மொழிபெயர்ப்பு நேர்காணல்-அபாஸ் கியறொஸ்ரமி-நித்தியா சுரேஷ்

“நான் ஓர் திரைப்படத்தத் தயாரிக்கும் பொழுது அதனைப் பார்க்கும் பார்வையாளர்கள் தங்கள் மனதில் 100 திரைப்படங்களைத் தயாரிக்கின்றார்கள்

இன்னமும் பார்வையிடாத ஒரு திரைப்படம் தொடர்பாக அதிகம் பேச நான் விரும்பவில்லை. எனினும் நேர்காணலை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டை நான் கொண்டுள்ளதால்  ஏ பி சி ஆபிரிக்கா என்கின்ற திரைப்படம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக சில வினாக்களைத் தங்களிடம் வினாவ விரும்புகிறேன்?

பல வருடங்களாக நான் சிறுவர்களுக்கான திரைப்படங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபை அறிந்து அவர்கள் உகண்டாவில் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அழைப்பை எனக்கு விடுத்தார்கள். அவர்கள் உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கு இத்திரைப்படத்தின் ஊடாக அக்குழந்தைகளின் நிலைப்பாடுகளையும் அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துக் கூறலாம் என முயன்றார்கள். அத்துடன் இத்திரைப்படத்தினூடாக அக்குழந்தைகளுக்கு உதவிகள் கிடைக்கும் என்றும் நம்பினார்கள்.

தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அழைப்பை ஆர்வத்துடன் உடனடியாக ஏற்றுக் கொண்டீர்களா அல்லது இதைப்பற்றி காலப்போக்கில் யோசிக்கலாம் என நினைத்தீர்களா?

உண்மையில் நான் இந்த அழைப்பை உடனடியாக உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை. ஆனால் ஒருமுறை உகண்டாவை நேரில் சென்று பார்வையிடுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால் அந்த இடமானது ஒரு சாரணியத்திற்கான இடமாக இருந்த போதிலும்இ நாங்கள் எமது படப்பிடிப்பை ஆரம்பித்தோம். ஆனால் இது உண்மையான திரைப்படத்திற்கான காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறோம் என்கின்ற எண்ணம் இல்லாதே இதனை ஆரம்பித்தோம். எமது ஒளிப்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் இவற்றைப் பார்வையிட்ட போதுதான் உண்மையான திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான காட்சிகளாக இவை இருக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

இது தங்களிடம் காணப்படும் வேறுபட்ட ஒரு எண்ணமாகும். உடனடியாக திரைப்படத் தயாரிப்பில் இறங்க வேண்டும் என்கின்ற தங்களின் தீர்மானமானது அண்மைக் காட்சிகள் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அத்திரைப்படத்தின் எண்ணக்கரு போன்றவற்றிலிருந்து அறிய முடிகிறது. எனினும் திட்டமிட்டு, முன்னேற்பாடுகள் பலவற்றை செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் விளைவுகள் உடனடியாக எவ்வித முன்னேற்பாடுகளுமின்றித் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் விளைவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது வினைத்திறன் குறைவானவையாகவே காணப்படுகின்றன. இது தங்களின் திரைப்படம் ஊடகப் புலப்படுகிறது. இதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

தங்களின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். உண்மையில் நல்ல திரைப்படம் என்பது ஆரம்பத்தில் நாம் அதற்குள் உட்புகுத்தும் அறிவாற்றல் மூலம் உருவாக்கப்படுகிறது. பாடசாலை நாட்களில் நாம் வகுப்பறையில் செய்யும் பயிற்சிகள் இறுதியாக நாம் செய்யும் இறுதித் திட்டச் செயற்பாடுகளை விட வலிமை மிக்கதாக இருக்கும். ஆரம்பப் பயிற்சிகளே இதற்கு அடிப்படையான உந்து சக்தியாகும். இதேபோன்றே ஒரு படைப்பின் ஆரம்பத்தில் இடப்படும் உந்துசக்தியானது இறுதியாக வரும் வினைதிறனின் தரத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது.

