ரௌத்திரம் பழகு-பத்தி-சஞ்சயன்

 

சஞ்சயன்வாழ்க்கை புதிரானது. எப்போது எப்படி திரும்பும் என்பதைக் கடைசிக்கணம் வரையில் மறைத்தே வைத்திருக்கிறது. வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்கள் விசித்திரமானவை. அவற்றைத் தொகுத்துப்பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். சிலவேளைகளில் ஞானத்தை போதிப்பதும் இந்த விசித்திரமான சந்தர்ப்பங்களே.

அப்போது எனக்கு 17 வயதிருக்கும். இரண்டு பட்டப்பெயர்கள் எனக்கிருந்தன. பிரபலமான பட்டம் “ஊத்தை”, மற்றையது மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்த எனது தாயார் வைத்த பட்டம் “சோடாப்போத்தல்”. (சோடாப்பொத்தலை திறந்ததும் சுர்ர்ர் என்றுவிட்டு அடங்கிவிடுமல்லவா)

மட்டக்களப்பின் காற்பந்தாட்ட சரித்திரம் அறிந்தவர்களுக்கு 1970 களின் இறுதியில்’சிலிப் ஜெயா’ என்றொரு பிரபலமான ஆட்டக்காரர் இருந்தார் என்பது தெரிந்திருக்கும். நான் ’சிலிப் ஜெயா’ இன் சிலிப் அடிகளுக்காகவே அவரது விளையாட்டைப்பார்ப்பேன். காலப்போக்கில் அது எனக்கும் தொற்றிக்கொண்டது. பந்துடன் வருபவரை பந்து காலுடன் இருக்கும்போது ஒரு சிலிப் அடி விட்டால் அவ்வளவுதான். அவர் மண்கவ்வுவார். ஆனால் காலில் பந்து இல்லாதபோது அடிக்கவே கூடாது.

எமது ஏறாவூர் ஐக்கிய (Eravur United) அணியின் முதன்மை வீரன் என்னுடன் நண்பனாக இருந்தான்.  எமது அணியில் இருந்து சிங்கள, முஸ்லீம், தமிழ் ஆட்டக்காரர்களில் இவனும் முக்கியமானவன்.

ஒருநாள் பயிற்சியின்போது விளையாட்டு சூடாகியது. நாம் எதிர் எதிர் அணி. உயிரைக்கொடுத்து விளையாடிக்கொண்டிருக்கிறோம். பந்துடன் வருகிறான் அவன். என்னைக் கடந்தால் நிட்சயம் கோல்தான் என்ற நிலை.

’சிலிப் ஜெயா’ அண்ணன் கைகொடுத்தார். நான் எழுந்துகொண்ட பின்னும் பையன் எழுந்துகொள்ளவில்லை. நண்பர்களின் உதவியுடன் எழுந்தான். மீண்டும் மீண்டும் அவன் வர, நானும் ’சிலிப் ஜெயா’ அண்ணையை உதவிக்கு அழைத்துக்கொண்டிருந்தேன். 5-ம் முறை இனி சிலிப் அடித்தால் கொல்லுவேன் என்றான். நடுவர் அது சிலிப், பிழையில்லை என்றார். இது அவனுக்கு ஆத்திரத்தை அதிகரித்தது. நான், “என்னில் கைவைத்துப் பார்” என்றேன். “பொறு வைத்துக்காட்டுகிறேன்“ என்றான் அவன்

எனக்கு சினம் தலைக்கேறி ஆடியது. கறுவிக்கொண்டே விளையாடினேன்.  5-ம் முறையும் பந்துடன் வந்தான். “சிலிப்” அடித்தேன். விழுந்தெழும்பி நெஞ்சை நிமிர்த்தியபடி வந்தான். என் நெஞ்சில் அவன் நெஞ்சு முட்டியதான் தாமதம், இருந்த அத்தனை எரிச்சலும் சினமும் கைகளுக்குள் புகுந்தது. ஒரே ஒரு தள்ளுத்தான். விழுந்தவனை சிலரும் என்னை சிலரும் பிடித்துக்கொண்டார்கள். அவ்வளவுதான் அந்த நட்பு.

பாடசாலை நாட்களில் தலைமை மாணவத்தலைவனாகவும் எமது இல்ல விளையாட்டுப்போட்டிகளுக்கு தலைவனாகவும் இருந்த பொற்காலத்துக் கதையொன்று இருக்கிறது.

