நேர்காணல்-மதிசுதா-கோமகன்

“நாம் தோற்றுப் போன இனமல்ல. எவ்வளவு தான் விழுந்தாலும் எப்போதும் எம் கையில் இருந்து பேனை விழுந்ததில்லை. இப்போது சுதந்திரமாக கமராவும் அளிக்கப்பட்டுள்ளது.”

ஓர் மருத்துவ மாணவனாக இருந்த உங்களை எப்படி திரைத்துறை வசப்படுத்தியது?

எம் வம்சாவளியில் வில்லுப்பாட்டு, சங்கீதம், பாடகர் என பலர் இருந்திருக்கிறார்கள். தலை முறை கடத்தப்பட்ட ஏதோ ஒன்று தான் எனக்குள் உருவாகிக் கொண்டதோ தெரியவில்லை. காரணம், நான் பாடசாலைக் காலத்தில் கூட நாடகங்கள் எதுவும் நடித்ததில்லை. ஆனால் இது ஒரு திருப்பு முனை தான் அன்று படிக்க காசிருந்தால் நான் அத்துறைக்குள்ளேயே தொடர்ந்திருப்பேன். சினிமா நெடியே என்னில் மணத்திருக்காது. கல்வியில் தோல்வியுற்ற நிலையில் கூலி வேலைக்கு போகும் காலத்தில் வேலை நேரம் தவிர பயங்கர மன உளைச்சலாக இருக்கும். வன்னியால் வந்ததென்று நண்பர் கூட பெரிதாக எங்கும் சேர்த்து போகமாட்டார்கள். அப்போது முழுக்க என் உலகம் சினிமா படங்கள் தான். சில வேளை அது தான் ஆழமான ஒரு சினிமா நுட்பத்தை எனக்குள் புகுத்தியதோ தெரியவில்லை. காரணம், நான் இதுவரைக்கும் உதவி இயக்குனராகக் கூட நின்றதில்லை.

இன்றைய காலகட்டத்தில் ஈழத்து திரைப்படத்துறையானது புலம் பெயர்ந்த கட்டமைப்பிலும் தாயகத்து கட்டமைப்பிலும் என்று இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. ……….?

ம்ம்… இரு வேறு களங்களிலும் கட்டமைப்பிலும் படைப்புக்கள் பயணிப்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரே ஒரு மனவருத்தம் ஈழம் என்ற ஒன்றுக்கு வெளியே சிதறிப் போய் உள்ள அத்தனை நாட்டு புலம்பெயர் படைப்பாளிகளும் ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்புக்குள் (விதிவிலக்குகள் ஒரு சிலவே)பயணிக்க கூடியதாக இருக்கும் போது தாயகத்தில் அப்படி ஒரு கட்டமைப்பை தோற்றுவிப்பது சாத்தியமற்றதாக இருக்கின்றது.

நேரஅவகாசமோ ஒருங்கிணைப்போ சாத்தியமில்லாத புலம்பெயர் தளத்தில் குறிப்பாக கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்குனர்கள் தொட்ட எல்லையை கூட சுயாதீனப்படைப்பாளிகளான தாயகத்தில் உள்ள எம்மால் கட்டமைக்க முடியாமல் உள்ளது. அநேகமானவர்கள் எமக்கான சினிமா ஏற்கனவே கட்டமைக்கப்பட்டது என்பதை மறந்து போய் தென்னிந்திய மொழியை பேசிக் கொண்டு அவர்கள் வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டு போகிறோம். இதற்கு அவர்களுக்கு திணிக்கப்பட்ட சினிமாவாக தமிழ்நாட்டு படங்கள் இருந்தாலும் அதை விட்டு வெளியே வந்து மற்றவற்றை தேடிப்பார்க்கவும் எம்மில் பலர் தயாராக இல்லை.

யாழ்ப்பாணத்தில் உலகத்திரைப்பட விழா என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த திரைப்பட விழாவானது ஈழத்து திரைப்படத்துறையில் எந்தவகையான அதிர்வை ஏற்படுத்தும் என்று உணருகின்றீர்கள்?

அங்கு கலைப்படங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் மசாலாவுக்குள் திளைத்துள்ள எம்மவர்க்கு கலைப்படங்கள் எந்தளவு உலக அளவில் போற்றப்படுகிறது என்ற நிஜத்தை தெளிவுபடுத்துவதுடன் இணையங்களில் தேடிப் பார்க்க முடியாத நல்ல பல படங்களை அறிமுகப்படுத்தும்.

வணிகப்படங்களுக்கு இலட்சம் இலட்சமாக கொட்டி தலையில் துண்டைப் போட்டு விட்டு இருப்பதை விட நல்லதொரு களத்தில் நல்லதொரு கலைப்படத்தை ஒரு சில இலட்சங்களுக்கே எடுத்து விட்டு உலகம் வரை அங்கீகாரம் பெற முடியும் என்ற அறிமுகத்தை கொடுக்கும்.

அவ்விழா தொடர்பாக பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றும் ஒரு பக்கம் விமர்சனம் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை நாம் வெளியே வருவதற்கும் அனுபவமுள்ளவரின் அறிமுகங்கள் பெறுவதற்கும் நல்லதொரு களமாகவே அதைப் பார்க்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச திரைப்பட விழா பற்றி ………..?

இந் நிகழ்வு தொடர்பாக பலதரப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது. என்னால் இதற்கு விமர்சனமாக சொல்லக் கூடியது, திலீபன் அண்ணாவின் நினைவு நாட்களுக்குள் மட்டும் இதை வைப்பதே. அதற்கு நேரடியாக விளக்கம் கேட்டபோது பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் அடுத்த முறையும் இதே நிகழச்சி நிரலே தொடரும் ஆயின் நான் புறக்கணிக்கிறேன் என தெரிவித்திருந்தேன்.

