“தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்” – வாசிப்பனுபவம்-சங்கர்

நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் முழுத்தொகுப்பு போன வருடம் காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். ஒன்றிண்டு கதைகள் படித்தப் பின் பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் “தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்” கண்ணில் பட்டது. எப்போது வாங்கினேன் என்று நினைவில்லை.

இது நாஞ்சில் அவர்களின் முதல் தொகுப்பு. மொத்தம் பதினோறு கதைகள் உள்ளன. சிறுகதைக்கான இலக்கணம் என்று நான் நம்பும் விசயம் முதல் தடவை வாசித்த கதைகளில் இல்லை. ஆனால் இம்முறை இக்கதைகளில் இருக்கும் விசேசமான ஒன்றைக் கவனிக்கத் தொடங்கியபோது இத்தொகுப்பு பிடித்துப்போனது.

முன்னுரையில் இயக்குனர் பாலா, இத்தொகுப்பில் இருக்கும் ‘இடலாக்குடி ராசா’ கதைதான்தான் சினிமாவில் தான் நுழைவதற்கு காரணம் என்று ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடரில் எழுதியதாக நாஞ்சில் குறிப்பிடுகிறார். இத்தொகுப்பில் இருக்கும் விசேசமான விசயம் என்று நான் சொன்ன விசயம்தான் பாலாவை கவர்ந்த விசயமாக இருக்கும். நாஞ்சில், கதைகளை விட சில மனிதர்களை நம் முன்னே படைத்துக் காண்பிக்கிறார். (எல்லாக் கதைகளிலும் என்று சொல்லவில்லை. ஆனால் படித்து முடித்தபின் பிடித்தக் கதைகளில் இவ்விசயம் இருந்ததால் இப்படி ஒரு உணர்வைத் தவிர்க்க முடியவில்லை) வாசித்து முடித்தபின் அவர்கள் நம் மனதில் நிச்சயம் சில காலம் தங்கி இருப்பர். பாலாவின் படங்களான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகியப் படங்களில் வரும் முக்கியக் கதாப்பாத்திரங்களைப் போல. அக்கதாப்பாத்திரங்களின் பின்னனி விவரங்களை நாம் மறந்தாலும் மறப்போம் ஆனால் அவர்களை மறக்க மாட்டோம். காரணம் அவர்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையையும் மீறி அவர்கள், அக்கதாப்பாத்திரங்கள் பிரதானப்பட்டிருக்கும். பாலாவே ஒரு பேட்டியில் “நான் கதைகளைவிட ‘மனிதர்களால்’ கவரப்படுகிறேன்” என்று சொன்னது நினைவிருக்கிறது.

‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ தொகுப்பில் பாலாவின் படங்களில் வருபவர்களைப் போல் extreme ஆன விளிம்பு நிலை மனிதர்கள் இல்லை. ‘இடலாக்குடி ராசா’ கதையில் வரும் ராசா யார் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் உரிமையாய் சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுபவனாய் இருக்கிறான். ஊரில் எல்லோருக்கும் அவனைத் தெரிகிறது. பழையச் சோறைக் கொடுத்தாலும் அவன் கேட்க்கும்போது அவனுக்கு கொடுப்பவர்களாக அவ்வூர் மக்கள் இருக்கின்றனர். சில ஆண்கள் அவனைக் கிண்டல் செய்யும்போது, ‘என்ன கொடுத்தா வச்சுருக்க’ என்பதுபோல், அவன் மனம் அதை ஒரு குழந்தையைப்போல் எடுத்துக்கொள்கிறது, ‘அப்போ சாப்பாடு இல்லையா.. வண்டிய விரட்டிரட்டா” என்று அப்பாவியாய் கேட்பவனைப் பார்த்து அந்த வீட்டுப் பெண்கள் நெஞ்சடைத்துப்போகிறார்கள். தங்கள் ஆண்களை கடிந்துக்கொண்டு அவனை இருக்க வைத்து சாப்பாடு போடுகிறார்கள். இடலாக்குடி ராசா பைத்தியம் இல்லை. அவனுக்கு எப்போது மன வளர்ச்சி நின்றுபோனது என்று தெரியவில்லை என்று நாஞ்சில் எழுதுகிறார்.

