வாங்கோவன் பறைவம் 02-பத்தி-உழவாரப் பொன்னையா

                   ‘சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லேக்கை எண்டானாம்’

உழவாரப் பொன்னையாநடந்தது நடந்து போச்சு. ஆக வேண்டியதுகளைப் பாக்கிறதை விட்டுப் போட்டு இனியும் குந்தியிருந்து கொண்டு மூக்காலை அழுது என்ன நடக்கப் போகுது பாருங்கோ? பாத்துக் கொண்டிருக்கப் பத்து வரியம் பறந்து போட்டுது. என்னத்தை பெரிசா வெட்டிப் பிடுங்கினமெண்டா ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வருசா வருசம் விளக்குக் கொழுத்திறதும்..பூப் போடிறதும்.. எண்டு போகுது எங்கடை பாடு. அதுவும் சரிதான் அது ஒருபக்கத்தாலை நடக்கட்டும்.

ஆனாப் பாருங்கோ! ஊரிலை ஆயிரத்தெட்டு வேலையள் கிடக்கு. அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைச்சுக் கொண்டிருந்து என்ன பிரியோசனமெண்டு கேக்கிறன்? ஒரு பக்கத்தாலை ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கினம். இன்னொரு பக்கத்தாலை தோல்வியிலை இருந்து பாடம் படிப்பிக்கிறமெண்டு சொல்லிக் கொண்டு பழம் பஞ்சாங்கங்களை தங்கடை குருட்டுக் கண்ணாடியளாலை வாசிச்சு, உக்கிக் கொட்டுண்ட கதையளை ஊதிப் பெருப்பிக்கினம். இந்தப் பத்து வருசத்திலை அரசியல்வாதியளும் ஆய்வாளர்மாரும் கூடினது தான் எங்கடை வீரதீரச் சாதனை.

கஸ்ரப்பட்டவைக்கு காசனுப்பிறம் சரி. காலில்லாதவனுக்கு கடை போட்டுக் குடுக்கிறம் சரி. படிக்க உதவி செய்யிறம், சாப்பாடுகள் குடுக்கிறம், எல்லாம் நல்லது. சந்தோசம். ஆனாப் பாருங்கோ உதெல்லாம் எத்தினை நாளைக்குச் சரிப்பட்டு வரும்? தொழில் வாய்ப்புக்கள், வளங்கள் எண்டு, எங்கடை இடங்களிலை முதலீடுகளைச் செய்து சனங்களுக்கு வேலை குடுத்து நாட்டையும் உயர்த்தி நாங்களும் உயர்ந்தமெண்டு எவ்வளத்தைச் செய்யலாம்.

தெற்குப் பக்கத்தாலை வாறவை என்னடாவெண்டால் சும்மா கிடக்கிற காணியளைச் சுருட்டிச் சுருட்டி கமக்கட்டுக்கை அடையிறாங்கள். கேட்டுக் கேள்வியில்லாமல் மரங்களைத் தறிக்கிறதும்..மண்ணள்ளிறதும்..மீன் பிடிக்கிறதுமெண்டு அவங்கடை இஸ்ரத்துக்கு ஆடிறாங்கள் அரசாங்கத்தானுகள்.

எங்கடையள் என்னடாவெண்டால் வேலையில்லை வேலையில்லை எண்டு போட்டு வெளிநாட்டுக் காசுக்கு ஆவெண்டு கொண்டிருக்குதுகள். கஸ்ரம் கஸ்ரமெண்டு மூக்காலை அழுதழுது நாலு இடத்திலை நாலு நாட்டிலை இருக்கிறவையிட்டை காசுகளை வாங்கிப் போட்டு கண்மண் தெரியாமல் திரியுதுகள் இப்பத்தையான் பெடி பெட்டையள்.

ஒண்டில் வெளிநாட்டுக் காசுக்கு ஆசைப்படுதுகள். இல்லையெண்டால் வெளிநாட்டுக்குப் போக ஆசைப்படுகுதுகள். ஊரிலை இருந்து உழைச்சு முன்னேறிற எண்ணமெல்லாம் அதுகளுக்கு இப்ப வலு குறைவு கண்டியளோ.

வெளிநாடுகள்ளை இருக்கிறனியள் இஞ்சனைக்கை வந்து விலாசமடிச்சிட்டுப் போக, இஞ்சையிருக்கிறதுகளுக்கு வெளிநாட்டுச் சிந்தனை தான். ஒரு தொழில் துரவு பார்க்க இஸ்ரமில்லை. எங்கை பாத்தாலும் தெற்காலை இருந்து கூலிக்கு வேலைக்கு வருகுதுகள் சனங்கள். நம்மடையளுக்கு மண்ணிலை பற்றெண்டதே இல்லாமல் கிடக்கு. மரங்களை நடலாம். கைத்தொழில்களைத் தொடங்கலாம். எத்தினையெத்தினை தொழிற்சாலைகள் மண்டிப் போய்க் கிடக்குது. வெளிநாடுகள்ளையிருந்து முதலைப் போட்டு வேலை வாய்ப்புக்களைக் குடுத்து எங்களை நாங்கள் முன்னேற்றிறதுக்கு வழி பாக்கோணும் பாருங்கோ.

நாடு கடந்தவையும், கடக்காதவையும் எண்டு எல்லாருமாய்ச் சேர்ந்து உப்பிடி உருப்படியான வேலையளைச் செய்யிறதை விட்டுப்போட்டு ஆள்மாறி ஆள் தூற்றிக் கொண்டு திரிஞ்சா எங்கனை நாங்கள் உய்யிறதெண்டு கேக்கிறன்? சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்ளையே நாங்கள் சுழண்டு கொண்டிருந்தா நாங்கள் எங்கனை மேலை ஏறி வாறதெண்டு கே்கிறன்?

எல்லாரும் கூடிப் பேசிப் பறைஞ்சு நல்ல காரியங்களை சுணங்காமல் தொடங்கிறதை விட்டுப் போட்டு ஆளாளுக்கு மூஞ்சையை நீட்டிக் கொண்டு நிண்டா ஐ.நா வந்து அவிச்சுக் கொட்டும், ஆவெண்டு கொண்டிருங்கோ………….

உழவாரப் பொன்னையா

 

 452 total views,  1 views today

(Visited 100 times, 1 visits today)