மொழிபெயர்ப்பு நேர்காணல்-நித்தியா சுரேஷ்

‘நீங்கள் ஏன் மத்திய கிழக்கின் மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?’-நற்றாலியா சன்ஞா

நீங்கள் எப்போதும் ஒரு பத்திரிகையாளராக, செய்தியாளராக மற்றும் ஒளிப்படக் கலைஞராக வரவேண்டும் என விரும்பினீர்களா?

ஆம், நீண்டகாலமாக இது எனது விருப்பமாகக் காணப்பட்டது. முதலாவதாக, நான் ஒரு ஒளிப்படக் கலைஞராக வேண்டும் என அதிகம் விரும்பினேன். அந்த நேரத்தில் என்னால் ஸ்பெயினில் ஒளிப்படத் துறையைக் கற்க முடியாததன் காரணமாக அதற்குப் பதிலாக பத்திரிகைத் துறையைக் கற்பதற்கு நான் தீர்மானித்தேன். ஏனெனில் இதழியல் என்பது எனக்கு விருப்பமான ஒன்றாகக் காணப்பட்டது. நான் எப்போதும் மிக முக்கிய செய்திகளை சேகரித்து அவற்றை மக்களுக்கு அறியப்படுத்துவதில் ஆர்வமாக இருந்தேன்.

தாங்கள் எவ்வாறு மத்திய கிழக்கின் மீது ஈர்க்கப்பட்டீர்கள் என்பதை விளக்க முடியுமா?

நான் ஒரு பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு மத்திய கிழக்கில் குடியேறினேன். ஸ்பெயினின் பொருளாதாரமானது நான் வளரும் காலத்தில் நல்லதொரு நிலையில் காணப்படவில்லை. தற்போதுள்ளது போன்று பொருளாதார வாய்ப்புக்கள் நான் வளரும் காலத்தில் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவில் காணப்படவில்லை. பெருமளவான ஸ்பானிய குடிமக்கள் பொருளாதார நலன்களுக்காக தமது நாட்டை விட்டு வெளியேறினர். அதாவது எங்களை புலம்பெயர்ந்தவர்கள் என அழைக்க நாம் விரும்பினோம். ஆனால் நாங்கள் குடியேற்றவாசிகள். அதாவது சிரிய குடியேற்றவாசிகள் போன்று நாம் எமது நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியிருந்தோம். பொருளாதார மற்றும் நிதிக் காரணங்களுக்காக நாங்கள் எமது நாட்டை வெளியேறியிருந்தமை மட்டுமே இங்கு ஒரு வேறுபாடாகக் காணப்படுகிறது. ஆகவே இறுதியில் எனது குடும்பம் அல்ஜீரியாவில் குடியேறியது. ஆகவே எனது சிறுபராயமானது   அரேபிய கலாசாரத்தால் சூழப்பட்டிருந்தது.

நான் பாடசாலையில் கற்றபோது அரேபிய மொழியில் சில பாடங்களைக் கற்றிருந்தேன். ஆனால் மீண்டும் நான் ஸ்பானிய மொழிக்கு மாறிவிட்டேன். 19 வயதாக இருக்கும் போது என்னால் அரேபிய மொழியில் சரளமாக உரையாட  முடியவில்லை.

எனது இருபதுகளில் ஒரு நாள், நான் சிறுவயதில் அரேபிய மொழியில் எழுதிய கொப்பியைப் பார்த்தேன். இது தொடர்பாக எனது தாயாரிடம் நான் வினவிய போது அது நான் எழுதியாக அவர் கூறினார். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. இதுவே நான் வளர்ந்து மீண்டும் அரேபிய மொழியைக் கற்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது. ‘நீங்கள் ஏன் மத்திய கிழக்கின் மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?’ என பலர் என்னிடம் கேட்கும் போதெல்லாம், ‘ஏனெனில் பூனை யன்னலின் மீது உள்ளது’ என நான் பதிலளிப்பேன். அதாவது இந்த பூனை யன்னலின் மீது உள்ளது என்கின்ற இந்த வார்த்தையானது நான் சிறுவயதில் அரேபிய மொழியில் எழுதிய வசனமாகும். நான் சிறுவயதில் எழுதிய இந்த அரேபிய வார்த்தை எனக்கு விளங்கும் வரை அரேபிய மொழியைக் கற்கவேண்டும் எனத் தீர்மானித்தேன்.