எனது கணிப்பின்படி எமக்கும் மற்றைய இல்லத்திற்கும் இடையில் ஏறத்தாள 25 புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என கணிக்க முடிந்திருந்தது. சைக்கிள்  ஒட்டப்போட்டியில் வென்றால் 25 புள்ளிகள் கிடைக்கும். ஒருவன் இருந்தான், அவனுக்கு சைக்கிள்  ஓட மட்டுமே தெரியும். வேறு ஒன்றும் தெரியாது.

ஆனால் அவனிடம் இருந்த சைக்கிள்  இரும்புக்கடைக்கு உதவுமே அன்றிப் போட்டிக்கு உதவாது. எனவே நான் சைக்கிள்  தருகிறேன் என்றும் அவன் ஒடுவது என்றும் ஒப்பந்தமானது. எனது சைக்கிளைக் களட்டிப்பூட்டினேன். போட்டியன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பாடசாலைக்கு வந்தபோது நேரம் 6.30.

8.00 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும். சைக்கிள்  ஓடுபவனைக் காணவில்லை. போட்டிக்கான சைக்கிள்கள் வரிசையில் நின்றன. விசில் அடித்தார் புண்ணியமூர்த்தி சேர். சைக்கிள்கள் பறந்தன. அப்போது மூச்சிரைக்க ஓடிவந்தான் எனது வீரன். சைக்கிலைத் தா ஓடுகிறேன் என்றான்.

எனக்குச் சினம் கொப்பளித்தது, அப்படியே மேலாடையில் பிடித்து இழுத்துச் சென்று ஒரு மூலைக்குள் நிறுத்தி காது புளிக்குமளவுக்கு திட்டி அவனை உலுக்கி எடுத்தேன். நண்பர்கள் அவனை பிரித்தெடுத்து காப்பாற்றினார்கள். அதிபருக்கு கதை சென்றபோது, அழைத்து, விசாரித்தார். “உனது கோபத்தை புரிந்துகோள்கிறேன். ஆனாலும் அவன் சக மாணவன். இனி இப்படிச் செய்யோதே” என்று எச்சரித்து அனுப்பினார்.

நான் எதிர்பார்த்தது போன்றே விளையாட்டுப்போட்டியில் 25 புள்ளிகளால் தோற்றோம். அன்றும் அவனை ஒரு கைபார்த்தேன். அன்றும் நண்பர் மீண்டும் அவனைக் காப்பாற்றிஅழைத்துப்போகவேண்டியிருந்த்து.

மிக அண்மையில் நண்பருடன் இலத்திரனியற் கடையொன்றிற்குச் சென்றிருந்தேன்.

நண்பர் ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு உதவியபோது நண்பர் தேடிய பொருள் எனது கண்ணிற்பட்டது. அதன் பெட்டி உடைக்கப்பட்டிருந்ததால் அது வெளியே கிடந்தது. பெட்டியும் அருகிற்கிடந்தது.

நாம் அப்பொருளை கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவ்விடத்தைக் கடந்த விற்பனையாளினி ”இவ்வாறு பெட்டிகளை உடைப்பது தவறு” என்றார்.

மிக மரியாதையுடன் “இப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது” என்றோம். இல்லை நீங்கள் தான் உடைத்தது என்றபோது வாக்குவாதம் ஆரம்பித்தது. எம்மைச் சுற்றிப் பலர். நாம் கறுப்பர் வேறு. சிறுமைப்படுத்தப்பட்டதால் சினம்தலைக்கேறிற்று.

முகாமையாளரை அழைத்து கமரா மூலமாகப் பார்த்து தீர்ப்பை வழங்குங்கள் என்று கத்தினேன். அங்கிருந்த சிலரும் அதனை ஆமோதிக்க, முகாமையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டு அவர் வந்தார்.

கமராவைப் பார்த்தார். “நீங்கள் உடைக்கவில்லை. மன்னியுங்கள் என்றார்”. மன்னிப்பை விற்பனையாளினிதான் கேட்கவேண்டும் நீங்கள் இல்லை என்றதும். விற்பனையாளினி மறுத்தார். நானும் எனது வேண்டுகோளில் இருந்து சற்றும் மசியவில்லை. வாக்குவாதம் பலத்தபோது போலீசை அழையுங்கள் என்றேன். விற்பனையாளினி கருகிய முகத்துடன் மன்னியுங்கள் என்றார்.

முப்பது வயதுகளின் ஆரம்பத்தில் மிகப்பிரபல்யமான வேலைத்தளத்தில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டேன். வேலைநேரக் கட்டுப்பாடு இல்லை. வீட்டில் இருந்து வேலைசெய்யலாம். கைநிறைந்த சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள் பெயர், புகழ் என்று வாழ்க்கை தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த்து.

