காடுலாவு காதை-பத்தி-பாகம் 05-தமிழ்க்கவி

சுடலை எப்பவும் பயங்காட்டிற இடந்தான். இன்றுகூட.  லெச்சிமி பின்னாளில் நாட்பட்ட உடல்களுடன்கூட நாற்றத்தை சகித்துக் கொண்டு வாழப்போவதை அப்போது அறியமாட்டாள். சுடலைக்காட்டுக்குள்ள உள்ள வண்டிப்பாதையால் நடந்து கொண்டிருந்த அப்புவை மிக நெருக்கமாக தொட்டபடியே நடந்தாள் லெச்சிமி. அவளுடைய கை பதறுவதை அவதானித்த கந்தப்பு சற்று நிதானித்தான்.

“இஞ்ச பார்…………. பேயெண்டு எதுகும் கிடையாது. அப்பிடி இருந்தா உந்த முடிஞ்சு போன சண்டையள்ள செத்தவங்கள் கோபதாபங்களில கொல்லுப்பட்டவங்கள் எல்லாம் தங்கட எதிரியள சும்மா விடுவாங்களே ங..”

லெச்சிமி எதுவும் பேசவில்லை என்றாலும் அவளுக்கு அது தைரியத்தை கொடுக்கவில்லை. அவர்கள் சுடலைக்காட்டைக் கடந்து காயாங்குளக்காட்டை அடைந்தனர். அது ஒரு தூர்ந்து போன குளம். அதன் நடுப்பகுதி பொட்டலாக இருந்தது. ஓரமாகப் பெரிய கூமா மரமொன்று சில்லென்று நிழல் பரப்பி நின்றிருந்தது. அதை அடுத்து கோவில்புதுக்குளத்தின் கீழான சேனைப்புலவுகள் தெளிவாகத் தெரிந்தன. அந்த குளக்கட்டுத்திடல் கொஞ்சம் உயரம் போதவில்லை. எனவே லெச்சிமி அருகில் வெகுநாட்களுக்கு முன் வீழ்ந்து கிடந்த பாலை மரத்தின் கிளைகளில் ஏறிநின்றே அதைப்பார்த்தாள். அதற்குள் கந்தப்பு தன் சாரத்தை அவிழ்த்து அந்தமரத்தில் கொழுவிவிட்டுத்  தன்கோவணத்தை இறுக்கிக் கொண்டான். அந்த கிராமத்தின் அனைவரதும் வேலைத்தல சீருடை அதுதான். அடர்ந்து கிடந்த பெருங்காட்டுள் நுழைந்தான்.

“பிள்ள………… வெட்டுச்சத்தததை கேட்டுக்கொண்டே நில்லு. நான் சத்தம் வைக்க உள்ளுக்க வாங்கோ என்ன.”

என்றவாறே அவன் வேலிக்கான கதியால்களை வெட்டவாரம்பித்தான். ஆனால் என்றைக்குத்தான் லெச்சிமி சொல்லுக் கேட்டு நடந்திருக்கிறாள்? அவள் அருகிலேயே மந்து படர்ந்த வெளிகளில் படர்ந்து கிடந்த கரம்பைப் பற்றைகளில் துளாவிப் பழங்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள். புளிப்பும் இனிப்பும் கலந்த அதன் அருமையான சுவை அவள் வாயில் குதம்பிக் கொண்டிருந்தது. மணியனும் ஒருபுறமாக சூரைப்பற்றைகளை ஆராய்ந்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான். சுமார் அரைமணித்தியாலங் கழித்து கந்தப்புவின் அழைப்பு வந்தது. அந்தப்பற்றைகளை விலக்கி குருமன் பற்றைகளின் ஊடாக நுழைந்து கந்தப்புவை நெருங்கிய போது, அவன் பத்துப்பதினைந்து தடிகள்வரை வெட்டி இலைகளைக் கழித்து இழுத்து விட்டிருந்தான்.

“மெள்ள பத்தையளுக்கால இழுத்துக் கொண்டே வெட்டையில போடுங்க. வண்டிலக் கொணந்து ஏத்தலாம்.”

என்றான். இரண்டு தடிகள் மட்டுமே எடுத்தாலும் லெச்சிமி மூசிமூசித்தான் இழுக்கவேண்டியிருந்தது. தடிகள் ஆங்காகாங்கே கொடிகளில் சிக்கிக் கொண்டு தடைப்பட்டன. மணியனால் மூன்று தடிகள்தான் கொண்டுவர முடிந்தது. ஒரு வழியாகக் கந்தப்பு அவர்களுக்கு தடிகளை இழுப்பதற்கான பாதையை வெளியாக்கி கொடுத்தான். பதினொரு மணிவரை இடையறாது இந்த வேலைகள் தொடர்ந்தன. இறுதியாகத் தெகிழங் கொடிகளை வகிர்ந்து சுருட்டிக்கொண்டு கந்தப்பு திரும்ப, “அப்பூ …தண்ணி……….”என்றாள் லெச்சிமி. அந்தக்கொடிகளை அதிலேயே போட்டுவிட்டு அவளைத்தூக்கிக் கொண்டு மீண்டும் காட்டுக்குள் நுழைந்தவன் ஒரு பயறிமரத்தில் படர்ந்திருந்த பெரும் கொடியை ஒரு விரற்கடையளவே வெட்டினான்.