நான் சில இளம் திரைப்படத் தயாரிப்பாளுடன் கதைக்கும் போது தமது திரைப்படங்கள் பல இறுதியில் தோல்வியுறுவதாக கவலை தெரிவித்தனர். எவ்வளவுதான் முன்னேற்பாடாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி இவற்றைச் செய்தாலும் இறுதியில் வெறுமைதான் கிடைத்தது என அவர்கள் கூறினார்கள். அதாவது நாம் ஆரம்பித்திலிருந்தே வினைத்திறனுடன் செயற்படும் போது மட்டுமே இறுதியில் வெற்றிகரமான வினைத்திறனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே உண்மையாகும்.

ஆபிரிக்காவில் எய்ட்ஸ் நோயின் தாக்கமானது அதிகளவில் பரவி வருகிறது என்ற செய்தியானது அமெரிக்காவின் ஊடகங்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்படும் ஒரு விவகாரமாக உள்ளது. இது பற்றி அறிவதில் ஈரானிய மக்கள் ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளார்களா?

ஈரானில் எய்ட்ஸ் தொடர்பான அனைத்து வினாக்களும் இது ஒரு இரகசிய  நோய் என்கின்ற போர்வையால் மூடி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஈரானிய பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. என்னைப் பொறுத்தளவில் எய்ட்ஸ் என்பது சர்வதேச ரீதியாகப் பரவி வரும் ஒரு ஆட்கொல்லி நோயாகும். இந்த நோயால் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படும். ஆகவே இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். எய்ட்ஸ் நோய் பிற நாடுகளுக்குள் பரவுவதற்கு அதற்கு நுழைவுவிசை (விசா) தேவையில்லை என்பது துரதிஸ்டவசமாகும்.

தங்களது முதல் படைப்பான ‘ரேஸ்ற் ஒப் ஷெரி’ திரைப்படமானது முற்றிலும் காணொளி மூலமமாகக் குறிப்பாக 35மி மி mm  மூலமே திரையிடப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அறிவுபூர்வமானதாகவும் தரவு ரீதியான காரணங்கள் மூலமும் விளக்க முடியுமா?

 

நான் இப்புதிய டிஜிற்றல் காணொளிக் கருவியை எனது பணிக்கான ஒரு தீவிரமான கருவியாகப் பயன்படுத்தவில்லை. நான் இக்காணொளிக் கருவியை வழமையாக என்னுடன் எடுத்துச் செல்லும் ஒளிப்படக்கருவி போன்றே சில ஒளிப்படங்களை எடுப்பதற்காகக் கொண்டு சென்றேன். ஆனால் உண்மையில் நான் இதனைப் பயன்படுத்த ஆரம்பித்த போது இதன் சாதகத்தன்மைகள் மற்றும் இதனைக் கொண்டு நான் எதையெல்லாம் செய்யலாம் என்பதை உணர்ந்தேன். 35 மில்லிமீற்றர் காணொளிக் கருவியைப் பயன்படுத்திய போதுதான் 30 ஆண்டுகால எனது கலைத்துறைப் பயணத்தை நான் வீணடித்துவிட்டதாக உணர்ந்தேன. அதாவது நான் செய்யும் பணியை இந்தக் கருவி செய்தது. இது ஒரு தொடர்பாடல் கருவி என்பதற்கும் அப்பால் பல்வேறு பயன்பாட்டைக் கொண்டுள்ளதை நான் உணர்ந்தேன். முழுமையான படத் தயாரிப்புக் குழுவின் பணியையும் இக்கருவி உள்ளடக்கியது. மிக நெருக்கமானதும் உடனடி விளைவைத் தரக்கூடியதுமான சிறிய அளவிலான 35 மி.மீ ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தி பணியாற்ற நான் விருப்பம் கொள்கிறேன். எடுத்துக்காட்டாக இந்தக் கருவியின் முன் நடிக்கும் மக்கள் சுதந்திரத்தையும் நெருக்கத்தையும் தமது நடிப்பில் உணர்வார்கள். இக்கருவியானது தொடர்பாடலை ஆதரிக்கிறது எனவும் கூறலாம்.

