காணி வைத்தியம் -சிறுகதை-தமிழ்க்கவி

“அப்ப எனக்கு பயினைஞ்சு வயசு. அதாலதான் அம்மா தன்ர பேருக்கு எழுதி வாங்கினவா.”

“சரி, இப்ப அம்மா என்ன சொல்லுறா?”

“அம்மா அண்ணையிட்ட காசைக்குடுத்துவிட்டு காணிய வாங்கி விடச் சொன்னவாவாம். அம்மா கூடப் போகேல்ல.”

“அப்ப ஆர் ஓப்பம் போட்டு வாங்கினது.”

“அண்ணை தன்ர பேருக்கெழுதுவிச்சு ஒப்பம் போட்டு வாங்கிற்றார்.”

“பிறகு என்னண்டு அம்மாவுக்கு வந்தது?”

“அம்மா அடுத்த கிழமையே அண்ணையிட்ட துண்டெழுதிக் குடுத்து தன்ர பேருக்கு மாத்திட்டா.”

“அப்ப இப்ப என்ன பிரச்சனை?”

“நான் அந்தக் காணியிலதான் இருக்கிறன்.ஆனா அண்ணை அது தன்ர காணியெண்டு வழக்குப் போட்டிருக்கிறான்.”

“அதுதான் ஏன்?”

“அவன்ர மனிசி……….அதான் அண்ணிக்கும் எனக்கும் சண்டை. அவள்தான் ஏத்தி விட்டிருக்கிறாள்.”

“அம்மா சொல்லலாமே ?”

 “அவா வவுனியாவுக்க இருக்கிறா. இஞ்ச வந்தா போகேலாது எண்டு பயப்பிடுறா.”

0000000000000000000

படாடோபமாகக்  (இச்சொல் தமிழா?) காரில் வந்திறங்கிய அந்தமுதிய தம்பதியினருக்கும் இந்தச் சூழலுக்கும் சற்றும் பொருந்தவில்லை. நவீன முறையில் அமைந்த சேலை. அந்த வயதிலும் நரைக்காத தன் தலையில்’பொனிடெய்ல்’ எனப்படும் குதிரைவால் கொண்டை. பளபளப்பான கான்ட்பாக் (கைப்பை) அட அடைப்புக்குறிக்குள் உள்ள எழுத்துகள் குறைவுதான் தமிழ்ழயே எழுதியிருக்கலாம். சரி பார்க்கலாம். மின்னும் கைப்பையில் என்னதான் வைக்கமுடியும். வீட்டுச்சாவி. ம்கும், இவர்களுக்கு இங்கே வீடிருக்காது. பணம்…இருக்கலாம். கூட வரும் ஜோடிக் கிழவரும் கிழவியும் கைகோர்த்தபடி வந்தார்கள். இருவரும் நல்ல ரோஸ் நிறம். கணவனுடைய தலை நரைத்து கண்ணாடியும் போட்டிருந்தார். முழங்காலுக்கு சற்றுக் கீழிறங்கிய காற்சட்டை. மேலே ஒரு வெள்ளை அரைக்கை பனியன். இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தார்கள். கார் சத்தங்கேட்டு வெளியே வந்த மருமகள்,

“வாங்கோ……….. வாங்கோ…….. என வாய் நிறைய வரவேற்று திண்ணைக் குந்தில் புதுப்பாயை கொண்டுவந்து விரித்து, “இருங்கோ” எனறுவிட்டு, எங்களைப்பார்த்து ,

“நான் சொன்னன், நோர்வேயால வருகினமெண்டு அவை இவையள்தான்” என்றாள்.

“ஏ…க்…நோர்வேயா……….? ஏனக்குப் பின்னால் நின்ற பேத்தி விழிகள் விரிய வாயைப்பிளந்தாள்.

“சுக்…….. வாயப்பிளக்காதை, சத்தம்போடாதை” எனறு அவளை நசுக்கினேன்.

“ஆ……….நாங்கள் அம்மாவப் பாக்கத்தான் வந்தனாங்கள்.”

