வாங்கோவன் பறைவம்-மஞ்சள் பணியாரம்-பாகம் 12-பத்தி-உழவாரப்பொன்னையர்

மஞ்சளுக்கு வந்த மவுசைப் பாத்தியளே! பருப்புக்கும், பால்கறிக்கும், அப்பப்ப எப்பன் சொட்டுச் சொட்டுப் போடிற மஞ்சளை, இப்ப எங்கடை சனங்கள் கொட்டியெல்லே குளிக்குதுகள். குமர்ப் பிள்ளையளின்ரை அந்த நாளையான் “ வெயார் அன்ட் லவுலி ” அது தானே. இல்லையோ?

இந்தக் கோதாரி விழுந்த கொரோணாவாலை, எல்லாத்துக்கையும் மஞ்சளைக் கொட்டிக் கொட்டித் தின்னெண்டா, மனிசருக்கு மஞ்சள் காமாலையே வந்திடும் மாதிரியெல்லே கிடக்கு. பத்தாக்குறைக்கு மஞ்சள் தண்ணியைக் குடி, மஞ்சள் தண்ணியைத் தெளி, மஞ்சளை தொண்டையிலை பூசு, மஞ்சள் சோறு, மஞ்சள் சொதி, மஞ்சள் வறை எண்டு, எங்கும் மஞ்சள் மயமாக் கிடக்கு. இன்னும் மஞ்சள் பணியாரம் தான் குறை. அதுவும் கெதியிலை சுடச்சுட வரும் போலை கிடக்கு.

உள்ளி ரசம், மிளகு ரசம், வேப்பிலைப் புகை, கொத்தமல்லித் தண்ணீ, சுடுதண்ணிக் குடியல், உப்புத் தண்ணிக் கொப்பளிப்பு, வேப்பக் கசாயம், குடிநீர் எண்டு ஊரிப்பட்ட விசயங்கள் உருவாடிற காலம் இது. இதெல்லாம், அந்த நாளையிலை அப்பப்ப மறக்காமல் செய்த விசயங்கள் தான். இப்ப, காலம் எல்லாத்தையும் திரும்பச் செய்ய விட்டிருக்கு. நான் பறையிறதிலை ஏதும் பிழையோ? கடவுளே! உந்தக் கோதாரி விழுந்த வியாதியாலை, ஒண்டு ரெண்டே போகுது. ஒவ்வொரு நாளும் கொத்துக் கொத்தாயெல்லே போய்க் கொண்டிருக்குதுகள். ஒரு நாடும் தப்பின மாதிரித் தெரியேல்லை. ம்…..

நெடுகலும், வீட்டுக்குள்ளை குந்திக் கொண்டிருந்து முகட்டைப் பாத்துக் கொண்டிருந்து என்ன செய்யிறது? மனிசருக்கு விசரெல்லே வந்திடும் போலை கிடக்கு. இனி, எதையும் ஆற அமரப் படிப்பமெண்டாலும் மனம் சரிப்பட்டு வருகுதில்லை. தின்னிறதும், படுக்கிறதுமெண்டா என்னத்துக்காகுமெண்டு கேக்கிறன் இந்த உடம்புகள்? இனி வீடு வாசல்லை, நண்டுகளை வைச்சு மேய்க்கிறதெண்டா சும்மாவே? கொரோணா முடியிறதுக்கிடையிலை, சோபா செற்றியளுக்கு ஒரு முடிவு காலம் வந்திடும் போலை. அந்த நாளையிலை, எங்கடை பெடி,பெட்டையளுக்கு இடம் பெயர்ந்து, பள்ளிக் கூடங்களுக்கும் இல்லாமல் இருக்கேக்கை, இருந்த புளுகம் மாதிரி இப்பத்தையானுகள் புளுகத்திலை திரியுதுகள். அதுகளுக்கென்ன விளங்கும்?