கடந்த சகாப்தத்தில் (100 ஆண்டுகள்) மிகத் திறமையான எழுத்தாளர்கள் பலர் இனம்காணப்பட்டுள்ளனர். ஆனால் அதேமாதிரி பல மிகத்திறமையான திரைப்படத் தயாரிப்பாளர்கள் என ஒரு நூற்றாண்டில் இனம் காணமுடியாது. ஏனெனில் பெரும்பான்மையோர் அதனைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது எல்லோரும் டிஜிற்றல் ஒளிப்படக்கருவியைப் பேனா போன்று பயன்படுத்துகின்றனர். உம்மால் அகக்காட்சியின் ஊடாகப் பார்க்கும் திறன் இருக்குமானால் நீர் ஒரு இயல்பூக்க திரைப்படத் தயாரிப்பாளர் என்பதைக் குறிக்கும். அதில் எவ்வித அச்சமும் இடையூறும் காணப்படாது. பேனாவை எடுப்பது போல் ஒளிப்படக்கருவியை எடுத்து உமது படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம். டிஜிற்றல் ஒளிப்படக்கருவியின் பயன்பாடானது அடுத்த நூற்றாண்டில் திரைப்படத் தயாரிப்பில் பிரமிக்கத்தக்க எழுச்சியை ஏற்படுத்தும் என நான் இங்கு எதிர்வுகூறுகிறேன்.

தாங்கள்தி விண்ட் கறி  அஸ்’, மற்றும் பி சி ஆபிரிக்கா’, ஆகிய இரு திரைப்படத் தயாரிப்பில் இருந்தவேளையில் வேறு ஒரு திரைப்படமானதி எஞ்ஜினியர்திரைப்படத் தயாரிப்பைத் தொடங்க எது காரணமாக இருந்தது?

 

உண்மையில் புதிய கண்டுபிடிப்புத் தான் இதற்குக் காரணமாகும். இரண்டு படத்தயாரிப்பில் இருந்த அதே நேரத்தில் மூன்றாவது திரைப்படத்தையும் தொடங்குவதற்கு இப்புதிய தொழில்நுட்பமே காரணமாகும். இந்த நவீன ஒளிப்படக்கருவியானது எனது வாழ்வைக் காத்த ஒரு தேவதையாக ஒப்பீடு செய்கிறேன். இதை இலகுவாகக் கையாள்வதன் மூலம் மூளைக்கு அதிக பாரத்தைக் கொடுக்காது திரைப்படத் தயாரிப்பை இலகுவாகச் செய்ய முடியும்.

காணொளி ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பதிவு செய்வதற்கும் திரைப்படக் கருவி மூலம் ஒளிப்பதிவு செய்வதற்கும் இடையில் அடிப்படையில் வேறுபாடுகள் காணப்படுகிறதா? எடுத்துக்காட்டாக ரேஸ்ற் ஒப் ஷெரி என்கின்ற திரைப்படத் தயாரிப்பில் நாங்கள் 35 மி.மீ ஒளிப்படக் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கின்றோம். அதாவது இரு கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒளிப்படக்கருவி மூலம் இவ்வாறான திரைப்படக் காட்சிகளைப் படமாக்குவது சாத்தியமில்லை.