கிழவர் வாய்மலர்ந்தார். (அந்த வாய்க்கு திரு என்ற அடைமொழி பொருந்தாது மன்னிக்கவும்)

“ஓ……….நாங்க கதைப்பம். பிள்ளை நீ போய் வந்தவைக்கு ரீ போடம்மா.”

 பெரியவர் ஒரு பவ்வியமான புன்னகையுடன், “ம்……….. பிள்ளை பிளேன்ரிதான். சீனி போடவேண்டாம்.”

“ஓ……….எங்களுக்கு தெரியும் வெளிநாடுகளால வாறவை கடும் பத்தியந்தான் எண்டு.”சும்மா சொல்லி வைத்தேன். பின்,

“நீங்கள் வருவீங்கள் எண்டு மருமேள் சொல்லியிருந்தா. அவா சொந்தமருமேளோ இல்ல. கலியாணம் முடீச்ச வழியில ஏதும்…………..?

“ சீச்சீ இதென்னங்கோ………. நெருங்கின சொந்தம். ரத்த உரித்து. நாங்கள் அங்கால போனதால கொண்டாடாம விடுபட்டுப்போச்சு.”

“ஙா……………”

“நாங்கள் கிளிநொச்சியிலதான் எண்பத்தாறுமட்டும் இருந்தனாங்கள். பிரச்சனையோடதான் எல்லாத்தையும் போட்டிட்டு அங்கால போனனாங்கள்.”

“எடடட …………சொந்தக்காணியிருக்கோ…?”(இந்தக்கேள்விக்குள்ள என் சுயநலமும் இருந்தது. நாங்களும் கிளிநொச்சிக்கு மாறவேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்படி போனால் ஒரு கொட்டில்போட இடம் கேட்கலாமே என நினைத்தேன்.)

“பின்ன………….. வயல்காணி ஒரு முப்பது ஏக்கர். வளவு நாலேக்கர். அதைவிட பரவிப்பாஞ்சான் பக்கமா மூண்டு நாலேக்கா நிலத்துக்க இயக்கமும் முக்கியமான பேசுகள் (முகாம்கள்) போட்டிருக்கிறாங்கள்.”

“கான்சலாப் போயிருக்காதே…………?”

“அ………….எல்லாம் உறுதிக்காணி. உலாந்தா உறுதி. அந்த நாளயில அப்பா வாங்கினது.”

“அப்ப பிறகென்ன………. உவ்வளவு நிலமிருந்தா…நீங்கள் இஞ்சயே இருக்கலாமே? குத்தகை காணுமே சீவியம் நடத்த.”

“அதிலதான் இப்ப பிரச்சனை. அதுதான் மருமேள் சொன்னா உங்களோட கதைப்பமெண்டு.”

“சொல்லுங்கோ………….”

“இருவது ஏக்கர் வயலும் நாலேக்கர் வளவு நிலமும் ஒருத்தருக்கு குத்தகைக்கு விட்டிட்டு போனனாங்கள்.”

“வருசாவருசம் குத்தகை வருதோ……….?”

அதுதான் இல்ல. அஞ்சுவருசக் குத்தகைய வாங்கிக் கொண்டு போயிற்றம். மிச்சம் வரயில்ல. ஆனா எங்கட காணியில ஒரு துண்டை வித்தும் போட்டான்.”

“விற்பனை செல்லாது. இப்ப அதில குடியிருக்கிறவைய விசயத்தை சொல்லிக்  காணிக்கால எழுப்பி விட்டிரலாம்.”

“அது……… அதுதான் வேணும். நான் பெரிய மருமோளோட கதைச்ச நான். செலவைப்பற்றி யோசிக்க வேண்டாம் ஆக்களை எழுப்பித்தந்தாக் காணும்.”

“என்ன வழக்குப்போடவோ…………? போட்டா நல்லம். சிவில் கேசுகள் தெரியுந்தானே……….? போட்டவனும் செத்து எதிராளியும் செத்து பேரப்பிள்ளையளுக்குத்தான் தீர்ப்புக் கிடைக்கும். பிறகு அதுகள் தனக்கோ உனக்கோ எண்டு அடிபட்டு புதுப்புது வழக்குகள் வந்திரும்.

