“என்னையே எனக்கு புரிவதுமில்லை, பிடிப்பதுமில்லை “-பத்தி-சஞ்சயன்

 

சஞ்சயன்ன் வைத்தியர் ஒரு நோர்வேஜியர். 65 வயதிருக்கலாம். இரண்டாம் முறையாக 25வயதுகள் குறைந்த ஒரு அழகியைத் திருமணம் முடித்திருக்கிறார். வைத்தியரின் மனைவி எம்மை நோக்கி நடந்து வந்தால், அல்லது எம்மை விட்டுப் பிரிந்தால் எமக்கு இருதயத்துடிப்பு எகிறுமளவிற்கு அவர் அழகானவர். இவ்வளவு அற்புதமான அழகியை கைவசப்படுத்தியவருக்கு கணிணியை  கைவசப்படுத்தத்தெரியவில்லை. அவருக்கும் கணிணிக்கும் மாதத்தில் 3 – 4 முறை பிரச்சனைகள் வரும். நான் தீர்த்து வைப்பேன்.

இங்கு தான் நான் இந்தக் கதையினுள் புகவேண்டியிருக்கிறது. எனக்கும் வைத்தியருக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டு. வைத்தியரின் கணினி சுகவீனமுற்றால் நான் பணம் வாங்காமல் அதைத்திருத்திக்கொடுப்பேன். நான் சுகயீனமுற்றால் அவர் பணம் வாங்காமல் என்னைத் திருத்திவிடுவார். எப்படியோ இதுவரை வைத்தியரின் கணினியும்  நானும் உயிர்பிழைத்திருக்கிறோம். நான் சுகயீனப்படுவதைவிடவும் டாக்டரின் கணினி சுகயீனப்படுவது அதிகம். இதனால் பாதிப்பு எனக்குத்தான். இருப்பினும் எமது ஒப்பந்தத்தில் இதுவரை மாற்றம் வரவில்லை, வராது.

நேற்று எனது டாக்டரின் கணினிக்கு மறுபடியும் நோய் கண்டதாம். நோர்வேயில் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கவேண்டும் என்றால், டாக்டர் மருந்துக்கடைக்கு கணினி மூலமாக செய்தி அனுப்புவார். அதை மருந்துக்கடை பெற்று உரியவருக்குரிய மருந்தை வழங்கும். இதனால் மருந்துகளைத் துஷ்பிரயோகம் செய்தல் குறைகிறது. யார் யார் என்ன மருந்தை இந்த நோயாளிக்கு கொடுத்திருக்கிறார்கள், எவ்வளவு மருந்தை நோயாளி பாவிக்கிறார் என்ற விடயங்கள் எல்லாம் பதிவாகிவிடுகிறது. மேற்கிரியையைச் செயற்படுத்தும் ஒரு மென்பொருள் டாக்டரின் கணினியில் இருக்கிறது. அது பழுதடைந்தது மட்டுமல்ல, இரத்தப்பரிசோதனைப் பதில்களை எடுத்துவரும் மென்பொருளும் செயலிழந்துவிட்டது உடனே வா என்று என்னை அழைத்தார் டாக்டர்.

டாக்டரும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனேயே புறப்பட்டுச்சென்று டாக்டரின் மருந்தகத்துக்கு அருகில் உள்ள நீலங்கீழ் தொடருந்து நிலையத்தில்  இறங்கி மருந்தகத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். நான் உலகத்தை நிமிர்ந்து பார்த்துபடியே நடப்பது குறைவு. நிலத்தைப் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். சிந்தனை எங்கேயோ அலைந்தது. எங்கே என்று நினைவில்லை. திடீர் என்று என் முன்னே ஒருவர் நிற்பதுபோன்ற நிழல் தெரிந்தது. விலகி நடக்க நினைத்து சற்று வலப்புறமாகவிலகி நடக்க முற்பட்டபோது அந்த மனிதரும் அந்தப்பக்கமாக நின்று வழியை மறித்தார். மறுபக்கம் விலகி நடக்க முற்பட்டபோது அங்கும் வந்து நின்றது அந்த உருவம். நிமிர்ந்து பார்த்தேன்.