இனி வீடு வாசல்லை நிண்டால், ஆடு, மாடு குழை அரைச்ச மாதிரி எந்த நேரமும் வாயாட்டிக் கொண்டிருக்கோணும். சாமான், சக்கட்டுக்கு தட்டுப்பாடு வந்தாலும் எண்டு, வாங்கி வைக்க, இதுகள் ரெண்டு கிழமையிலை எல்லாத்தையும் காலி பண்ணிப் போடுங்கள் போலை கிடக்கெண்டு தாய்-தேப்பன் புலம்புதுகள். அதுகளுக்கும் பொழுது போகோணுமே! நல்ல காலத்துக்கு, உந்த இன்ரனெற், ரீவியள் வேலை செய்யுது. அதுகளும் நிண்டா, என்ன செய்வினமெண்டு தெரியேல்லை. கொக்கான்,தாயம், கிளித்தட்டு, கெந்திப்பிடி, சிரட்டைப் பந்து எண்டு இப்பத்தையானுகளுக்கு ஒண்டும் தெரியாது. அடிச்சான் பிறைஸ், டக்கு டிக்கு டொஸ்…கள்ளன் பொலீஸ், ஏ..ஈ…ஐ..ஓ…யூ ஆ…எத்தினையளை எங்கடை பிள்ளையள் விளையாடினதுகள். ஆருக்குத் தெரியும்? பழைய குருடி கதவைத் திறவடி எண்டு, எல்லாம் விளையாட வேண்டி வந்தாலும் வரலாம்.

உந்த ரீவி சீரியலுகள் நிண்டா, பொந்துக்கை இருந்து முயல் வந்த மாதிரி, நம்மடை பெண்டு, பெடிச்சியள் வெளியிலை வரத்தானே வேணும். ஆம்பிளையளும் ஆளாளுக்கு, போணை நோண்டிக் கொண்டு இருக்கினம் இப்ப. என்ன நடக்கப் போகுதெண்டு விளங்கேல்லை. ஏதோ, ஒரு முடிவு வரத்தானே வேணும். நாறல் மீனைப் பூனை பாத்த மாதரிச் சனங்கள் மாறி மாறி முழுசிக் கொண்டு திரியுது. ஒரு மனிசர் ஒழுங்காச் செருமக் கூட முடியேல்லை. இனி, எனக்குத் தும்மல் வந்தா, மூண்டு வீடு கேக்கிற மாதிரித் தான் தும்மிப் பழக்கம் வேறை. அந்தப் பயத்திலையே, அடைக் கோழி பெட்டிக்கை கிடந்த மாதிரி, வீட்டுக்குள்ளையே கிடக்கிறன்.

எல்லாரும் சுகமா இருக்கிறியள் தானே! கவனமா இருங்கோ! சும்மா பம்பலுகளை விட்டிட்டு, அவதானம். நாங்க அந்த நாளையிலை, அங்கை எத்தினை சண்டையைக் கண்டம், இரத்தத்ததைக் கண்டம் எண்டு, பெரிய மாயாவி மாதிரி வீரம் பேசிறதை விட்டிட்டு, வாயளை வைச்சுக் கொண்டு பேசாமல் வீடுகளுக்கை இருங்கோ. எருமை மாட்டிலை மழை பெய்த மாதிரி, சொல்லுக் கே்காமல் உலாத்தப் போறனெண்டா, யார் தான் என்னத்தைச் செய்யிறது? கடைசியிலை வேலியிலை போற ஓணானை, வேட்டிக்கை பிடிச்ச கதையாத் தான் முடியும் கண்டியளோ! மற்றது, அவசரத்துக்கு வெளியிலை போய் வந்தாக் காகம் குளிச்ச மாதிரிக் குளிக்காமல், வடிவா அள்ளிக் குளியுங்கோ. இனி, வீடு வாசல்லை வேலை வெட்டியில்லாமல் இருந்து, தேவையில்லாமல் கதைச்சுப் பிரச்சனையளை வளர்க்காமல், ஆளாளுக்குப் பிரியோசனமா ஏதும் செய்யுங்கோ. இது தான் நேரம். வீடு வாசலுகளைப் பாத்துப் பாத்து துப்புரவாக்குங்கோ!

”நம்பினோர் கெடுவதில்லை.”

உழவாரப் பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 89 times, 1 visits today)