காடுலாவு காதை 02-பத்தி-தமிழ்க்கவி

“மோட்டுக் கொத்துக் கொத்தி …வேரில பட்டா மம்பட்டி காலுக்கேகிரும். காலுகளை அகலமா வைச்சு நில்லுங்க மம்பட்டி சறுக்கினாலும் காலுக்கேகாது.” என்ற கந்தப்பு அருகில் வந்து லெச்சிமியிடம் மண்வெட்டியை வாங்கி, “இஞ்சே…இப்பிடிக் கொத்தவேணும்.” என சிறியவர்களான மலர்,மணியன்,லெச்சிமி ஆகியோருக்கு சொல்லியும் செய்தும் காட்டினான்.

எல்லோரும் வேலையில் மும்முரமாக இருக்க, பின்னால் யாரோ ‘கூ…ய்’ யென்று கூப்பிடுவது கேட்டது. எல்லோரும் திரும்பினர்.

“அதாரும் மாடுபிடிக்கிறவங்களாக்கும்…நீங்க வேலையப் பாருங்க” என்றான் கந்தப்பு திரும்பாமலே.

“இல்லையப்பா….சின்னையாண்ணை” என்றாள் பாக்கியம். கந்தப்பு சட்டென நிமிர்ந்தான். சின்னையா தன் தொந்தி குலுங்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

“மெய்யேப்பா ஏதும் ஆபத்தோ.?” பாக்கியம் பதற்றமானாள். கந்தப்பு மண்வெட்டியைப் போட்டுவிட்டு சின்னையாவை நோக்கிப்போனான். என்றாலும் சின்னையா கிட்ட வந்துவிட்டார்.

“கந்தப்பு …” அவருக்கு பேசமுடியாமல் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. மிகவும் பயந்து போயிருந்தார்.

“என்ன………. என்னண்ணை.”

“சுக்…போட்டுட்டு  வீட்ட வா சொல்ல….”அவர் எதுவும் சொல்ல மாட்டார் போல தெரிந்தது. கந்தப்பு கோவணத்துக்கு மேலாக சாரத்தை எடுத்துக்கட்டினான். மரத்தில் சாத்தி வைத்திருந்த துவக்கை எடுத்து தோளில் போட்டவாறே வருமுன்  அவர் பாக்கியத்திடம் விசயத்தை சொல்லிவிட்டார்.

“சூப்பி லாம்பெண்ணையக் குடிச்சிட்டாள்.” பாக்கியம் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டாள். அவள் நினைத்தது சரியாகிவிட்டது. ‘தண்ணி விடாய்ச்சிருக்கு அதுதான் பிள்ளை என்னை நினைச்சிருக்கிறாள் போத்தல் விளக்கைத் தூக்கி தண்ணியெண்டு குடிச்சிட்டாள்’.

கந்தப்பு போகிற போக்கில்,

“நான் போய் பாக்கிறன் …விதைச்ச நெல்லைக் கொத்திப்போட்டு வெளிக்கிடுங்கோ..” என்றுவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கிப்போனான். சின்னையாவால் அவ்வளவு வேகம் முடியவில்லை. எனினும் பின் தொடர்ந்தார்.

பாக்கியத்துக்குப் பற்றிக்கொண்டு வந்தது . “என்ன மனிசன் இவன்…? பெத்தவள் நான் துடிப்பன் எண்டு தெரியாதா?  ஏதோ தான் தான் சுமந்ததும் பால்குடுத்ததும் எண்டமாதிரி ஓடுறான்.”

“அம்மா அம்மா அவர் போனாத்தானே ஆசுப்பத்திரிக்கு கொண்டு போக நீ போய் என்ன செய்யப் போறாய்?” என்றாள் மலர்.

“அதுக்கு விதைச்ச நெல்லைக் கொத்திப்போட்டு வரவாம். ஆ” அவள் சோர்வோடு ஒரு மரக்குற்றியில் அமர்ந்தாள். அவளுடைய கை கால்கள் பதறின. வெப்பியாரம் வார்த்தையாக வெடித்தது.

