தொன்மங்கள் மீதான கலகக்குரல் –பரசுராம பூமி-நூல் விமர்சனம்-லலிதகோபன்

பரசுராம பூமி பிரதி ஒன்று வெளிவரும்போதே அதற்கான மாற்று பிரதி ஒன்றும் உருப்பெற்று விடுகின்றது.மாற்று அல்லது மற்றமை இல்லாத ஒன்று பிரதிகளின் எதேச்சதிகாரத்துக்கு வித்திடுவதுடன்  அந்த பிரதியின் வளர்ச்சிக்கும் தடையாக அமைந்து விடுகிறது.இங்கு மாற்று பிரதி அல்லது மற்றமை என்பது நமது பொது புத்தியில் இன்றளவும் பதிந்துபோயுள்ள “எதிர்க்கடை” விவகாரமன்று.பிரதியினுள்ளே ஆழ்ந்து சென்று மற்றமைகளை அல்லது புறக்கணிக்கப்பட்ட விடயங்களை அணுகுதல்.இன்னும் தெளிவாக  கூறப்போனால் பொதுபுத்தியினை சற்றே ஒதுக்கி சுயபுத்தியினை கூராக்கி பிரதியினை அணுகுதல்.பிரதியினுள் மாற்று பிரதி ஒன்றினை தேடுதல் கலைத்துறை சார்ந்த ஒரு அறிவியல் விடயமாகும் .

எமது பண்டைய இதிகாசங்கள் மற்றும் புனித நூல்களை நாம் பிரதிகளாக அணுகுகையில் , அதில்  வருகின்ற தொன்மங்களையும் விஞ்ஞான ரீதியில் அணுகி அல்லது அந்த புராதனங்களின் மீது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி தொன்மங்களுக்கான மாற்று பிரதியாக எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுதியே “பரசுராம பூமி” ஆகும் .கிழக்கிலங்கையின் தவிர்க்க முடியாத படைப்பாளியாகவும்   பதிப்பாசிரியராகவும்  மிளிரும் திரு.மைக்கேல்கொலின் அவர்களே இந்த தொகுதியின் பிரம்மா.தொன்மங்களை படைப்புக்களில் கையாள்வது படைப்பாளிகள் தொன்று தொட்டு கையாண்டு வருகின்ற விடயமாகும்.ஆனால் முற்று முழுதாக தொன்மக் கதையாடல்கட்கான பிரதி ஒன்றினை நான் அறிவது இதுவே முதலாவதாகும்.அந்த வகையில் இது முற்று முழுதாக தொன்மங்கள் மீதான கலகக்குரல்  அல்லது மறுவாசிப்பு எனவும் கூறலாம்.

இந்த தொகுதி மொத்தம் ஒன்பது கதைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.எனது பார்வையில் இந்த கதைகளை பின்வருமாறு வகுதியாக்கம் செய்ய முடியும் .

  1. பெண்ணியம் சார் நோக்கு
  • ஓர்மம்.
  • வரம்
  1. ஈழப்போரின் அத்தியாயங்களை இதிகாசங்களுடன் கோர்த்தல்  .
  • குருசேத்திரபுரம்
  • ராவணாபுரி
  • பரசுராம பூமி .
  1. ஈழபோரும் விவிலியமும் ஒரு ஒப்பு நோக்கு .
  • புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள் .
  • எல்லாம் நிறைவேறிற்று .

04           எக்காலத்துக்கும் பொருந்தும் யதார்த்தங்கள்

ஞானம்

யாருமிங்கே தீர்ப்பிடலாம் .

இந்த பகுப்பின் அடிப்படையில் இந்த தொகுதி குறித்து அணுகுவதே எனது நோக்காக அமைகின்றது .