நீங்கள் என்னைப் பார்த்து நீங்கள் யார் உங்கள் தொழில் என்ன எனக் கேட்டால் என் பதில் “நான் ஒரு திரைப்படைப்பாளி. என் தொழில் நல்ல படம் எடுப்பது” என்றே சொல்வேன். இது தான் என் இலட்சியம் எனும் போது என் இலக்கு என் கண்ணுக்கு தெளிவாகவே தெரிகிறது. அதனால் என் முன்னே வரும் முட்டுக்கட்டையை ஒன்றில் விலத்திப் போவேன் அல்லது ஏறிக் கடந்து போவேன் இதைத் தான் வென்றவன் அனைவரும் செய்தான். வென்ற பின்தான் தன் பாதைக்கான காரணம் சொன்னான்.

இறையாண்மைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற ஒரு நாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் நான் இதை மீறினால் இன்னோர் தேசம் போக வேண்டும். அங்கு அவன் அதன் வாழ்வியலையோ (இன்று புலம்பெயர் தேசத்து சகோதரின் சினிமாக்கள் வரையறுக்கப்பட்டிருப்பது போல) அல்லது ஒரு புனைவுப் படத்தையோ தான் எடுக்க முடியும். அதை நான் விரும்பவில்லை. இந்த மண்ணில் நான் வாழ்தலுக்கான தற்காப்பு எனக்கு தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றாற் போலவே பயணிக்கிறேன்.

என் தனிப்பட்ட அரசியலில் ‘புறக்கணித்தல்’ என்ற வழக்கத்தை நான் அதிகம் பயன்படுத்துவதில்லை. உங்களுக்கு என்னுடையது ஒன்றைக் காட்ட வேண்டும் என்றால் உங்கள் அருகில் வராமல் எப்படி என்னால் காட்ட முடியும்?

சர்வதேச திரைப்பட திரைவிழா என்பது தேடல் உள்ளவருக்கு கிடைத்த நல்லதொரு சந்தரப்பமாகவே நான் பார்த்தேன். தனது நடத்தையிலும் வாழ்க்கையிலும் தெளிவுள்ள சுயம் மாறத ஒருவனுக்கு எங்கு போனாலும் அப்படியே தானே இருப்பான். அதனால் இத்திரைவிழா தொடர்பான விமர்சனவாதிகளின் விமர்சனம் சரியான நோக்கத்தில் பயணிக்கும் எந்த படைப்பாளிகள் மீதும் எத்தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தாயகத்தில் நடைபெறும் விருதுகளுக்கான போட்டிகள் உங்களுக்கு நிறைவை தந்துள்ளனவா?

இல்லை….. ஒரு சிலதை தவிர, பொதுவாகவே தமிழ் தளத்தில் நடக்கும் விருதுப் போட்டிகளில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. சில போட்டிகளுக்கு வரும் நடுவர்கள் தமது தனிப்பட்ட ரசனைக்குட்பட்டதை தான் விதிமுறை என திணித்து அதற்குட்பட்ட படங்களைத் தான் தெரிவார்கள். சில போட்டிகள் தனித்துவம் பேணுகிறோம் என்று பொதுவான விதிமுறைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

அதற்கப்பால் தமது நிறுவன விளம்பரப்படுத்தலுக்கு சாதகமாக விருது போட்டிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் ஒன்று எமக்குள் தலை எடுத்துள்ளது.இதில் எனக்கு உடன்பாடிருந்தாலும் அவர்கள் பாவிக்கும் நுட்பம் தான் நகைப்பிற்குரியது. அது எப்படியானதென்றால் அத்தனை விருதுகளில் ஒருவருக்கு ஒரு விருது மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள் காரணம் பலருக்கு கிடைத்தால் தான் பலர் பகிர்வர் பலருக்கு விளம்பரமாகும் என்பதால். ஆனால் இந்த விதிமுறைக்கு வராமல் நேர்மையாக தம் விளம்பரப்படுத்தலுக்காக நிகழ்வு நடத்தும் நிறுவனங்களும் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் எம்மவர்களது விருதுப் போட்டிகளில் சோகம் சார்ந்த கதைகளைத் தான் முன்னிலைப்படுத்துவதால் நகைச்சுவை, பயங்கரம் போன்ற வகைக்குரிய படங்களே யாராலும் எடுக்கப்படாமல் எம் சினிமா ஒரு வட்டத்துக்குள் நின்று சுழல ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் 3 நகைச்சுவைப்படங்களைச் செய்த நானும் இதற்குள் விதிவிலக்கல்ல.

இன்று ஒருசிலர் ‘படித்தபின்னர் படம் எடுங்கள்’ என்று சொல்கின்றார்களே ……?

என் நண்பர்கள் இதை நக்கலாகவே சொல்வார்கள். ஏனென்றால் நான் மட்டுமல்ல என் குழுவில் இருக்கும் யாருமே இத்துறையை முறையாகக் கற்கவில்லை. அதே போல இவர்கள் கற்க வேண்டும் என்று சொன்ன வரையறையை சொன்ன எவரும் கற்று விட்டு படம் எடுக்க வரவில்லை. அவர்களும் சுயாதீனமாகவே தோற்றம் பெற்றார்கள்.

இதற்காக சுயாதீனமாக யாரும் செய்து விடலாம் என்றில்லை. அடிப்படைகள் தெரிந்திருக்கத் தான் வேண்டும். அதற்காக இன்னொருவர் பாதையை பின்பற்றித்தான் போக வேண்டும் என்று திணிப்பது ஒரு சுயாதீனப்படைப்பாளியின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.

