உள்ளம் கவர்ந்த ஆதர்சங்களை விமர்சித்துக்கொண்டே கொண்டாடுதல்-பத்தி-சஞ்சயன்

 அ முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் இல்லை என்றால் எனக்கு எழுதும் ஆர்வமே வந்திருக்காது. இலகு தமிழின் ஊடாக நகைச்சுவைகலந்த மனம் கவரும் தனித்துவமான எழுத்து அவருடையது.

அவரது எழுத்தினை கொண்டாடுபவன் நான். உரிமை எடுத்துக்கொண்டு அவருடன் இரண்டு மூன்று முறை உரையாடியிருக்கிறேன். மனம் கொண்டாடும் ஒரு எழுத்தாளன் மீதான பற்றுத் தரும் உரிமை அது. மனதுக்குப் பிடித்தவர்களிடம் உரிமையாப் பேசுவதில்லையா? அப்படித்தான் இதுவும்.

“அய்யா, உங்களது உலக ரசிகர்மன்றத் தலைவன் நான்தான் என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன்”. அவர் இதுவரை மறுக்கவில்லை. ஆனால், அவருடன் உரையாடியபோது அவர் எழுதிய ஒரு கதையில் வரும் நாயின் பெயரை மறந்துவிட்டு அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது “துரியை (துரியோதனன்) மறந்த நீரொல்லாம் உலக ரசிகமன்றத் தலைவர்” என்றுவிட்டுச் சிரித்தார்.

அவரது தனது வீட்டுப் பருப்புக்கறிபற்றி ஒரு இடத்தில் எழுதியிருப்பார். அதைவாசித்துவிட்டு “நான் கனடாவுக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவேன், உங்களுடன் உரையாடிபடியே பருப்புகறியும் பாணும் உண்ணவேண்டும்” என்றேன். “வாரும் … சாப்பிவோம்” என்றிருக்கிறார்.

ஆனந்த விகடனில் அவர் எழுதி போராளிகள்பற்றி கதையொன்றுடன் (பெயர் நினைவில் இல்லை) உடன்பட முடியவில்லை. அதற்காகவே அவருடன் தொடர்புகொண்டு உரையாடியபோது எனது மனதில் பட்டதைப் பகிர்ந்திருந்தேன். அவரிடம் தனக்குரிய நியாயம் இருந்தது.

அதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவசியம் இல்லையல்லவா? இந்த விடயத்தில் எம்மால் உடன்படவே முடியவில்லை. அவர் அக்கதையை எழுதாதுவிட்டிருந்தால் இழந்த பெருமை மிஞ்சியிக்கும் என்பது எனது கருத்து.

ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்காக முக்கியமாக செயற்படுபவர்களில் அவர் முக்கியமானவர்.

இந்த விடயத்தில் எனக்கு அவர் மீது பலத்த விமர்சனமிருக்கிறது. எங்கள் பாரம்பரிய கல்விமுறைகளை, காலனிய ஆதிக்க சிந்தனையில் இருந்து திட்டுமிட்டு அழிவுறு நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாயிருந்தவர்கள் அதுபற்றி ஒரு சிறு வருத்தத்தையேனும் இதுவரை தெரிவிக்காத நிலையில் எவ்வாறு எம்மவர்கள் ஹாவார்ட் இருக்கைக்காக இத்தனை பேரார்வத்துடன் இயங்கலாம்?

எமது இளையோருக்கு சரித்திரத்தின் உண்மைக்கதைகளை எடுத்துச் சொல்லும் அடிப்படை அறமாவது எமக்கு இருக்கவேண்டாமா? ஆகக் குறைந்தது இளையோருக்கு இந்த உண்மைகளை அறிவித்துவிட்டாவது அவர்களை தமிழ் இருக்கைக்காக உழைக்க வாருங்கள் எனவேண்டும். வெறுமனே அரோகரா போட வாருங்கள் என்பது நியாயமில்லை.

காலனித்துவத்துவத்தால், அமெரிக்க மிஷனறிகளால் எமக்குக் கிடைத்த நன்மைகள் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், நாம் அடைந்த பாதிப்புக்கள்பற்றி நாம் பேசவில்ல என்றால், வேறு யார்தான்பேசுவார்கள்?

ஏன் இவர்களால் ஒரு இனத்தின் பாரம்பர்யங்கள் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற செயற்பாடுகளைப்பற்றி உரியவர்களிடம் பேச முடியாதிருக்கிறது? இதுதான் மேலாதிக்கச் சிந்தனையுடையவர்களின் வெற்றி. எம்மை அவர்களது விசுவாசிகளாக்கி ஒருவித அடிமைத்தனத்தை இப்போதும் மேற்கொள்ளுகிறார்கள்.

ஆதர்சம் என்னும், உள்ளம் கவர்ந்த மனநிலை வேறு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகள் வேறு.

பதின்மவயதில் தகப்பனுடன் ஆண் குழந்தைகள் முரண்படுவதுபோன்றது இது.

மனதுக்கு ஒவ்வாத விடயங்களில் ஆதர்சங்களுடன் நாம் மோதியே ஆகவேண்டும். இல்லை என்றால் எமக்கு நாமே விரோதிகளாகிறோம். நாம் ஆராதிக்கும் மனிதர்களுக்கும் உண்மையாக இருக்க மறுக்கிறோம். எமது இரட்டை முகத்தையும், எமது கோழைத்தனத்தையும் காண்பிக்கிறோம். இப்படியா மனம் கவர்ந்தவர்களுடனான உறவு இருக்கவேண்டும்?

மனம் கவர்ந்தவர் என்பதால் மட்டும் போலியாக முகஸ்துதி செய்வது நியாயமாகுமா? கருத்துவேறுபாடுகளை முன்வைக்காதிருக்க முடியுமா? அல்லது உண்மையை மறுதலிக்காதிருக்கத்தான் முடியுமா?

ஆதர்சம் என்பது கருத்துவேறுபடுகளை உரக்கப் பேசியபடியே அவர்களின் திறமைகளைக் கொண்டாடுவது.

மனம் கவர்ந்தவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதுபோன்று, அவர்களுக்கும் மற்றயவர்களிடத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கலாமல்லவா?

முத்தரை அவரது எழுத்துக்காக தலையில்வைத்துக் கொண்டாடுவேன்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

(Visited 121 times, 1 visits today)