தங்களின் இந்தக் கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது தொடர்பில் பதிலளிப்பதற்கு முன்னர் நான் யோசிக்க வேண்டியுள்ளேன். சிலவேளைகளில் சிக்கலான ஒளிப்பதிவு இருந்தால் அதற்கு நான் 35 மி.மீ ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்துவேன்.  ரேஸ்ற் ஒப் ஷெரி என்கின்ற திரைப்படத்தில் நான் இரண்டு ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி ஒளிப்பதிவை மேற்கொண்டேன். இது எனக்கு பாரியளவில் ஒத்தாசையாக இருந்தது. காட்சிகளை நெருக்கமாகப் பதிவு செய்வதிலும் இவை எனக்கு உதவின. அறைகளுக்குள் எடுக்கப்படும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு 35 மி.மீ ஒளிப்படக் கருவியை விட 16 மி.மீ ஒளிப்படக் கருவியையே நான் பயன்படுத்துவேன். இவ்வாறான சந்தர்ப்பங்களில் 16 மி.மீற்றர் ஒளிப்படக்கருவியின் நுணுக்கமான ஒளிப்பதிவானது எனக்கு பெருமளவில் உபயோகமாகியது. இவ்வாறான இடவமைவுகளைப் பொறுத்தே நான் ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்துகிறேன்.

திரைப்படம் ஒன்றை மற்றவர்களின் கண்களின் ஊடாகவும் நாம் நோக்க வேண்டும் என்கின்ற பேர்சிய கருத்தை தாங்களும் அடிக்கடி கூறியுள்ளீர்கள். திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட காட்சி மற்றும் அக்காட்சிக்கு வெளியே ஆகிய இரண்டு தோற்றப்பாடுகள் தொடர்பான பார்வையாளர்களின் கருத்து என்ன என்பதை அறிவதில் நீங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். தங்களது திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் தாங்கள் ஒரு கலைஞன் என்பதை தனிப்பட்ட வகையில் ஆழமாக உணர்த்தும் அதேவேளையில் தங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகின்றன. இந்த வகையில்இ தாங்கள் பார்வையாளர்களாகிய எங்களின் கண்களை இரவலாகப் பெறும் அதேநேரத்தில் நாங்கள் தங்களின் கண்களை இரவலாகப் பெறுவதையும் தங்களின் திரைப்படக் காட்சிகள் எமக்கு உணர்த்துகின்றன.

இது என்னுடைய நோக்காகும். நான் ஏற்கனவே கூறியதுபோன்று நான் ஒரு திரைப்படத்தை திரைப்படத் தயாரிப்பாளர் என்ற வகையில் தயாரிக்கிறேன். ஆனால் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் போது இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களது மனங்களுக்குள் 100 திரைப்படங்களைத் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு பார்வையாளர்களும் தான் சொந்தமாகத் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க முடியும். இதற்காகவே நான் பாடுபடுகிறேன். சிலவேளைகளில் என்னுடைய பார்வையாளர்கள் எனது திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தமக்குள் எழும் திரைப்படங்கள் தொடர்பாக என்னிடம் கூறுவார்கள். அப்போது நான் அது தொடர்பில் ஆச்சரியப்படுவேன். அவர்கள் என்னிடம் இத்திரைப்படங்கள் தொடர்பாகக் கூறும்போது நான் அவர்களின் திரைப்படங்களின் பார்வையாளர்களாக மாறிவிடுவேன். பார்வையாளர்கள் தமது திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக மட்டுமே எனது திரைப்படம் செயற்பட்டுள்ளது.

உங்களைப் போன்ற பார்வையாளர்களைக் கொண்டுள்ள திரைப்படங்களை நான் தயாரித்துள்ளேன் என்பதில் திரைப்படத் தயாரிப்பாளராகிய நான் பெருமைப்படுகிறேன். இதை எனது அதிஸ்டமாக உணர்கிறேன். இவ்வாறான பார்வையாளர்கள் இல்லாவிடில் நான் திரைப்படம் தயாரிப்பதிலும் எவ்வித நோக்கமும் காணப்படாது. இவ்வாறான வகைப் பார்வையாளர்களை மிக அதிகளவில் கொண்டிருக்கவில்லை என்பது துரதிஸ்டவசமானதாகும். ஆனாலும் நான் இங்கு ‘துரதிஸ்டவசம்’ என்கின்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என நினைக்கிறேன். தற்போது எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். துரித மாற்றம் ஒன்று ஏற்படுகின்றது என்பதையே இது காண்பிக்கின்றது.