அதே போல சில மூத்தவர்கள் தனியே படித்து படம் எடுங்கள் என்ற சொல்லை தனியே சொல்லி விட்டு விளக்கம் கொடுக்காமல் செல்வதும் தவறான கண்ணோட்டமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு படைப்பாளி அதிகமான நூல்கள் படிக்க வேண்டும். சமூகத்தில் உள்ள மனிதரிலிருந்து மரங்கள் வரை சகலதையும் படிக்க வேண்டும். அப்படி படிக்க சொன்னால் அதில் நிச்சயம் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

ஆர்தர் சீ கிளார்க் வாழ்ந்த நாட்டில் ஓர் விஞ்ஞானப் புனைவு திரைப்படம் எடுக்கும் முயற்சி ஏற்படவில்லை. இதற்கு அடிப்படையில் என்ன காரணம் என்று எண்ணுகின்றீர்கள்?

விஞ்ஞான புனைவுகள் உருவாக்கப்படவில்லை என்றில்லை உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அது பூரணமானதாக இருக்கவில்லை என்றே சொல்லலாம். அதே போல படைப்பாளி பக்கமும் சில இடங்களில் நியாயம் இருக்கிறது அந்த படைப்பாளிக்கு அந்தளவு வளமோ பணமோ இல்லாமலும் இருக்கலாம்.

எனக்குக் கூட விஞ்ஞான புனைகதைகளில் ஆர்வம் இருந்தாலும் முடித்து விட்டு பார்க்கும் போது என்னிடம் இருக்கும் சமூகக் கதை ஒன்று பெறுமாதியானது போல இருக்கும். அதை அப்படியே போட்டு விட்டு மீண்டும் சமூகக் கதைகளை தூக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பக்கத்தை நாம் தொட்டே தீர வேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது.

தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழம் சார்பான குறும்படங்கள் ஆகட்டும் திரைப்படங்கள் ஆகட்டும் அதன் உண்மைத்தன்மை என்பது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

தாயகக் கதைக்களம் என்பது உலகின் அத்தனை போர்கடந்த தேசங்களில் மிக முக்கியமான ஒரு இடமாகும். ஆனால் வெளிநாட்டில் உருவாக்கும் படங்களில் அந்தந்த இடங்கள், மக்கள், பண்பாடு அப்படியே பிரதிபலிக்கும். ஆனால், அருகில் உள்ள தமிழகத்தில் இருந்து கூட எம்மை பிரதிபலிக்க அவர்களால் முடிவதில்லை. மாங்குளத்தில் மலையைக் காட்டிவிட்டு இது தான் ஈழம் என்றால் ஈழத்தவன் என்ன மடையனா? அதிலும் பேசும் மொழி ஒரு கொஞ்சம் கூட ஒட்டாமல் இருக்கும். எந்த இடத்தை காட்ட படம் எடுக்கிறோமோ அந்த இடத்தவராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத படைப்பு என்பது படைப்பே அல்ல.

பல படங்களில் ஈழம் விளம்பரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்பதை மறுக்க முடியாது. உதாரணத்துக்கு பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது ‘ராஜபாட்டை’-யில் ஏன் அந்த காதல் பாடலுக்குள் அப்படி ஈழத்தை திணித்து ஒப்பீட்டீர்கள்? என்றதற்கு அவர் சொன்ன பதில் ”காதல் பாடல் தான் பலரைச் சென்றடையும். அதற்குள்ளால் ஈழத்தை பலருக்கு புகுத்துகிறேன்” என்றார்.

ஈழத்து திரைப்படத்துறையில் அல்லது குறும்படத்துறையில் ஓர் இயக்குனருக்கான அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டதாக நீங்கள் உணருகின்றீர்களா?

இதற்கான பதில் மிகவும் மனவருத்தத்திற்குரியதே. உண்மையில் ஒரு இயக்குனர் தயாரிப்பாளரைப் பிடித்து விட்டால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு வேலைக்கும் ஆளை நியமித்து விட்டு தான் ஒரு உருவாக்குபவராக இருந்து படத்தைச் செதுக்கிக் கொள்வான். ஆனால் இங்கோ ஓடுப்பட்டுத் திரிந்து நடிப்பவரில் இருந்து நொடிப்பவர் வரை கெஞ்சிக் கூத்தாடி ஒழுங்கமைத்து முடிய படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரும் அவனை ஒரு கையாளாகவே பார்ப்பார்கள்.

திரைப்படத்தில் நடிக்க கெஞ்சிக் கேட்டு சந்தர்ப்பம் தேடி வருபவர்கள் கூட 2 நாள் படப்பிடிப்பு முடிய இயக்குனர் கெஞ்சிக் கேட்டால் தான் நடிக்க வருவார்கள். திரைப்படங்களில்  பணியாற்றும் நடிகர் தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் காசு போய்ச் சேரும். ஆனால் இந்த இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கு மேலால் தன் பணத்தில் தான் போட வேண்டியிருக்கும்.

திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று பாராட்டுக்கிடைத்தால் தன் உழைப்பை பற்றி விபரித்து போகும் ஒரு படைப்பாளி மீது ஏதாவது குறை வந்தால் மட்டும் தன் விரலை இயக்குனர் மேல் நீட்டுவார். ” அவர் சொல்லித் தான் இப்படிச் செய்தேன்” என்று இயக்குனரில் பழி விழும்.

ஆக மொத்தத்தில் இங்கு திரைப்படத்துறையில் பங்காற்றிய நடிகரில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்தவர் பெறும் அங்கீகாரத்தை விட இயக்குனருக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகக் குறைவானதே.

வருங்காலங்களில் ஈழத்தில் முழுநீள திரைப்படங்களின் போக்கு அல்லது வீச்சு எப்படியாக இருக்கும்?

