அப்பாவின் விளையாட்டுகள்-பத்தி-சஞ்சயன்

அப்பாவுக்கும் எனக்கும் இடையே அதிகம் நல்ல நினைவுகள் இல்லை. நாம் கல்லும் நாயும் போன்றவர்கள். அவரை முகம்கொடுத்து சந்திக்க நான் விரும்புவதில்லை. அவர் போலீஸ்காரர். அவர் கண்ணுக்கு நான் கள்வனாகத்தான் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் சாதாரண கள்வனாக அல்ல. ஷோலே படத்தில் வரும் கப்பர் சிங் போன்ற கொடியவனாக அல்லது இரண்டு உள்ளங்கைகளையும் தேத்தபடி கண்ணை பெரிதாக விளித்து எம்ஜிஆரை விரட்டும் நம்பியார் போன்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அவர் எப்போது பார்த்தாலும் ஒரு சந்தேகமான பார்வையுடன்தான் அணுகுவார். அவருக்கு எப்போதும் என்னைவிட, அவரது இளைய புத்திரன் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. காரணம், அவன், அவர் சொல்லும் அனைத்துத் தேவாரங்களையும், கந்தசஷ்டிகவசம், கந்தபுராணம் இன்ன பல வேறு இறை துதிப்பாடல்கள்களையும் இனிப்பை விழுங்குவதுபோல் இலகுவாக மண்டைக்குள் பதிய வைத்துக் கொண்டிருந்தான். அவர் கேட்ட மாத்திரத்தில் திருஞானசம்பந்தர் நேரில் வந்தது போல் பாடிக் காண்பிப்பான். “பார்………… இவனைப் பார்த்தாவது உருப்படப்பார்” என்பார். தேவாரம் பாடமாக்கினால் உருப்படலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. நான் எப்படி முயன்றாலும் அது இரண்டு வரிகளை தாண்டுவதே பெரிய விடயமாக இருந்ததால், அம்மாவும் காலையில் முட்டைக்கொப்பி தந்து, ‘எழும்பியிருந்து பாடமாக்கு’ என்று சொல்லியும் கந்தசஷ்டிகவசம் என்னிடம் வரவேயில்லை.

ஒரு நாள், தூரத்தே திருவாளர் செல்வமாணிக்கம் வந்து கொண்டிருந்தார். எனது பெயர் சஞ்சயன் செல்வமாணிக்கம் என்றறிக.

வாயிலே சிகரெட். கண்களில் கனவு. வசந்தமாளிகை சிவாஜியின் நடை.

எனது அப்பாவிற்கு சுருட்டுப் புகைக்கும் பழக்கம் இருந்தது. அதிலும் அவருக்குக் கட்டாயமாக ‘சுந்தரலிங்கம் சுருட்டு’தான் தேவை. மற்றவை எல்லாம் சுருட்டுக்களே அல்ல, அவருக்கு. காலையில் சுந்தரலிங்கம் சுருட்டு இல்லையென்றால் மனிதரால் குந்த முடியாது. இதற்காகவே இரவுச் சுருட்டின் ஒரு பகுதியை மறுநாள் காலையின் தேவைக்காக சேமித்து வைக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. அவரிடம் இருந்த ஒரே ஒரு சேமிப்புப் பழக்கம் அது மட்டும்தான்.

மனிதரின் வாயில் சிகரெட் உட்காருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு. அப்பர் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரின் அந்த மகிழ்ச்சிக்குத் தென்னை மரம்தான் காரணம் என்பதையும் நானறிவேன்.

ஆம்………….., அவர் தென்னம் சாராயத்தின் பெரும் விசுவாசி. தேசிய பானம் அல்லவா?
அன்றும் அப்படித்தான். சிங்கத்தின் வாயில் ஒரு வெள்ளை நிற, நீளமான, மெல்லிய பிரிஸ்டல் சிகரெட் குடியிருந்தது. எனக்கு சகலமும் புரிந்துவிட்டது. அவரை, அவரது நடையுடைப் பாவனைகளை முழுவதுமாக புரியும் வயது இல்லையென்றாலும் நான் பிஞ்சில் பழுத்திருந்தேன்.