பெண் என்ற வகையில், மத்திய கிழக்கில் சுறுசுறுப்பான பத்திரிகையாளராகவும், செய்தியாளராகவும் மற்றும் ஒளிப்படக் கலைஞராகவும் பணியாற்றுவதில் தங்களுக்கு ஏதாவது இடர்கள் உள்ளனவா?

இல்லை, உண்மையில் இவ்வாறான இடர்கள் எதுவுமில்லை. ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மத்திய கிழக்கில் மதிப்புடனேயே நடத்தப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறும் போது என்னுடன் பணியாற்றும் ஆண் பணியாளரை விட நான் தாக்குதலுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நான் மரணச்சடங்கு ஒன்றை முழுமையாகக் காண்பதற்கான வாய்ப்புக்களையும் கொண்டுள்ளேன். நான் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் இவ்வாறான இடங்களில் நான் ‘பெண்கள் பகுதிக்கு’ அனுப்பப்படாது ‘ஆண்கள் பகுதிக்கு’ அனுப்பப்படுகிறேன். ஆகவே நான் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் சமூகத்தில் முன்னுரிமைப்படுத்தப்படுகிறேன். எனது வெளித்தோற்றமும் இதற்குத் தடையாகக் காணப்படவில்லை. ஏனெனில் நான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் என்னை ஒரு வெளிநாட்டவர் என அடையாளப்படுத்த முடியாது. அத்துடன் அரேபிய மொழியும் எனக்கு கைகொடுக்கிறது. அதாவது நான் அரேபிய மொழியை சரளமாகப் பேசுவதால் மக்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். தமது மொழியை வேற்றுநாட்டவர் ஒருவர் கற்றிருக்கிறார் என்பது அந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதனால் அவர்கள் என்னை ஆழமாக மதிக்கிறார்கள்.

தங்களது கருத்தின் படி, எவ்வாறான செய்திகளைச் சேகரிப்பது தங்களுக்கு கடினமான பணியாகக் காணப்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

 சிரியாவில் செய்திகளைச் சேகரிப்பதில் இடர்பாடுகள் காணப்பட்டன. நான் இங்கு எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றினேன். ஆனால் இறுதி ஐந்து ஆண்டுகளும் மிகவும் மோசமானதாக காணப்பட்டது. எனது நண்பர்கள் மற்றும் சகபாடிகள் தமது அனைத்து உடமைகளையும் இழந்து தவிப்பதை நான் நேரடியாகப் பார்த்துள்ளேன். இவர்கள் தமது வீடுகள், உடமைகள், பணம், குடும்ப உறுப்பினர்கள் என எல்லாவற்றையும் இழந்து தவிப்பதை நான் நேரடியாகப் பார்த்துள்ளேன்.

ஆனால், லெஸ்பொசில் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற போது நான் அதிர்ச்சியடைந்தேன். கடந்த கோடைகாலத்தில், லெஸ்போசில் தஞ்சம் புகுவதற்காக கப்பலில் வந்து கொண்டிருந்த அகதிகள் தொடர்பான செய்திகளைப் பெறுவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். அவர்களை ஏற்றி வந்த கப்பலகள் கரையை அடைவதற்கு ஒரு சில நிமிடங்களின் முன்னர், அகதிகளின் முகங்களையும் அவர்களது கண்களையும் பார்த்த போது அவர்கள் கடந்த ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை என்னால் அறியமுடிந்தது. அவர்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தனர். அவர்கள் கரையை வந்தடைந்த கையோடு, 50 வயதுகளை அடைந்த ஆண்கள் அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்தேன். எவ்வளவு தூரம் அவர்கள் தமது வாழ்வில் துன்பத்தை அனுபவித்துள்ளனர் என்பதை நான் அவர்களின் கண்ணீரின் ஊடாக உணர்ந்துகொண்டேன். அரேபிய ஆண்கள் மிகவும் நெஞ்சுறுதி கொண்டவர்கள். அவர்கள் இலகுவில் அழமாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் அழுதபோது அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் கண்டுகொண்டேன்.