காலப்போக்கில் எனக்கு வேலைப்பழு அதிகமானது. பொறுப்புகள் அதிகமாயின. மேலதிகாரி ஒருவருக்கான வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. எனக்கு மேலே இருந்தவர் சிக்கலான ஆசாமி. நிறுவனத்தில் எவருக்கும் அவரை பிடிக்காது.

என் தகமைக்கு மேற்பட்ட செயற்பாடுகளைச் செய்வதற்கு  என்னிடம் தகமை இல்லை எனவே நீங்கள் ஒரு மேலதிகாரியை வேலைக்கு அமர்த்துங்கள் என்று கூறி ஒன்றரைவருடங்களின் பின் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார்கள். இனிவரும் காலத்தில் எனக்கு என்ன வேலை என்பதை நான் எனது முன்னைநாள் மேலதிகாரியுடன் வாய்மூல ஒப்பந்தத்தின் ஊடாக வரையறைப்படுத்தியிருந்தேன். இதை அவர் புதியவரிடம் குறிப்பிடவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டது. நோர்வேயில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் பல நடைமுறையிலுள்ளது அவர்களுக்காக தொழிட்சங்கங்கள் எப்போதும் உதவிக்கு நிற்கும்.

எனவே, எனது சிக்கலைப் பேசித்தீர்ப்பதற்காகத் தொழிற்சங்கம், எனது புதிய பழைய மேலதிகாரிகள், என்னை முதன் முதலில் வேலைக்கு அமர்த்திய அதிகாரி என்று வட்டமேசைக்கூட்டம் ஆரம்பித்தது. ஏறத்தாழ மூன்றாவது சந்திப்பின்போது உன்னுடன் நான் ஒருவித ஒப்பந்தமும் எழுதவில்லை. நீ பொய் சொல்கிறாய், அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால் காண்பி என்றார் எனது முன்னைநாள் அதிகாரி. வாய்மூலமான ஒப்பந்தம் இருந்தது என்பதையும் மறுத்தார்.

எனது காதுகளுக்குள்ளால் புகைவந்து, மேசையில் ஒரு கையால் குத்தி, மனட்சாட்சியில்லாதவன் என்று திட்டிவிட்டு வந்து வேலையை ராஜனாமா செய்தேன். என்னை வேலைக்கமர்த்தியவர் தனியே அழைத்து வாழ்த்தி அனுப்பியபோது இனியாவது மனிதர்களை நம்பதே என்றார்.

அன்று ஆரம்பித்தது வாழ்க்கையின் இறங்குமுகம்., நான் ஒஸ்லோ-வில் (Oslo-வில்) குடிபுகுந்தேன். 18 வருட நோர்வே வாழ்வின் சேமிப்பாக ஒரு சிறு பையில் எனது பொருட்கள் கிடந்தன. 3 வருடங்கள் மன அழுத்தத்தில் தன்னந்தனியே கிடந்தேன். அதன்பின் சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

அந்நாட்களில் செய்யாத ஒரு குற்றத்திற்காகவும் அவர்களுக்கு வேண்டாத ஒருவருக்கு சார்பாக நின்றேன் என்பதாலும் அந்த நட்பு ரணகளமானது. பேச்சுவார்த்தைக்கு போனபோது தர்க்கம் அதிகரித்து சினம் தலைக்கேற என் குற்றத்திற்கான ஆதாரத்தை முன்வைய்யுங்கள் என்றுபோது ஒருவர் தாக்கினார். போலீஸ் வந்தது.

அந்த நட்புகள் அப்படியே போயின.

சில வருடங்களின் பின் மீண்டும் சிலருடன் இணைந்து இயங்கினேன். போலி கௌரவத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த கலைஞர்கள் எம்முடன் சேர்ந்தியங்கும் சகதோழர்களை அவமதித்ததை பொறுப்பாளர்கள் கண்டிக்காததையிட்டு வாக்குவாதம் எழுந்து, என் மனது தோழன் சிறுமைப்பட்டதை ஏற்கவில்லை. எனது சினம் கட்டுக்காடங்காததால் பலத்த வாய்த்தர்க்கத்துடன், முகப்புத்தக வாதப்பிரதிவாதங்களுடன் அந்தச் செயற்பாடும் முடிந்தது. எனது கையும் மோசமானது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்னுமொரு செயற்பாட்டுத் தளத்தில் இயங்கினோம். இது பலகாலம் பிரச்சனை இன்றி இயங்கியது. சாதிக்கவும் முடிந்தது. அச்செயற்பாட்டின் அவசியத்தை நோர்வே தமிழர்களுக்கிடையில் ஓரளவு புரியவைத்த மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. தற்போது உடல்நலத்தின் காரணமாகவும், வேலைப்பழுவின் காரணமாகவும் அதில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். நண்பர்கள் அதைத் தொடர்கிறார்கள். ஐந்து கண்டங்களிலும், குறிப்பாக இலங்கையிலும் இயங்குகிறது அந்நிறுவனம்.