“வா….. இதில வாயவச்சு உறிஞ்சிக்குடி” என்றான்.

லெச்சிமி அந்தக் கொடியை வாயில்வைத்து உவிந்து அதிலிருந்து வந்த நீரைக்குடித்தாள் பின்னர் மணியனும் அதில் குடித்தான்.

“இதென்ன கொடி அப்பு?”

“இதுக்கேதும் பேர் இருக்கோ தெரியாது ஆனா நாங்கள் இதை தண்ணிக் கொடி எண்டுதான் சொல்லுவம்” வெற்றிலை போன்ற அகன்ற இலைகளுடன் மொத்தமாக இருந்தது அந்தக்கொடி வண்டி வந்தபோது அதிலிருந்து கணிசமான பெரியகொடியை வலித்து கொண்டு வந்து வீட்டிலிருந்த மாமரத்தில் ஊஞ்சலாக கட்டி கொடுத்தான் கந்தப்பு. அதில் நீண்ட நாட்கள் பிள்ளைகள் விளையாடினார்கள். கதியால்கள் பெரும்பாலும் வெடுக்குநாறி,காயா, விண்ணாங்கு,துவரை என்றிருக்க வரிச்சுகள் தரணி மாவரை மட்டுமே வந்தன. அவற்றிலும் மாவரைகளை வழியிலேயே குளத்திற்குள் நீரில் தாட்டு வைத்து விட்டு மற்றவை வீட்டில் இறக்கிறார்கள்.

“அப்பூ………… ஏன் கொஞ்சத்தடியள தண்ணிக்க தாட்டு வச்சிருக்கு?”

“அதுகளுக்கு பட்டை உரிக்க வேணும். பட்டையோட கட்டினா உழுத்துப்போகும். ஆனா கையால சீரா உரிக்க ஏலாது. தண்ணிக்க போட்டு வச்சா ஒரு பத்து நாளைக்குள்ள பட்டை அழுகீரும். பிறகு உரிக்க முழுசா வந்திரும். தடியும் வலிமையா இருக்கும்.”

கிராமத்து வீடுகளுக்கு வைக்கோல் போட்டு வேயுற வழக்கம் இருந்தது. அதனால் வீட்டுக்கூரைக்கு இம்மாதிரி வரிச்சுகளை நெருக்கமாக நாலுமுதல் ஆறு அங்குல இடைவெளியில் வரிந்து கொள்வார்கள். ( காடுகள் எப்பிடியெல்லாம் அழிஞ்சிருக்கு) அதன்மீது வைக்கோலைப்போட்டால் அது ஒரு வருசம் நிற்கும். பின்னர் வரும் அறுவடையிலும் வரும் வைக்கோலை அதற்கு மேலேயே போடுவார்கள். ‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்ற பழிமொழியும் இந்த வீடுதான். தையும் மாசியும் பனிக்காலம் கடும் குளிர். ஆனால் வைக்கோல் பரப்பிய வீடுகளில் பனியின் துளி  படப்பட வைக்கோலில் சூடேறும். வீடு கதகதப்பாக இருக்கும். வைக்கோல் போட்ட வீடே வைஅகம். கந்தப்பு இந்த வீட்டை கட்டி முடிக்க தனியானாகத்தான் இறங்கியிருந்தான்.

“மெய்யேப்பா………. ஏன் இவளவு பெரிசாப் போடுறியள்……….?  சின்னளவில வீடும். கூட முன்னுக்கு ஒரு தலைவாசலும். குசினி தனியவுமா போட்டா மேயுற நேரத்தில சிறுகச் சிறுக மேயலாமப்பா”

“ஒமடி………… ஓமடி……. பேசாம இரு இக்கணம் நெல்ல வெட்டிக் கொணந்து எங்க அடையிறது? அறிவு

வேண்டாம். வந்திடுவா எல்லாத்திலும் கதை சொல்ல.”

தான் ஒரு பெரிய்ய வீட்டைக்கட்டுற பெருமை. ஆனா அந்த வேலைக்கு வரப்போகும் பேரிடர்கள் பற்றி அவனறியவில்லை.

காடு விரியும்………..

தமிழ்க்கவி-இலங்கை

 

தமிழ்க்கவி

(Visited 144 times, 1 visits today)