தாங்கள் எகிப்திய புரட்சி தொடர்பான செய்திகளைச் சேகரித்திருந்தீர்கள். இதன் போது தாங்கள் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது?

‘ஒட்டகத்தின் போர்’ இடம்பெற்ற போது நான் எகிப்திற்குச் சென்றேன். வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை சோதனைச் சாவடிகளில் இருந்தவர்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு தூரம் அங்கு வன்முறை நிலவிளது. அத்துடன் பெண்கள் ரஹ்ரீர் சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பல நூறு வரையான ஆண்கள் அணி அணியாக நின்று தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இது பார்ப்பதற்கு உலகப் போர் போன்று காணப்பட்டது. மிகவும் ஆபத்து நிறைந்ததாகவும் காணப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இங்கு பாலியல் வன்முறைகளும் இடம்பெற்றன. தொலைக்காட்சி செய்தி வழங்குனர் ஒருவர் ரஹ்ரீர் சதுக்கத்தின் மத்தியில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். பல பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். எகிப்தில் நான் பெற்ற அனுபவமானது மிகவும் கொடியது. பல்வேறு வேறுபட்ட தலைமுறைகள் பல வேறுபட்ட சமூக வர்க்கத்தினர் ஒரே நோக்கிற்காகப் பணியாற்றுவதைப் பார்ப்பது மிகவும் அழகானது. எகிப்தியப் புரட்சிக்கான உண்மையான பிரதிநிதித்துவமாக கெய்ரோவில் பணியாற்றிய இந்த நாட்கள் அமைந்துள்ளன.

எகிப்தியப் புரட்சியின் போது தங்களைப் பெரிதும் பாதித்த காட்சி எது?

 எகிப்தியப் புரட்சியின் போதான பல சம்பவங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. ரஹ்ரீர் சதுக்கத்தில் நிறைந்திருந்த மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தமது ஆறுதல்களை வெளிப்படுத்திக் கொண்டனர். இது உண்மையில் பார்ப்பதற்கு மனதை நிறைவுகொள்ளச் செய்தது.

அரசியல் குழப்பம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு மத்தியில் பணியாற்றும் போது கடினமாக இருந்ததா?

இது ஒவ்வொருவருக்கும் துன்பத்தையே தந்திருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இவ்வாறானதொரு வன்முறையை நாங்கள் வேறெங்கும் பார்க்கவில்லை. நாங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுவிடுவோமோ என நாம் பயப்படும் போது எங்களால் சரியான முறையில் செயற்பட முடியாது. ஆனால் நாங்கள் சாதாரணமான மக்களல்ல. நாங்கள் ஊடகவியலாளர்கள். ஆகவே எவற்றையும் கருத்திற் கொள்ளாது செய்தி சேகரிப்பதற்காக நாங்கள் வேகமாக ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

யுத்தத்தின் போது செய்திகளைச் சேகரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளீர்களா ?

ஆம். பத்து ஆண்டுகளின் பின்னர் பெற்றிருந்தேன். பத்திரிகைத் துறை என்பது மிகவும் செலவு கூடிய துறையாகும். குறிப்பாக பகுதிநேர ஊடகவியலாளராக இருந்தால் நாங்கள் வழங்கும் செய்திகளுக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படும். ஆனால் அதற்கும் மேலாக விமானப் போக்குவரத்துச் செலவு, காப்புறுதி மற்றும் உபகரணச் செலவு போன்றவற்றை நாங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். ஆகவே போர் இடம்பெறும் இடங்களில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளைப் பெறுவதென்பது மிகவும் அவசியமானதாகும். எனது கருத்தின் படி, இதைவிட மேலும் பல துறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது எமது மனங்களை புதுப்பித்துக் கொள்ளவும் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

தங்களது ருவிற்றர் தள விபரத்தில் தாங்கள் லெபனானைத் தளமாகக் கொண்டுள்ளீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த நாட்டுடனான தங்களது தொடர்பை விபரிக்க முடியுமா?

லெபனானுடனான எனது தொடர்பானது திருமணம் போன்றது. அதாவது விவகாரத்தைப் பெற விரும்புகின்ற போதிலும் தொடர்ந்தும் திருமணம் செய்திருப்பதற்கு ஒப்பானதாகும். அதாவது காதல்-வெறுப்பு உறவை ஒத்ததாகும். நான் எட்டு ஆண்டுகளாக லெபனானில் தங்கியிருந்தேன்.