நாங்கள் தற்போது நிற்கும் டுர்கமில் தங்களது திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கு போதியளவு பார்வையாளர்கள் உள்ளனர் என்பது இதற்கான ஒரு சான்றாகும். ஆனாலும் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தங்களது திரைப்படங்கள் வர்த்தக நோக்கத்துடன் வெளியிடப்பட்ட போது அவை பெரும் வரவேற்பைப் பெறவில்லை. பேர்க்மன் பெலினி கோடார்ட் போன்ற பிரபலமான உலகத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் போன்றே தங்களின் திரைப்படங்களும் அனைத்துலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெறுவதற்கான காலம் நெருங்கிவிட்டதை நீங்கள் உணர்கிறீர்கள். இவ்வாறான புகழ்பூத்த திரைப்படத் தயாரிப்பாளர்களின் வரிசையில் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தங்களின் பெயரும் பொறிக்கப்படும். அதாவது உலகத் திரைப்பட விழாக்களில் பேசப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக தங்களின் பெயரும் அறிவிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

இவ்வாறான பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் எனது பெயரையும் ஒப்பீடு செய்தமைக்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் மிகவும் அற்புதமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளனர் என நான் நினைக்கின்றேன். ஆனால் அதேவேளையில்இ தற்போது உள்ளது போன்று கடந்த காலத்தில் ஹொலிவூட் திரைத்துறையானது அதிகாரத்துவம் மிக்கதாகக் காணப்படவில்லை. ஆரம்ப ஆண்டுகளில்  ஹொலிவூட் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ரகோன் எனப்படும் இராட்சமிருகத்திற்கு ஒரேயொரு தலை மட்டுமே காணப்பட்டது. ஆனால் தற்போது இதே வகையான இராட்சத மிருகங்கள் ஏழு தலைகளுடன் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே இது ஹொலிவூட்டின் செல்வாக்கையும் வல்லமையையும் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான காட்சிகள் ஹொலிவூட் திரைத்துறைக்கு மேலும் பார்வையாளர்களை அதிகமாக்குகின்றன. இதனால் எமது திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன. இவ்வாறா ஹொலிவூட்  திரைப்படங்களுக்குப் பழக்கப்படும் பார்வையாளர்களை எமது திரைப்படங்களைப் பார்வையிட மாற்றுவதென்பது மிகவும் கடினமான செயலாகும். ஆனால் எமது சினிமாவிற்கு உதவுவதை நிறுத்தும் திசைநோக்கியே ஹொலிவூட் திரைத்துறை சென்று கொண்டிருக்கிறது. தற்போது பார்வையாளர்கள் அதிருப்தியடையும் நிலை காணப்படுகிறது. சில திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு கற்பனைத் திறனை வளர்க்கின்றன. குறித்த திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கான சொந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கக்கூடிய கற்பனையை எமது திரைப்படங்கள் உருவாக்குகின்றன. உங்களைப் போன்றவர்கள் எனது திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கு இக்கற்பனைத் திறன் வளர்க்கப்படுவதே காரணமாகும். ஆனால் ஹொலிவூட்  திரைப்படங்கள் இதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை.

