருவார்கள் என்ற நினைவுடன் அவன் தனித்திருந்தான். ஒரு தொகையான கறுத்த கோழிகள் நிலத்தில் தங்கள் உணவினை தேடியபடி அங்கும் இங்குமாய் அலைந்தபடி இருந்தன. நிலமென்பது பசித்த எல்லா உயிர்களுக்கும் நம்பிக்கை தரும் இறுதி புலமல்லவா?அந்த கோழிகள் நிலத்தில் தங்கள் அலகுகளை புதைத்த எல்லா கணங்களிலும் அவற்றுக்கு ஏதாவது ஒரு தானியமோ அல்லது வேறு ஏதுமோர் பூச்சி பூச்சி புழுக்களோ அவற்றின் தேடலுக்கு சன்மானமாய் கிடைத்தன. அவற்றினை மென்றவாறே உணவிற்கான மேலதிக தேடலினை மிகவும் மெதுவாகவும் திடமாயும் அவை மேற்கொண்டன.

 “பெல்” முதலில் எதுவித நோக்குமற்று அவற்றினை பார்த்தபடியே இருந்தான். பின்னர் அவனின் இரைப்பையின் உந்துதலின் நிமித்தம்  விடவும் அவனது மூளையில் அல்லது மனத்தில் ஓர் எண்ணம் உருவானது. அந்த எண்ணத்தின் பிரகாரம் இந்த கோழிகளில் ஒன்றை பிடித்து நெருப்பின் மீது வைத்து சுட்டால் உண்பதற்கு மிகவும் சுவையாயிருக்கும் என அவனுக்கு தோன்றிற்று.

அவனுக்கு தான் ஒரு திருட்டு ஒன்றில் ஈடுபடுவதான குற்ற உணர்வோ அல்லது வேறு ஒன்றுமோ தோன்றவேயில்லை. அவன் தனக்கு அருகில் கிடந்த சிறு கல் ஒன்றினை எடுத்து தனக்கு அண்மையாக மேய்ந்து கொண்டிருந்த அந்த பறவைகளின் மீது விட்டெறிந்தான். கல் பட்டு வீழ்ந்த பறவை ஒன்று தனது இறகுகளை அடித்த வண்ணம் நிலத்தில் வீழ்ந்து கிடக்க ஏனைய பறவைகள் அங்கும் இங்குமாய் ஓடித்திரிந்தன. ’பெல்’ தனது ஊன்ருகோலினை பற்றிப்பிடித்தபடி அந்த பறவையினை நோக்கிச் சென்றான்.

கறுத்த செந்நிற தலையும் கொண்ட அந்த பறவையின் உடலினை பற்றிப்பிடித்த மறுகணமே அவனின் முதுகுபுறத்தில் வீழ்ந்த பலத்த அடியொன்று அவனை நிலைதடுமாறி செய்ததுடன் அவனையும் அவனது ஊன்றுகோலினையும் பத்தடி தூரத்துக்கு பிரித்தும் விட்டது. பண்ணையாளன் ‘சிக்வேத்’ வெஞ்சினத்துடன் அவனுக்கு பின்புறமாய் நின்றிருந்தான். மேலும் சில அடிகளுடன் அவனின் கைகள் பின்னால் கட்டப்பட்டு அவன் விலங்கிடப்பட்டான்.

பண்ணை வேலையாட்களும் தங்கள் எஜமானனுடன் இணைந்து அந்த ஊனமான பிச்சைக்காரனை நையப்புடைத்து களைப்படைந்து போன பின்னர் அவனின் கைகளை இறுக பிணைத்து விலங்கிட்ட பின்னர் விறகு கிடங்கு ஒன்றினுள் தள்ளி விட்டனர். இறுதியாய் எல்லாம் நிறைவுற்ற பின்னர் அவர்கள் நகர காவலர்களிடம் முறையிடுவதற்காய்  கலைந்து சென்றனர்.

 அரைவாசி பிணம் போலான “பெல்’ பசியினால் களைப்புற்று இரத்தம் சொட்ட சொட்ட நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். அந்தி வந்தது இரவும் வந்து போனது;பெருத்த நம்பிக்கைகளுடன் விடிகாளையும் கூட வந்தது. எனினும் அவன் இன்னும் எதுவும் அருந்தியிருக்கவில்லை.

 அடுத்த மதியமளவில் நகர காவலர் வந்தனர். நொண்டி பிச்சைக்காரனிடம் இருந்து ஏதேனும் எதிர்ப்பு வருமென்ற காரணத்தினால் அதியுட்ச கவனத்துடன் விறகு கிடங்கின் கதவுகளை திறந்தனர். பண்ணையாளனான “சிக்பேத்” தன்னை அந்த ஊனமுற்ற இரவலன் தாக்கியதாயும் அவனின் தாக்குதலில்  இருந்து தப்பித்தல்  மிக கடினம் எனவும் காவலரை நம்ப வைத்தலில் வெற்றி அடைந்திருந்தான்.

