சிவனே என்றிருக்கும் இப்ராகீம்-பத்தி-சஞ்சயன்

சஞ்சயன்எப்போதும் சிவனேயென்று தானுண்டு தன்பாடுண்டு என்று எங்கள் பாசறைக்கு முன்னால் உள்ள பாறைக் கல்லில் உட்கார்ந்திருப்பவன், இப்ராகீம்.

கட்டையான, உருண்டையான சரீரம். சில நாள் தாடி, வட்டமான சுருங்கிய முகம். ஒரு தங்கப்பல்.

புகையிலையின் காவிபடிந்த வலது ஆட்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவில் கையால் சுத்திய சிகரட்டுடன் உட்கார்ந்திருப்பான்.

அவனிடம் உள்ள முக்கிய சொத்து அவனது சிகரட் சுத்தும் சிறு இயந்திரம் மட்டும்தான். தினமும் காலையில் அன்றைய நாளுக்கான 25 சிகரட்களை அவன் சுத்தும் நேரம், அவனுக்கு தியானத்தில் இருப்பதுபோன்று மிகப்புனிதமானது. அத்தனை ஆத்மார்த்தமாக அதனை மிகவும் அனுபவித்துச் செய்வான். 

தினசரி ஐந்து தடவை தொழும், அல்லது ஒரு வாரத்திற்கு ஒருமுறையேனும் தொழும் மார்க்க பக்தி அவனிடமில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யெரூசலேம் நகரத்திலுள் அல் அக்க்ஷா மசூதிக்கு சென்று வருவான். அங்கு ஒரு முறை தொழுதால் அது 5 லட்சம் தொழுகைகளுக்குச் சமனானதாம் என்றொரு ஐதீகம் இருக்கிறது என்பான். யாரைக் கண்டாலும் வலது கையை நெஞ்சில்வைத்து, கண்கைளை மூடி, தலையை சாய்த்தெடுக்கும் பண்பாளன்.

இவனுடன் பால்யத்து பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன் மேஹெமட். சிறந்த பக்திமான். அவன் புகைப்பதேயில்லை. இவனிடத்தில் இருந்து நான் கற்றுக்கொள்ளாத கெட்டபழக்கம் இது மட்டும்தான் என்பான் மேஹெமட். இப்ராகீம் தலையை இருபுறமும் ஆட்டிப் புன்னகைப்பான்.

மேஹெமட் ஒருமுறையல்ல, இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்தானவன். இப்ராகீம் ராமனைப்போன்று ஒருத்தியுடனேயே வாழ்ந்துகொண்டிருப்பவன் மட்டுமல்ல பல ஆண்டுகளுக்கு முன் இரண்டு உயிர்களை அவளுக்குள் விதைத்த ராமனவன்.

இப்ராகீம் ஒரு நாளைக்கு குடிக்கும் 25 சிகரட்களில் 20 சிகரட்களுக்கு நெருப்புக்குச்சியை தட்டி, கையால் பொத்திப் பாதுகாத்து, சிகரட் தணலாகும்வரை பிடித்துக்கொண்டிருப்பவன் மேஹெமட். கழிப்பறையைத் தவிர்த்து மேஹெமட் இல்லாமல் இப்ராகீமால் புகைக்கமுடியாது என்பது சத்தியமான உண்மை.

அப்படி என்னதான் பேசிக்கொள்ள அவர்களுக்குள் இருக்கின்றதோ என்று நான் யோசிப்பதுண்டு. காதலர்கைளப்போன்று கடும் வெய்யில், மழை, புயற்காற்றெல்லம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. அத்தனை மோசமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்ராகீம் மனைவிக்குள் விதைத்த இரண்டு உயிர்களுக்கும் இப்போது பதின்மவயது. தொலைபேசியில் மகள் எதைக்கேட்டாலும் ஆம் என்று உருகி உருகிப் பேசுவான். மகன் பேசினால் அன்று அவர்கள் இருவருக்கும் ராகுகாலம். மனைவிபேசினால் இப்ராகீமுக்கு உச்சத்தில் அட்டமத்துச்சனி.

இவர்கள் இருவரும் ஒட்டமான் சக்கரவர்த்தியின் நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதைக்கூற மறந்துவிட்டேன். பாலஸ்தீனத்தில் வேலை செய்கிறார்கள்.

