காலங்கள் மாறினாலும்-கட்டுரை-தமிழ்க்கவி

 தமிழ்க்கவி
கே-கே-ராஜா

காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும், அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் தொடர்ந்து கொண்டே வருகின்றன. அவற்றின் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குக் காரணமும் பெண்கள்தான்.

ஒருகாலத்தில் பெண்கள் படிதாண்டாப் பத்தினிகளாக இருந்தனர். அங்கேயும் அவர்களை மாமியார், சமூகம் சமயம் என்பன அடக்கித்தான் வைத்திருந்தன. படிப்படியாக இந்த அடக்கு முறைகள் மாறி பெண்ணைப் பெண்ணே அடக்குவதை கண்டோம் காண்கிறோம். மாமியார் மருமகளை அடக்கிய கால மறைந்து மருமகள் மாமியாரை அடக்கி வைத்திருக்கும் காலம் பிறந்துள்ளது.

பெண்கள் கல்விகற்று பெரிய உத்தியோகங்களில் அமர்கின்றனர். குடும்பத்துக்கான வருவாயை சரிசமமாக உழைக்கின்றனர். வசதியான வாழ்க்கையை வாழ முனைகின்றனர். இதற்கு பெரும்பாலும் வீட்டில் சமைத்துப்போட்டு வீட்டு வேலைகளைக் கவனித்து பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள ஒரு ஆயாவாக மாமியார் இருக்கிறார். அவரும் பெண்தானே அவருக்கென்றொரு ஆசைகள் விருப்பங்கள் இருந்தாலும் அவற்றை தன் மனதுக்குள் போட்டுப் பூட்ட வேண்டியதுதான் . வேலையாள் வைத்திருக்கலாம் என்று வரும்போது அதாவது தாயாரை இயலாமை வந்தணையும் போது அவரை முதியோர் இல்லத்தில் விடவேண்டிய தேவை ஏற்படுகிறது.

அரச தனியார் அலுவலகங்களில் இன்று வேலை செய்பவர்களில் பெரும்பாலோர்  பெண்கள். தனியார் அலுவலகங்களிலும் பெண்கள் மிகுந்து காணப்படுகின்றனர். தனியார் வர்த்தக நிலையங்களில் பெரும்பாலும் இளம் பெண்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர். சில வர்த்தக நிறுவனங்கள் மணமான பெண்களை வேலைக்கு சேர்ப்பதில்லை. காரணம் பிரசவலீவு நோய் போன்றவற்றுக்காக விடுமுறை கொடுக்க விருப்பமின்மையாகும்.

ஆயினும் ‘காமென்ற்’; எனப்படும் தையல்நிலையங்கள் இளம்பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு தொகைப் பணத்தை போனஸாக வழங்குகின்றன. தனியார் நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதி என்ற சொல்லே தெரியாமல் ஏராளமான பெண்கள் வெலை செய்கின்றனர்.

யுத்தத்தின் பின்னல்ல யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. யுத்தம் முடிவுக்கு வந்தபோது இப்படியான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மிக அதிகமாக சமுதாயப் பிரச்சனையாக  உருவெடுத்துள்ளது.

இந்தப்பெண்கள் படித்திருந்தாலும் படிக்காமலிருந்தாலும் தமக்குத் தோதான தகுதியான ஒரு வேலையை தேடமுடியாதுள்ளது. காரணம் தொழில் போட்டிகள்,அதிகரித்துள்ளது செல்வம் செல்வாக்கு இரண்டுமே வேலை கிடைப்பதை தீர்மானிக்கிறது. இந்தப்பெண்களின் பின்னால் உள்ள ஒரே ஒளிவட்டம் அவர்களது உடல்தான். அதை இழக்க முடியாதவர்கள் விரும்பாதவர்கள் சாதாரண வேலைகளுக்குப் போக வேண்டியே உள்ளது.

இவர்கள் சுயதொழில் செய்தோ, தமது சொத்துக்கள் மூலமாகவோபெறும் வருவாயைக்கொண்டு குடும்பத்தைப் பராமரித்து வருகிறார்கள் என்றாலும். அவர்களுடைய முழுத்தேவையையும் நிறைவேற்றப் போதவே போதாது.