முழு நீளப்படங்கள் என்றாலே முதல் கண் முன் உறுத்தி நிற்பது பணம் தான். குறும்படங்களைப் போல இருக்கும் பணத்தை வைத்து சமாளித்து எல்லாம் எடுக்க முடியாது. ஒரு குறும்படத்துக்காக நண்பர்கள் தமது நேரம் வேலை எல்லாம் விட்டு விட்டு வருவார்கள் ஆனால் முழு நீளப்படத்துக்கு சின்ன வருமானம் கூட இல்லாமல் காலத்தை வீணாக்க எவராலும் முடியாதே. அதிலும் வரும் தயாரிப்பாளர்கள் எல்லாமே 2000 ம் ஆண்டளவில் தென்னிந்திய சினிமாவில் இருந்த நடைமுறையில் தான் படத்தை எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அவர்கள் சினிமாவே அதை மறந்து அடுத்த கட்டத்துக்கு போய் விட்டது.

எது எப்படி இருப்பினும் இதுவும் ஈழ சினிமாவின் ஆரம்பக் கட்டம் தான் முடிந்த வரை இயங்கிக் கொண்டிருப்போம். யாரும் எதையும் கற்றுப் பிறக்காமல் தானே இது வரை பெற்றோம் இதைப் பெற்ற எம்மால் இன்னும் பெற முடியாத. பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது அது வரை உழைப்போம். அந்த உழைப்பாளிகளால் மாத்திரமே இங்கு வெல்ல முடியும்.

பொதுவாகவே இரண்டு வகையான படைப்பாளிகளை இங்கு நோக்கலாம். ஒன்று பிரபலம் பெறுவதற்காக இயக்க வந்தவர்கள். இரண்டாவதாக சாதிப்பதற்காக இயக்க வந்தவர்கள். ஆனால், சாதிக்க வந்தவர்களிடமும் பெயர் பெற வேண்டிய ஆசையுள்ளது. பிரபலத்துக்கு வந்தவர்களிடமும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் ஒவ்வொன்றின் வீச்சும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் சாதிக்க வந்தவனின் தேடல் புதியன நோக்கியதாகவும், பெயருக்கு வந்தவர்களின் நோக்கம் விளம்பரங்களைத் தேடியதுமாகவே அதிகளவில் இருக்கும். ஆனால் இது இரண்டும் இல்லாமல் சினிமாவில் பயணிக்கவும் முடியாது.

சாதிக்க வேண்டும் என்று வீச்சு அதிகம் உள்ளவர்களால் விரைவிலேயே ஒரு ஈழசினிமா கட்டமைக்கப்படும் என்பது எனது முழு நம்பிக்கையாகும்.

இசைப் பேழையில் உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது?

இதுவரை ஒரு பாடல் இயக்கியதுடன் 3 பாடலில் மட்டும் நடித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படத்தை செய்து காட்ட அவ்வளவு பணம் தேவையில்லை. போனில் கூட செய்து விட்டுப் போகலாம். ஆனால் பாடல் என்று வரும் போது அதற்கான தரம் நிச்சயம் பார்க்கப்படும். அதற்கான செலவு என்பது சற்று அதிகம் தான். ஆனால் ஒரு திரைப்படத்துடன் ஒப்பிடும் போது அங்கே சட்டதிட்ட நுணுக்கங்களில் பல தளர்விருப்பதை தொழில்நுட்பவியலாளர்களிடம் விபரமாக அறியலாம்.

ஒருபாடல் இயக்கியதன் பின்னர் எனக்கு பாடல் செய்வதில் நாட்டம் இருந்தாலும் பாடலோடு வந்தவர்களது பாடல்களில் இருந்த சின்னச் சின்ன திருத்தங்களைக் கூட திருத்தித் தர தயாராக இருக்கவில்லை. எப்போதுமே இயக்குனர் ஒருவனால் தான் உணர்ந்து பார்த்து அனுபவிக்காத விடயம் ஒன்றை இயக்க முடியாது இது எனக்கு படைப்புகளோ தயாரிப்பாளரோ கிடைக்க மிகப் பெரும் தடையான விடயங்களில் ஒன்று, ஆனால் இவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் ரசிக்காத ஒன்றைச் செய்ய நானும் தயாராக இல்லை.

போருக்குப் பின்னரான ஆண் பெண் போராளிகளது இருப்பு எப்படியாக இருக்கின்றது?

என்னைப் பொறுத்தவரை எனக்கு மிக சிக்கலான கேள்வி இது. ஏனென்றால் எந்த பரப்பைப்பற்றி பேசுவது எனத் தெரியவில்லை தன் மக்கள் நிம்மதியாய் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்று இளமை, கல்வி, சுகபோகம், குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து போனவர்கள் சிதறடிக்கப்பட்ட பின்னர் தன்னம்பிக்கையோடு மீள எழுந்து வந்தவர்கள் பற்றிப் பேசவா?

மீளவே முடியாமல் பொருளாதாரத்தால் தாக்கப்பட்டு பிச்சைக்காரரானவரைப் பற்றிப் பேசவா? உளத் தாக்கத்தால் உழல முடியாமல் குடிகாரரானவரைப் பற்றி பேசவா? இத்தனையும் எந்த மக்களுக்காக இழந்து போனார்களோ அவர்களாலேயே போராளி பழகினால் பயம் என ஒதுக்கப்பட்டகதைகளைப் பற்றிப் பேசவா? வாழவே வழியில்லாமல் தற்கொலை செய்தவரைப் பற்றிப் பேசவா? இத்தனைக்கும் மேலால் இந்தனை தியாகத்தைச் செய்திருந்தாலும் சிலருக்கு புலிகளின் தலைவர் மேல் இருந்த காழ்ப்பால் ஒட்டுமொத்த புலிகள் இயக்கத்தின் மேல் சுட்டப்பட்ட வன்மத்தால் உலக அரங்கில் அவமானப்பட்டுப் போய் நிற்கும் தியாகப் போராளிகள் பற்றிப் பேசவா? இப்படி பேசவென பலர் அதற்குள் இருக்கிறார்கள்.