சரிந்துகிடந்த  இன்னொரு பொதுநிறுவனத்தை உற்ற நண்பர்களுடன் இணைந்து இரவு பகலாக உழைத்து நிறுத்தியாகிவிட்டது. புதிய புதுப்பொலிவுடன் அது நிமிர்ந்து நிற்கிறது. அதன் செயற்பாடு பலதளங்களில் விரிந்து செல்கிறது. இங்கும் மனச்சாட்சிக்கு ஏற்பில்லாத தளங்களில் சினத்தின் மிகுதியால் பொருதியிருக்கிறேன் என்பதே உண்மை. இவன் கொதியன் என்பதை புரிந்த நண்பர்கள் இருப்பதால் இதுவரை பாதகமில்லை.

புதிதாய் அனைத்து வெளிநாட்டு மாணவருக்கும் மேலதிக பாட உதவி வழங்கும் ஒரு பாடசாலை ஆரம்பிப்போம் என்றார்கள் நண்பர்கள். அது இயங்கத்தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது.

அன்பான பல நண்பர்களின் உதவியினால் 2012 இல் இருந்து ஏறத்தாழ நூற்றிஎண்பதுக்கும் அதிகமான போராளிகள், அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. இதுபற்றியதொரு காணொளியே நண்பர் ஞானதாஸ் தயாரித்துத் தந்தார். 2016ம் ஆண்டு மாவீரர் தினத்தில் வெளியிட்டோம். இன்றுவரை 50.000 பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது அது.

இதுவரை காலமும் நான் சினத்தின் வசப்படாது இயங்கும்  திட்டம் இதுவொன்றுதான் என்று நினைக்கிறேன். தவிர எனது மனதுக்கு மிகவும் அமைதியையும், பெருமையையும் தரும் விடயம்.

ஏன் இவற்றை எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். காரணமிருக்கிறது. சற்றுப்பொறுங்கள்.

மேலே பிரச்சனை இன்றி இயங்கியதொரு செயற்பாட்டுத்தளம் என்று கூறியிருந்தேன் அல்லவா. அங்கு கடந்தவாரம் எனது சினத்தை அடக்கத்தெரியாத காரணத்தினால் பெரும் பூகம்பம் வெடித்தது.

110 சதவீதமும் தவறு என்னுடையதே. தவறான இடத்தில் நியாயமான ஒரு காரணத்திற்காக சினத்தின் வயப்பட்டேன். எனது தவறு என்பதில் ஐயமேயில்லை. கேள்வி கேட்ட இடம் தவறானது.

இதுவும், உதவிக்குச் சென்று உபத்திரவம் வாங்கிவந்த கதைதான். ஆனாலும் ஒன்றில் மட்டும் திமிருடனான பெருமை இருக்கிறது. எனது தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்டிருக்கிறேன். சிலர் ஏற்றுக்கொண்டார்கள். சிலர் பதிலே அனுப்பவில்லை. சில பெரியவர்கள் மன்னிப்புகேட்டிறியாதவர்கள் அல்லவா. இவர்களையும் புரிய முடிகிறது. எனது சினம் அந்தளவிற்கு அவர்களை பாதித்திருக்கிறது.

நான் முகத்துக்கு அஞ்சி அடங்கிப்போகும் மனிதனில்லை. பிடிக்காததை பிடிக்கவில்லை என்றும், உங்களில் தவறு உண்டு என்று கூறக்கூடிய நெஞ்சுரம் என்னிடம் உண்டு. ஆனால் என்ன எனது சினக்கட்டுப்பாட்டின்மையினால் எனது நியாயங்கள் அடிபட்டுப்போகின்றன. ஆனாலும் மனது நிம்மதியாகத்தான் இருக்கிறது. புரிந்தவர்கள் மட்டும் அருகிலிருந்தால் போதும்.