வாழ்க்கைச் செலவென்பது வெறுமனே உடை, உணவு, உறையுள் என அடங்கி விடவில்லை. கல்வி முக்கியமான செலவாக முன்நிற்கிறது. இலங்கையில் இலவசக்கல்வி எனப் பேசப்பட்டாலும். அது அப்படியல்ல. அரசாங்கம் வழங்கும் புத்தகங்கள் அனைத்துக்கும் உப பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவற்றை விலை கொடுத்து மாணவர்கள் பெற்றாக வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கும்  சென்றாக வேண்டும். முன்பள்ளி மாணவருக்கே தனியார் கல்வி உண்டு நடக்கிறது. தனியார் கல்வி நிறுவனத்தில் பாடத்துக்கான மாதாந்தக் கட்டணத்தை தவிர ‘ரியூட்’ எனப்படும் பாடக்குறிப்புகளுக்கு தனியாகப் பணம் செலுத்தவேண்டும்.  பாடசாலையிலும் மாதாந்தம் விழாக்கள் பாராட்டுக்கள். போன்றவற்றுக்காகவும் மாணவர்கள் பங்களித்தாக வேண்டும். இத்தனைக்கும் ஒருபெண் தன் பிள்ளைகளை கல்விகற்க அனுப்பிவிட்டு எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்தாக வேண்டும்.

இதிலும் இன்னொரு பாரிய பிரச்சனையாக உதவி வழங்கும் நிறுவனங்கள் இவர்களை பொறுப்பேற்று உதவிகளைச் செய்கின்ற போதும் இந்தப்பெண்ணும் பிள்ளைகளும் அதை ஏற்றாக வேண்டிய நிலையிலேயே உள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் தமக்கு உதவி வழங்கியோரை தமது காப்பாளராக எண்ணுவதும் அது அவர்கள் கடமை. இது எங்கள் உரிமை என்றளவில் மாறும் பரிதாப நிலையும் காணப்படுகிறது. இவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பதாக வருமானத்துக்கு வழிகாட்டுவதாக இல்லாமல் படியளக்கும் நிலை என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

கல்விக்கு அடுத்தபடியாக அவளுடைய குடும்பத்தின் குடிநீர் படுக்கை பாதுகாப்பு ஆரோக்கியம். சமூகத்தொடர்புகள் என்பன முன்நிற்கின்றன. அண்மையில் ஒரு பெண் கூறியதாவது,

“அயலில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். எனக்கும் அழைப்பு தந்தார்கள் நானும் போகவேண்டும் என்ற ஆவலில்தான் இருந்தேன். ஆனால் நான் போகவில்லை. காரணம் எனக்கு முன்பே அங்கு சென்றவர்கள் அணிந்திருந்த பளபளப்பான அழகான ஆடைகள் என்னைத்தடுத்து விட்டன. நான் என்னிடமிருந்த சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு அங்கு போனால்  மற்றவர்கள் முன் என்னைப்பற்றி கேவலமாக உணர்வேன். அதனால் போகவில்லை. இதே காரணத்தால் நான கோவில்களுக்கும் போவதில்லை. இப்பயிப்ப ஊராக்களே என்னை ஒதுக்கி வைச்சிட்டினம் என்னத்துக்கும் சொல்லுறதில்லை.”

வாழ்க்கைச் செலவு வலிந்து அதிகரிக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் ஆளுமைகளை தமது செயல்களிலன்றி தாம் வாங்கிச் சேர்க்கும் பொருட்களிலேயே நிறுவ நினைக்கின்றனர். தேவையோ தேவையில்லையோ என்பதை தீர்மானிக்காமலே வீண் ஆடம்பரப் பொருட்களை வாங்கி வீட்டை நிரப்புகின்றனர். வீட்டுக்கு வீடு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, ஸ்மார்ட்போன், குளிர்பதனப்பெட்டி இது போன்ற சாதனங்கள் தேவைப்படுகின்றன. சில வளர்ந்த  பிள்ளைகள் உள்ள வீடுகளில் ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் கட்டாயம் இருப்பதும் உண்டு.

