நினைவுச்சிடுக்கில் ஒரு விள்ளல்-பத்தி-காலம் செல்வம்

யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் பண்டத்தரிப்புக்கு போறதுக்குத் தள்ளு முள்ளுப்பட்டுக் கொண்டிருக்கேக்கை ஒருத்தர் அந்த நெரிசலுக்கையும் எனக்கு கிட்டவாய் வந்து, “எங்கையோ உங்களைப் பாத்த மாதிரி கிடக்கு” என்றார்.

“ஓம் ……ஓம் ……உங்களையும் எங்கையோ கண்ட மாதிரிதான் கிடக்கு …….” இது என்னுடைய வழமையான விடுகை. அவரை இந்தப் பிறப்பில் நான் கண்டதாகவே நினைவு இல்லை.

அவர் கொஞ்சம் யோசிச்சுப் போட்டு: ” நீங்கள் கவிஞர் செல்வம் அல்லோ?” என்றார். உண்மையில் எனக்கு கண் வேர்த்து விட்டது. ஏனெண்டால் எத்தினை வரியத்துக்கு பிறகு இந்த சொல்லை கேட்கிறன். கேட்டவரோ எனதுமுகத்தைப் பார்த்த வண்ணம் நின்றார். அந்தக்காலத்திலை ‘பாரிஸ் தமிழ் முரசு’ பத்திரிகையில் கொஞ்ச கவிதையள் எழுதினனான். அந்தக் கவிதையளை பிரசுரம் செய்த ‘உமாகாந்தனும்’ போய் சேந்திட்டார். அதை  ‘கட்டிடக் காடு’ எண்டு புத்தகம் போட்ட நண்பர் சபாலிங்கமும் போய் சேந்திட்டார். துக்கம் தொண்டைக்குள் அடைக்க, ” நான் இப்ப கவிஞனும் இல்லை” எண்டு சொல்லிப் போட்டு அவரைப் பார்த்தேன். அவர் கையில் ஒரு பையோடை நின்றார். எனக்கு கொஞ்சம் பயமாயும் இருந்தது. ஏனெண்டால் ஜெயமோகனின் ‘கிருமி நாசினி’ பிரச்சனை ஒரு பெரிய சண்டையாய் போய்கொண்டிருக்கிற நேரம்.

“நான் இப்ப கவிஞர் செல்வம் இல்லை. காலம் செல்வம் எண்டுதான் எல்லாரும் கூப்பிடுறாங்கள்” திரும்பவும் அவருக்கு சொலிட்டாய் சொன்னன்.

‘சங்கே முழங்கு’ நிகழ்ச்சிகளில் உங்கள் கவிதை கொடி கட்டிப் பறக்குமே! என்ன ஒரு மயிரையும் காணவில்லை”.

“ஓம்………ஓம்…… ஒரு மயிரும் இல்லைத்தான். காலமும் போகுதெல்லோ…….? அதுசரி எனக்கு உங்களை உடனடியாய் மட்டு கட்டேலாமல் கிடக்கு. நீங்கள் பாரிசிலை இருந்தனீங்களோ. நான் இப்ப கனடாவிலை இருக்கிறன். இப்ப லீவிலை வந்து நிக்கிறன்” என்றேன்.

“ஆ ……..! அப்பிடியோ ஆளையும் உடுப்பையும் பாத்தால் கனடா காறர் மாதிரி தெரியேல்லை. உங்களோடை கனக்க தரம் பேசியிருக்கிறன். பெரிய நெருக்கம் இல்லாட்டியும் உமாகாந்தன் வீட்டிலை ரெண்டு மூண்டு தரம் ஒண்டாய் இருந்து பேசியிருக்கிறம்”  என்கிறார்.

“உங்களாணை எனக்கு மாட்டு கட்டேலாமல் கிடக்கு” இது நான். அவரே தொடர்ந்தார்: 87,88-லை நான் ஒரு மோட்டு எடுத்து இந்தியாவுக்கு போய் அங்கை உத்தரிச்சு நொந்து நூலாகி போய் திரும்பி இஞ்சாலை வந்து இப்ப தோட்டம் செய்யிறன். ஏதோ பறவாய் இல்லாமல் சீவியம் போகுது. ஆனால் பாருங்கோ உங்களை 2009-லை அடிக்கடி நினைப்பன்.”

நான் ஏன் என்று கேட்க,

“நீங்கள் தமிழ் முரசுவிலை என்ன ஒரு கவிதை எழுதினியள்!” எனக்கு வரிக்கு வரி நினைப்பு இல்லாட்டியும்,

‘துர் அதிஷ்டம் பிடித்த  இனமே ……….. ஒட்டு மொத்த இனத்தையே எதிரி ஏதாவது கம்பத்தில் தூக்கி தற்கொலை செய்தார்கள் எழுதி வைப்பான்’

என்ற வரியை அடிக்கடி நினைப்பேன்”  என்றார்.