நேற்று மாலை இப்ராகீம் என்னிடம் வந்தான். அவனில் ராகி வாசனை அடித்ததால் அவன் குடித்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டேன்.

“எனது நண்பா, நான் இம்மாத இறுதியில் துருக்கிக்கு திரும்புகிறேன், இனி திரும்பி வரமுடியாது”, என்றான் காலணித்துவ மொழியில். எனக்கும் பொழுது போகவில்லையாதலால் “ஏன்” என்று கேட்டேன்.

“எல்லாம் இந்த மேஹெமட் என்னும் முட்டாளால் வந்தவினை”

“அவன்தான் உன் நண்பனாச்சே, அவன் உனக்கு தீங்கு செய்வானா?” இது நான்.

“கடந்த மாதத்து கழியாட்டவிழா நினைவிருக்கிறா உனக்கு?”

காலத்தை சற்று பின்னோக்கி அனுப்பினேன். அன்று இப்ராகீம் நண்பர்களுடன் ராகியருந்திய மயக்கத்தில் நடனமாடியது நினைவுக்கு வந்தது.

“ஆம், நீ அற்புதமாக நடனமாடினாய்”

“அந்தப்படத்தை அவன் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றிவிட்டான். எனது சீதை அதைக் கண்டுவிட்டாள்”.

“ம், அதனாலென்ன நீ ஆண்களுடன்தானே ஆடினாய்”

“அந்தப் படத்தில் மதுக்கிண்ணங்களுடன் ஒரு பெண் மங்கலாகத்தெரிகிறாள், அவள் என்னைப் பார்ப்பதுபோன்றுள்ளது”

மிகுதியை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. அன்று குடிவகைகளை இத்தாலி நாட்டு பெண்ணொருவரே பரிமாறினாள். அவளின் காதலனும் இங்குதான் இருக்கிறான்.

“மனைவி தொலைபேசியில் நான் பாலஸ்தீனத்து பெண்களுடன் குடித்து கும்மாளமிடுகிறேன். தன்னை மறந்துவிட்டேனாம். அதுதான் பாலஸ்தீனத்தில் ஒன்றரையாண்டுகளாக வேலைசெய்கிறேனாம் என்று எண்ணையில் இட்ட வடையாக இருக்கின்றாள், இனி எனக்கு இங்கு தொழில்புரிய அனுமதி தரவும் மறுத்துவிட்டாள், என்றான்.

அப்போது மேஹெமட் அங்கு வந்தான்.

துருக்கிய மொழியில் இரண்டு கதாபாத்திரங்களுடனும், ஒரு பார்வையாளுடனும் சற்றே உரத்த குரலில், ஒரு குறும்படம் ஓடி அது இறுதியில் “உன்னைப் புணர்” என்ற அழகான ஆங்கில வார்த்தையுடன் முடிவடைந்தது.

கொதித்துப்போயிருந்த இப்ராகீம், ஒரு சிகரட்ஐ எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். மேஹெமட் முகத்தை திருப்பிக்கொண்டு என்னருகில் குந்திக்கொண்டான். காலம் பேரமைதியைக் கடைப்பிடித்தது.

இப்ராகீமின் சிகரட் வாயிலேயே இருந்தது.

நான் எனது முழங்கையால் மேஹெமட்ஐ இடித்து இப்ராகீமின் சிகரட்ஐ கண்களால் காண்பித்தேன்.

அவனுக்கு தனது EGOஐ வெல்வதற்கு ஓரிரு நிமிடங்கள் பிடித்தது.

எழுந்து சென்று இப்ராகீமின் மேலாடைக்குள் இருந்த நெருப்பெட்டியை எடுத்து தட்டிப் பற்றவைத்து இப்ராகிமிடம் நீட்டினான். இப்ராகீம் உறுஞ்ச, சிகரட் தணலாகியது.

இப்ராகிமின் சினம் புகை புகையாக கலைந்துகொண்டிருந்தது.

மேஹெமட் இப்ராகீமை நோக்கி “வா ஒரு செல்பி எடுப்போம்” என்று ஒரு செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றி இப்ராகீமின் மனைவியை டாக் செய்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இதயத்துடன்கூடிய ஒரு லைக்-ஐ இப்ராகீமின் சீதை இடக்கண்டேன்.

நான் தியட்டரைவிட்டு எழுந்து நடந்தேன்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

(Visited 109 times, 1 visits today)