“ஓமோம் உதுகள்ள அனுபவப்பட்டனாங்கள்.”

“ஓருக்கா நல்லா யோசிச்சிட்டு வாங்க. இல்ல நானும் மூத்தவனோட ஒருக்கா யோசிச்சிட்டு அங்க வாறன்.”

0000000000000000000000

கறுத்து மெலிந்த உருவம். அகப்பையப்போட்டு வழிச்சாலும் ஒரேப்பை சதையும் எடுக்க முடியாத உடல். அதாவது ‘ஸ்கெலட்டன் மொடல்’ போல இருந்தான். ஆனால் உயிரிருந்தது. அழுது கொண்டேயிருந்தான்.

“முதல் அழாத………., அழாமக்கதையச் சொல்லு. இல்லாட்டி அழுது முடிச்சிட்டுக் கூப்பிடு வாறன்.” நான் அதட்ட, அவன் மூக்கை உறிஞ்சி விட்டுத் தொடர்ந்தான்,

“மூத்தக்கை புங்குடுதீவுக்க முடிச்சுப்போயிட்டா. இளையக்கைய நாயன்மார்கட்டுக்க ரெண்டாந்தாரமா ஒருவருக்கு குடுத்தது, அவா புரியனை விட்டிட்டு வந்திட்டா. வந்து வீட்டோட இருந்தா. மூத்தக்கை மோசம் போட்டா. அத்தான் வேற கலியாணம் முடிச்சிட்டார். அவவுக்கு பிறந்த பிள்ளையள் ரெண்டையும் இஞ்ச கொணந்து விட்டிட்டு போட்டார். திரும்பியும் பாக்கேல்ல. இளையக்கைதான் வளத்தா.

மறு வரியமே அம்மாவுக்கு பாரிசவாதங் குத்தி படுக்கையாவுட்டா. இந்த  நிலையில எனக்குத்தான் முழு வேலையும். பள்ளிக்கூடம் போக்காட்ட அப்புவுக்கு வழியில்ல. வீட்டுவேலை, வயல்வேலை, மாடு கண்டு எல்லாத்தையும் பாத்து எல்லாருக்கும் சோறு போட்டார். கூடமாட நான் நிண்டதால என்ர படிப்பு போச்சு. அப்புவும் நிண்டது நிக்க மாடு குத்தி ஒருநாள் செத்துப்போனார்.

அதுக்கு ஒரு கிழமை முன்னம்தான் இளையக்கைக்கும் பிள்ளையளுக்கும் காணி பிரிச்சுக் குடுத்திட்டு எனக்கும் ஒரேக்கர் தந்தவர். அக்கைக்கு குடுத்த காணிக்க தென்னை இல்லை. அதால என்ர பக்கமா நிண்ட தென்னையில ஆறு மரத்தக்காட்டி அந்த மரத்துக்காயளை அவளுக்கு குடெண்டார். அவ அதில உள்ள காயெல்லாம் கொண்டு போவா அப்பைக்கயே காணிய பிரிச்சு உய் கதியாலுகளும் நட்டுப்போட்டா.

கிணறு பொதுவில கிடந்தது. அதால அந்த கிணத்துக்குவாற பாதையால வந்துதான் அவ தேங்காய் பொறுக்கிறது. அப்புவும் செத்த பிறகு எனக்கும் நாப்பது வயசாகிட்டுது. பக்கத்து வீட்டு பரமேசக்காதான் ஒரு சம்பந்தம் பேசி கட்டிவச்சா. ஏனக்கும் ரெண்டு பிள்ளையள் பிறந்திட்டுது. மூத்தது குமர்.

‘இப்ப நீ கலியாணங் கட்டிற்றாய் அதால வெளியால போ. காணிமுழுதும் எனக்குத்தான்’ எண்டு வழக்காடுறா. இவள காலமும் இவள பேரையும் உழைச்சுப் பாத்தது நான்தான். இப்ப அவா வளத்த பெரியக்கையின்ர பெடியன் கடுக்கண்டிட்டான். அந்த உசாரில என்னை வெளியால போகட்டாம்.” அவன் கன்னத்தில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்தான்.