ஓர் திரைப்படத்தின் வெற்றியை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஒரு திரைப்படம் என்ன நோக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை தெளிவாக அடையுமாயின் அத்திரைப்படம் வெற்றிப்படமாகும். ஒரு இயக்குனர் தனது தனித்துவத்துக்கும் திருப்திக்கும் என ஒரு படம் எடுத்து அது அதை பூர்த்தி செய்திருக்கலாம். இன்னொருவர் பணவருவாயை நோக்கி ஜனரஞ்சகமாக செய்து பணமீட்டியிருந்தாலோ அல்லது மற்றொருவர் விருதை நோக்காக வைத்து ஒரு படத்தை செதுக்கி அவ்வடைவை அது பெற்றிருந்தாலோ அத்திரைப்படம் வெற்றிப்படம் தான். ஓடும் நாள், வசூல் எல்லாம் பொது அளவீடாகக் கருதப்பட்டாலும் அது எல்லாப்படத்திற்கும் பொருந்தாது.

உங்கள் குறும்படமான ‘தழும்பில்’ உங்கள் அனுபவங்கள் எப்படியாக இருந்தன?

தழும்பு குறும்படத்துக்கான மூலக்கதை பிரான்ஸில் வசிக்கின்ற எழுத்தாளரும், கவிஞருமான நெற்கொழுதாசனுடையது. ஆனால் திரைக்கதையில் சில மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையிருந்தது. அதுமட்டுமல்லாமல் என் வாழ்வின் பல சம்பவங்களோடு அக்கதை ஒத்துப் போனதாலேயே அக்கதை என்ன மிகவும் ஆழமாய் தாக்கியது. அதில் நான் தான் நடிக்க வேண்டும் என முதலே முடிவெடுத்து விட்டேன்.

என் சமூகத்துக்கு எதிராக உருவாக்கப்படும் கதை என்பதற்கப்பால் மூலக்கதையில் ஒரு வசனம் இருக்கிறது. அப்போராளி இறுதிக்காட்சியில் ஆற்றாமையில் சொல்வான் ”இவங்களுக்காகவா இவ்வளவையும் இழந்தன்” என்பான். ஆனால் படத்தில் நான் அந்த வசனத்தை வைக்கவில்லை. காரணம் இது ஒரு காணொளி ஊடகமாக வேற்று இனத்தவருக்கும் நாட்டவர்க்கும் செல்லலாம் என எதிர் பார்த்தேன். அதே போல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதன் மூலம் போய்ச் சேர்ந்திருந்தது. அந்தவசனமானது என் சமூகத்துக்கும் ஒட்டு மொத்த போராளிகளுக்கும் இடையில் இடைவெளி உண்டு என காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் காட்சியாக மட்டுமே திரையில் விட்டேன்.

அந்த நேரம் ஜனாதிபதியாக இருந்தவரின் கட்டுப்பாட்டுக் காலம் என்பதால் இப்படியான கதையை கையில் எடுப்பது அச்சுறுத்தலானது தான் ஆனால் மனதுக்குள் இருந்த கொஞ்சத் துணிவை வைத்துத் தான் படைப்பைக் கையில் எடுத்தேன். அப்படம் பார்த்த பல முன்னாள் போராளிகள் என்னுடைய தொலைபேசி இலக்கம் தேடிப் பெற்றுப் பேசுகையில் தான் என் படைப்பின் வெற்றியை நான் முழுதாய் உணர்ந்தேன்.

அண்மையில் கேன்ஸ் திரைப்படவிழாவில் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட தீபன் திரைப்படத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

எம் இனத்தின் அடையாளம் ஒன்றை உலக அரங்கில் இருப்பதாக அடையாளம் காட்டிய படமாகும். அத்துடன் ஷோபா அண்ணா நடிகனாக மிக மிக சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், அவரில் ஒரு போராளியை என்னால் பார்க்க முடியவில்லை. வழமையாக ஒரு சாதாரண போராளி முன்னுக்குக் கூட யாரும் பீடி புகைக்கமாட்டார்கள். ஆனால், ஒரு பொறுப்பாளரின் முன்னால் புகைக்கும் காட்சியானது அவர் போராளிப் போர்வையை மறைக்க முற்படுகிறார் என இயக்குனர் சொல்ல வந்தாரோ தெரியவில்லை. ஆனால் யதார்த்தத்திற்கு சாத்தியமற்றது.

ஜாக் ஓடியார், ஈழத்தவர்கள் என்ற பகடைக்காயை வைத்து பிரெஞ்சு அரசாங்கத்துக்கு என்ன சொல்ல முனைகிறார்? என்று தான் எனக்கு சந்தேகம். ஈழப் போராளிகளுக்கு குடியுரிமை கொடுக்கிறீர்கள். அவர்கள் இப்படியும் ஆயுதத்தைக் கையாள்வார்கள் என்றா? அல்லது அவர்கள் போரியலைத் துறந்த ஒரு உன்னத வீரர்கள். அவர்களைக் கொண்டே மற்றைய வன்முறைசார் குடியேற்றவாதிகளை அடக்கலாம் என்பதா? என்பது எனக்கு பெரிய சந்தேகத்திற்கிடமான கேள்விகளே.

விருதுகளைப் பெறும் பொழுது நீங்கள் எத்தகைய மனநிலையில் இருந்திருக்கின்றீர்கள்?

