வாங்கோவன் பறைவம்-பாகம்-07 -டிங்கிரி டிங்காலே …. பத்தி-உழவாரப்பொன்னையர்

“டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே நாடு போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா…….. ” எண்டு கக்கூசுக்கை இருந்து எனக்குத் தெரிஞ்ச ராகத்திலை நிம்மதியாப் பாட, மனிசிக்குப் பொறுக்கேல்லை. வயது போனாலும், பாம்புக் காதுக்குப் பழுதில்லைக் கண்டியளோ! என்ன உதுக்குள்ளை பாட்டுக் கச்சேரி நடத்திறியள். கெதியிலை வாங்கோ வெளியிலை எண்டிறா. அவனவன், ஆன ஆன பாட்டுக்கு வாய்க்கை வந்ததுகளையெல்லாம் பாடித் திரியிறாங்கள். நான், என்ரை வீட்டுக்குள்ளை பாடக்கூடாதே என்ன? ”கிளிநொச்சி மண்ணு. செல்வா நகர்ப் பொண்ணு” எண்டு ஒரு பாட்டை கிட்டடியிலை என்ரை பேத்தியார்ப் பெட்டை காட்டினாள் பாருங்கோ. சுள்ளுத்தடி மாதிரி இருந்து கொண்டு, ஆக்களும், கறுப்புக் கண்ணாடியும். உதுகளைக் கதைச்சா, உடனை நீங்க பழசு. பேசாமல் வாயை வைச்சுக் கொண்டிருந்து புதினத்தைப் பாருங்கோ எண்டுவினம். எதுக்கு?

பலாலியிலை எயாப்போட் திறந்திட்டாங்கள் எண்டு, கொஞ்சச் சனம் ஒரே புளுகத்திலை திரியுது வேறை. அட, எத்தினை அருமந்த செம்பாட்டுக் காணியளைப் பிடிச்சு, உதுகளைக் கட்டியெழுப்பிறாங்கள் எண்டு ஆருக்குத் தன்னும் கவலை இருக்குதோ? என்ன மாதிரி சோக்கான தங்கப்பவுண் போல மண்ணு. எத்தினை மரஞ்செடியள். நெஞ்சிலை வந்து கப்பல் இறங்குமாப் போலையெல்லே கிடக்கு. பலாலி, வளலாய்,வசாவிளான்,குரும்பசிட்டி,அச்செழு,புன்னாலைக்கட்டுவன், தெல்லிப்பளை, வீமன்காமம், எண்டு செழிப்பான கிராமங்கள், என்னமாதிரி தோட்டம் துரவுகள், குலை குலையாக் காச்சுக் கொட்டிற முந்திரியப் பழங்கள், பிலா,மா,தென்னை,கமுகு எண்டு சோலையாக் கிடந்த பூமி.

இண்டைக்கு எல்லாத்தையும் அழிச்சு முடிச்சு, அபிவிருத்தி செய்யினமாம் அபிவிருத்தி. மண்ணிலை பற்றுப் பாசம் இருக்கிறவனுக்கு விளங்கும் நான் சொல்லிற வலி என்ன எண்டு. காரைநகரிலை தண்ணியில்லாமல் பள்ளிக்கூடங்கள் கஸ்ரப்படுகுது. குடும்பங்கள் குடங்களோடு நடையாத் திரியுதுகள். வானம் பாத்துக் கிடக்கிற காய்ஞ்ச பூமியிலை கொண்டு போய் உந்த எயாப்போட்டைக் கட்டியிருந்தால், ரொம்பச் சந்தோசமாயிருக்கும். அந்தப் பூமியையும் பாதுகாத்ததா இருந்திருக்கும். என்னத்தைக் கட்டியெழுப்பிறவனுக்கும், நிலத்தைப் பற்றி, நீரைப் பற்றி, காத்தைப் பற்றி, நாளைக்கு வாழப் போற குஞ்சு குருமனுகனைப் பற்றி கொஞ்சமெண்டாலும் நினைப்பிருக்கோணும் கண்டியளோ! கண்ணை மூடிக் கொண்டு அபிவிருத்தி செய்து, கொழுத்த காசு உழைக்கலாம் வழிய, மனச்சாட்சிப் படி பாத்தால் அநியாயம் தான். இல்லையோ? ஓமோ?