0000000000000000000000000

நான் ஒன்பது வயதில அப்பா அம்மாவோட இந்தக்காணிக்க குடியேறினனாங்கள். அந்தக் காணியிலதான் நான் சாமத்தியப்பட்டனான். என்ர கலியாணவீடு, அண்ணான்ர கலியாண விடு, தம்பியின்ர கலியாணம் எல்லாம் இஞ்சதான் நடந்தது. அம்மாவுக்கு இந்தா இதிலதான் பாம்பு கடிச்சு  நாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக செத்திட்டா. (விசும்பல்) இஞ்சதான் செத்த வீடு நடந்தது. இந்தா காய்ச்சுக் கொண்டிருந்த தென்னை ஆறு வரிசை. நாங்க வர அவ்வளவும் ஆனை புடுங்கிப் போட்டிருந்துது. இதில ரொய்லெட் கிடந்தது. அந்தா அந்த புட்டிதான் வீடு கிடந்த இடம். இப்ப பிரச்சனை முடிஞ்சு நாங்க வந்து  கொட்டில் போட பாத்தா இவங்க இது தங்கட காணியாம். எங்களுக்கு பெர்மிட் இல்ல. ஆனா அவங்களுக்கும் இல்லத்தானே.

அவிங்க ஊர்ப்பொறந்தவங்களாம். நாங்க தோட்டக்காட்டாங்களாம். நமக்கு உரிமையில்யாமாம்.. இதென்னங்க ஞாயம்…………?

“அம்மா அந்தக்காணிய நாம அறுவத்தொண்ணில வெட்டினோம். இவிங்களுக்கும் நம்மாளுங்க வந்து இந்த தடத்தோட அம்பிட்டு காடும் வெட்னாய்ங்க. அப்றம் போலீசு வந்து யார் அடாத்துக்காடு வெட்னாங்க எங்கயில…நம்பளக் கயை காமிச்சு விட்டிட்டாங்க. நம்பள பதினாலு பேத்த றிமாண்டில வச்சு கோட்டில போட்டாங்க. ‘பைன் கட்டு இல்லன்னா ஆறுமாசம் ஜெயில்ல போட்டுறுவோம்னாங்க.’ அப்றம் பைனக்கெட்டி வெளிய எடுத்தாங்க. நாங்க இம்புட்டு கஸ்டப்பட்டு இருக்க எடமில்லாதே இங்கன மேலாவுல ஒரு துண்டு காட்ட வெட்டி குடியிருந்தோம் ஆச்சா எரவத்தைஞ்சு வர்சமாச்சு…இப்பதாம்மா நாம்ப தோட்டக்காட்டானாயிட்டம். நம்ப இங்ஙனக்க இருக்கக் கூடாதுங்களாம்.”

0000000000000000000000000

 “அடாவடியா வந்து கொட்டில் போட்டிருக்கிறா.”

“இல்ல…… இது அம்மான்ர காணி. இவயள்தான் அடாவடி பண்ணுகினம். அம்மான்ர காணி அப்பா இருக்க இடம் வேணும்.”

“இப்ப இருவது வருசமா நான் இருக்கிறன். ஆர் வந்தாலும் நான் காணி விடன்.”

´அம்மா வருவா…….. வந்தபிறகு உதைப்பாப்பம்.”

“சரி……. காணி ஆற்ற பேரில இருக்கு?”

“அம்மாட பேரிலதான். ஆனா, எனக்கு எழுதித் தந்திருக்கிறா.”

“பாப்பம் இன்னும் ரெண்டு நாளில அம்மா வருவா.”

“ரெண்டு நாளில்ல ரெண்டு மணித்தியாலத்தில வந்தாலும் உள்ளுக்க விடமாட்டன். இருவது வரியமா நாடு பிடிக்கத்தானே காணிய விட்டிட்டு போனவா. இப்ப நாடு பிடிச்சு முடிஞ்சு காணிபிடிக்க வரவோ……..? நல்ல சேட்டை?”

காணிக்காறி வந்தாள்.