இக்காலத்து இளையோருக்கு Nike, Adidas, Google, iPhone ஆகியன பிரான்டட் பொருட்களாக இருப்பதுபோன்று அப்பருக்கு கனகலிங்கம் சுருட்டு, பிஸ்டல் சிகரெட், இலங்கை மதுபான கூட்டுத்தாபனத்தின் தென்னஞ் சாராயம் இவைதான் அவருடைய பிரான்ட்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதுபோல மனிதர் இதை விட்டு வேறு எதையும் தொட மாட்டார்.

ஒரு முறை, நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலங்களில் (1977) இனக்கலவரம் வெடித்தது. இலங்கையில் சுருட்டு என்றால் அது வடக்கில் உள்ள கிராமங்களான யாழ்ப்பாணப்பகுதியில் இருந்துதான் வரவேண்டும். பிபிலை சிங்கள ஊர். எனவே அங்கிருந்த தமிழ்க் கடைகளுக்கு வடதிசைக் கிராமங்களிலிருந்து கனகலிங்கம் சுருட்டு வரவில்லை. அதுவும் மாதக்கணக்காக வரவில்லை. ஆனால் அப்பர் மட்டும் தினமும் எதுவித பிரச்சனையுமின்றி குந்திக்கொண்டிருந்தார்.

அப்பாவிற்கு சித்தாண்டியில் ஒரு நண்பர் இருந்தார். அவரை நாங்கள் ‘சித்தாண்டி அப்பு’ என்று அழைத்தோம். அது காரண இடுகுறிப்பெயர். அவரும் எனது அப்பாவை போன்றதொரு மிகக்கொடூரமான முருக பக்தன். சித்தாண்டி மனிதன் என்றால் கேட்கவும் வேண்டுமா. அவருக்கும் சுருட்டு வேண்டும். அதிலும் காலையில் மிகமிக அவசியமாக வேண்டும்.

இனக்கலவரம் நடந்து முடிந்தபின் மட்டக்களப்புக்கும் வட திசையிலிருந்து சுருட்டு சப்ளை நடைபெறவில்லை. சித்தாண்டியில் இருந்த சித்தாண்டி அப்புவிற்கு, இனக்கலவரத்தில் தனது சகபாடிக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அவர் மனம் சஞ்சலம் கொண்டது. மனிதர் கட்டிய வேட்டியுடன், சால்வையைப் போர்த்தியபடி, சித்தாண்டியில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் பேருந்தில் ஏறினார். செங்கலடிச்சந்திக்கு வந்து இறங்கி, ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே மட்டக்களப்பில் இருந்து பதுளைக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சங்கத்தின் பேருந்தில் ஏறி சாரளத்தின் அருகே உட்கார்ந்துகொண்டார். அப்போதுதான் குதப்பிய வெற்றிலையை துப்பமுடியும். புல்லுமலை, மகா ஓயா, பதியதலாவை ஆகிய ஊர்களைக் நான்கு மணி நேரம் பயணித்துக் கடந்து, நாலைந்து மனிதர்களாலும் கட்டிப்பிடிக்க முடியாத பெரிய வாகை மரங்கள் நிறைந்திருந்த பிபிலை வைத்தியசாலை வளாகத்திற்கு வந்தார். அங்கு அவர் வந்தபோது அவரின் நண்பர் சுருட்டுப் பிடித்தபடி உயிருடன்தான் இருந்தார்.

“ஊரில் ஒரு இடமும் சுருட்டு இல்லை. இப்ப பீடி தான் குடிக்கிறன்” என்றார் சித்தாண்டி அப்பு. தனது நண்பரான எனது அப்பாவிடம். தோழனின் துயர்நீக்குபனே தோழன் அல்லவா.

“போடியார்……. (அப்பா அவரை இப்படித்தான் அழைப்பார்) இதெல்லாம் சின்னப் பிரச்சனை.”