“என்னதான் பாசமாப் பாக்கின மெண்டாலும் பெத்த தாய் பாக்கிற மாதிரி வருமே…ம்….நானும் வேலை செய்தால் ஒரு கூலி குறையுமெண்டுதானே பாக்கிறார்.”

கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அதைப் பிள்ளைகள் பார்த்து விடாமல் இருக்க புறங்கையால் அழித்தாள். இதைக்கண்ட மணியன்,

“அக்காச்சி நீ போறண்டா போவன். நாங்கள் கொத்தீற்று வாறம்.”  மணியன்தான் சொன்னான்.  பதின்னான்கு வயதாகிறது அவனுக்கு. தாய் காமாலை நோய்க்குப் பலியானபோது இரண்டு வயதுதான். பேத்தியாரின் அரவணைப்புக்குள் வந்துவிட்டாலும் அவனை வளர்த்தது படிப்பிக்கிறது எல்லாம் கந்தப்புதான். அதை தன் கடமையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், அவனை தனக்கு ‘தலைப்பாரம்’ என்று அடிக்கடி சொல்லாமல் இல்லை. அவனும் எல்லா வேலைகளையும் மாடுமாதிரி செய்யாமலும் இல்லை. அவனுடைய கெட்டகாலம் அவனுக்கு படிப்பு ஏறவேயில்லை. இந்த வருடத்துடன் தான் பாடசாலை விட்டு நிற்கப்போவதாகக் கூறிவிட்டான். அது பாக்கியத்துக்கு பிடிக்காது போனாலும் பேத்தியாருக்கு உதவியாக இருப்பான் என்பதால் பேசவில்லை. ஆனால் பேத்திக்கிழவி, அவனை கந்தப்புவிடம் ஒப்படைத்து,

“தம்பி…உன்னோட கூட்டிக்கொண்டு போய் உந்த கமத்தில் வேலையளப் படிப்பிச்சு விடு ..என்னோட நிண்டு என்ன கடையப்பம் சுட்டு விக்கப்போறானே? இனி அவன் என்ர சொல்லுப் பறைஞ்சால் கேளான். நீ தண்டுதரமான ஆம்பிளை. எப்பன் அடங்குவான்..” என்று பலவாறு பேசி அந்த தலைப்பாரத்தை மீண்டும் கந்தப்புவிடமே தள்ளிவிட்டாள்.

பாக்கியம் மத்தியான உணவுகொண்டு வந்த சட்டி பெட்டி மூடல்களை எடுத்தாள். மணியனிடம்,

“டேய்……. போட்டிட்டு வாங்கடா. அங்கின ஒரு கொத்து நெல்ல புறாப் பொறுக்கினா பொறுக்கீட்டுப்  போகட்டன்.” அனைவரும் புறப்பட்டனர். இன்னும் வெயில் சூடு குறையவில்லை. பிள்ளையார் கோவிலடியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகளை இழுத்து வந்து வண்டியில் பூட்டினான்.

வண்டி சின்னப்புதுக்குளத்தை அடைந்தபோது பொழுது நன்றாக இறங்கிவிட்டது. பதற்றமாக இறங்கி உள்ளே ஓடினாள் பாக்கியம். லெச்சிமியும் கூடவே குதித்து ஓடினாள்.

“ஓய்…ஆராக்கும் சாமானுகள் இறக்கிறது….?” என்று அவளைப்பார்த்து கத்தினாள் மலர். அவள் தலையைச் சிலுப்பிவிட்டு “தூக்குங்க” என்றபடி ஓடிவிட்டாள்.

தன் விரலைச் சூப்பிச் சூப்பியே ‘சூப்பி’ என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்த அந்தக் குழந்தை சமர்த்தாக விளையாடிக் கொண்டிருந்தது. அந்த லாம்பெண்ணை ஆபத்தில்லையாம் என வைத்தியர் சொல்லிவிட்டார்.