 “பரவாயில்லை நீங்க இருங்கோ, இருக்கும் வரைக்கும் இருங்கோ. எனக்கு ஒரு சின்ன இடங்காணும். நான் வீட்டைக்கட்டி இருக்கிறன். ( ஏற்கெனவே இருக்கிற வீடும் அவள் கட்டியதுதான்)

“ஒருக்காலும் விடமாட்டன் வெளியில போங்க. ஏன் வேற சொந்தக்காறர் இல்லையே……..? அக்கா தங்கச்சி இல்லையே……? அங்க போங்க.”

“அட என்ர காணிய விட்டிட்டு நான் அங்கால போக ஏலுமா?”

“போகாட்டி தெருவில் நில்லுங்க.”

00000000000000000000000000

“பாண்டவர்களுக்கு ஐந்து கிராமமல்ல ஐந்து வீடல்ல, ஒரு ஊசிமுனை நிலமும் கொடுக்க மாட்டேன்” பாரதத்தில் துரியோதனன் கூறிய வார்த்தையால் குரு குலமே அழிந்தது.”

00000000000000000000000000

“ஜானகீ கொண்ணனுக்கு விபத்தாம். (அக்ஸிடென்ற் என்ற சொல் ஏற்படுத்தும் பதற்றத்தை விபத்தால் ஏற்படுத்த முடியாது) போகிற போக்கில் மாலா சொல்லிவிட்டுப் போனாள்.

“செத்துத் துலையட்டும். உதுக்குத்தானே காணிய அடாத்துப் பண்ணினவன்.”

ஜானகி வெறுப்போடு சொன்னாள். என்றாலும், சைக். காயம் ஏதுமோண்டு கேட்டிருக்கலாமே’ என்று மனம் அவாவியது. சோற்றுப்பானைக்குள் அகப்பையை வைத்தபோது கை நடுங்கியது. மனம் பதறுவது தெரிந்தது. அதை அப்படியே மூடிவிட்டு தெருவுக்கு வந்தாள். எதிரில் வந்தவரிடம்,

“அண்ணை கிளிநொச்சிக்க அக்ஸிடென்ராம் கேள்விப்பட்டடீங்களா…….?”

“உனக்குத் தெரியாதே….. கொண்ணன்தான். ரத்தம் கூடப் போயிற்றாம் தூக்கிப் போட்டுத்தான் கொண்டு போறாங்கள்.”

“ஐயோ கடவுளே……” என்று பதறியவள் ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினாள்.

“ரத்தம் வேணுமாம்.”

“எனக்கும் அண்ணனுக்கும்  ஒரே ரத்தம்தான் நான் தாறன்” என்று முன்னே ஓடினாள் ஜானகி (கை வைத்தியம்)

தம்பியக் கலைச்சுப்போட்டு காணியை வாங்க முயன்ற இளையக்கை வளர்த்த மூத்தக்கையின்ர மகன், தம்பியின்ர மகளை அதாவது காணிக்கு வழக்காடின எதிராளியின் மகளை காதலிக்க தொடங்கிவிட்டான்.

“பிறகென்ன குஞ்சியாத்தை வழக்கு ஒண்டுக்கை ஒண்டு. மாமா வேற நாங்கள் வேறயே………? “ என்றான் அவன்.

 ‘அவனிருக்கிற தைரியத்திலதானே வழக்காட வெளிக்கிட்டன். இப்ப எனக்கேன் சொத்து இளையக்கை சலிப்போட சொன்னா. (இயற்கை வைத்தியம்)

00000000000000000000000000000

“காணிக்க வரவேண்டாமெண்டு சொல்ல இவளார்…………?”

உறுதியைக் கொண்டு பொலீசுக்குப் போய் முறைப்பாடு கொடுத்தாள் காணிக்காறி.பிரச்சனை காணிக்கந்தோர்வரை போய் வந்தபின், காணியில் குடியிருந்தவள்,

 “நாசமாப்போவாள்……… இவ்ள நாளா நான் காத்து வைச்சிருக்க, இப்ப வந்து காணியப்பிடிச்சிட்டாளே? நானில்லாட்டி இந்தக்காணி இருந்திருக்குமா…?