கவிதை நயம்மிக்க சினிமாஅதாவது நாவல்கள் அல்லது நாடகங்களை மையப்படுத்தாது கவிதைகளை மையப்படுத்திய திரைப்படங்களைத் தயாரிப்பதில் தாங்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியிருந்தீர்கள். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

கவிதைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைத்துறையானது ஏழாவது கலைஎன குறிப்பிடப்படுகிறது. இதனை நீங்கள் இரண்டு வழிகளில் மொழிபெயர்க்கலாம். அதாவது இது ஏனைய கலைகளைக் கொண்டுள்ளது எனவும் இது முற்றிலும் கலை வடிவத்தைக் கொண்டுள்ளது எனவும் வகைப்படுத்தலாம். ஆனால்இ கதைகூறல் மூலமான திரைப்படக் கலையே தற்போது அதிகம் வரவேற்பைப் பெறுவதால் ஏனைய கலை வடிவங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

எனது தந்தையார் எனது சிறுபராயத்திலிருந்து எனக்குக் கூறிய றூமியின் கவிதை ஒன்று எனது நினைவில் உள்ளது. நான் இக்கவிதையை பல தடவைகள் கூறியுள்ளேன். இக்கவிதை எனக்கு ஒரு கண்ணாடியைப் போன்றது. இக்கவிதையின் ஊடாக நான் எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களையும் நோக்க முடிகிறது. குறிப்பிட்ட புள்ளியில் நிற்கும் போது இந்தக் கவிதையானது உண்மையைக் கூறுவதாகவே உணர்ந்துள்ளேன். ஆனால் திரைப்படம் என்பது கவிதையைப் போன்றதல்ல. திரைப்படம் என்பது சரிசெய்யப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன். இது உங்களுடன் இணைந்து வளர்ந்திருக்காது. அதாவது கவிதையானது உங்களுடன் இணைந்து வளர்வதிலும் உங்களுக்குள் மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் ஏழாவது கலை என்கின்ற கருத்தியலைப் பார்க்கும் போது இது ஏனைய அனைத்துக் கலை வடிவங்களுக்கும் முரணானதாகும். அதாவது வர்ணம் தீட்டுதல் மற்றும் இசை போன்ற ஏனைய கலைகள் மாற்றமுற்றுள்ளன. வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆனால் சினிமாவைப் பொறுத்தளவில் இந்த மாற்றம் இன்னமும் இடம்பெறவில்லை. நான் இங்கு ‘கவிதையை மையப்படுத்திய சினிமா’ என்பதன் ஊடாக கவிதையுடன் திரைப்படம் தயாரிக்கப்படுதல் என்றோ அல்லது மனிதநேயம் மிக்க ஒரு செய்தியாகவோ இதனை அனுப்புவது தொடர்பாக நான் இங்கு கதைக்கவில்லை. சினிமா என்பது கவிதை போன்று கவிதைக்கே உரித்தான சிக்கலான பண்புகளைக் கொண்டதாக கவிதையின் முக்கியத்துவத்தை அதிகம் பெற்றதாக இருக்க வேண்டும் எனக்கூறுகிறேன். அதாவது கவிதை என்ற பிரிசத்தைப் (முப்பட்டை) போன்றே சினிமாவும் மாறவேண்டும் எனக் கூறுகிறேன்.

பிரிசத்தைப் போன்ற சினிமாவானது நிலைத்து நிற்கக்கூடிய தன்மையைக் கொண்டது. எந்தவொரு சூழலிலும் எந்தவொரு கொடுக்கப்பட்ட காலப்பகுதியிலும் இதனை நீங்கள் வேறுபட்ட வழியில் வெளிக்கொணர முடியும். இவ்வகையான சினிமா மூலம் மக்கள் பல்வேறு விடயங்களைத் தாமாகவே கண்டறிய முடியும். நீங்கள் இதனை பல்வேறு வழிகளில் கூறினால் மக்கள் தமக்கான கற்பனைத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்வார்கள். சினிமா என்பது ஏனைய கலைகளைப் பின்பற்ற வேண்டும் என நான் கருதுகிறேன். ஆனால் பார்வையாளர்களும் திரைப்படங்களின் ஊடாக வெறுமனே பொழுதுபோக்குகளை மட்டும் எதிர்பார்க்கும் போது இவ்வாறான கலைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். கவிதைகளை அவர்கள் விளங்கிக் கொள்ளாதபோதும் கவிதைகள் கெட்ட கவிதைகள் என குற்றம் சொல்லாதபோதும் அவை தொடர்பில் விட்டுக்கொடுப்பு மனப்பாங்குடன் நடப்பது போன்று சினிமா தொடர்பிலும் இவ்வாறான மனப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் இசையை ரசிக்கும் போது அவர்கள் அங்கு கதை கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. அதேபோன்று மக்கள் ஒரு கருத்தியல் சார் ஓவியத்தைப் பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒன்றுடன் இதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். அதாவது இவ்வாறான ஓவியங்களின் ஊடாக உடனடி யதார்த்தம் என்பது கிடைக்காவிட்டாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதேபோன்று இந்த மக்கள் திரைப்படத்தைப் பார்வையிடும் போதும் அதை உள்வாங்கப் பழகிக் கொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.

