காடுலாவு காதை-பாகம் 11-தமிழ்க்கவி

தமிழ்க்கவிமரை விற்பனை ஒரளவு சாப்பாட்டுப் பிரச்சனையை சமாளிக்க உதவியது. கந்தப்பு கிணற்று வேலையிலேயே கவனமாக இருந்தான். வடிவேலுவுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம், அதனால் பாக்கியத்தின் நகையை வாங்கி ஈடுவைத்த செயலானது இப்போது பாக்கியத்துக்கு ஒரு பிடியாகப் போயிற்று.

“நானென்னப்பா நானாப் போய் குடுத்ததே. நீதானே வந்து கிணத்தடியில துலாவுக்கு கீழ ஆடுகாலோட ஞானமணியை வடிவேலன் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிண்டான் எண்டு சொன்ன நீ……….”

“சரியப்பா அதுக்கு தேப்பன்காரன் மலகாசம்போல  இருக்கிறான் அவன்ர பிள்ளைய கரை சேர்க்க அவரெல்லோ சிலவழிக்கவேணும்.”

“ஊருக்க நாலு பெரிய மனிசர் கூடி முடிவெடுத்ததெண்டுதான் அவருக்கு தெரியும். பின்ன தன்ர பிள்ளை இப்பிடி ஒரு இளந்தாரியோட பிழங்கினது தெரிஞ்சா விடுவரே…….? சரி சரி அந்தாள் ரெண்டு மூண்டு மாயத்துக்க திருப்பி தந்திரும் கதைய விடப்பா.”

அப்போது வீட்டு வேலைக்கு நின்ற வீட்டிலேயே வயசுக்கு வந்துவிட்ட ஞானமணியை பார்வதி வீட்டுக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தாள்.

‘அது சின்னையாண்ணை இன்னும் அவள் சின்னப்பிள்ளையில்லை. நாளைக்கு அங்கயிருந்து பிழைப்பட்டு வந்திட்டா என்ன செய்யிற? வீட்ட கொண்ட வந்து விடுங்க. அவள் இங்கின நிக்கட்டும். பேத்திக் கிழவியும் இருக்குத்தானே? உனக்கும் சமைச்சுப்போடுவாள்தானே?’

அதையே வேதமாக கொண்டு சின்னையாண்ணை ஞனமணிய வீட்டுக்கு கொண்டு வந்திட்டார். ஆனா ஞானமணிய இப்பிடி வடிவேலன் கிணத்தடியில கண்டு காதல் வயப்படுவான் எண்டத அவள் நினைக்கயில்லை. நாளைக்கு சின்னையாவே :

‘தங்கச்சி நீ சொன்னதாலதான் கூட்டிக் கொணந்தன் இப்பிடியாகிட்டுது. நிண்ட இடத்தில பத்திரமா இருந்திருப்பாள்’ எண்டு சொல்லுற நிலைமை வந்திட்டா ….இப்பிடி பலதையும் பத்தையும் யோசிச்சுத்தான் பாக்கியம் விசயத்தை புருசனின்ர காதில போட்டாள். அவன் தேச சேவைக்காறன். உடனயேபோய் பக்கத்தில ஐயாத்துரை, மாணிக்கம், செல்லையா எண்டு அஞ்சாறு பேரக்கூட்டி கதைச்சு சின்னையாண்ணையிட்டயும் கேட்டார்.

“அய்யோ…….. கந்தப்பு என்னட்ட அரைச்சல்லிக் காசில்ல நான் என்ன செய்யிறது?” எண்டிட்டார்”. வடிவேலன்

அண்ணை எனக்கு விருப்பம் எங்கயன் மாறிச் செய்து விடுங்கோ நான் வேலை செய்து கடனக்கட்டுறன்.” என்றான். என்ன செய்யிறது………. குமர்காரியம். கந்தப்பு பின்வாங்கயில்லை. ஊருப்பெரியாக்கள கூப்பிட்டு றிஜிஸ்ராரையும் கொண்டுவந்து ஒரு கல்லோயா சாராயப்போத்தல் ஒரு வெள்ளைப்போத்தல் சாராயம் கூட்டுக்குள்ள நிண்ட ரெண்டு சேவல் பாக்கியத்தின்ர சமையலுமா  ஒரு சீலை சட்டை வேட்டி சட்டை எழுத்த முடிச்சிட்டு சோத்தைக்குடுப்பிச்சு சேத்து விட்டாச்சு. ஒரு குமர் கரை சேர பாக்கியம்தான் தன்ர பொருள இழக்க வேண்டியதா போயிற்றுது.