புரானங்களாயினும் சரி அல்லது இதிகாசங்களோ  புனித நூல்களோ எதுவாயினும் பெண்களை பேசாது நிறைவதில்லை .இன்னொரு விதமாக கூறின் பெண்  பாத்திரங்கள் அல்லது பெண்கள் இல்லாவிடின் தொன்மைகதையாடல்களே இல்லையெனலாம்.விவாதத்துக்குரிய விடயம் யாதெனில் அங்கே பெண்கள் என்ன்னவாக இருக்கின்றார்கள் என்பதே.கற்புக்கரசிகளாகவும் குலவிலக்குகளாகவும்  சித்தரிக்கப்படும் பெண் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட  வாழ்வென்பது பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே உள்ளதனை நாம் அந்த கதைகளை வாசிப்பதனூடு அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது .சமூகத்துக்கு கலங்கரை விளக்காகவும் தமக்குள்ளே குமுறுகின்ற அலைகளாகவுமே இந்த பெண் கதாபாத்திரங்கள் உள்ளன .அநேகமான ஏன் ஒட்டுமொத்த புராண , இதிகாசங்களின் புனைவாளர்களாக ஆண்களே இருப்பதுவும் அந்த காலத்து சமூக அமைப்பியலில்  ஆணின் இடமானது அசைக்கமுடியாத ஆணியாக நிலைபெற்றிருந்ததும் இவ்வாறான “சோற்றுக்கு உப்பாக “ பெண் பாத்திரங்கள் வடிவமைக்கப்படிருந்தமைக்கான காரணங்களாக நாம் கொள்ளலாம்.மறுபுறத்தே இவ்வகை தொன்ம கதையாடல்களில் “புரட்சி அல்லது புதுமை “ என்பதற்கான வரைவிலக்கனங்களாக கூடையில் வைத்து கணவனை தாசி வீட்டுக்கு அனுப்புவதும் , தாசி  வீட்டிலிருந்து திரும்பும் கணவனை தாம்பூலம் கொடுத்து வரவேற்பதுமாகவே இருந்தன என்பதும் நினைவு கூரத்தக்கது.

இந்த தொகுதியில் எழுத்தாளர் கண்டெடுத்திருகும் இரு கலககுரல்கள் அகலிகை யையுடையதும் ஊர்மிளையுடையதுமாகும்.அகலிகை குறித்து நிறைய பேசியுள்ள பிரதிகளை நாம் அறிந்துளோம்.ஆனால் ஊர்மிளை குறித்து பேசும் சிறுகதை ஒன்றை வாசிப்பது அல்லது இலக்கிய பிரதியொன்று ஊர்மிளையின் குரலை உயர்த்தி பிடிப்பது இதுவே முதன்முறையென என்னளவில் கூறவியலும்.

அகலிகை கதையினை பொறுத்தவரையில் ஆண் கதாபாத்திரத்தின் மனம் இருமுனைப்புடையதாயும் பெண்ணின் மனம் ஓர் முனைப்புடையதாயும் நான் காண்கிறேன்.முக்காலமும் உணர்ந்த முனிவரினால் இந்திரனின் வருகை அறியப்படாத ஒன்றல்ல.இங்கே தன்னால் முடியாத ஒன்றை இன்னொருவர் மூலம் அடையப்படுவதை அனுமதிக்கிறது கௌதமனின் “சனனாயாக மனது”.இவ்வாறு வெளியேறி சென்ற முனிவரின் வருகை திட்டமிட்டு தாமதித்து இருந்திருப்பின் அகலிகை சாதாரண பெண்ணாக இருந்து போயிருப்பாள்.ஆனால் ஆணாதிக்கத்தில் ஊறிப்போன கௌதமனின் மனசு “தனது இயலாமையினை” பெண்ணின் மீதான கல்லாக எறிகிறது.காயப்பட்ட அகலிகையின் தரப்பு நியாயங்கள் ஏற்கத்தகவையே.ஏனெனில் “அவளின் அனுபவம் புதுமை’ என்பதனால் ஆராய்ச்சி செய்வதற்கான தேவை அங்கில்லை.இன்னொரு விதமாக கூறின் அவளின் எல்லை கடத்தலுக்கும் ஒரு ஆணே காரணமாகின்றான். இந்த கதையின் முடிவில் அகலிகை கேட்கும் கேள்விக்கு பதில் தர கௌதமன் தரப்பு தயாரில்லை.பெண்ணின் உணர்சிகளுக்கு மதிப்பளிக்கும் ஆண்கள் சமூதாயம் எப்போதுமே மலரப்போவதில்லை என்பதையே கதாசிரியர் காட்சியில் காட்டும் அந்த “இரு கற்கள்” எடுத்தியம்புகின்றன. ஆனாலும்  பதில்கள் கிட்டாவிடினும்  பெண்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர் அதுவும் மிகவும் சரியாக.