சூப்பியின் பெயர் சாவித்திரி. ஏதோ சினிமாவைப் பார்த்தோ நினைத்தோ வைத்ததல்ல. இது கந்தப்பு நாட்டுக்கூத்தில் சாவித்திரி வேடங்கட்டியதன் ஞாபகமாக வைத்த பெயர் அவ்வளவுதான். செய்தி கேள்விப்பட்டு அயலிலருந்தவர்கள் பார்க்க வந்தார்கள் லீலாவும் வள்ளியம்மையும் வந்து பார்த்தனர். கொஞ்ச நேரத்தில் ஆச்சிமுத்து ,சின்னாச்சி, கநதவனம் பெண்சாதி என பலர் வந்தனர். மாலையில் ஐயாத்துரை அண்ணரும் வடிவேலுவும் பார்க்க வந்தனர். வந்தவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். வந்தவர்களுக்கு தேநீர் ஊற்றவும் வெற்றிலைத்தட்டம் கொடுக்கவுமாக பாக்கியம் விழித்திருந்தாள். லெச்சிமி தகப்பனுடன் உறங்கும் வழக்கமுள்ளவள். அதனால் தகப்பனுடன் கூடவே இருந்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து ‘தமிழரசுக்கட்சி மாநாடு’ துவங்குதாம் என்றதும்.  செல்வ நாயகம், சுந்தரலிங்கம் பண்டாரநாயகா என கொஞ்சம் பெயர்களும் உரையாடலில் கவனித்தாள்.

“இஞ்சேருங்கோ….. உவளை ஏன் மடிக்கை வச்சிருக்கிறியள்? படுக்கச்சொல்லி கலைச்சு விடுங்கோ.  பார் வாய் பாக்கிறதை பிறகு ஆரோடையும் அலம்பப்போகுது.” பாக்கியம் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“ஓமடி இப்ப இவள்தான் அடுத்த லெச்சனில நிக்கப்போறாள்.” என பாக்கியத்தை அதட்டினாலும் மகளை வாஞ்சையாகத்தடவி, “போய்ப்படம்மா நான் வாறன்.” என்று அனுப்ப முயன்றான். நிலைமையைப் புரிந்து கொண்ட ஐயாத்துரை,

“அப்ப கந்தப்பு  நாளைக்கு சந்திப்பம் வரட்டே” என்றபடி நடையைக்கட்டினார்.

தினமும் பத்திரிகை படிக்கும் பழக்கம் கந்தப்புவுக்கு உண்டு. அந்தக் கிராமத்தில் வாசிக்கத்தெரியாதவர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்காக இரவில் கொஞ்சநேரம் கதைப்புத்தகங்கள் படிப்பதும் இதே திண்ணையில்தான். பெரிய எழுத்து: நல்லதங்காள், மதனகாமராஜன், ஜெகதலப்பிரதாபன், விக்கிரமாதித்தன் என்வும் பக்தி புத்தகங்களாக: சித்திரகுப்தனார், சேதுபுராணம், கந்தப்புராணம், ராமாயணம் இவைகளும் வரும். இவை தொடராக வாசிக்குமிடம் இதுதான்.

காலையில் எழுந்ததுமே, “லெச்சிமி இந்தா பேப்பர வாங்கு”என்று பத்து சதத்தை அவளிடம் கொடுத்தான் கந்தப்பு. பத்துசதம் கொடுத்து வாசலுக்கு வரும் பேப்பர் காரரிடம் வீரகேசரி வாங்குவது லெச்சிமிதான்.

“என்னப்பா வெளிக்கிடயில்லையே?“ என்று கேட்ட பாக்கியத்துக்கு,

“பொறப்பா. பேப்பர் வரட்டும். பாத்திட்டுப் போவம்.“ என்றான். பாக்கியம் ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

“பேப்பேர்……… பேப்பேர்.” என்றபடி பேப்பருடன் வநத மகளிடம் பத்திரிகையை வாங்கிப்பிரித்தால்,

“மெய்தானப்பா தமிழரசுக்கட்சி மாநாடு நடத்த ஒழுங்கு செய்யிறாங்களாம். விபரம் நாளைக்காம்.”

 “சொல்லி வைத்தமாதிரி ஐயாத்துரையர் வந்தார். என்ன…பேப்பரில ஏதும் போட்டிருக்கே?” கந்தப்பு பதில் பேசாமல் பத்திரிகையை அவரிடம் கொடுத்துவிட்டு,

“வெளிக்கிடுங்கப்பா…எல்லாத்துக்கும் முதல்  நெல்லக் கொத்திப் போட்டா எனக்கு நிம்மதி.”

பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த ஐயாத்துரை,

“கந்தப்பு சொன்னாப்போல அயத்துப்போனன். உன்ர கிணத்துக் காசு வந்திட்டுது விதானையாரிட்டக் கிடக்கு போய் வாங்கு.”

“அப்பாடா…நல்ல நேரம் விதைப்புக்க இடைஞ்சலாக்கிடக்கு காசில்லயெண்டு நெச்சன்..”

இது பாக்கியத்தின்  சீதனக்காணி. இதில குடியிருந்து கொண்டுதான் கோயில்குளம் காணிகளைத்திருத்தி வெள்ளாமை செய்கிறார்கள்.

“ம்….மெள்ளமா வாற காசுக்கு கிணத்தை வெட்டத் தொடங்கீற்றா ..? என்னப்பா நான் சொல்லுறது?” பாக்கியம் கேட்டாள்.

“இவளொருத்தி ..ஆடு அறுக்கமுன்னம் எனக்கென்னவோ எண்டு கேட்டவன் மாதிரி…….” கந்தப்பு சலித்துக்கொண்டான். அவனுக்கென்ன கட்டளையைப்போட்டா காரியம் முடிஞ்சுது. என்னதான் காடு வெட்டி போட்டாலும் மற்றவேலைகளில் குஞ்சு குருமான் எல்லாந்தானே மாயுது. பத்தாக்குறைக்கு பாக்கியம் காலைச் சமையல் முடித்து  சட்டிபானைகளுடன் வண்டியேறி புது வீதியில பள்ளம்கிள்ளமெல்லாம் விழுந்தெழும் மாட்டுவண்டில் குலுக்கல்ல போய் இறங்கி… இறங்கின உடன பிள்ளைய நித்திரையாக்கிப்போட்டு, காணிக்குள்ள கூடமாட வேலை செய்திட்டு, பத்துமணிக்கு வந்து கிடக்கிற பழையசோத்தைக் கரைச்சு வேலைசெய்யிறவைக்கு குடிக்க கொண்டு போகேக்கயே அரிசியை உலையில் போட்டிட்டு, பிறகும் கொஞ்சநேரம் வேலை செய்திட்டு வந்து கறிபுளி தேடிச் சமைத்து…எல்லாருக்கும் கொடுத்திட்டு, ஓய்வெடுக்காமல் இரவுக்கான சோற்றையும் அடுப்பில் வைத்துவிட்டு பிள்ளையின்ர துணிமணிகளைத்துவைத்து பிள்ளையைக்குளிப்பாட்டி, அதுக்கு முன்னம் பிறந்த பிள்ளையிடம்,

’தங்கச்சி கவனம். அடுப்படிக்க போகக்கூடாது. கிணத்துப்பக்கம் போகாதை.’

என்று ஆயிரம் எச்சரிக்கை சொல்லி விட்டிட்டு, திரும்பவும் காணியில் வேலை செய்திட்டு… ஐந்து மணியாக குளித்து உடைமாற்றி செய்த சமையல்களையும் தூக்கி கடகத்தில் வைத்துக் கொண்டு மீண்டும் மாட்டு வண்டியில் பயணமாகி வீடு வந்து, இரவுப்பாட்டுக்கான சோற்றை ஆக்கிவிட்டபடியால் கறி வைத்து, பிள்ளைகளுக்கு உணவு பரிமாறி, கைக்குழந்தையை நித்திரையாக்கி, பெரிய பிள்ளைகளைப் பாய்போட்டுப் படுக்க வைத்து, காலை உணவுக்கான மாவை வறுத்தோ அவித்தோ வைத்து விட்டு.. சாப்பிட உடகார்ந்தால், கந்தப்பு காக்கிளாஸ் சாராயத்தை ஊற்றி கையில்தருவான்.

“குடியப்பா ….நாள் முழுக்கப் பாடுபடுறாய். எப்பன் உடம்புக்கு நல்லாயிருக்கும் ..ம்…”

பாக்கியத்தின்மீது அளவற்ற பாசம் வைத்திருந்தான் கந்தப்பு என்று யாரும் கற்பனை செய்யவேண்டாம். உரையாடலைத் தொடர்ந்து கவனிக்கவும். பாக்கியம் முகத்தைச் சுளித்தாள்.