இந்த நாசமறுப்புகள் ஒண்டும் விளங்காத, நேத்துப் பெய்த மழைக்கு முளைச்ச, வெடி வாலு முளைச்ச குறுணியள், ஆகோ…ஓகோ..அந்த மாதிரி எண்டு வாணீர் வடிக்குதுகள். என்னத்தைக் கிழிக்கப் போகினமெண்டு விளங்கேல்லை. இந்தியா வரும். எங்கடை சனத்துக்கு உடுப்புக் கடையள் வரும். அது வராட்டிலும், இனியென்ன, கலியாண வீட்டுக்கும், சாமத்திய வீட்டுக்கும் சனம் சைக்கிள் மிதிச்சுப் போய் வாற மாதிரிக் கிளம்பீடும். விடியக் காலைமை கடை திறக்க முதலே சென்னை சில்க் வாசலுக்கு முன்னாலை குந்திக் கொண்டிருக்கப் போகுதுகள். இனி அவங்களுக்கும் நல்லாத் தெரியும். நல்ல கொழுத்த சுறாக்கள் யாழ்ப்பாணத்தார் எண்டு. பிறகென்ன? குட்டி மருவத்தூர், குட்டி அம்மா பகவான், குட்டி சீரடி சாயிபாபா, குட்டி நித்தியானந்தா எண்டு இல்லாத, பொல்லாத புதுப்புதுக் கோயிலுகள் வரும். உண்டியலுகள் நிரம்பும்.

எங்கடை சனத்துக்கு இன்னும் எண்பத்தேழு கோயிலுகள் வந்தாலும், கண்ணை மூடிக் கொண்டு அள்ளிக் கட்டும். கைவழிய ஆயிரத்தெட்டு நூலுகளையும் அள்ளிக் கட்டும். அதை விடுவம். பாணிப்பூரி தொடங்கி, சூப்பர் சிங்கர் வரைக்கும் திருவிழாக் கடையள் கொடி கட்டும். இது எங்களுக்கில்லை. அக்கம் பக்கத்து நாட்டுக்காரனுக்குத் தான் அபிவிருத்தி பாருங்கோ. இன்னும் மிச்சமிருக்கிறதுகளை அவனவன் வந்து சுரண்டிக் கொண்டு போவான். சனத்துக்கென்ன? கலோ எண்டால், கிலாவிலை வந்திறங்கும் காசு. அது காணும் எண்டு நினைக்குதுகள். “ போற  போக்கைப் பாத்தால், கோயம்பேடு மாக்கெற்றிலை இருந்து தான் மரக்கறியள் வந்திறங்கும் போலை.

ஒரு காலத்திலை பலாலி எண்டா, செல்லும், பொம்பரும், பறா லைற்றும் தான் ஞாபகம் இருந்தது. தெரியமோ? அங்கனை “டுப்” எண்டு மெதுவா சத்தம் கேட்டு பச்சையா மின்னிச்சுதெண்டா, இடையிலை ஒருக்கா, உரும்பிராயிலை இடைக்கே ஒருக்கா கிளிப் கழண்டு வெடிச்சு பிறகு அங்காலை மண்டைதீவுக்கு கூவிக் கொண்டு போகும் விழுவானுகனின்ரை செல்க் கோதாரி. ஆர் பெத்ததுகளோ, நித்திரையிலையே எத்தினையெத்தினை சனங்கள் செத்ததுகள்? நாகர் கோயிலும் சரி, நவாலியும் சரி, யாழ்ப்பாணத்தை சுடுகாடாக்கினா எல்லா எமனுகளும், உந்தப் பலாலிக்குள்ளை இருந்து தானே வெளிக்கிட்டுப் பறந்து வந்ததுகள். பத்து வருசத்திலை எல்லாம், எல்லாம், ஒரு துரும்பும் இல்லாமல் நாங்க மறந்து போறம். அவனென்னத்தை இடிக்கிறது? அழிக்கிறது? நாங்களே எல்லாத்தையும்  வலு கெதியிலை மறந்திடுவம் பாருங்கோ.

யாரொடு நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?”

– உழவாரப் பொன்னையா –

உழவாரப் பொன்னையா

(Visited 98 times, 1 visits today)