“நாதா ….நீங்கள் ஒருமுறை இந்திரன் வேடம் கொண்டு என்னோடு வந்து சுகித்திருக்க வேண்டும் “

அகலிகையாவது கேள்வியுடன் கல்லாகி போனாள்.ஆனால் ஊர்மிளையோ பெண்களின் உணர்வுகளை கருத்திலெடுக்காத ஆண்கள் மீது எறிகணைகள் எறிந்து வீழ்த்தியிருக்கிறாள்.இடிந்து போய் கிடப்பது இலக்குமணன் மட்டுமல்ல இராமாயணத்தின் அத்தனை அவதார புருஸர்களும்தான்.இந்த கதையினை பொறுத்து நான் குற்றம் காண்பது இராமன் மீதே.ஏனெனில் இலக்குமணனை தடுக்காது தனது சுயநலனுக்காக அழைத்து சென்றதன் மூலம் ஊர்மிளையின் இன்றைய நிலைக்கு காரணமாகின்றான்.மறுபுறத்தே சீதையினையே சந்தேகித்த இராம மனசுகள் ஊர்மிளைகளை கருத்திலெடுக்குமா என்பதுவும் மிக இலகுவாக பதில் கூறக்கூடிய வினாவேஏனென்றால் “அதுதான் சிஸ்டம்”.

அகலிகையின் மீதானதும் ஊர்மிளையின் மீதானதுமான மீள் வாசிப்புக்களை முறையே “வரம்” மற்றும் “ஓர்மம்” கதைகளினூடே எக்காலத்துக்கும் உரியதாக எடுத்தாண்டிருக்கும் ஆசிரியரின் பாங்கு போற்றத்தக்கது.மிகவும் இலகுவாக அவர் சமூகத்துக்கு கூறும் செய்தி இதுதான் “பெண்களின் குரலை செவிமடுக்க தவறாதீர்கள் நண்பர்களே”.

ஈழத்தில் நிகழ்ந்த இறுதிப்போரினை நேரடியாகவும் பூடகமாயும் சித்தரிக்கும் கதைகளாக குருசேத்திரபுரம் , ராவணாபுரி மற்றும் பரசுராம பூமி என்பன விளங்குகின்றன.இதில்  குருஷேத்திரபுரம்  மற்றும் பரசுராம பூமி என்பன மகாபாரதத்தின் பிரதி பிம்பங்களாயும் அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தின் நேரடி சாட்சிகளாயும் உள்ளன .மாறாக இராவணாபுரி யதார்த்தத்துடன் அவ்வளவு இணங்கி போகாவிடினும் கூட ஈழம் , அழிவு என்றவாறு அமைவதூடு ஈழப்போருடன்  இயைபு கொள்கிறது.மூன்று கதைகளிலும் காணப்படும் ஒத்த இயல்பு யாதெனில் , எழுத்தாளர் தான் வரித்து கொண்ட ஈழபோராட்ட  ஆதரவு நிலையிலிருந்து இந்தியாவினை; ஈழப்போரில் அதன் களங்கமிகு பக்கங்களை அம்பலப்படுத்தி குற்றவாளியாக்குவதுதான்.