ஆரம்ப நாட்களில் விருது கிடைக்குமா என்று ஏமாந்த நாட்கள் உண்டு. சில காலம் கடக்க விருது கிடைக்க கிடைக்க ஒரு வகை வெறித்தனமும் ஆக்ரோசமும் அடைந்து கொண்டேன். இன்று ஓரளவுக்கு அறிமுகமான பின்னர் எவ்வளவு தான் உழைப்பைப் போட்டு படம் செய்தாலும் அதற்கு விருது கிடைக்கும் போது சக படைப்பாளிகள் சொல்லும் விமர்சனம் ”அறிமுகத்தால் தான் கிடைத்தது” எனும் போது அந்த விருதை ஏன் பெற்றோம் என்று கூட நினைப்பதுண்டு. என்னுடைய விலைமதிப்பில்லாத உழைப்பை இரண்டாயிரம் ரூபாய் உலோகத்துக்காக வெறும் வாய் மெல்பவருக்கு அவல் குடுப்பதா என்றிருக்கும். அண்மையில் ‘தாத்தாவுக்கு’ கிடைத்த விருதுகளுடன் உள் ஊர்ப் போட்டிகளில் இருந்து ஒதுங்கலாம் என முடிவெடுத்திருந்தேன். காரணம் ஒரு படைப்புக்கான அங்கீகாரம் இன்று விருதுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்டாலும் நான் இல்லாத பல வருடங்களின் பின்னர் படைப்பு மட்டுமே பார்க்கப்படும் விருதுகள் எல்லாம் படைப்பை பார்ப்பவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை.

‘குறும்படம் என்பது இப்பொழுது வெறும் வரத்தகரீதியாகப் போய் விட்டது’ என்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன ?

இல்லை இக் கூற்றுத் தவறென நினைக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை புதிய இயக்குனர்கள் தயாரிப்பாளருக்கு தம்மை அடையாளப்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள். ஈழத்தைப் பொறுத்தவரை முழுப்படம் செய்ய தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார்கள் என்ற நிலையில் தம் திறனைக் காட்டப்பயன்படுத்துகிறார்கள். ஆனால் குறும்படம் இன்னொருவகையில் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறது ஒரு காலத்தில் பத்திரிகையில் ஒரு கவிதை வந்து விட்டாலே அதை வைத்து எழுத்தாளராகிவிடலாம் பிரபலமாகிவிடலாம் என்றிருந்தது. அதன் பின்னர் எப்படியாவது ஒரு புத்தகமாவது வெளியிட்டு விட்டால் பிரபலமாகலாம் என்றிருந்தது. அவை அப்படியே மருவலாகி இப்போது ஒரு ‘குறும்படமாவது’எடுத்து விட்டால் இயக்குனராகிவிடலாம் பிரபலமாகிவிடலாம் என்றாகிவிட்டது. அந்த இயக்குனர் அடை மொழி கிடைத்த எத்தனை பேருக்கு பல படங்கள் பூரணப்படுத்திக் காட்டிய ஞானதாசையோ, சதாபிரணவனையோ, லெனின் சிவத்தையோ, பிரதீபனையோ, கேசவரைாஜாவையோ, பிறேம்கதிரையோ, பாஸ்கியையோ  தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்றே பதில் வரும். (பேச்சுவாக்கில் எடுகோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட பெயர்களாகும்)

அந்நியத் திரைப்படங்களைப் போல தரமான படங்கள் ஈழத்து திரையுலகில் வருவதில் ஏதாவது தடங்கல்கள் உள்ளனவா?

அரச விதிமுறைக்குட்பட்ட எப்படமும் இங்கு தயாரிக்க தடையில்லை. ஆனால் தொழில்நுட்ப பொருளாதர வளங்கள் தான் மிகப் பெரும் தடையான ஒரு காரணியாகும். ஆனால் தொழில்நுட்பம் கூட பெரிய விடயமாக கூறமுடியாது. உலக அரங்கில் கைப்பேசியில் செய்யப்பட்ட படங்கள் கூட பெரியளவில் வெற்றியை பெற்று பேசப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விடப் பெரும் பிரச்சனை மக்கள் ஆதரவு ஆகும். படம் எடுப்பவர்கள் ஒரு விபச்சாரக்காரர் போல பார்க்குமு் கலாச்சாரம் ஒன்று நடைமுறையில் இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த அவப்பெயரை இல்லாமல் செய்வதற்கு ஊடகங்கள் தான் உதவ வேண்டும். ஆனால் ஊடகங்கள் கூட உதவுவதாக இல்லை. அண்மையில் என் வெளியீட்டு விழா தொடர்பான செய்து ஒன்றை உத்தியோகபூர்வக் கடிதமாகக் கொடுத்தும் சில ஊடகங்கள் செய்தியாக்கத் தயாராக இருக்கவில்லை.

இத்தனைக்குள்ளும் ஒரு படைப்பாளியால் வருமானமே இல்லாத இந்த இடத்தில் தொழில் , வயது என்பவற்றைக் கைவிட்டு ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்வி மனதுக்குள் எழும். எனக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்டுள்ளது இத்தனையும் கடந்து 14 படங்களை ஏன் எடுத்தேன் என்றால் என் மனதுக்குள் இருந்த நம்பிக்கை இன்று என்னைத் தூக்கி எறியும் சமூகம் தான் தோற்றுப் போய் நிற்கையில் ஒரு தடவை என்னையும் திரும்பிப் பார்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஈழத்தின் யுத்த காலத்தின் பொழுது குறும்ப படங்கள் அல்லது முழு நீளத்திரைப்படங்களின் ஆளுமையானது எப்படியாக இருந்தது? இதில் பங்களித்தவர்களின் விபரங்கள் பற்றி ….?