எனக்கும் அந்தக்கவிதையின் சாரம் மாத்திரம் அல்ல அதை எழுதிய காலமும் இப்பொழுது நினைவுக்கு வந்தது. உமாகாந்தனை, அவர் வேலை செய்த அலுவலகத்துக்கு சந்திக்கப் போன போது, வன்னிப்  பக்கத்தில் ஒரு தோழரை அநியாயமாகக் கொன்றது பற்றி அவர் கொதித்துப் போய் இருந்தார். அடுத்த நாள் மாதகல் கடற்கரையில் நான்கு சிறுவர்களை வெட்டிப் புதைத்த கதை கேள்விப்  பட்டேன். அந்த உணர்வில் எழுதியது ஒன்று.

கவிதை முழுக்க நினைவுக்கு வரவில்லை. அனால் இன்னொரு கூட்டாளி  இந்தக்கவிதையை சிலாகித்து சொன்னான். ஆனா நான் அவனை பெரிசாய் நம்பிறேலை. ஏனெண்டால் அவன் கொஞ்சம் கடுகு மிளகு போட்டு தாளிக்கிற கேஸ்.

ஆனால் இந்தாள் என்னடாவெண்டால் மனம் வீட்டுக் கதைக்கிற மாதிரிக் கிடக்கு. இப்பிடிக் கதைச்சு கொண்டு நிக்கேக்கை மினி பஸ்-ஐ கொண்டு வந்து நிப்பாட்டி போட்டாங்கள். சனங்களோடை தள்ளு முழுப் பட்டத்திலை நான் பின்பக்கமும் அவர் முன் பக்கமுமாய் போனோம்.

அவர் மானிப்பாயிலை இறங்கேக்கை நான் இருந்த ஜன்னல் அருகே வந்து கை காட்டினார். அப்பொழுதான்  ஞாபக வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டவாறே, ” உங்கள் பெயர் என்னவென்று கேட்டேன்.”

“நாதன்” என்றார். எந்த நாதன் என்று கேட்பதற்கிடையில் மினி பஸ் வெளிக்கிட்டு விட்டது.

கனடாவுக்கு வந்தபின்னர் என்ரை ‘கட்டிடக் காடு’ புத்தகத்தைத் தேடினேன். முப்பத்தைஞ்சு பெட்டிக்குள் எங்கை கிடந்து தூங்குதோ…? நான் அதை தேடி செரியாய் களைச்சு போனன். பின்னர் சில நாட்கள் கழித்து கடிதங்கள் வைக்கும் பெட்டிக்குள்ளை வேறு ஒன்று தேடப்போக, இரண்டு மூன்று ‘தமிழ் முரசு ‘ கவிதை துண்டுகள் கிடைத்தன. இவை சிலநேரம் பின்நாளில் உமாகாந்தனின் தம்பியார் ‘குகன்’ அனுப்பியிருக்கலாம். இல்லாட்டில் கண்டநேரம் தந்திருக்கலாம்.

உண்மையிலை இப்ப இந்தக் கவிதையைப் பேக்கப் பாக்க ஒரே வெக்கமாய் கிடக்கு. ஏனெண்டால் நான் இப்ப கவிதை எழுதாமல் விட்டது தமிழுக்கு செய்யிற தொண்டாய்த்தான் இருக்கும் எண்டு இப்ப நான் பீல் பண்ணுறன்.

மினி பஸ்ஸில் சந்தித்தவர் சிலாகித்த அந்தக்கவிதை இதுதான் ……….:

நேற்றுவரை

நீறு புத்த நெருப்பில் பூ மலரும்
கூறு கொண்ட கைகள்
ஒன்றாகி கருவிக் கொள்ளும் 
இப்படியே கனவு கண்டு
கனவு கண்டு ………….

சுழிபுரத்து சுடு மணல் தொடங்கி
வீர வன்னி வீதி மட்டும் ………
நேற்றுவரை ……..

மண்ணையும் சுதந்திரத்தையும்
எதிரி பறித்தான்
மனித நேயத்தை அன்பு செய்தலை
யார் பறித்தார்
வெட்கப்படுவோம்-

துப்பாக்கி வழிபாடும்
ஆளுமை நினைப்புகளும்
இப்படியே தொடர்ந்தால்
துர் அதிஷ்டம் பிடித்த இனமே
ஒட்டு மொத்த இனத்தையே
எதிரி ஏதாவது கம்பத்தில் தூக்கி
“தற்கொலை செய்தார்கள்”
எழுதி வைப்பான்

 -செல்வம்-

மூலப்பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது :

செல்வம் அருளானந்தம்-கனடா

செல்வம் அருளானந்தம்

 934 total views,  1 views today

(Visited 275 times, 1 visits today)
 

2 thoughts on “நினைவுச்சிடுக்கில் ஒரு விள்ளல்-பத்தி-காலம் செல்வம்”

Comments are closed.