“தேத்தண்ணி குடியுங்கள், வெளியில் சென்று வருகிறேன்” என்றுவிட்டு 1962-ல் பொன்னையாவிடமிருந்து 200 ரூபாய்க்கு வாங்கிய சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதித்தார். 100 கிலோவினை தங்குவதற்கு அது சற்றுச் சிரமப்பட்டது. (பிற்காலத்தில் அந்தப் பொன்னையாவின் அழகிய பேத்தியால் நான் பைத்தியமாக அலைந்தது தனிக்கதை)

வைத்தியசாலை வளாகத்துக்குள் இருந்த எங்களது வீட்டிலிருந்து நேரே சென்று, வலது பக்கம் திரும்பி, பதுளைவீதியில் ஏறி, பழைய பிபிலை பேருந்து நிலையத்தைக் கடந்து, ரெஸ்ட் ஹவுசுக்கு எதிரே இருந்த ஒரு தமிழரின் கடையின் முன்னாலிருந்த மரத்தடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடைக்குள் சென்று ஏதோ பேசினார்.

உள்ளூர் போலீஸ்காரருக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அதுவும் சிஙகள ஊரில் தமிழ் போலீசுக்கு. அதைவிட எனது அப்பாவுக்கு. உள்ளேயிருந்து சாமான் வந்தது. மணந்துபார்த்து தலையாட்டினார். பழைய பத்திரிகை ஒன்றால் அதைச் சுற்றியெடுத்து, மெல்லிய சணற்கயிறால் அதனைக் கட்டி, பல்லால் கடித்து, அறுத்து எனது அப்பாவின் கையில் கொடுத்தார் மூனா. போலீஸ்காரர்கள் யாரேனும் காசு கொடுப்பார்களா என்ன?

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். என்னிடம் ஒரு ‘சைக்கிள் டயர்’ வாகனம் இருந்தது. அதை இயக்க ஒரு சிறுதடி போதும். அப்பர் வீட்டிலிருந்து புறப்பட்டதும் நானும் எனது வாகனத்தில் ஏறி அவரை பின்தொடர்ந்ததால் கண்ட காட்சிதான் அது.

அப்பர் வீட்டுக்கு வந்தார்…, தனது நண்பரான போடியாரிடம் அந்தச் சுருட்டுக்கட்டை கொடுத்தார். சித்தாண்டி அப்பு தன்முன்னே அந்த சித்தாண்டி முருகனே வந்ததுபோல் உணர்ந்திருக்க வேண்டும் . கையில் கிடைத்த அந்த பொதியை, சீவனை இழந்துவிட்டு சீவனைப் மீளப்பெற்றவர்போன்று நீண்டதொரு மூச்சினை உள்ளே இழுத்து சுருட்டின் வாசனையை நுரையீரலுக்குள் சேமித்துக் கொண்டார். சித்தாண்டி அப்புவின் கண்களில் கண்ணீர் வராததுதான் குறை. அப்பாவைப் பார்த்த அவரது கண்களில் பெரும் பக்தி தெரிந்தது. அப்பரின் கண்களில் “பார்த்தீர்களா எனது செல்வாக்கை” என்ற தொனியிருந்தது.
மேலே சொன்னது ஒரு கிளைக்கதை.

000000000000000000000

எனது அப்பா தூரத்தே வாயில் சிகரெட்டுடன் வருவதைக் கண்டேன் என்று சொன்னேன் அல்லவா. அவர் இப்போது ஏறத்தாள வீட்டருகே வந்துவிட்டார். இனியும் அங்கிருந்தால் எனக்கு சேதம் ஏற்படும் என்பதை அறிந்ததால் மெதுவாகப் பின்பக்கமாக எனது வாகனத்தில் புறப்பட்டேன்.

சற்று ஊர்சுற்றிவிட்டு வீடு வந்த பொழுது ஒரு நாளும் காணாத ஒரு காட்சி காணக்கிடைத்தது. வீட்டிற்கு வெளியே, ஓர்க்கிட் பூக்கள் ஒட்டுண்ணிகளாக வளர்ந்திருந்த, நெடுந்துயர்ந்த வாகை மரத்திற்கு கீழே, செல்லையாவின் மகனான எனது அப்பா, சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு தனது இளைய புத்திரனோடு காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தார். அம்மா இந்தக் திருக்கூத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்தார். தனது மன்னவனிக் நிலை அவருக்கு புரிந்திருந்திருக்கவேண்டும்.