பாக்கியத்தின்ர நாலுபவுண் சங்கிலி அடைவுக்கு போனது இப்படித்தான். பாக்கியம் கதைய விட்டாள். ஆனா புதிதாக எந்த நகையையும் குடுக்க அவளுக்கு மனம் ஓப்பவில்லை. அது கந்தப்புவுக்கு கொஞ்சம் வருத்தம்தான். தனது இயலாமையை அவனது வேலையில் காட்டினான். கிணறு கீழிறங்கிக் கொண்டிருந்தது.

பாக்கியத்தின் சீதனமாக கொஞ்ச நகைகளை கொண்டு வந்திருந்தாள் அவற்றில் ஒன்றைத்தான் கந்தப்பு ஈடுவைக்கலாம் என்று முயற்சித்தான். கிணறு கீழே இறங்க இறங்க ஒரே ஆளாக வெட்டி படிகளில் மண் சுமப்பது மாச்சலாக இருந்தது.

பாக்கியத்தின் எட்டாவதாகப்பிறந்த ஆண்குழந்தை மிக அழகனாக இருந்தாலும்  நோஞ்சானாக இருந்தான். எப்பவும் ஏதாவது நோய் வந்து கிடந்தான். அடிக்கடி சளி வயிற்றோட்டம் என்று மாறிமாறி பாக்கியம் மருந்தும் கையுமாக அலைந்தாள். இதனாலெல்லாம் லெச்சிமியின் வேலைதான் அதிகரிக்கும். அவள் பாடசாலை விட்டு வந்ததும் அம்மா கட்டி வைத்திருக்கும் தம்பியின் சாணைத்துண்டுகளை எடுத்துக் கொண்டு எங்காவது தோட்டங்களுக்கு இறைக்கும் நீரில் கழுவக் கொண்டு போவாள். அப்படி யாரும் இறைக்கவில்லை என்றால் சின்னப்புதுக்குளத்துக்கோ அல்லது வெளிக்குளத்துக்கோ கொண்டு சென்று அலம்பிக் கொண்டு வருவாள். இரவிலே தம்பி அழுதாலும் அவள்தான்  பார்க்க வேண்டும். அம்மாவின் வாதக்கால்கள் அசைக்க முடியாமல் அவள் புலம்புவாள். ஆவளால் விடிந்தும் வெயில் ஏறிய பிறகுதான் எழுந்திருக்கமுடியும்.

இப்போது இரண்டு நாளாக பிள்ளைக்கு கடுமையாக வயிற்றோட்டம் ஏற்பட்டிருந்தது. அவளும் தனக்கு தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து பார்த்துவிட்டாள்.

“மெய்யேப்பா பிள்ளைய ஆசுப்பத்திரிக்கு ஒருக்கா கொண்டு போவமே வாறியளே?” என்று கேட்டாள். கந்தப்பு இப்ப இருக்கிற இறில்ல அந்த கதைக்கு அலுப்போடு பதில் சொன்னான்.

“பிள்ளைக்கு வருத்தம். உனக்கும் நோய், வீட்டில சாப்பாட்டுக்கில்ல, நானும் உந்தக்கிணத்த தண்ணி கண்டிட்டா எல்லாருக்கும் ஒரு விடிவுகாலம் வருமெண்டு பாக்கிறன். இருக்கிற பிரச்சனைக்க ஆசுப்பத்திரிக்கு நானோ? புள்ளையளக் கூட்டிக்கொண்டு போப்பா. கையில மடியில இல்லாம நான்படற பாட்டுக்க…” அவன் கதையின் இறுதிப்பகுதியை புறுபுறுப்பாகவே  மாற்றியபடி படலையை தள்ளித்திறந்து கொண்டு வெளியே போனான்.

இவருக்கு வேற பிரச்சனை. பெத்தது  காணும் விடுங்க எண்டா கேளார். புறந்ததை …சுமந்து பெத்ததை நான் எப்பிடியாவது காப்பாத்தத்தானே வேணும். அன்றைக்கு ஆஸ்பத்திரிக்கு போக முடியவில்லை. மாலையில் இதையிட்டு பெரிய வம்புவழக்கே உருவானது.

(காடு விரியும் )

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 217 times, 1 visits today)