குருஷேத்திரபுரம் கதையானது பாரதப்போரினையும் இறுதிப்போரினையும் கலந்து எழுதப்பட்ட கதை.சம்பவங்களை மாற்றி மாற்றி எழுதியுள்ள இதன் அமைப்பில் பினவீனத்துவத்தின் சாயல் தெரிகிறது.

“பயப்படாதே அர்ச்சுனா , இது எனது யுத்தம் .எனது யுத்தத்தையே நீங்கள் நடத்துகிறீர்கள்”

கண்ணனின் இந்த குரலினை இந்தகாலத்திலும் நேரடியாக கேட்டவர்கள் என்ற ரீதியில் மிகவும் அச்சொட்டாக யதார்த்தத்துடன்  பொருந்தி போகின்ற தொன்மம் இதுவென கூறலாம்.கதையினை நுணுகி ஆராய்கையில் பாரதப்போரின் இறுதி வெற்றியாளர்கள் யார் என்ற கேள்வியும் வாசகர் மனதில் எழுகிறது.கதையின் போக்கில் நகர்ந்து செல்கையில் கர்ணனின் படைகளால் மறுவளமாக கூறுகையில் ஈழத்தவரின்  முன்னோர்களால் , தோற்கடிக்கப்பட்டதன் வெஞ்சினமே  முள்ளிவாய்க்க்காலில் “பழிக்கு பழியாக” முடிக்கப்பட்டதாகவும் கொள்ள முடியும்.”காவியத்தின் எழுத்தாளர்” நகர்ந்து சென்ற கதை எழுத்தாளரின் மனத்தில் இன்னமும் ஆழமாக குடிகொண்டுள்ள நம்பிக்கை ஒன்றின் குறியீடாகவும் கொள்ள முடியும்.

இறுதிப்போரில் இந்தியாவின் பங்களிப்புடன் நிகழ்த்தப்பட படுகளத்தினை விவரிக்கும் கதையே “பரசுராமபூமி”.அதுவே இந்த நூலின் தலைப்பாகவும் அமைந்தது.ஒரு நீண்ட துயிலில் இருக்கும் பரசுராமர் ஈழப்போரின் இறுதி அத்தியாயங்களை நேரடி தரிசனம் செய்து பாரதம் புரிந்த “நரித்தனத்துக்கு” பிராயச்சித்தமாய் தனது வில்லினை நந்தி கடலில் எறிந்து விட்டு போவதாய் கதை முடிகிறது .

இந்த இரு கதைகளையும் வாசிக்கையில் , இனத்துக்காக இரந்து போராடிய தோழர்களை கௌரவ சேனைக்கு சமப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.இது எந்தளவிற்கு தர்க்க ரீதியில் பொருந்தி போகிறது என்பது கேள்விக்குரியதே.கர்ணனின் நியாயத்துக்கான குரலும் , கண்ணனின் சூழ்ச்சியும் ஏற்புக்குரியதே.ஆனால் போருக்கான காரண நியாயங்களை ஆராய்கையில் ஈழப்படைகளை கௌரவ சேனைகளுடன் சமப்படுத்துவது பொருந்தி போவதாக தெரியவில்லை.எனது மனதில் தோன்றியது இதுதான் .மகாபாரதத்தினையும் ஈழப்போரினையும் ஒப்புநோக்குகையில் போருக்கு முந்தைய நியாயங்களில் பாண்டவர்களின் சாயலாக ஈழத்தவர் உள்ள வேளையில் , போரின் போதான நியாயங்களில் கௌரவ சேனையின் சாயலில் ஈழத்தவர் உள்ளதாக கூறலாம்.