தென்னஞ் சாராயம் அப்பாவோடு விளையாடிக்கொண்டிருந்தது. தம்பிக்கு விளையாட்டின் ருசியில் அப்பா ஏன் காற்றிலாடும் கமுகுபோல ஆடுகிறார் என்பது புரியவில்லை. எனக்கும் கால்பந்து விளையாட ஆசை வந்தது. எனது வாகனத்தை வாகை மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு நானும் விளையாட்டில் இணைந்து கொண்டேன். தம்பி கீப்பர். நான் ஒரு அணி. செல்லையா பெற்ற மகன் இன்னொரு அணி.
இரண்டு முறை காற்றில் ஆடிக்கொண்டிருந்த செல்லையாவின் புத்திரனை வெட்டி இரண்டு கோல் அடித்து விட்டேன். அம்மா கைதட்டி ஆரவாரித்தார். மனிதருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்துத் தோற்றார். என்னை “கீப்பருக்கு போ” என்றார்.

இப்போது, செல்லையாவின் இளையபேரன் ஒரு அணி. மகன் இன்னொரு அணி. நான் கீப்பர். ஒருவாறு தம்பியை வெட்டி என்னை நோக்கி பந்துடன் வந்துகொண்டிருந்தர், அப்பா என்னையும் வெட்டி கோல் அடிப்பது என்று நினைத்து, என்னை ஏமாற்றுவதற்காக ஒருபுறம் ஆடினார். நல்ல காலம் எனக்கு தென்னஞ் சாராயம் உதவி செய்தது.

என்னை வெட்டுவதாக நினைத்து ஆடியவர் சமநிலை இழந்து ஒருபக்கமாக விழ நான் பாய்ந்து பந்தைப் பிடித்துக்கொண்டேன். 5 அடி 9 அங்குல 100 கிலோ பிரகிருதி தடுமாறி விழுந்து உருண்டது. என்றுமில்லாதவாறு என்னைப் பார்த்து அசட்டுச்சிரிப்புடன் உட்கார்ந்துகொண்டார். நான் சேதாரத்திற்குப் பயந்து சிரிக்கவில்லை.
தூரத்தே நின்றபடி இந்தக் கூத்தை அவதானித்துக் கொண்டிருந்த அம்மாவுக்கு தனது மகன் மீது பெருமை வந்திருந்தாலும் தனது மணாளன் விழுந்துவிட்டது அவரைக் கவலை கொள்ளத்தான் செய்தது.

“அப்பா கவனம்……..” என்று இரண்டு சொற்களை காற்றிலனுப்பினார். “பேபி………. டோன்ட் வொர்ரி” என்றவகையில் கையைக் காட்டியபின் மீண்டும் விளையாடத்தொடங்கினார். அன்று அவரால் என்னை வெல்ல முடியவில்லை. நாம் ஆடிய முதலும் கடைசியுமன காற்பந்தாட்டம் அதுதான்.

பின்பு, உனக்கு கீப்பராக வருவதற்கு உரிய பண்புகள் இருக்கின்றன என்றபடியே அன்று மாலை சூரியன் உறங்கப் போகும் வரையில் எனக்கு கீப்பருக்கு உரிய பயிற்சி தந்து கொண்டிருந்தார். ஓரிருமுறை அவர் விழுந்தபோது அவர் கட்டியிருந்த நீலநிற சுருக்கிட்டு கட்டும் பெண்டர் தெரிந்தது. அப்போதும் நான் பெரும்பாடுபட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

“சரி, குளித்து விட்டு பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை பாடமாக்கு” என்றபின் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதித்தார். அது நேர்கோட்டில் செல்லாமல் வளைந்துவளைந்து அவரை பிபிலையில் உள்ள மஹியங்கனை சந்திக்கு முன்னால் இருந்த ரெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்துப் போனது.

சஞ்சயன்- நோர்வே

(Visited 198 times, 1 visits today)