வாங்கோவன் பறைவம்-சுள்ளித் தடியன்-பாகம் 11-பத்தி-உழவாரப்பொன்னையர்

பக்கத்து வீட்டு செல்லையா வாத்தீன்ரை பெடி, போனதும் தான் போனான் வெளிநாட்டுக்கு. சும்மா அந்த மாதிரிக் கிடக்குது வீடு கண்டியளோ! எண்பத்தெட்டிலை மீசையும் முளைக்காமல் போன ஒரு சுள்ளித்தடியன். செல்லையற்றை வளவுக்குள்ளை ஒரு குசினியும்,ஒரு அறையோடும் கிடந்த கிடுகு வேலி வீடு, பாத்துக் கொண்டிருக்க, அவன் போன பத்து வருசத்திலை தான் இப்பிடி எழும்பி நிக்குது. பெடியன் போனதும் போனது தான். அள்ளியள்ளி இறைச்சுக் கொட்டி, இப்ப இரண்டு மாடி வீடு, சுத்து மதில், ரைல்ஸ் பதிச்ச கிணத்தடி, பூக்கண்டுத் தோட்டம். வெளிநாடென்ன வெளிநாடு. சும்மா சிங்கப்பூர் மாதிரியெல்லே கிடக்குது வீடு. இனி, செல்லையர் பெண்டிலின்ரை உடுப்பென்ன? நடப்பென்ன? ஒண்டுக்கு ரெண்டு அல்சேசன் குட்டியள். லவ் பேட்ஸ் குருவியள், ஆறடியிலை பெரிய மீன்தொட்டி. பாக்க ஆருக்குத் தான் ஆசை வராது.

நாங்களும் இருக்கிறமே! ஒண்டுக்கு நாலையும் அனுப்பிப் போட்டு தனியக் குந்திக் கொண்டிருக்கிறம். எண்டாலும், இப்பிடிச் செழிப்பாயில்லை எங்கடை வீடு. அண்டைக்கு எப்பிடியிருந்துதோ, அப்பிடியே தான் கிடக்கு. அதே குசினி, அதே ஒட்டறை, அதே கறையான் புத்து, அதே பாசிக் கிணத்தடி. ம்…..பிள்ளையள் காசனுப்பேல்லை எண்டில்லை. அனுப்புதுகள் தான். ஆனா, செல்லையற்றை பொடி அனுப்பிற அளவுக்கு, அனுப்பினது கிடையாது. ஏதோ மாசம் மாசம், மாறி மாறிச் செலவுக்கு அனுப்பீனம். கஸ்ரப்பட்டதுகளுக்கு குடுங்கோ எண்டு கொஞ்சம் கொஞ்சம் அனுப்பீனம். இனி, எங்கடையளக்கு இப்பிடி வீடுகளைப் பெருப்பிச்சுக் கட்டோணுமெண்டு ஆசையளுமில்லை. இருக்க ஆக்களில்லாமல் ஆருக்குத் தான் கட்டிக் கட்டி விடுறது பாருங்கோ.

இனி, நம்மடையள் கதைக்கிறதைப் பாத்தாப் பரிதாபமாயெல்லே கிடக்கு. புருசன் போக, மனிசி வருகுது. மனிசி வர புருசன் போகுதெண்டு, ஓடியோடிக் கஸ்ரப்பட்டு உழைக்குதுகள். அப்பிடி உழைச்சும், மாதம் மாதம் பில்லுகள் கட்டக், கையும் கணக்கும் சரி தானப்பா எண்டு அன்னம் பாடுதுகள் வேறை. இஞ்சத்தை வாழ்க்கை இப்பிடித் தானப்பா. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டியும், வீட்டு பில்லுகள் குவிஞ்சிடும் எண்டிறாள் பெடிச்சி. செல்லையரைக் கேட்டால், ”தன்ரை பெடியன் காட் வேர்க் பண்ணிறான். ஆள் வலு உழைப்பாளி” எண்டு பெருமையாச் சொல்லிறார். அப்ப என்ரையள் என்ன சோம்பேறியளே! எனக்கு சுர்ரெண்டு கோபம் பத்துது. நேற்றுத் தான் என்ரை கடைசிப் பொடிச்சியின்ரை மருமோன்காரர் சொன்னார். அது வேறை ”காட்” வேக்காம். அப்பிடியெண்டாத் தான் இப்பிடி அள்ளியள்ளி அனுப்பேலுமாம்.