இந்த இருகதைகளுக்கு அப்பாலான அரசியல் பின்னணியினை ஆராய்கையில் ,இந்தியப்படைகளின் அழிச்சாட்டியங்களுக்கு இந்தியா கொடுத்த விலையும்  அந்த விலைக்காக புல்லை அழிப்பதன் பேரில் பயிர்களையும் அழித்த அயல்நாட்டின் போக்கும் இறுதியில் மக்களுக்கான துன்பத்தையே ஈந்தான.இந்த இருகதைகளும் போர்க்களம் வெற்றி ,தோல்வி என்ற விடயங்களை முன்னிறுத்தி நகர்வதனால் மக்களின் துயரங்கள் மறக்கடிக்கப்பட்டதான  ஓர் உணர்வை வாசகரிடையே ஏற்படுத்துகின்றன.பூனைகளின் விளையாட்டினை மாத்திரம் கருதாது பகடை பொருளான எலிகள் குறித்தும் எழுத்தாளர் சிந்தித்து இருக்கலாம் என்றே என்னளவில் தோன்றுகிறது.

தொகுப்பில் சற்றே நீண்ட கதையாக உள்ளது “ராவணாபுரி’.ஆசிரியர் தனது முன்னுரையில் கூறுவது போன்று ஒரு குறுநாவலுக்கான அடிப்படைகள் இங்கே தென்படுகின்றன.ஏனெனில் முந்தைய இரு கதைகள் போன்று இதன் பரப்பு போர் என்ற ஒற்றை கருத்தியலுக்குள் அகப்படவில்லை.தொன்மங்களில் சிறைப்பட்ட இராவணனை   வெளியில் எடுத்தல் , மண்டோதரி- இராவணனின் தாம்பத்ய சிறப்பினை விளம்புதல் , சூர்ப்பனகையின் நியாயங்களை அலசுதல் , கும்பகர்ணன் மற்றும் இந்திரஜித்தின் வீரதீரங்களை பேசுதல் என பல பரிணாமங்களை உடையது இந்த கதை.ஈழத்தினை இந்தியா அந்த காலம் முதலே  அழித்தது வருகிறது  என்ற ஒற்றை செய்தினை தவிர இந்த கதை கூறும் சம்பவங்கள் ஈழ போரியல்  யதார்த்தத்துக்கு அப்பாலாக அமைவதனால் இதை தொன்மங்களின் மீதான மறுவாசிப்பு அல்லது இராமாயணத்துக்கான மாற்றுபிரதி என்றே கூறவியலும்.

“தமிழ்பெண் என்றால் அவதார புருஷர்களும் ஆயுதம் ஏந்தி விடுவார்களா என்ன ?இதன்பலனை காலாகாலத்துக்கும் அனுபவிக்கப்போவது சீதை அல்லவா ?”

போரில் ஈடுபடும் தரப்பு ஆண்களாயிருக்க அதன் பலனை அனுபவிப்பது பெண்களே என்பதை ஆணித்தரமாக கூறி விடுகின்றார் ஆசிரியர்.கதையின் போக்கில் நகர்ந்து செல்கையில் “தொன்மத்தின் தொன்மமாக” சீதையின் பிறப்பு பற்றிய கிளைக்கதை ஒன்றையும்  ஆசிரியர்  கூறுகின்றார்.இறுதியில் இந்த கதையே இராமாயணத்தின் வெற்றியினை தீர்மானித்ததாக ஆசிரியர் நிறுவுவதும் கூட ஒரு புதுமையும் வாசகர்கள் அறியாததுமாகும்.உண்மையில் இதிகாசம் தொடர்பாக ஆழ்ந்த அறிவுடையோரால் மாத்திரமே இந்த இடத்தில் ஆசிரியரின் வாசிப்பு திறனை மெச்சி கொள்ள முடியும்.

இந்த மூன்று  கதைகளுமே  நீதி , நியாயம் தொடர்பில் தொன்மங்களை தொடர்புபடுத்தி   மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் பேசப்படாத “கறுப்பு பக்கங்கள்” குறித்தும் பேசுவதனூடே தொன்மங்கள் குறித்தான மீள்விசாரணையினைனையும் வேண்டி நிற்கின்றன. ஆரம்பநிலை வாசகர் ஒருவர் இவ்வாறான கதைகளை வாசிப்பதனூடு  தனது  சிந்தனை பரப்பின் எல்லைகளை நீடித்து கொள்ள இந்த தொகுப்பு உதவ கூடும்.