இளைஞர் யுவதிகளின் நேரம் போனுக்குள் முடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக பெண்கள் தாம் நவீன வசதிகளைக் கையாள முடிந்ததுமே தன்னால் எல்லாமே முடியும் என்ற மனநிலைக்கு வருவதுமில்லாமல் தனக்கான நட்பையும் தானே தேடிக் கொள்கிறாள் இதென்ன கதை ஒவ்வொருவரும் தங்கட தங்கட நட்பை தாங்கள்தானே தேடமுடியும் என்கிறீர்களா . உண்மை

ஊர் சுருங்கிக் கிடந்த காலத்தில் ஒரு ஊரில் வசிப்பவர்களை ஒருவருக்கொருவர் தெரிந்தே வைத்திருப்பர் ஒருவருடைய குடும்பம் அங்குள்ள பிள்ளைகள் சின்னவயதிலிருந்தே பழகியவர்களாகவும் இருப்பர். உதாரணமாக செல்லையாவுடைய மகள் ஊரெல்லையில் நின்றால் ஊரைச்சேர்ந்த யாராயினும் ‘பிள்ளை நீ இன்னாற்ற பிள்ளையெல்லே இதிலயேன் நிக்கிறாய் என்று கேட்பதுடன் அவளை வீடுவரை அழைத்தும் வந்துவிடுவர். இன்று அந்த நிலை இல்லை. எனவே பெண்பிள்ளைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக நிற்கிறது.  முற்கால மக்களிடையேயான உறவுகள் தொடர்புகள் இன்றைய பட்டணத்திலோ கிராமங்களிலோ இல்லை. பெண்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவுமொரு காரணம்தான்.  ஒவ்வொருவருடைய குணவியல்பும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. பெண்களும் தமது கிராமத்தைவிட்டு துணையில்லாமல் தனியே எங்கும் செல்வதில்லை. அப்படியிருந்தும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்தவர்கள் உண்டு. எனினும் இறுதிவரை கூடி வாழ்ந்தார்கள் என்பது சிறப்பு.

இன்னும் பல நகரங்களையும் உலகத்தோடு இணைக்கும் இணையங்க;டாக நட்பைத்தேடுவோரே அதிகம். செல்பேசிக்கூடாக பெறும் நட்பு காதலாகி, அந்தக்காதல் விரைவிலேயே  ‘ரீசார்ஜ்’செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. சில காதல் புரொபைலுடன் மெமரியும் அழிந்து போகின்றன.

இந்த நிலைக்குத் தள்ளப்படும் ஒரு பெண் தனக்குமட்டுமல்ல தனது குடும்பத்துக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே சுமையாகிப்போவாள்.

இளமையில் கணவனை இழந்தவர்கள் மறுமணம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. ஆனால் அப் பெண்ணுடன் நட்பு வைத்துக் கொள்ள பலர் முன்வருவார்கள். அந்தப் பெண்களுக்கும் அது போன்ற நட்புகளில் ஆர்வமிருக்கும். எப்போதும் போனைக் காதிலேயே பிடித்துக் கொண்டு திரியும் பெண்களை  எனக்குத்தெரியும். அவர்கள் மிக விரைவிலேயே தடம் மாறியதும் உண்டு.

எனக்குத் தெரிந்த பெண் கணவன் இல்லை. திருமணமான இருபத்தைந்து நாட்களிலேயே கொல்லப்பட்டான். அந்த சில நாள் வாழ்வின் பெறுபேறாக  அவளுக்கொரு ஆண்குழந்தை பிறந்தது. அவனுக்கு விபரம் தெரியுமுன் அவளுக்கு மறுமணம் செய்து வைக்க முயன்றோம். ஆனால் அவள்,

“என்ர கணவன் இறந்தாலும் அவர் என்னோடு இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். எனக்கு அந்த நினைவுபோதும்” என்று மறுத்துவிட்டாள். எனினும் நாம் பலமுறை முயன்று தோற்றோம். அவளது அழகு எம்மைப்  பலமுறை முயல வைத்தது. கிடைத்தது தோல்வி.