“ஏன் நாய் திண்டிருக்குமோ……..?” என்றாள் காணிக்காறி ஆங்காரமாக.

“ஆர் இருந்தாலும், சொந்தக்காறர் வந்தா குடுக்கத்தான் வேணும் அதுதான் சட்டம்” என்றான் பொலீஸ் (அறுவைச் சிகிச்சை)

“சட்ட மறுப்பா வெட்டின காணியளுக்க தெண்டங் கட்டினது ஆர்? மறியலுக்கு போனதார்?”

“எல்லாம் அவங்கதான், ஆனா காடு வெட்ட கூலியும், தெண்டங்கட்ட காசும் நாங்கதானே குடுத்தது. எல்லாம் சம்பளங்குடுத்துத்தான் செய்விச்சனாங்கள். இப்ப கூலிவாங்கி வெட்டின காணி அவைக்காமோ…….?”

“ஓங்கட கூலிக்கு நீங்க காணியள வாங்கிட்டீங்க. இது நாங்க குடியிருக்க நாங்க வெட்டினது.”

“டேய்………… நாங்க குடியிருக்கிற எல்லைக்க நீங்க குடியிருக்கிறத எங்கட ஆக்கள் விரும்பாகினம். போய் அங்காலப்பக்கம் ஓதுங்கி இருங்க.”  ( புரையோடிய புண் இப்போதைக்கு ஆறாது)

0000000000000000000000000

வெளிநாட்டுத் தாத்தா என்னைக் காணியைக்காட்ட அழைத்துச் சென்றார். இரு ஏக்கர் வயலிலும் நாலு ஏக்கர் வளவிலும் பிரச்சனை இல்லை. நாலு ஏக்கரில் ஒரு ஏக்கரை குத்தகைக்காரன் விற்றிருந்தான். அதை வாங்கியவன் அதில் வீடு கட்டி பத்து பதினொரு அடிவரை வளர்ந்திருந்தது கட்டடம்.

தாத்தாவுக்கு காணிக்க இறங்கப் பயமாக இருந்தது. என்னைப்போய் விசயத்தை சொல்லச் சொன்னார்.

 “மெய்யே ராமசாமி………. இது கந்தையாப்பாவோட காணி. இதுக்க ஆரைக்கேட்டு வீடு போடுறாய். ங… முதல் வேலைய நிப்பாட்டு.” எண்டன் மிதப்பா.

“அவர் இல்லீங்களே………..வெளிய போயிருக்கிறாங்க.” என்றபடி வெளியே வந்தாள் அவனுடைய மனைவி.

“சரி சரி………. காணிக்காறர் வந்திட்டினம் எண்டு சொல்லு. நாளைக்கு வாறம்.” என்று சொல்லிவிட்டு நான் திரும்ப, தாத்தாவும் பாட்டியும் வளவுக்குள் வந்தனர்.

 “இதென்ன வேலை…….? எங்களுக்கு காணி வேணும் காணிய விடுங்க.” என்று ஒரு வார்த்தை சொன்னார்.

மாலையில் ராமசாமி எங்களைத் தேடி  வீட்டுக்கே வந்தான். அவனுடைய முகம் வெளிறிப் போயிருந்தது.

“ஐயா நான் சேதுகிட்ட வெலைக்கித்தான் வாங்கினன். பக்கத்து காணி என்னோடதான். இதையும் சேத்தா வீடு கட்ட காணுமேன்னுதான்….’

“நீர் என்னண்டு பத்திரமில்லாம காச குடுப்பிர்…..?”

“முப்பது வுருசத்துக்கு மேலயா அவருதான பாக்கிறாரு…… அதான்.”

“பாத்தா… நீ வாங்கிறதே…..”

“ஐயா நீங்க வெலயச் சொல்லுங்க அந்த வீடுகட்ன துண்டு நெலத்துக்கு காசக் குடுத்திடறேன்.  பாத்தீங்கல்ல எம்புள்ளங்க ஊறின வீட்டுல கெடந்து கஸ்டப்படறாங்க பொண்ணும் வயசுக்கு வாற பருவம். வயசுக்கு வந்திட்டா ஒரு நன்மை செஞ்சுக்கிராலாமின்னுதான் இந்த வீட்டக்கட்டிறன்.”