முதலில் நான் இந்த நாட்டின் மீது அன்பைக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நாட்டில் வசிக்கத் தொடங்கியதன் பின் அதனை நான் வெறுக்க ஆரம்பித்தேன். ஏனெனில் இங்கு மின்சாரம், நீர் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் காணப்பட்டன. ஆனால் தற்போது லெபனானுடனான எனது உறவு சுமூகமடைந்துள்ளது. முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த ஒரு அழகான நாடாக லெபனான் உள்ளது. பாரிசில் வாழ்வதைப் போன்றே லெபனானில் வாழ்வதும் செலவு அதிகமானதாகும். ஆனால் இன்றும் நான் லெபனானில் வாழ்கின்றேன் என்றால் அதனை நான் இன்னமும் நேசிக்கிறேன்  என்பதே கருத்தாகும்.

லெபனானிற்கான ஐ.நா உள்ளகப் படையில் ஸ்பெயின் முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. வரலாற்று ரீதியாக நோக்கில், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றை மேம்படுத்துவதில் லெபனானிற்கு அடுத்ததாக ஸ்பெயின் பணியாற்றும் நிலையில் ‘எல் பைஸ்’ பத்திரிகை லெபனான்   செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன?

El Pais  எல் பைஸ் பத்திரிகையானது ஸ்பெயினில் முன்னணி பத்திரிகையாக விளங்குகிறது. இது தென்அமெரிக்காவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வெனிசுலா மற்றும் பிறேசில், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் இந்தப் பத்திரிகை அதிகம் வாசிக்கப்படுகிறது. ஸ்பானிய மக்கள் சிரிய யுத்தம், பாலஸ்தீனிய யுத்தம் போன்றவற்றில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். குறிப்பாக ஸ்பானிய வீரர்கள் அங்கு நிலைகொண்டதன் பின்னர் ஸ்பானியர்கள் இவ்விரு நாடுகளிலும் என்ன நடக்கின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.

மக்ரெப்பிலிருந்து ஸ்பெயின் 14 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. அதாவது ஐரோப்பாவின் தென் எல்லையில் இது அமைந்துள்ளது. மத்திய கிழக்கு மீதான இதனுடைய ஆர்வத்தை இவ்வாறு நியாயப்படுத்த முடியும். வரலாற்று ரீதியாக நோக்கில் ஸ்பானியர்கள் மற்றும் அரேபியர்கள் அயலவர்களாக உள்ளனர். அரேபியர்கள் ஸ்பானியாவில் ஏழு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தனர். ஆகவே ஸ்பெயின், மத்திய கிழக்கின் மீது ஆர்வம் காண்பிப்பதானது இயற்கையான காரணியாகும்.

பத்திரிகைத் துறையில் ஆர்வமாக உள்ள மத்திய கிழக்கில் பணியாற்றும் இளம் ஊடகவியலாளர்களுக்கு தாங்கள் ஏதாவது அறிவுரை கூர விரும்புகிறீர்களா?

முதலில் கடுமையாகப் பணியாற்ற வேண்டும். இதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். ஏனெனில் தற்போது ஊடகங்கள் உடனடிச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் இவை சிலவேளைகளில் நல்ல விடயங்களாக அமையாது. ஆனால் நல்ல செய்திகளை வெளியிடுவதற்கு சில காலம் எடுக்கும். நீங்கள் உங்களது பணியில் ஆர்வத்துடன் உங்களை ஈடுபடுத்தி அதற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சிரியாவில் நிற்கிறோம், இதனால் எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என நீங்கள் கருதக்கூடாது. இவ்வாறு அர்ப்பணிப்புடன் நீங்கள் பணியாற்றினால் நீங்கள் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம். இலக்கை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சிரியாவை எடுத்துக் கொண்டால், ‘நீங்கள் எந்தத் தரப்பிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்? அதாவது அரசாங்கத்திற்கா அல்லது கிளர்ச்சிவாதிகளுக்கா ஆதரவு கொடுக்கிறீர்கள்?’ என மக்கள் என்னிடம் விசாரித்தார்கள். நான் எந்தக் கட்சிக்கும் சார்புடையள் அல்ல என நான் கூறினேன். நான் பொதுமக்களிற்காக மட்டுமே பணியாற்றுகிறேன்.