சில வருடங்களுக்கு முன், மட்டக்களப்பில் எனது பேராசான் ஒருவருக்காக விழா எடுத்திருந்தோம். அவர்தான் அந்த நிகழ்வின் நாயகன். அன்று மாலை நான் ஆற்றவிருக்கும் அவருக்கு உரையை வாசித்துக் காண்பித்தேன். நான் எழுதிய ஒன்று அவரையும் இன்னொருவரையும் சாடியிருந்தது பாடிசாலையின் நன்மைக்காக.

“அதனை அகற்று” என்றார். “நான் முடியாது” என்றேன். கறாரான குரலில் “அகற்று” என்றபோதும் நான் அதை அகற்றினேனில்லை.

மட்டக்களப்பின் முக்கியஸ்தர்களும், எமது பாடசாலையின் பழையமாணவர்களும் நின்றிருந்த அந்த நிகழ்வில் எனது உரை முடிந்து, உணவு உண்ணும் நேரம், என்னைத் தேடி வந்து “உனக்குத் திமிர் அதிகம்” என்றார் எனது பேராசான்.

“எனது பேராசானுக்கும் திமிர் மிக அதிகம். நானும் அதை அவரிடமே கற்றேன். மனதுக்கு நேர்மையாய், உண்மையாய் நட என்றிருக்கிறார் அவர்”  என்றேன்.

கண்களை ஊடுருவிப்பார்த்துவிட்டு நான் கூறியதை ஆமோதிப்பதுபோன்று தலையை ஆட்டியபடியே, முதுகில் தட்டிவிட்டு நகர்ந்தார்.  அதே விருந்துபசாரத்தில் எனது பால்யத்து ஆசிரியையொருவர் “பலரும் இத்தனை வருடங்களாகச் சொல்லப் பயந்ததை சொல்லியிருக்கிறாய், நீ அவரின் மாணவன் என்பதை நிரூபித்திருக்கிறாய், வாழ்த்துக்கள்” என்றார்.

நான் எங்கும் எதற்காகவும் சோரம்போவதில்லை என்பது எனக்கு முக்கியமானது. ஆனால், நான் சினத்தின் வயப்படுவதால் இழந்தவை ஏராளம், ஏராளம்.

எனக்கு, சினம் மட்டுமல்ல, எல்லையற்ற பிடிவாதமும் உண்டு. எந்தளவிற்கு விட்டுக்கொடுப்பேனோ அந்தளவிற்கு பிடிவாதமுண்டு. உடும்பும் இந்தவிடயத்தில் என்னிடம் கற்றுக்கொள்ளலாம்.

பிடிவாதம் சாதக பாதகங்களைக் கொண்டது. சினம் அப்படியானதல்ல.

2014ம் ஆண்டு ஸ்பெயின் (Spain) நாட்டில் நடைப்பயணம் சென்றிருந்தேன். அது 850 கி.மீ நீளமானது. முதல் நாள் 18, மறுநாள் 22, மறுநாள் 25 என்று நடக்கும் தூரம் அதிகரித்து என்னை நானே தினமும் வெல்லவேண்டும் என்ற போட்டி எனக்குள் உருவானது. நடைப்பயணம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களும், 68 கி.மீ மட்டுமே இருந்தன.

காலை 07.00 மணிக்கு நடக்கத்தொடங்கினேன். 10, 20, 30, 40 கி.மீ கடந்தாகிவிட்டது. இதுவரை ஆக்க்கூடியது 42 கி.மீ நடந்திருந்தேன். எனவே அதைக் கடந்துவிட வேண்டும் என்றது மனது. இரவு 09.00 மணிபோல் 50 கி.மீ கடந்திருந்தேன். நடைப்பணத்தின் முடிவுக்கு இன்னும் 18 கி.மீ இருந்தது. இரவு 11 யின் போது 52 கி.மீ கடந்திருந்தேன். கடைசி இரண்டு மணிநேரமும் இரண்டு கி.மீ மட்டுமே நடக்க முடிந்திருந்தது. ஒவ்வொரு அடியும்  கனதியாக இருந்தபோதிலும் மனது விடாதே விடாதே என்று என்னை நகர்த்திற்று. அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. உடல்முழுவதும் அட்ரினலீன் சுரந்துகொண்டிருந்த்து. என் வாழ்க்கையில் என்னை இகழ்ந்த, நகைத்த அனைவரையும் வெற்றிகொண்டதுபோன்று உணர்ந்துகொண்டிருந்தேன். என்னில் பல மடங்கு சுயநம்பிக்கை வந்திருந்தது.

