வாங்கோவன் பறைவம் 05-பத்தி- ‘மங்கு சனி’-உழவாரப்பொன்னையர்

இராமனாண்டாலென்ன? இராவணனாண்டாலென்ன? எங்களுக்கு எல்லாம் ஒண்டு தானே. இல்லையோ பாருங்கோ! ஒண்டு பொங்கு சனியெண்டா, மற்றது மங்கு சனி. ஆக மொத்தம், சனியேளோடை தான் நம்மடை கூட்டுக் கண்டியளோ! என்னத்தைச் செய்யிறது? ஆனா ஒண்டு. தெரியாத குதிரையிலை ஏறிறதை விட, தெரிஞ்ச கழுதையிலை ஏறலாம் எண்டு, அந்த நாளையிலை அப்பு சொல்லுவார். அப்பிடிப் பாத்தாலும், எங்களுக்கு வந்த வாய்ச்ச ரெண்டும் கோவேறு கழுதையாயெல்லே கிடக்கு. இனி, என்ன தான் குரங்கைக் குளிப்பாட்டிப், பொட்டும் பூவும் வைச்சுக் கொண்டந்து நடு வீட்டுக்குள்ளை கதிரை போட்டு இருத்தினாலும், அதின்ரை பரம்பரைக் குணம் விடாது. சொறியத் தான் சொல்லும். ராவிருட்டியிலை, வெள்ளைப் பேயள் மாதிரித் திரிஞ்சு திரிஞ்சு, எங்கடை சனங்களின்ரை இரத்தங்களைக் குடிச்சு குடிச்சு நல்லா ருசிப்பட்ட நாக்கு, என்ன தான் பல்லைக் காட்டினாலும், துளியும் நம்பேலாது கண்டியளோ!

எங்கடையள் கெட்டித்தனமா இருந்தால், சனங்கள் ஏனிப்பிடி தடுமாறோணும்? வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி, எங்களுக்கெண்டு வந்து வாய்ச்சதுகள் ஆளையாள் பிடிச்சுத் தின்னத் தான் சரி. வேறையொரு மண்ணாங்கட்டியும் இல்லை. நீ சுத்தமோ? நான் சுத்தமோ எண்டு மாறி மாறி தனகுப்படுறதோடை போகுது அதுகளின்ரை பொழுதுகள். நம்பி அனுப்பி விட்ட சனங்கள் இன்னமும் நட்டாத்திலை தான். எங்கடை பலன் அவ்வளவும் தானெண்டிட்டு இருக்க வேண்டியது தான். சீனாக் காரன் தான் எல்லாம் எண்டிறாங்கள். அமெரிக்கா காரனை மிஞ்சி ஒண்டும் செய்யேலாது எண்டிறாங்கள். இந்தியா தான், பின்னுக்கிருந்து எல்லாத்தையும் இயக்குதெண்டிறாங்கள்? உப்பிடிச் சனங்களுக்குப் பேய்ப்பட்டம் கட்டிற வேலை தான், எல்லா எலெக்சலையும் நடக்குது. இனி, இஞ்சனை இருக்கிறதுகளை விட, நம்மடை வெளிநாட்டுக்காரருக்கெல்லே வயித்திலை புளியைக் கரைச்சு வைச்சிருக்கு உந்த எலெக்சன் கோதாரி. பலாலியிலை விளைற் வந்திறங்கப் போகுதெண்டு, படு சந்தோசத்திலை இருந்தவை எல்லாம், இப்ப எலெக்சனிலை போட்டி போடப் போறாக்களின்ரை பேரைக் கேட்டுப் பேயறைஞ்ச மாதிரிக் கிடக்கினம். ஆசாரி விட்டாலும், பூசாரி விடாத கதையா, சண்டை நிண்டாலும், எங்களுக்கு நிம்மதி கிட்டாது போலை.

இப்ப வோட்டைப் போடிறதா? போடாமை விடிறதா? யாருக்குப் போடிறது? எதுக்குப் போடோணும்? எண்டு ஒண்டுமா விளங்கேல்லை. சரியோ, பிழையோ, சனங்களைக் கை காட்டி வழிப்படுத்திறதுக்கு ஒரு மனிசர் இல்லாமல் கிடக்கு. என்னத்தைப் பறைய? எல்லாம் எங்கடை காலம். இப்பிடி எத்தினை எலெக்சனுகளை, எங்கடை சீவியத்திலை கண்டாச்சு. பாப்பம். பாப்பம். நடக்கிறதைக் காணுவம். கூடிக் குறைச்சு எழுதவும் பயமாக் கிடக்கு. நாளைக்கு, மாறிச் சாறி மல்லன் வந்திட்டானெண்டா, பொன்னையாண்ணையை தேடியெல்லே நடுச் சாமத்திலை வான் வந்திடும். உங்களுக்கென்ன? உங்கனைக்கே இருந்து கொண்டு உச்சுக் கொட்டிப் போட்டு இருந்திடுவியள். என்னையெல்லே பாருங்கோ! உரிச்ச கோழி கணக்காக் கட்டித் தூக்கிப் போடுவான் அந்தக் கட்டையிலை போவான். கடவுளே! காணும் இனி. நிப்பாட்டிறன்.

உழவாரப் பொன்னையா

(Visited 63 times, 1 visits today)