“த்றூ ஓப் த ஒலிவ் ட்ரீஸ்“, “க்ளோஸ் அப்” போன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும் போது எழுதப்பட்ட உண்மையான திரைவரிகளுக்கும் ஆனால் அவை ஒளிப்பதிவு செய்து இறுதித் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட போது பேசப்பட்ட வரிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவது தொடர்பில் தங்களின் கருத்து என்னஇத்திரைப்படங்களைத் தயாரிக்கும் போது உட்புகுத்தப்பட்ட சிறப்பான விடயங்கள் தொடர்பில் கேள்விகளை வினவி அவற்றுக்கு களங்கத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

 

இவ்வாறான கேள்விகளை வினாவுவததையிட்டு நான் தங்களுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த இரவு நான் “க்ளோஸ் அப்”   திரைப்படத்தைப் பார்வையிட்ட போது உண்மையில் நான் எந்த திரைப்பட வசனங்களை நடிகர்களிடம் கூறினேன் என்றோ அல்லது அவர்கள் என்னிடம் என்ன கூறினார்கள் என்றோ என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. அதாவது இரு தரப்பினரும் முழு அளவில் இத்திரைப்படத்திற்குள் ஒன்றிப்போனோம் என்பதே உண்மை என நான் நினைக்கிறேன். இதன்காரணமாகவே திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவர்களது திரைப்படங்களிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இவ்வாறான ஒரு அனுபவத்தையே நான் கடந்த இரவு பெற்றுக்கொண்டேன். பார்வையார் போன்று நானும் இத்திரைப்படத்தைப் பார்வையிட முடிந்தது.

தமிழில்: திருமதி சிவசக்தி ஜெயம் மற்றும் நித்தியா சுரேஷ் -இலங்கை

 

00000000000000000000000

நித்தியா சுரேஷ்அபாஸ் கியறொஸ்ரமி பற்றிய அறிமுகம்:

தெஹ்ரானைப் பிறப்பிடமாகக் கொண்ட கியறொஸ்ராமியின் கலைத்துறை அனுபவம் ஓவியம் வரைதலில் ஆரம்பமாகி தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கலைத்துறைக்குப் போக முன் 18 வயதில் ஓவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்றார். மேலும் அவர் போக்குவரத்து காவற்துறை அதிகாரியாக வேலை செய்து கொண்டு சிறபாக் டிசைனில் மேலான படிப்பைப் பெற்றார்.1960ல் விளம்பரத்துறையில் ஓவியராகவும் வடிவமைப்பாளராகவும் விளக்குனராகவும் பதவியேற்று விளம்பரங்களை புத்தாக்கத்துடன் உருவாக்கினார். ஈரானிய தொலைக்காட்சியில் 150 விளம்பரங்களை 1962-1966 இற்கு இடையில் உருவாக்கினார்.1960 இன் பிற்பகுதியில் இவர் படங்களுக்கு தலைப்புக்கள் இடுவதிலும் குழந்தைகளுக்கான புத்தகங்களில் விளக்கப்படங்கள் வரைவதிலும் ஆர்வம் காண்பித்தார்.