“சீச்சி…… அதெல்லாங் காணி தர ஏலாது.”

“ஐயா கடைசி அந்த வீடு கட்டிருக்கிற அந்தளவு நெலத்தையாவது தாங்க?”

“ராமசாமி………..அது நான் விக்க மாட்டன்,எழும்பு.”

“ஐயா…… இதுவரைக்கும் ரொம்ப செலவாயிருக்கே…..? நான் ஆசைஆசையாக் கெட்டின வீடு.”

“உதுக்கு நான் ஒண்டுஞ்செய்ய ஏலாது.”

“ஐயா…….. கொஞ்சம் எரக்கங் காட்டுங்கையா.”அவன் அழ ஆரம்பித்தான். தாத்தா எழுந்து போய்விட்டார். அவனும் அழுதபடியே திரும்பிச் சென்றான்.

தாத்தா மூத்த மருமேளிடம் போனார்,

“பிள்ளை அதில ஒரு ஏக்கரையும் உனக்கெழுதிவிடறன். ஏப்பிடியாவது மீட்டுத்தந்திடு.”

“தாறன் மாமா. இயக்கம் வச்சிருக்கிற காணியள இயக்கத்துக்கு எழுதிக்குடுங்க. அவங்களக் கொண்டு இதை மீட்டுப்போடலாம்.”

“ம்……..சரியான யோசினை.”

கிழவர் இயக்கத்துக்கு காணியள ஒப்படைச்சார். இந்த நிலத்துக்கு வழக்கப்போட்டார். அவருக்கு விசேட விசாரணைகளை இயக்கம் ஒழுங்கு செய்து கொடுத்தது. வேறு வழியில்லாமல் “எனக்கு செலவழிச்ச காசைதாங்க” என்றான் ராமசாமி.

மூன்றுலட்சம் பெறுமதியான கட்டடத்தை அறுபதாயிரம் ரூபாக்கள் மட்டுமே தர முடியும் என்றும் அது விருப்பமில்லாது போனால் அவன் ஒரு வாரத்துக்குள் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பானது. (சந்தேகம் வேண்டாம் புலிகளின் நீதிதான்)

ஊரவர்கள் ராமசாமிக்கு ஆறுதல் கூறினார்கள். அத்தோடு விடாமல் ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி இரவு பகல். பாடுபட்டு அந்தக்கட்டடத்தை அத்திவாரத்தோடு இடித்து அள்ளி அடுத்திருந்த அவனுடைய நிலத்தில் அள்ளிப்போட்டனர்.

கிழவர் அதன்பின் அந்த நிலத்தை நான்கு துண்டுகாளாக்கி ஒன்றை வாக்களித்தபடி மருமகளுக்கும், இன்னொன்றில் தனக்கும் ஒரு பெறுமதிமிக்க வீடு அமைத்து கிணறும் வெட்டிக்கட்டினார். ஏனைய இரண்டையும் விற்றார்.

ராமசாமி பிடுங்கிய வீட்டைமிக விரைவாக தனது நிலத்தில் கட்டிப்போட்டு நினைத்தபடியே தன மகளின் பூப்புனித நீராட்டு விழாவை சிறப்பாக செய்தான்.

 000000000000000000

2008

தாத்தாவின் வீடும் அவர் மருமகளின் வீடும் அவர் விற்ற ஒரு வீடும் யுத்தத்தில் அழிந்தன. உறவினர்கள் எவருமின்றி தாத்தாவும் அநாதையாக போருக்குள் நோயால் இறந்தார். ஏனையவர்களின் நிலையும் மரணச்சடங்குகளின்றி மண்ணோடு மண்ணாகி  அழிந்தன.

(நிலம், நீர் காற்று இவற்றை என்னுடையது என்று உரிமை கொண்டாடுபவனைப்பார்த்து இயற்கை சிரிக்கிறது—பகவத்கீதை.)

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 162 times, 1 visits today)