ஆண். வெள்ளை இனத்தவர். நெடிந்துயர்ந்தவர், இந்நாட்டவர். வயது 40களைக் கடந்திருக்கும். அடர்த்தியான நீண்ட தலைமுடி கழுத்துமட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. மடிப்புக்களுடனான அகன்ற நெற்றி. மிகத் தீர்க்கமான நீலக் கண்கள். தாடியும் மீசையும் அவரை ஒரு துறவி போன்று காட்டின. சற்றே அழுக்கான உடை. கையிலும், முகத்திலும் அழுக்கு. களைத்துப்போயிருந்ததை முகமும், கண்களும் காட்டின.

இரண்டு கைகளையும் கூப்பிபடி ”நமஸ்தே” என்றார். இந் நாட்டு மொழியில் ”வணக்கம்” என்றேன்.  அன்பான, மனதை வசீகரிக்கும் குரல். முகத்தில் அமைதியான புன்னகை தெரியவும் என்னையறியாமல்  அவருடன் உரையாடத்தொடங்கினேன்.  மீசைக்குள்ளும் தாடிக்குள்ளும் புதைந்திருந்த வாயைத்திறந்து பேசத்தொடங்கினார்.

“நீ யேசுகிறீஸ்துவை அறிவாயா?”

இவர் கடைசியில் சமயம் பரப்பும் விடயத்திற்கு வரப்போகிறார் என்று மனது கூறியது. எனவே சுதாரித்துக்கொண்டேன்.

”ம்…. நன்கு அறிவேன். சாத்தானிடமிருந்து மனிதர்களை இரட்சிக்க வந்தவர்” என்றேன்.

”நீ கிறிஸ்தவனா”

”ஆம்” (அப்பாடா தப்பினேன் என்று நினைத்தபோது)

”எந்த திருச்சபையை சேர்ந்தவன் ” என்று மடக்கினார்.

எதைச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ”நான் தமிழன் என்றேன்”

”ஓ.. அப்படியானால நீ கத்தோலிக்கன்” என்றார்

”இல்லை. 1500ம் ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபையில் இருந்த பிரிந்த Martin Luther இன் போதனையில் வளர்ந்த மதத்தைச் சேர்ந்தவன்” என்றேன். தப்புவதற்கான பொய் சொல்வது பெரியதவறாகத் தெரியவில்லை எனக்கு. மனிதர் என்னை உண்மையிலேயே கிறிஸ்தவன் என்று நம்பிவிட்டார். தாடியை தடவிக்கொண்டார். எம்மைக் கடந்து சென்றவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி சென்றார்கள். சற்று சங்கடமாய் இருந்தது எனக்கு.

”சரி, நான் போய் வருகிறேன் என்றேன்.”

நான் விரும்பினாலும் அவர் என்னை விடுவதற்கு விரும்பவில்லை.

”நான் இவ்விடத்தில் இருந்தபடியே யேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்”

”மிக நல்ல காரியம், புண்ணியம் செய்கிறீர்கள்” என்று புகழ்ந்தேன்.

”நீயும் கிறிஸ்தவன். நானும் கிறிஸ்தவன்.”

”ஆம்..”

”யேசுவை உலகறியச் செய்யும் இந்த கிறிஸ்தவனுக்கு 100 குறோணர்கள் தருவாயா”என்று கேட்டபடியே கையை நீட்டினார்.

அடப்பாவி ….  கிறிஸ்தவன் என்றால் தப்பலாம் என்று நினைத்தேனே… இப்படிச் சிக்கவைத்துவிட்டானே என்று நினைத்தபடியே  ”இல்லை என்னிடம் பணம் இல்லை”

“கீறிஸ்தவமதம் பொய் சொல்வதை அனுபதிப்பதில்லை.”

நான் எதுவும் பேசவில்லை..

”உன்னைப்போல் மற்றையவர்களையும் நினை என்ற கிறிஸ்துவின் வசனத்தை மறக்காதே, காலையில் இருந்து நான் தேனீரும் குடிக்கவில்லை” என்றார்.

