வாங்கோவன் பறைவம்-03-நாக்கிளிப்புழு-பத்தி-உழவாரப் பொன்னையர்

உழவாரப் பொன்னையாவெளிநாடுகள்ளை பிறந்து, புறோக்கொயிலர் கோழிக் குஞ்சுகள் மாதிரி வருசத்திலை அரைவாசி நாள், வீடுகளுக்கை அடைபட்டு வளர்ந்த குஞ்சு குருமனுகள் இஞ்சை ஊருக்கு வந்ததா, எல்லாத்துக்கும்  குழறியடிக்கதுகள் பாருங்கோ. ஒரு பக்கம் பாவமாயும் இருக்கு. இன்னொரு பக்கம் எரிச்சலாயுமெல்லே  கிடக்கு. பல்லியைக் கண்டிட்டு வீரிட்டலறுதுகள். ஓணானைக் கண்டிட்டு ஓடியந்து ஒளியுதுகள். எறும்புகளைக் கண்டிட்டு பூச்சி பூச்சியெண்டுதுகள். என்ன கோதாரி வாழ்க்கையப்பா இது……….?

இப்படித் தான் அண்டைக்கொருத்தி, பக்கத்து வளவுக்கை நிண்டு கொண்டு பாம்பு பாம்பெண்டு கத்த, நான் செதுக்கினதையும் விட்டிட்டு, மம்பட்டிப் பிடியையும் தூக்கிக் கொண்டு விழுந்தடிச்சு ஓடினா, அது நாக்கிளிப் புழு பாருங்கோ. இதென்ன கரைச்சலான சீவியமப்பா இது.

விடிய வெள்ளண எழும்பி, தண்ணியைத் தெளிச்சு பெரிய விளக்குமாத்தாலை, சும்மா கோடிழுத்த மாதிரி முத்தத்தைக் கூட்டி விட, பிள்ளையாரெறும்புகள் ஒரு பக்கத்தாலை வரிசையா நடப்பினம். அங்காலை வேம்படியட்டையும் சுண்டுக்குளி அட்டையும் குறுக்கு மறுக்கை யாரையோ ஆஸ்பத்திரியிலை அட்மிற் பண்ணீற்று வந்த மாதிரி ஓடித் திரிவினம். அது சரி வேம்படி,சுண்டுக்குளி எண்டா என்னெண்டு விளங்குது தானே. மஞ்சள்ளை கறுப்புக் கோடு போட்டது வேம்படியட்டை. ஏனெண்டா வேம்படிப் பள்ளிக்கூடத்தின்ரை ரை அந்தக் கலர் கண்டியளோ. மற்றது சுண்டுக்குளிக் கலர். சிவப்பிலை கறுப்புக் கோடு.

இனி, அப்ப கின்டு லேடீஸ் அட்டை எதுவெண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை, கைமிச்சம் கனகுப்பிள்ளையெண்டு யாரும் வந்தீங்களெண்டால், பேனை அட்டையைத் தான் பிடிச்சுக் காதுக்கை விடுவன் கண்டியளோ! அது எதெண்டு தெரியும் தானே! பெரிய கறுப்பு அட்டை.

கடியெறும்பு,பிள்ளையாரெறும்பு, சீனியெறும்பு, கொள்ளித்தலை எறும்பு, மட்டத்தேள், நட்டுவக்காலி,புலுமைச் சிலந்தி, , பல்லி எண்டு எங்களோடை சேர்ந்து வாழிற சீவனுகள் அதுகள் தான். அதை விடவும், கம்பளப் பூச்சி, சில்வண்டு, ஈசல், தும்பி, வண்ணத்துப் பூச்சி, கறையான்,கரப்பான், அறணை, பச்சோந்தி, கீரிப்பிள்ளை, எண்டு ஏராளம் சீவனுகளோடை சேர்த்து தானே எங்கடை வீடுகள் இருக்குதுகள். அதுகளாலையும் எங்களுக்கொரு பிரச்சனை இல்லை. எங்களாலையும் அதுகளுக்கொரு குற்றம் குறையில்லையெண்டு வாழிற பூமி எங்கடை பூமி.

சரி. பயப்பிடுறது தான் பயப்பிடுகள் எண்டு பாத்தால், எங்களையுமல்லே பாத்துப் பயப்பிடுதுகள் பாருங்கோ. நாறல் மீனைப் பூனை பாத்த கணக்காய், எங்களை, டிஸ்கவரியிலை வாற பூச்சியள் சாப்பிடுற மனிசர் மாதிரியெல்லே அதுகள் பாக்குதுகள். என்னத்தைச் சொல்லி இதுகளுக்கு உதுகளை விளங்கப்படுத்திறதெண்டு தெரியாமல்க் கிடக்குது பாருங்கோ!

உழவாரப் பொன்னையா 

 

 1,181 total views,  1 views today

(Visited 143 times, 1 visits today)