முள்ளிவாய்க்கால் இறுதிச்சண்டை முடிந்து வெளியே வந்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள். இப்போதும் கணவன் இல்லை.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. என்னதான் வீரம் தியாகம் என்றும் பாசம் காதல் என்றும் பேசினாலும், இவற்றுக்கெல்லாம் மேலாக பசி இருக்கிறது. வயிற்றுப்பசிக்க நிகராக உடற்பசி எழுந்து நிற்கும். எந்தக் கொம்பனாலும், கொம்பியாலும், அதை வெல்ல முடிவதில்லை. சமைத்தோ மரஞ்செடிகளில் பறித்தோ தயார் செய்யும்வரை வயிற்றுப்பசி காத்திருக்கும் உடற்பசி அவ்வாறல்ல. “மது குடித்தால் மட்டுமே போதைவரும், மாது நினைத்தாலே போதைவரும்.” என்றொரு மொழியுண்டு. அது இருபாலாருக்கும் பொதுவானதே.

இளம் விதவைகள்,  முன்னாள் போராளிகள், வழிதவறி நடக்கிறார்கள் என்ற வதந்தி உலவுகிறது. ஆனால் அதிகமாக முறையற்ற, வழிதவறிய உறவுகளுக்காக கைது செய்யப்படுவோர் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களே

கிராம சேவையாளராக இருந்த ஒரு முப்பத்தேழு வயதுப் பெண், திருமணமாகாதவர். தான் விரும்பிய ஒருவருடன் மது போதையில் காணப்பட்டதாக அயலவர் புகார் செய்தனர். அவர் தனது வீட்டிலேயே தான் விரும்பிய ஒருவரை அழைத்து மது மாமிச உணவு என்பவற்றை பகிர்ந்துள்ளார். அவரை கைது செய்ய முயன்ற இளம் போராளிப் பெண்ணை நான் தடுத்தேன். ‘அவருடைய வீட்டிற்குள் நீ செல்ல முடியாது’ என்றேன்.

“அவனுக்கு திருமணமாகி மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் எனவே இது சமூகச் சீர்கேடு” என்றாள்.

“உனக்கு இது விளங்காது அங்க என்ன நடந்தது என்று உன்னால சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். அவள் மௌனமானாள். சற்றுப் பொறுத்து,

“என்ன நடந்திருக்கும்?’ என என்னிடம் கேட்டாள். நான் சிரிக்காமல், “எனக்கும் தெரியாது” என்றேன். பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. ஒரு பெண்ணைப்பற்றி அவதூறு பரப்புமுன் யாரும் சிந்திக்கிறோமில்லை.

அநேக விதவைகள் மறுமணம் செய்வதற்குத் தடையாக குழந்தைகள் இருக்கிறார்கள். பிள்ளைகள் தமது திருமணத்தின் பின் அநாதைகளாகி விடுவார்களே என்ற அச்சம் பலருக்கு. மாறாக பெற்றோர் உள்ள சிலர் பிள்ளைகளை தமது தாய் தந்தையருடன் விட்டுவிட்டு மறுமணம் செய்துள்ளனர். அந்தப் பிள்ளைகளின் வாழ்வில் அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. இந்த வாழ்க்கைக்கு என்ன பொருள்?

நான் போருக்குள்ளும் போருக்குப் பினனமாக எழுதப்பட்ட ரசிய நாவல்களில் இதுபோன்ற பெண்களின் வாழ்க்கைபற்றி படித்துள்ளேன். அதில் ஒரு அருமையான நாவல் “செர்யூஸா” போரில் கணவனை இழந்த பெண் மறுமணம் செய்கிறாள். மகனை தாயுடன் விட்டுவிட்டு தனிக்குடித்தனம் புறப்படுகிறாள். அந்த மகனுக்கோ தாயைப் பிரிய மனமேயில்லை. ஒரு உணர்ச்சிமயமான அருமையான கதை. போரின் பின் எஞ்சிய வாழ்க்கையை வாழத்துடிக்கும் இளம்பெண் தன் புதுக் கணவனை இழக்க முடியாமல் பிள்ளையை தாயுடன் விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள். இதற்குள் புதிதாக வந்தவன் அந்தப் பையனுடன் நட்பாகி விடுகிறான். அவனால் இவனை விட்டுச் செல்ல முடியவில்லை. வண்டி புறப்படும் சமயம் ஓடிவந்து இவனைத் தூக்கிச் செல்கிறான்.