” இல்லை, என்னிடம் பணம் இல்லை.”

“50 குறோணர்கள்…”

“இல்லை”

“20 குறோணர்கள்”

“இல்லை”

“யேசு கிறிஸ்து கஞ்சர்களை இரட்சிப்பதில்லை” என்றார்.

“அந்தக் கணக்கை நான் அவருடன் தீர்த்துக்கொள்கிறேன்” என்றுவிட்டு கடந்துசென்றேன். டாக்டரின் மருந்தகத்துக்கு 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். டாக்டர் வாசலில் நின்று வரவேற்றார். அவரின் பின்னால் அவரது புதிய மனைவி. மருந்தகத்துக்குள் புகுந்து வேலையை ஆரம்பித்தேன். டாக்டர் இணையத்திற்கான இணைப்பை ஏனோ பிடுங்கிவிட்டிருந்தார். அதனை இணைத்தேன். டாக்டரின் கணினி சுகமாகியது.

டாக்டர் சிரித்தார். அவரின் இளம் மனைவியும் சிரித்தார். நான் பூரித்தேன்.  மீண்டும் நிலங்கீழ்த்தொடருந்து நிலையத்திற்கு வந்தபோது அந்த மனிதர் இன்னொருவரை மறித்துவைத்து பிரசங்கித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். நான் தொடருந்துக்காக நின்றிருந்தவேளையில் அவர் ஆகக் குறைந்தது 4 மனிதர்களையாவது மறித்து ’ நான் யேசுவைப்பற்றி எடுத்துக்கூறுபவன். 100 குறோணர்கள் தாருங்கள்’ என்றிருப்பார்.

யேசுவின் பெறுமதி ஒரு குறோணரும் தேறவில்லை என்பதை பரலோகத்தில் உள்ள பரமபிதா  அவதானித்திருப்பார்.  நான் எனக்கான தொடருந்தில் அமர்ந்திருந்தேன். தொடருந்த அந்த மனிதரைக் கடந்தபோது அவர் என்னை திரும்பிப்பார்த்தார். அல்லது நான் அப்படி நினைத்தேன். அந்த மனிதரின் குரலில் பொய்யை நான் உணரவில்லை என்றே தோன்றிற்று. அவரது முகமும், அந்த முகத்தில் இருந்த உண்மைத்தன்மையும், வசீரமும், ’காலையில் இருந்து தேனீரும் குடிக்கவில்லை’ என்ற அவரது வசனமும் என்னைப் பிசைந்துகொண்டிருக்க, ’அவருக்கு உதவியிருக்கலாம். குறைந்தது தேனீராவது வாங்கிக்கொடுத்திருக்கலாம்’ என்றது மனது.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று தடவை டாக்டரின் கணினித் தேவைகளை நிவர்த்திசெய்திருந்தேன். மொத்தமாக 10 மணிநேரமாவது செலவிட்டிருப்பேன். இதனாலோ என்னவோ டாக்டர் கட்டாயப்படுத்தி என் சட்டைப்பையினுள் பணத்தைத் திணித்துவிட்டார். டாக்டர் தந்த தொகை அந்த மனிதர் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமானது. அதில் ஒருபகுதியையாவது நான் அந்த மனிதனுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவேண்டும் என்று தோன்றவில்லை.  ஏறத்தாள 36 மணித்தியாலங்கள் கடந்தபின்பும் ”காலையில் இருந்து தேனீரும் குடிக்கவில்லை” என்ற அவரது குரல் என் சமநிலையை குழப்பியபடியே இருக்கின்றது. சில நேரங்களில் என்னையே எனக்கு புரிவதுமில்லை, பிடிப்பதுமில்லை. இந்தப் பொழுது அப்படியானது.

சஞ்சயன் -நோர்வே

சஞ்சயன்

(Visited 74 times, 1 visits today)
 

One thought on ““என்னையே எனக்கு புரிவதுமில்லை, பிடிப்பதுமில்லை “-பத்தி-சஞ்சயன்”

Comments are closed.