இதிகாசங்கள் போர் – வெற்றி என்ற  வட்டத்தினுள்ளே சுழல்வன.மாறாக புனித அல்லது மறை நூல்கள் மனித வாழ்வின் எல்லா பக்கங்களையும் தொட்டு சுழல்வன.அந்த வகையில் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியதினையும் நாங்கள் சுமார் ஒரு தசாப்த்தத்துக்கு முன்னர் எதிர்கொண்ட யதார்த்தத்தினையும் ஒப்புநோக்குவதாக அமைந்த இரு கதைகளே “புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள் “ மற்றும் “எல்லாம் நிறைவேறிற்று”.இந்த இரு கதைகளின் பின்னணிகள் அல்லது சம்பவங்கள் ஒன்றாயினும் கூட இரண்டுக்குமான கூறுபொருட்கள்(concepts) வேறுபடுவனவாய் உள்ளதை நாம் காணலாம்.இந்த கதைகள் மெருகேற ஆசிரியர் பின்பற்றுகின்ற மத நம்பிக்கைகளும் காரணமாய் உள்ளன.

“புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள்” கதையானது இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனம் மற்றும் யூதாசின் துரோகத்தின் பின்னணியில் நகர்கின்ற கதையாகும் .என்னை பொறுத்தளவில் கதாசிரியரின் உச்சபட்ச கற்பனைதிறன் சுடர் விடுகின்ற கதையிதுவாகும் ,ஏனைய கதைகளில் உண்மை தகவல்களுடன் கூடிய கற்பனை திறனை கலப்பதனூடு பெறப்படும் புதுவிதமான புனைவினை வாசகர்கட்கு தருகிறார்.கதைகளை நகர்த்தி செல்லும் பாங்கினூடே  வாசகர்கள் கலகக்குரல் எழுப்பாதவண்ணம் பார்த்துகொல்கிறார்.ஆனால் இந்த கதையில் யூதாசின் துரோகத்துக்கு முற்றுமுழுதுமாக “வெள்ளையடிப்பு” செய்ய முற்பட்டதன் மூலம் தனக்கும் வாசகர்களுக்குமிடையே சமருக்கான களம் ஒன்றினை திறந்து விடுகிறார்.இதனால்தானோ என்னவோ தன்னால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் அதிகாரங்கட்கு “புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள் “ என பெயரிட்டுள்ளார்.ஆனால் இந்த அதிகாரங்களினூடே அவர் கூறும் இந்த விடயம் எக்காலத்திலும்  உண்மையானதே .

“யூதாஸ் கவலைப்படாதே உனக்கு ஒன்று சொல்கிறேன்.எங்கெல்லாம் எனது பெயர் உச்சரிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் எனது கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அங்கெல்லாம் உனது பெயரும் ஒலிக்கும்”

பகவத்கீதையின் சாரத்துடன் சமரசம் செய்து கொள்ளும் ஒரு சிறுகதையே “எல்லாம் நிறைவேற்றிற்று “.இங்கே கூறப்படும் குரல்கள் வேறுபடுகிறதேயன்றி புனித நூல்களின் சாரங்கள் யாவும் ஒன்றுதான் என நிறுவ முற்படுகின்றார் எனலாம்.இந்த கதையில் மீட்பரின் இறுதிக்கணங்கள் கற்பனையுடன் சேர்ந்து பயணிக்கின்றன.நவீன மீட்பர்களின் அணி போல இங்கேயும் தோழர்கட்கு பணிகளும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆச்சரியமாக இங்கேயும் ஒரு சர்வதேச பொறுப்பாளர் .இக்கட்டான வேளையில் அவரும் தூங்கிவழிவதாக கூறப்படுகிறது.