அன்பான மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் என்னை மறந்து உதவும் மனமுண்டு என்னிடம்..

என்னையும், எனது சுயத்தையும் தொடர்ந்து இகழவோ, கேலிசெய்யவோ, அல்லது என்னை மனச்சாட்சியின்றி உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் மனிதர்களையோ என்னால் இலகுவில் மன்னிக்க முடிவதில்லை.

அவர்கள், “தங்கள் தவறுக்கு வருந்துகிறோம்” என்று கூறும் வரையில் நாம் எதிரிகளே என்பது எனது கருத்து. இதனால் பலருடனான பகையின் ஈரம் காய்வதே இல்லை. இந்த யுத்தக் களத்தில் யுத்தத்தின் தர்மம் மட்டுமே செல்லுபடியானது. அதாவது எதிரியை அடிபணியவைப்பது. இங்கு நான் சற்றேனும் இரக்கம் காண்பிப்பதில்லை. இந்த யுத்தக்களத்தில் நான் தாவரபட்சினி அல்ல.

ஒரு நண்பர், என்னிடம் பழிவாங்கும் தன்மையிருக்கிறது என்பார். அது உண்மையாகவும் இருக்கலாம். நான் அமைதியாக இருக்கும்போது என்னைச் சீண்டுபவர்களை, நியாமற்ற அநியாய நியாயவாதிகளை, முகமூடியுடன் தாக்குபவர்களுக்கெல்லாம் சாம பேத தண்டத்தை போன்று வேறு வைத்தியம் இல்லை. தோழமைக்கென எதையும் செய்யும் உளப்பாங்கு உண்டு. ஆனால் துரோகங்களையும், அகங்காரங்களையும், தொடர் இழிதல்களையும் பொறுக்கும் பண்பு இன்னும் உருவாகவில்லை. அது  உருவாகவும் வேண்டாம் என்றே தோன்றுகிறது.

என்னால் எனது தவறு என்பது உணரப்படும்போது ஆணவத்தைக் கடந்து யாரிடமும் மன்னிப்புக்கோர முடிகிறது. தவறை உணரும் கலை வாய்திருப்பது ஒரு பெரும் ஆறுதல்தான். ஆனாலும் எனது சினத்தினால் உடைந்த உறவுகள் ஏராளம்.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது

எனக்கு சினமடக்கும் கலை கைவரவில்லை. எனக்கு நான் உண்மையாய் இருக்கவேண்டும் என்னும் தீக்கோழி நான்.

நாலைந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோவொன்று இடிந்து விழுகிறது. இந்த அனுபவங்கள் சில விடயங்களைப் புரியவைக்கத்தொடங்கியிருக்கிறது.

01  இணைந்து தொழிற்படும் சந்தர்ப்பங்களில் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தாலே அன்றி 4இணைந்து செயற்படமுடியாது.

02  எங்கும் சில அசௌகரீயங்களை, மனட்சாட்சிக்கு விரோதமான செயல்களை அனுசரிக்கவேண்டும்.

03 பலவற்றை காணும்போது காணாததுபோலவும் கடந்துவிடவேண்டும்

04  போலிகளை அங்கிகரீக்கவும் தெரியவேண்டும்

05  முகத்துக்கு முன்னே சிரிப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் அல்லர்.

06  உயிர் நண்பரும் தனக்கு அவசியம் எனின் கட்சிதாவத் தயாராக இருப்பார்

07 மனிதர்களை நம்பாதே

08 எதையும் நேரடியாகப் பேசாதே.

09 இவர்களுடன் மல்லுக்கட்டுவது இரத்தக்கொதிப்பை அதிகமாக்கி உடல் நலத்தைக் கெடுக்கும்.

இவைகளில் எதுவுமே எனக்கு ஒவ்வாதவை.

எனவே, எங்கு நான் பிரச்சனையின்றி இயங்கியிருக்கிறேன் என்பதை அறிந்து, அப்படியான வழியில் இயங்குவதே அமைதியான மனநிலையைத் தரும்போலிக்கிறது. மரியாதை, கௌரவம், பணம், புகழ் என இழந்தவை எத்தனையோ இருப்பினும், மனதுக்கு மிக நெருங்கியதொன்று மிஞ்சியிருக்கிறதல்லவா? அது போதும்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

(Visited 110 times, 1 visits today)
 

2 thoughts on “ரௌத்திரம் பழகு-பத்தி-சஞ்சயன்”

Comments are closed.