வரலாறுகள் என்பது சரியாகப் பதியப்படாதவிடத்து காலப் போக்கில் எப்படி எல்லாம் மாற்றப்படும் என்பதற்கு ஈழசினிமாவும் ஒரு உதாரணமாகும்.அண்மையில் இயக்குனர் ஜோன் மகேந்திரன் எழுதிய ‘ஆணிவேர்’ திரைப்படத்தின் திரைக்கதை படித்தேன். அதில் முன் அட்டையிலேயே போடப்பட்டிருக்கும் ”ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம்” என தன்னைத் தானே ஈழ சினிமாவின் ரட்சகராக ரட்சித்திருப்பார். இதற்கு காரணம் அவரல்ல நாம் தானே.

உண்மையில் யுத்த காலம் தான் ஈழ சினிமாவின் ஒரு கட்டம் கடந்த காலமாகும் ஆனால் நாம் அன்று மிகப் பெரும் தவறிழைத்தோம். சினிமா என்பது உலக அரங்கில் ஒரு மிகப் பெரும் ஆயுதம் என்பதை உணரத் தவறியிருந்தோம். எம் சினிமாவை போராட்ட பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தோம். அதே வளத்தின் ஒரு பகுதியை உலக திரைப்பட விழாக்களை இலக்கு வைத்துச் செய்திருந்தால் எம் நிலை உலக அரங்கிற்கு எப்போதோ சென்றடைந்திருக்கும். இருந்தாலும் தாசன் அண்ணா, யேசுதாசன் ஐயா, கேசவராஜண்ணா, ஞானரதன் அண்ணா போன்றவர்கள் சமூகம், வாழ்வியல் சார்ந்த படங்கள் செய்திருந்தாலும் அதை தொடர்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை. எங்களிடம் போர்க்காலத்தில் நல்ல சினிமா இருக்கு என்று சொன்னாலும்,அதில் அதிகளவு பிரச்சாரநெடியே இருப்பதால் இலங்கையில் தணிக்கை கடந்து திரையிடக் கூட முடியாது.

இன்னும் ஒன்றை நாம் மறக்கக் கூடாது ஒரு போரின் உச்ச நேரத்தில் அதன் தேவைக்ககவே படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்நேரத்து தேவையும் அது தான். ஆனால் எனக்கிருக்கும் மன வருத்தம், நாம் எம்மிடம் இருந்த ஆயுதம் ஒன்றை முழுதாய்ப் பயன்படுத்தவில்லையே என்பது தான்.

அக்காலப்பகுதியில் பல இயக்குனர்கள் இருந்தார்கள். அதிலும் பெண் இயக்குனர்களின் வளர்ச்சி என்பது மிக உச்சமாகும். குறிப்பாக ‘குயிலினி’ அக்காவை மட்டுமே அறிமுகம் இருந்தது. மற்றவர்கள் பெயர்கள் என்னால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. ஆனால்,யேசுதாசன், கேசவராஜா, தாசன்,வினோதன், ரமேஸ், சந்தோஸ், ரஞ்சன் என ஒரு பெரும் பட்டாளமே பெரு வீச்சோடு இயங்கிக் கொண்டிருந்தது.

என்னுடைய ‘துலைக்கோ போறியள்’, ‘கருவறைத் தோழன்’ போன்ற படங்களை எடிட் செய்தது வன்னியில் திரைப்படங்களை கசெட் நாடாவை வைத்து எடிட் செய்த ஒருவர் தான். அதே போல கருவறைத் தோழனின் ஒரு காட்சிக்கு கமரா செய்து தந்தது வன்னியில் பல படங்கள் இயக்கிய ரஞ்சன் அண்ணா தான். வன்னியில் படங்களை இயக்கிய வினோதன் அண்ணா தான் ‘மனசுக்குள் ஒரு மழைச்சாரல்’ என்ற திரைப்படத்துடன் தற்கால களத்துக்குள்ளும் நுழைந்துள்ளார். அதே போல போர்க்கள காட்சிகளை தத்ரூபமாக படம் பிடிக்கக் கூடிய பல துணிந்த கமராமென்கள் இருந்ததற்கு இன்றும் யூரியூப்பில் உள்ள வீடியோக் காட்சிகளே சாட்சியாகும்.

ஈழத்து திரைப்படத்துறை ‘குத்துவிளக்கு ‘படத்துடன் ஆரம்பமாகியது. அப்பொழுது வெளியான படங்களுக்கும் இப்பொழுது வெளியாகின்ற படங்களுக்கும் எப்படியான வேறுபாடுகளை உணருகின்றீர்கள்?

அன்று வெளியானவற்றையும் சமூதாயம், கோமாளிகள் , வாடைக்காற்று என ஆரம்பகாலப்படங்கள் இருந்தாலும் அவை இன்று வரும் எம் படங்களுடன் ஒப்பிடுவது தவறென நினைக்கிறேன். அன்று இருந்து சினிமா வளம், ரசனை, அறிவு அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டிருந்தன இன்று இக்கால வள,ரசனை, அறிவுக்கேற்ப படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது. ஆனால் அன்றைய திரை முயற்சியாளர்களில் என்னால் இடக் கூடிய பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வளராத நிலையில் இதே படங்கள் வந்த காலத்தில் 100 தரம் காத்தவராஜன் கூத்தை பார்க்க தயாராக இருந்த மக்களுக்கு எமது சினிமாவை சரியான முயற்சி தேடலுடன் கொண்டு போய்ச் சேர்த்திருந்தால் இன்று தென்னிந்திய மசாலா சினிமாக்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் கலாச்சாரம் ஒரு மட்டில் இருந்திருக்கும்.