ஒரு இலக்கியச் சிறுகதையை வாசித்து முடித்தபின் மனதில் அதைப் பற்றி என்ன திரண்டு எழுகிறது என்பதைக் கவனிப்பேன். அதில் ஒரு முழுமையை உணர்ந்தால் மட்டுமே கதை எனக்குப் பிடிக்கும். நினைவில் தங்கும். இந்த முழுமையை உணர்வதில் கதையின் வடிவத்திற்குப் பெரும் பங்கு உள்ளது. கதை எதில் பயணிக்கிறது, அப்பயணத்தில் எவையெல்லாம் பேசப்படுகின்றன, அவற்றில் எவை அதிக இடங்களை எடுத்துக்கொள்கின்றன என்பவை வடிவத்தை தீர்மானிக்கும். இடலாக்குடி ராசா ஒரு எளிய, சிறிய கதை. இதில் ராசா வருகிறார். வேண்டும் இடத்தில் சாப்பிடுகிறார். அவரைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கு விடை கதையில் ஒரு கதாப்பாத்திரம் சொல்வதைப்போல, “சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு இப்படி படச்சு விட்டிட்டான்” காரணம் பெரிதாக இல்லை. இப்படியும் மனிதர்கள்.

கதையின் முடிவில் கல்யாண வீட்டுச் சாப்பாடு பந்தியில் ராசாவை விளையாட்டிற்காக வம்பிழுக்கிறார்கள். அவனை விட்டுவிட்டு மற்ற எல்லோருக்கும் சாப்பாடு போட ராசா “எண்ணே எனக்கில்லையா.. அப்ப வண்டியை விட்டிருக்கேன்” என எழுந்துபோகிறான். அதன் பிறகு யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை எனக் கதை முடிகிறது. சொற்கள் நனைந்து வந்தன என ஒரு வரி வரும். வாசித்து முடித்தப்பின் மனதில் ஈரம் எடுத்துவிடும். அது நிச்சயம் கழிவிரக்கத்தினால் அல்ல.

இனி எப்போது கேட்டாலும் எனக்குப் பிடித்தவர்களுள் இடலாக்குடி ராசாவும் ஒருவர் என்று நிச்சயம் சொலவேன்.

தொகுப்பில் இருக்கும் வேறு சில முக்கிய மனிதர்கள்: சின்னத் தம்பியா பிள்ளை, டப்புச் சுந்தரம், வைத்தியன், பரமசிவம் பிள்ளை, பலவேசம் பிள்ளை, சங்கர நயினார் பிள்ளை, பண்டாரம். இவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்தக் கதைகளில் வருவதைப் பார்க்கும்போது ஒரு கிராமத்தை சுற்றி வந்ததுபோல் உணர்வோம்.

இவர்கள் அனைவரும் யாரையேனும், எதையேனும் பிரிதிநிதித்துவப்படுத்துகிறார்களா என்றால் ஆமாம், இல்லை என இரண்டு பதில்களையும் சொல்லலாம். பிள்ளை பிறக்காததால் இரண்டாம் திருமணம் செய்துவைக்க முயலும் பெற்றோரை எதிர்க்க முடியாமல் ‘நரம்பை’ வெட்டிக்கொண்டு வந்துவிடுகிறான் டப்பு சுந்தரம். ஏன் இப்படி ஒரு ஆண் செய்யவேண்டும்?, அல்லது இப்படி ஒரு ஆண் செய்வானா? என்று கேட்டால் இப்படி ஒரு ஆணாக நாம் இருந்த தருணங்கள் நம் மனதில் வந்துபோகலாம். சின்னத் தம்பியா பிள்ளை தன் இரண்டு மகள்களின் வீட்டில் சாப்பிடப் போய் கூச்சத்தால் சாப்பிடாமலயே திரும்பி விடுகிறார். “இது என்ன அபத்தம்.. பெற்றப் பிள்ளைகளிடம் ஒரு வாய்ச் சோறு போடச் சொல்லிக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில் என்ன கெளரவம் வேண்டியிருக்கு” என்று கேட்பதற்கு முன் நம் வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் அபத்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நாமே உருவாக்கிக்கொண்ட சடங்குகள், சங்கடங்கள் என பல விசயங்கள் கண் முன்னே வந்து நின்று பதில் சொல்லும். சாவு வீட்டில் நடக்கும் அபத்தங்கள், சாதிய அரசியலில் இருக்கும் கூத்துகள், ஊர்த் திருவிழா, பஞ்சாயத்து தேர்தல் என முன்னர் சொன்னதுபோலவே நாஞ்சிலார் ஒரு கிராமத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

இன்னொரு விசயத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சாப்பாட்டைப் பற்றி நாஞ்சிலார் எழுதும்போதெல்லாம் நாக்கில் எச்சில் ஊருகிறது. நாஞ்சிலாரின் கைப்பக்குவம் அப்படி.

இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் மிகக் கனமான சிக்கலான பெரிய விசயங்களைப் பேசவில்லை. சில வாழ்க்கைத் தருணங்களை, சில மனிதர்களைக் காட்டுகின்றன. அவை, அவர்கள், நம்மையோ, நாம் பார்த்த மனிதர்களையோ, சந்தித்த தருணங்களையோ நினைவூட்டும். நல்ல எழுத்து செய்யும் வேலை அதுதான், இல்லையா…

சங்கர்-இந்தியா

சங்கர்

(Visited 58 times, 1 visits today)