“என்னத்துக்கப்பா…என்னால இனி ஏலாதெண்டாலும் விடுறியளில்லை. வயுத்துக்கை பாரமாத்தான் கிடக்கு. மடந்தையில உண்டாயிட்டன் போல உருண்டு பிரளுறது தெரியுதப்பா.”

“சிக் …குடியப்பா அதொண்டும் தெரியாது. ஒரு கொஞ்ச நேரத்தில விட்டிருவன். என்ர செல்லமெல்லே……” பாக்கியம் சாராயத்தில் கரைந்தாள். இந்த மறுப்பு எந்தக் கோட்டிலும் செல்லாது. வேணுமெண்டா பெரிய சண்டையில முடியும். ஏன் இவை சண்டைபிடிக்கின மெண்டு எந்த கொம்பனுக்கும் தெரியாது. இந்த அல்லல்பட்ட வாழ்க்கையை பாக்கியம் அனுபவித்துத்தான் வந்தாள். இவ்வளவுக்கும் அவள் ஒரு வாதநோயாளி.

அன்றைக்கு கறி எதுவும் இல்லை. வேலிக்ரையோரமாகப் போய் லெச்சிமி கொஞ்சம் குருவித்தலைப் பாவக்காய் கொண்டுவந்தாள். சில நாட்களில் இப்படித்தான் கறிக்காக காட்டில் முளைத்திருக்கும் இலைகுழைகள் கீரை என்ற பெயரிலும் சுண்டங்காய் பாவற் காய் வட்டுக்காய். தும்பங்காய் போன்றவையும் கறியாகும்.

சில நாட்களில் கந்தப்பு, “நீ உலைய வையப்பா நான் ஏதும் பார்த்துக் கொண்டு வாறன்” என்று துவக்கை ஏடுத்துக்கொண்டு முன்புறமுள்ள காட்டுக்குள் நுழைந்தால் ஒரு மர அணிலோ உடும்போ காட்டுக்கோழியோ சுட்டு வீழ்த்திக் கொண்டுவருவான்.

இப்படி சிறுகறி வேட்டைக்குப்போய் பெரிய மிருகம் மாட்டிக்கொண்டால்…அன்றைய காணி வேலை அவ்வளவுதான்.

அன்றும் அப்படித்தான். மத்தியானத்துக்காக பச்சையரிசியை கழுவி  உலையை வைத்தபின் அடுப்பேற்றிய பெரிய பானைக்கு முப்புறமும் கொள்ளிகளைச் சொருகிய பாக்கியம் சலித்தாள்.

“என்னப்பா கறிவைக்கிறது…….?”

“அம்மோய்…வேலிக்கால் தோட்டத்துக்கை பனங்கீரை முளைச்சுக்கிடக்கு கொண்டரட்டா?…”என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் லெச்சிமி ஓடினாள்.

கொட்டப்பெட்டியைத் துளாவி நாலு பாக்குப் பிளகை எடுத்து வாயில் போட்ட கந்தப்பு, வெற்றிலையை எடுத்து அதன் நரம்புகளை நீவி அதில் சுண்ணாம்பைத் தடவியவாறே எழுந்தான். அப்படியே ஒரு புகையிலைத்துண்டை எடுத்து காதில் சொருகியவன். தலைமாட்டில் வைத்திருந்த துவக்கை எடுத்துக் கொண்டு பிஸ்கால் ராசதுரையிடம் ஐந்து ரூபாவுக்கு வாங்கிய காக்கிக் கோட்டைஎடுத்துப் போட்டான். கோட்டுப்பையில் கைவைத்து தோட்டாக்களை சரி பார்த்தான். ரெண்டு சன்னத்தோட்டா. ரெண்டு எஸ்.எம்.ஜி.

“இரப்பா…..ஒரு காமணித்தியாலம் பொறு”  என்றவன் பக்கவாட்டிலுள்ள சோலைக்காட்டை நோக்கி விரைந்தான்.

தொடரும்

தமிழ்க்கவி-இலங்கை

              

(Visited 150 times, 1 visits today)