”கள்ள மட்டை அடிக்கிறதாம். ஆட்டையைப் போடிறதாம். ”பாங்குறொப்பிசி” அடிக்கிறதாம். ” இயக்கக் காசாம்” எண்டு கனக்கப் புதுசு புதுசா சொன்னார். எனக்கு ஒரு கோதாரியும் பெரிசா விளங்கேல்லை. ஆனா, என்னவோ சுத்துமாத்து விளையாட்டெண்டு விளங்கிச்சுது. கடவுளே! உப்பிடி உழைச்சு அனுப்பி, என்னத்துக்கெண்டு கேக்கிறன்? நல்ல பிள்ளையளா இருந்தாக் காணும். அது தானே முக்கியம் பாருங்கோ. இஞ்சையென்ன, இவையளை வெளிநாட்டுக்கு அனுப்ப முதல், நாங்களென்ன பஞ்சத்திலையே செத்தனாங்கள்? அனுப்பனுப்பெண்டு நாங்க கேக்கிறதுமில்லை. ஒரு நாள் குறை சொன்னதுமில்லை. ஏதோ இருக்கு மட்டும் நிம்மதியா இருந்து, பிள்ளையளாலை, நல்ல பெயர் கிடைச்சு, நிம்மதியா வாழ்ந்தாக் காணும்.

அட கறுமமே! உப்பிடித் தட்டிச் சுத்தின பணங்கள்ளை, இஞ்சத்தைக் கோயில், கோபுரங்களை எழுப்பினால், நமக்கு இன்னுமின்னுமெல்லோ பாவங்கள் சேரும். சமூகசேவை எண்டிறது, தங்கடை தங்கடை உழைப்பிலை, வியர்வையிலை அடுத்தவைக்கு குடுக்கிறதா இருக்கோணும். இல்லையோ? ஓமோ? இப்பிடி, வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடிச்சு என்ன பலனெண்டு கேக்கிறன் கண்டியளோ? இந்த லட்சணத்திலை தான், உந்த வெளிநாட்டுக் காசுகள் இஞ்சனை சோக்காட்டுது போலை கிடக்கு. சீ….எல்லாரையும் அப்பிடிச் சொல்லேலாது தான். எண்டாலும், எங்கையும் அளவுக்கு மிஞ்சி ”தாம் தோம்” எண்டு செலவளிக்கினம் எண்டால், இதுகள் எப்பிடி வந்திருக்குமெண்டு கொஞ்சம் யோசிக்கத் தான் வேணும்.

இனிப் பாருங்கோ, அஞ்சைக் குடுத்திட்டு அம்பதெண்டு எழுதி வாங்கி அரசாங்கத்துக்கு கணக்கு காட்டிறதுக்கும், கறுப்பை வெள்ளையாக்கிறதுக்கும், இன்னும் கன கன கள்ள விளையாட்டுக் காட்டிறதுக்கும் உந்த “சமூக சேவைகள்” நல்ல வசதியான இடம் பாருங்கோ. இதுகள் தெரியாமல் தான், இந்தப் புரவலர்மாருக்கு, மேடை மேடையாப் பொன்னாடையள் போக்குதுகள் அப்பாவிச் சனங்கள். ”கொண்டால்ப் பாவம் திண்டால்ப் போச்சு” எண்டு கண்ணதாசன் பாடின மாதிரி, கொஞ்சப் பேர், கொள்ளையடிக்கிறதிலை ஒரு பங்கை. உண்டியலுக்குள்ளை போட்டு கணக்குத் தீர்த்துக் கொள்ளிறதும் நடக்குதாம். ம்…..உப்பிடி எத்தினை திருவிளையாடலுகள் உலகம் முழுக்க நடக்குது. என்ன இருந்தாலும், இண்டைக்கு இப்பிடிப் பட்டவங்கள் தானே எங்கும் நல்லாயிருக்கிறாங்கள் எண்டு மனிசி சொல்லுது. அதுவும் உண்மையாத் தான் கிடக்கு.

உழவாரப் பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 89 times, 1 visits today)