இதே போன்ற பல காட்சிகள் எம்மண்ணில் அரங்கேறியுள்ளன. எனினும் அயலவர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனதில் பயத்தை விதைத்து விடுகின்றனா                            “அம்மா மறுமணம் செய்தால் உன்னை கவனிக்கவே மாட்டாள். “

“வாறவன் எப்படிப்பட்டவனோ”என்று மனதைக் கலைத்து விடுகின்றனர். பெண்கள் இந்த சில்லறை விடயங்களுக்குப் பயந்து மறுமணம் செய்யும் வாய்ப்பை புறம் தள்ளிவிட்டு பின் காலப்போக்கில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சோரம் போவதை யாராலும் தடுக்க முடிவதில்லை.

நாமென்ன துறவு வாழ்க்கையா வாழ்கிறோம்? நன்கு அலங்கரித்துக் கொள்கிறோம். அறுசுவை உணவு உண்கிறோம். சினிமா பார்க்கிறோம். பலருடனும் குறிப்பாக ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்கிறோம் பழகுகிறோம்.

“அவங்களும் எங்களோட அப்பிடித்தான் பழகுறாங்கள். நாங்க அவங்களை என்ன எங்கள கட்டச்சொல்லியா கேக்கிறம்”என்று என்னுடன் வாதிட்டவளின் கணவனை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர். இரு பெண்பிள்ளைகள்.  இவள் தன் தங்கையின் கணவனோடு உறவு வைத்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தியேழு.

திருமணச்சந்தையில் உள்ளூரில் திருமணம் கோரும் பெண்கள் மிக மிகமிக அரிதாகி விட்டனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக விரும்பும் பெண்களே அதிகம். வெளிநாட்டு மாப்பிள்ளை வருவார். தாலி கட்டுவார் சீதனத்திலும் கணிசமாக ஒரு தொகை எடுப்பார் எல்லாம் உனக்கு ஸ்பொன்ஸர் பண்ணுற சிலவுக்குத்தான் என்பார்.

“நான் போய் உன்னை எடுக்கிறன்” என்பார் போனவன் போனாண்டீ….வந்தாலும் வருவாண்டீ என்று பெண் காத்திருப்பாள்.

வெளிநாட்டில் மாப்பிளை கிடைக்காவிட்டால் என்ன தான் விரும்பியவனை தனது செலவிலேயே வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தாள் காதலி. அவளுடைய பணத்தில் உழைத்து ஊருக்கு வந்தவன் பணக்கார வீடொன்றில் பெண்ணெடுத்துக் கொண்டு திரும்பவும் வெளிநாடு செல்ல விமானமேறினான்.  காதலி இன்னும் கன்னியாக கண்ணீரில் வாடுகிறாள். இதுவும் வன்னியில்தான் நடந்தது.

சொந்த மாமன்மகன் ஜெர்மனியிலிருந்து வந்து திருமணம் செய்தான். தனது விசா முடிய திரும்பிப் போனவன் வரவேயில்லை. ஐந்து வருடங்களின்பின் தாயானவள் மீண்டும் ஜெர்மனியிலேயே மாப்பிளை பார்த்து அடுத்த திருமணத்தை செய்தாள். அவனும் மூன்று மாதத்திலேயே திரும்பிப் போய்விட்டு மறுபடி ஒருவருடம் கழித்து வந்தான். அவளை யாழ்ப்பாணம் கொழும்பு என கொண்டு சுற்றினான் முடிவில்,

“ அம்மாவும் அப்பாவும் தனியத்தானே  நீ இஞ்ச இரு நான் வந்து வந்து போறன்” என்றான் போய் விட்டான்.