பின்பு அவர் ஈரானிய சினிமாத் துறையில் இயக்குனராகவும் திரைக்கதைவசனம் எழுதுபவராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.1970ல் உயிர்ப்பான திரைப்பட இயக்குனராக இருந்தபோது 40இற்கு மேற்பட்ட படங்களை இயக்கினார். இவற்றுள் விவரணப்படங்களும்இ குறும்திரைப்படங்களும் அடங்கும். இவரது புகழ்மிக்க திரைப்படங்களான கோல்கர் ற்றியோலொஜி (1987-94), குளோசப் (1990), ரேஸ்ற் ஒப் ஷெரி (1997) போன்றவற்றில் ரேஸ்ற் ஒப் ஷெரி -ஆனது கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதைப் பெற்றது. மேலும் இத்தாலியில் சேர்ட்டிபிக்கட் கொப்பி (2010) எனும் திரைப்படத்தையும் யப்பானில்  சம்வண்  இன் லவ்  (2012) எனும் திரைப்படத்தையும் வெளியிட்டார்.

இவர் பல்வேறு வகிப்பாகங்களைத் தனது கலைத்துறை வாழ்க்கையில் மேற்கொண்டார். திரைக்கதை வசன எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், வடிவமைப்பாளர், கவிஞர்இ படப்பிடிப்பாளர், ஓவியர், விளக்குனர் எனப் பல்துறை ஆளுமைகளை இவர் கொண்டுள்ளார். படத்தயாரிப்பாளர்களின் தலைமுறை வரிசையில் இவர் ஒரு முக்கிய இடத்தை வகிப்பது மட்டுமன்றித் திரைப்படத் தயாரிப்பு முன்னோடிகளான மசாட் கிமியை ,  ஷோஹர்ப் ஷஹித் ஸலெஸ்,டறிஸ் மெஹெர்ஜி,பெஹ்ரம் பெசாய்,  நாஸர் ரக்வாய்,பார்விஸ் கிமாவி வரிசையில் தானும் தனக்கான இடத்தைத் தக்கவைத்தார். இவர்கள் உரையாடல் கவிதை உருவகக் கதைகூறல் என்பவற்றில் பொதுவான நுட்பங்களைத் தத்துவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள்.

கியறொஸ்ராமி குழந்தைகளைக் கதாநாயகர்களாக மையப்படுத்தி கிராமிய வாழ்க்கையில் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி ஸ்டேஷனரி மௌன்டெட் ஒளிப்படக் கருவி மூலம் திரைப்படங்களைத் தயாரித்து புகழ்பெற்றார். அவர் தனது திரைப்படங்களில் கருப்பொருள், உரையாடல், தலையங்கங்களில் பேர்சியக் கவிதைகளைப் பயன்படுத்தி தயாரித்தார். இவரது திரைப்படங்களில் சிலேடைத் தன்மையும் வழமைக்கு மாறான எளிமைத்தன்மையும் காணப்படும். வாழ்வும் சாவும் மாற்றமும் தொடர்ச்சித்தன்மையும் போன்ற எண்ணக்கருக்களை கருப்பொருளாகக் கொண்ட படைப்புக்களில் கூடிய ஆர்வம் காட்டினார்.2000 ஆம் ஆண்டு வரை எழுபதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றதோடு உலகளாவிய ரீதியில் பார்வையாளர்களினதும் விமர்சகர்களினதும் பாராட்டுக்களைப் பெற்றார்.

(Visited 45 times, 1 visits today)
 
நித்தியா முரளி

மொழிபெயர்ப்பு நேர்காணல்-நித்தியா சுரேஷ்

‘நீங்கள் ஏன் மத்திய கிழக்கின் மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?’-நற்றாலியா சன்ஞா நீங்கள் எப்போதும் ஒரு பத்திரிகையாளராக, செய்தியாளராக மற்றும் ஒளிப்படக் கலைஞராக வரவேண்டும் என விரும்பினீர்களா? ஆம், நீண்டகாலமாக […]