இதில் எனக்கு பிடித்த பாத்திரமாக அல்லது விடயமாக இருப்பது பேதுரு என்ற கதாபாத்திரமே.யூதாஸ்களின் பரம்பரை இயல்புகள் சந்ததி வழியாக கடத்தப்படுபவை.அதில் பெரிதாக வியப்பதற்கு ஏதுமில்லை.ஆனால் பேதுருக்கள் இறுதிக்கணம் வரைக்கும் மீட்பரோடிருந்து மீட்பரின் இறுதிக்கணத்திலோ அல்லது அதற்கு சற்று முன்னரோ “பிழைப்புக்காய்” தரப்பு மாறுவோர் .யதார்த்தத்திலும் எத்தனையோ பேதுருக்களை நாம் கடந்து வந்துள்ளோமில்லையா.

இந்த இருகதைகளையும் வாசிக்கும் வாசகனின் மனதில் தற்க்கால நிகழ்வுகள் மேலேளுவதனை தவிர்க்கவியலாது.புரதான மீட்பரினை நவீன மீட்பர்களுக்கு  இணையாக ஏற்றுகொள்வது கதாசிரியர் வரித்து கொண்டுள்ள கொள்கையின் பிரகாரம் சரியானதே.ஆனால் பொது வாசக மனது  விமரிசனங்கள் ஏதுமின்றி நவீன மீட்பர்களை ஏற்றுகொள்ளுமா என்பது ஐயத்துக்குரியதே.ஏனெனில் நக்கீரனின் ‘நெற்றிக்கண்’ வாக்கு யாவருக்குமே பொருந்தி போகின்றது.இவ்வாறான கேள்விகளை வாசகர் எழுப்பக்கூடும் என்பதை அறிந்துதான் போலும் மீட்பர்களின் “பாடுகள்” குறித்தும் இங்கே உசாவப்படுகிறது.

பொதுக்கதைகள் குறித்து பார்கையில் முதலில் தட்டுபடுவது “ஞானம்”.எது ஞானம் என்பதற்கு எல்லாக்காலங்களிலும் பொதுவான வரைவிலக்கணங்கள் இல்லை.சித்தார்த்தன் இந்த காலத்தவன் எனில் அவன் பெரும் ஞானம் இவ்வாறே இருக்கும் என்பதை ஊகிப்பு கலந்த புனைவாக தந்துள்ளார் கதாசிரியர்.ஏனெனில் நான் கூறும் இந்த கலியுகத்தில்தான் ரஜனிஸ் அல்லது ஓசோவின் ஞானம் தொடர்பிலான சிலாகிப்புக்களும்  விவாதிப்புக்களும் இடம்பெற்றன என்பதை நினைவு கொள்வது நலம்.அவர் கூறும் அளவிற்கு இல்லாவிடினும் சம்சார சம்போகத்தின் கடமைகளை சரியாக நிறைவேற்றுவதன் மூலமும் ஞானம் பெறலாம் என்பதை வலியுறுத்தும் ஆசிரியருடன் நானும் உடன்பாடு கொள்கிறேன்.

அடுத்த கதை யாருமிங்கே தீர்ப்பிடலாம்.இது நாம் வழமையில் அறிந்துள்ள இயேசுநாதர் மற்றும்  விபச்சாரி தொடர்புடைய கதைதான்.ஆனால்  கதையின் முடிவு வேறொரு அரசியலினை பிரதிபலிக்கின்றது.மீண்டும் இங்கே ஒரு மீட்பர் வருகின்றார்.அவர்மீது ஒரு தொல்குடியாளன்  கல்லெறிவதாய் காட்டுவதனூடு பேதுருக்களின் பெருக்கத்தினை , மீட்பர்கள் இல்லாத பொழுதுகளில் காட்டுகிறார்.

இவ்வாறாக முடிகிறது பரசுராம பூமி.தொன்மங்களை குறித்து முழுதாய் பேசும் முதல் பிரதி என்ற வகையில் இது பேசுகின்ற அரசியலினை புறக்கணிக்க முடியாதென்பதே முடிந்த , துணிந்த முடிபாகும்.

 லலிதகோபன் -இலங்கை

 

லலிதகோபன்

 

 

 

 

(Visited 117 times, 1 visits today)