பைத்தியம் பிடித்தவள்போல எந்த விரதத்தையும் தவற விடாமல் பிடிப்பதும், ஊரிலுள்ள கோவில்களுக்கு விளக்கேற்றுவதுமாக தாயும் மகளும் அலைவதைக் காணக்கூடியதாக உள்ளது. இப்படி ஊர்முழுக்க வரலாறு இருந்தாலும், இருக்கிற பெண்கள் வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் என்பதில் சற்றும் மனம் தளராது உறுதியோடுதான் இருக்கிறார்கள்.

சுய தொழில் வேலை வாய்ப்பு  வங்கிக் கடன்:

இது பெண்களை வீழ்த்த விரிக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பொறி. சாதரணமாக வங்கிகள் கேட்பதைப்போல பெரிய காத்திரமான பிணைகள் தேவையில்லை. மூன்று பெண்கள் சேர்ந்தால் போதும் கடன் கிடைத்துவிடும். மீளச் செலுத்தும்போதும் வாராந்தம் மூவரும் ஒன்றாக செல்ல வேண்டும்.

இந்தக் கடனைப் பெறுவது பெண்கள். செலவழிப்பது ஆண்கள்தான் அல்லது குடும்பத்தேவைகக்’காக செலவிடப்படுகிறது. கோழி வளர்ப்புக்காக நாற்பதாயிரம் வாங்கினால். நாலாயிரம் ரூபா அடுத்த வாரத்தில் கட்டவேண்டும். இதில் கடன் தொகையை விட வட்டியே அதிகம். ஒருலட்சம் கடனாகப் பெறும் ஓருவர் முப்பத்தேழாயிரம் வட்டி கட்டவேண்டும் என்பதுதான் உண்மை. எடுக்கும் பணம் எந்தத் தொழிலையும் ஆரம்பிக்கப் போதுமானதல்ல. அது செலவாகிவிட, வேறு வங்கியில் ஆடுவளர்க்க கடன் எடுத்து, இதையும் கட்டி அதையும் கட்டுவர். இந்தக் கடன் பணத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, அயன் பொக்ஸ், கலியாண வீட்டுக்கு கட்ட நல்ல சாரி .என செலவாகும். வங்கிகள் கொடுத்த தொகையில் ஆடோ கோழியோ வாங்கி வளர்த்திருந்தால், இலங்கையிலிருந்து முட்டைகளும் ஆட்டீறைச்சியும் ஏற்றுமதியாகத் தொடங்கியிருக்கும்.  வட்டி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எமது பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு குடிகாரனுக்கு சமதையாக இப்படி வரும் வங்கிகள் எல்லாவற்றிலும் கடன் வாங்கி, விட்டிலுள்ள பெருட்கள் அனைத்தையும் விற்ற பெண்களை காணக்கூடியதாக உள்ளது. இது தவிர இந்த கூட்டுக்கடனால் ஒப்பந்த முறிவுகள் ஏற்பட்டு கைகலப்பாகி பொலீசில்  முறைப்பாடுகள் வருவதாக பொலீசார் கூறிவருகின்றனர்.

பெரும் முதலாளிகள் செய்யும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் இறுதி நுகர்வாளனுக்கு விற்பனை செய்யும் பணியில் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். நல்லாட்சி அரசாங்கம் சீல் சாராயத்தின்  விலையை ஆயிரத்து நாநூறு ரூபாவுக்கு ஏற்றியதன் காரணமாக ஆயிரம் ரூபாவுக்கு தினக்கூலி செய்பவனுக்கு அது எட்டாக்கனியாகிவிட்டது. எனவே கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் கிராமங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் கோட்டுக்குப் போறவளும் குடியால் பாதிக்கப்படுபவளும்கூட பெண்தான்.

இன்றைய  எமது பெண்களின் நிலை இன்னும் விபரிக்க முடியும். இதற்கெல்லாம் காரணம் என்ன? எமது அறியாமை மட்டுமல்ல. அடக்கு முறைகளின் புதிய ராட்சச வடிவம்தான் என்றால் நம்புவீர்களா? மனநிலையில் மாற்றம் வருவதெப்போது…? காத்திருப்போம்.

தமிழ்க்கவி – இலங்கை

தமிழ்க்கவி

(Visited 145 times, 1 visits today)