 காவலன் சத்தமிட்டான் “ நொண்டியே எழுந்திரு’

 ‘பெல்லினால்’’ சிறிதும் நகரவே முடியவில்லை. தன்னால் இயன்றமட்டும் ஊன்றுகோலின் உதவியுடன் எழுந்திருக்க முயன்றான். எனினும் அவனின் முயற்சி வெற்றியுற இயலவில்லை. அவனின் இயலாமையை புரிந்து கொண்ட காவலர்கள் தங்கள் உச்சபட்ச பலத்தினை பிரயோகித்து ஊன்றுகோலின் உதவியுடன் அவனை எழுந்து நிற்க செய்தனர்.

 பயம் அவனை பீடித்திருந்தது. காவலரின் உடையினை பார்த்ததிலான அச்சம். அது அவனின் நிறமூர்த்ததில் படிந்திருந்த ஒன்று. மிகச்சிறத்த விளையாட்டு வீரனின் முன்னே நிற்கும் ஒரு கத்துக்குட்டி வீரனின் பேரச்சம் பூனையின்  முன்னேயான ஒரு பெருச்சாளியின் பயம்- இவ்வறான பேரச்சத்தின் மத்தியிலும் பலத்த பிரயத்தனத்துடன் ஊன்றுகோலின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்துதலில் அவன் வெற்றியுற்றிருந்தான்.

 ‘முன்னே நட’ காவலன் சத்தமிட்டான். அவன் நடந்தான். பண்ணையின் அனைத்து பணியாட்களும் அவனின் பயணத்தினை பார்த்தபடி நின்றிருந்தனர். பெண்கள் தங்கள்  முஸ்டியை மடித்து காட்டினர். ஆண்கள் அவனை பழிப்புரை செய்தனர். இறுதியில் அவன் அழைத்து செல்லப்பட்டான்! நல்லதோர் விடுதலை! அவன் இரு காவலரிடையே நடந்து சென்றான். அவன் தன்னிடம் மீந்திருந்த அனைத்து சக்திகளையும் ஒருங்கே திரட்டினான்-நம்பிக்கை இழந்த ஒருவனின் சக்தி குவிப்பு-அவனை அந்த அந்தியில் இழுத்து சென்று கொண்டிருந்தது. அவனுக்கு என்ன நடக்கின்றதென்ற குழப்பத்தில் அவன் இருந்தான். அதை புரிந்துகொள்ள முடியாத அளவில் அவன் பேரச்சத்துக்கு உள்ளாகியிருந்தான்.

வீதியில் அவனை கண்ட மக்கள் முணுமுணுத்தபடி நகர்ந்து சென்றனர் ‘யாரோ ஒரு திருடன்’.

அந்தியின் இறுதியில் அவன் நகரத்தினை அடைந்தான். அவன் அந்த நகரினை முன்னே ஒருபோதும் கண்டிருந்ததில்லை. அவனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றோ அல்லது ஏன் அவன் அங்கே வந்துள்ளான் என்பது பற்றியோ உணர்ந்து கொள்ளும் அளவில் அவனில்லை. கடந்த இருதினங்களில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் அவனை வாழ்வு குறித்தான எதிர்பார்க்கைகளை பூச்சிய நிலைக்கு தள்ளியிருந்தன.

அவன் எதையுமே பேசவில்லை அல்லது எதையும் பேசும் நிலையில் அவன் இல்லை. தவிரவும் கடந்து சென்ற பல வருடங்களில் அவன் யாருடனும் பேசியுமில்லை. அவன் நாவினை பயன்படுத்துதலை முற்றாக மறந்திருந்தான். அவனது எண்ணங்களை வார்த்தைகளாய் உருமாற்றுதல் குறித்து திடமற்ற நிலையில் அவன் இருந்தான்.

அவன் நகரத்து சிறையில் அடைக்கப்பட்டான். அவன் பசியில் இருப்பது குறித்தோ அல்லது நாளை மறுநாள் வரையில் அவன் வெறும் வயிற்றுடன் இருப்பது குறித்தோ காவலர்களுக்கு எதுவும் தோன்றவுமில்லை. அது அவர்களின் வேலையுமில்லை. அடுத்த நாள் காலையில் அவர்கள் அவனை பார்க்க வருகையில் அவன் வெறும் தரையில் முழுப்பிணமாக வீழ்ந்து கிடந்தான். அப்படியோர் திகைப்பூட்டும்  விடயம் அது.

000000000000000000000000000000

ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு :

லலித கோபன்ஹென்றி றெனே ஆல்பேர்ட் கீ டு மொப்பசன்ற் (Henri René Albert Guy de Maupassant, பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் ஜூலை மாதம் 06 ஆம் திகதி 1850 ஆண்டில் இவர் பிறந்தார். 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களில் இவரும் ஒருவராகக் கருதப்படுகின்றார் இவரது 13 ஆம் வயதில் இவரது பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. இவரது தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர். இவர் ஒரு பெரும் எழுத்தாளராக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். தனது பட்டாப்படிப்பை முடித்த மொப்பசன்ற் பெர்சியாவிக்கு எதிரான பிரெஞ் போரில் பங்கேற்று இருந்தார். அதன் பின்னர் பிரெஞ் அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்.

 

கீ டு மொப்பசன்ற் (Henri René Albert Guy de Maupassant 1850-1893 )

தமிழில் : லலித கோபன் –  திருகோணமலை

லலித கோபன்

 

                                                                             

(Visited 133 times, 1 visits today)