00000000000000000000000000000

நேர்காணலுடன் தொடர்புடைய புகைப்படங்கள்

நித்தியா முரளி நித்தியா முரளி நித்தியா முரளி நித்தியா முரளி நித்தியா முரளி நித்தியா முரளி நித்தியா முரளி

00000000000000000000000000000

தமிழில் : நித்தியா சுரேஷ் – இலங்கை

நித்தியா சுரேஷ்

00000000000000000000000000000000

நற்றாலியா சன்ஞா பற்றிய சிறுகுறிப்பு :

நித்தியா முரளி
natalia-sancha

நற்றாலியா சன்ஞா  ஸ்பானியாவின் செய்தியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் ஒளிப்படக்கலைஞர் எனும் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார். இவர் 1979ல் அண்டலூசியா எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது பத்தாவது வயது வரை அல்ஜீரியாவில் வசித்தார். இவர் மத்திய கிழக்கு மீது ஈர்ப்பைக் கொண்டிருந்தார். அரேபிய உலகுடனான இவரது தொடர்பானது பத்திரிகைத்துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பெறுவதற்கு நற்றாலியா சன்ஞாவிற்கு உறுதுணையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் அரசியல் விஞ்ஞானத் துறையை Science Po Paris என்கின்ற பல்கல்கலைக்கழகத்தில் கற்றுப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன், அரேபியக் கல்வியை வோசிங்ரன் DC  யிலுள்ள ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

நற்றாலியாவின் கல்விப் பின்னணி மட்டுமல்லாது இவரது பன்முக மொழித் திறனும் அனைவரது ஈர்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது. இவர் ஸ்பானிய, அரேபிய, ஆங்கில மற்றும் பிரென்ஞ் மொழிகளை சரளமாகக் கற்றுக் கொண்டுள்ளார். இவர் தற்போது சிரியா மற்றும் லெபனான் நாடுகளில் El Pais என்கின்ற பத்திரிகையின் செய்தியாளராகக் கடமையாற்றுகிறார்.ஸ்பெயின் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் வாசிக்கப்படுகின்ற ஒரு பத்திரிகையாக இது காணப்படுகிறது. இவ்வாறானதொரு புகழுக்குரிய நற்றாலியா 2008 தொடக்கம் லெபனானில் வசித்து வருகிறார்.

இவரது பத்திரிகைத்துறை அனுபவம் மற்றும் மத்திய கிழக்கில் இவர் செய்தியாளராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் பணியாற்றி வரும் அனுபவங்கள் தொடர்பாக ரைலியா எல் கெலோ நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த நேர்காணலை மேற்கொண்ட ரைலியா, இலண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பாடல் கற்கைநெறியில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் ஊடகம், தொடர்பாடல் மற்றும் அரசியலில் அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளார். இவர் சிறந்த சமையலாளராகவும் விளங்குகிறார். இவர் பெய்ருற்றிலுள்ள தேநீர்சாலை ஒன்றில் நற்றாலியாவைச் சந்தித்து நேர்காணலை மேற்கொண்டிருந்தார். மத்திய கிழக்கில் பெண் பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் எழுத்தாளராகவும் ஒளிப்படக் கலைஞராகவும் பணியாற்றிவரும் தனது அனுபவங்கள் தொடர்பாக நற்றாலியா இந்த நேர்காணலின் ஊடாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்  .

ரைலியா எல் கெலோ

நித்தியா சுரேஷ்
tylia

                   

(Visited 23 times, 1 visits today)
 

மொழிபெயர்ப்பு நேர்காணல்-அபாஸ் கியறொஸ்ரமி-நித்தியா சுரேஷ்

“நான் ஓர் திரைப்படத்தத் தயாரிக்கும் பொழுது அதனைப் பார்க்கும் பார்வையாளர்கள் தங்கள் மனதில் 100 திரைப்படங்களைத் தயாரிக்கின்றார்கள் இன்னமும் பார்வையிடாத ஒரு திரைப்படம் தொடர்பாக அதிகம் பேச நான் விரும்பவில்லை. […]