சிறீமா அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில காலம் இந்திய திரைப்படங்கள் இங்கு திரையிடக் கூட தடையிருந்தது. அப்போது கூட எம் மக்களுக்கு எம் சினிமாவை பழக்கப்படுத்தியிருக்கலாம். அடுத்த சந்ததியும் எமை பார்த்து இந்த கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே எமக்கான சினிமாவுக்கான எம் போராட்டம் தொடர்கிறது.

ஓர் கதாநாயகியை அல்லது கதாநாயகனை தேர்வு செய்வதில் என்ன வழிமுறைகளை பின்பற்றுகின்றீர்கள்?

இந்த விடயத்தில் நான் தவறான பாதையில் செல்கிறேனோ என்று கூட பல தடவை நினைப்பதுண்டு. திரைக்கதை அமைக்கும் போதே ஒரு பாத்திரத்தை தேர்ந்தெடுத்து விட்டுத் தான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனால் அப்பாத்திரம் விலத்திப் போகும் இடத்தில் மீண்டும் முழு திரைக்கதையும் புதிதாக வரும் பாத்திரத்துக்காக செப்பனிட நேரிடுகிறது.  எம்மிடம் உள்ள நடிகர் வளம் மிகக் குறைந்த காரணத்தினால் என் ஆசைக்கு பாத்திரத்தைப் படைத்து விட்டு எத்தனையோ வருடங்கள் அலைந்தாலும் நான் நினைத்திருந்த பாத்திரம் கிடைக்காது. என் முழு நீளப்படமான ‘உம்மாண்டி’-யில் இதே சிக்கல் தான் நடந்தது. ஒரு பாத்திரத்தில் 3 நடிகைகள் வந்து போய் விட்டிருந்தார்கள். அந்த 3 வருக்காகவும் 3 தரம் கதையை செப்பனிட வேண்டியதாகி இறுதியில் திரைக்கதை திசை திரும்பியே போய் விட்டது. ஆனால், அப்படி அது நடந்ததும் ஒருவித நன்மைக்கே  என்று எடுத்துக்கொள்கின்றேன். ஏனெனில் அவ்வாறு நடந்திராவிட்டால் ஓர் வலுவான திரைக்கதையாக என்னால் மாற்ற முடிந்திருக்க முடியாது. அதில் ஒரு பாத்திரத்திற்கு ஆளை வைத்தே கதை அமைத்ததால் அவருக்காக 2 மாதங்கள் படப்பிடிப்பு செய்யாமல் காத்திருந்த சம்பவம் கூட இருக்கிறது. அதே போலத் தான் சில படங்களில் நான் நடிக்க வேண்டிக் கூட வந்தது. ‘உம்மாண்டியில்  ஒரு பாத்திரத்திற்கு ஆளை வைத்தே கதை அமைத்ததால் அவருக்காக 2 மாதங்கள் படப்பிடிப்பு செய்யாமல் காத்திருந்த சம்பவம் கூட இருக்கிறது. அதே போலத் தான் சில படங்களில் நான் நடிக்க வேண்டிக் கூட வந்தது. ‘உம்மாண்டியில்’ கூட என்னை வைத்து திரைக்கதை எழுதிவிட்டு நான் தொழில்நுட்ப குழுவுக்குள் போக வேண்டி வந்ததால் எனக்கு பதிலாக ஒரு பாத்திரம் தேடி தோற்றுப் போனேன்.

ஓர் திரைப்படம் அல்லது குறும்படம் வெளியாவதற்கு முன்னரே அது சம்பந்தமான அதீத எதிர்பார்ப்புகளை மக்களுக்கு ஊடகத்துறை கொடுக்கின்றது. இது குறித்து……….?

விளம்பரம் என்பது எந்தவொரு படைப்புக்கும் கட்டாயம் தேவையான ஒன்றாகும். அதே போல ஒரு பட உருவாக்கத்தில் இயக்குனர் என்று தான் ஒருவர் தன் பெயரைப் போட்டிருப்பார். ஆனால் அப்படத்திற்கு அவர் தான் தயாரிப்பு மேற்பார்வையில் இருந்து கலை இயக்குனர் என பல வேலைகளை தலையில் போட்டு செய்திருப்பார். ஏன் ‘உம்மாண்டியில்’ நான் சமைத்துக் கூட இருக்கிறேன். இதில் கூற வருவது என்னவென்றால், இங்கு ஒரு இயக்குனர் என்பது எல்லா முகாமைத்துவமும் நிர்வாகத் திறனும் முழுதாய் தெரிந்தவராகவே இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒருந்து ஒரு தடவை சறுக்கினாலும் சொன்ன எதனையும் சொன்ன நேரத்துக்கு முடிக்க முடியாது . இதனால் ஒரு இயக்குனர் ஊடகங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவற விடலாம். ஆனால் ஊடகங்களை என்னால் குற்றம் சுமத்த முடியாது. காரணம் ஊடக அனுசரணையாக அவர்கள் பெயர் இட்டாலும் ஒரு மட்டில் தான் விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் படைப்பு சார்ந்தவர் பொதுவெளியில் செய்யும் அதீத விளம்பரங்கள் வெறுப்பைக் கொடுக்கலாம். ஆனால் ஆக மொத்தத்தில் இப்போது உள்ள மக்களளை விளம்பரங்களாலும் அவ்வளவுக்கு ஏமாற்ற முடியாது அந்தளவுக்கு தொடர்பாடல் அறிவும் தேடல் அறிவும் உள்ளவர்களாக இணையம் மாற்றி வைத்திருக்கிறது.

ஊடகங்களின் அளவுக்கதிகமான விளம்பரங்கள் அவர்களை கட்டாயம் ஒரு தடவை பார்க்க வைக்கலாம். ஆனால், கருத்து அவர்களிடம் இருந்து தானே வரப் போகிறது.

உங்கள் கதைகள் எங்காவது நிராகரிப்பட்ட சம்பவங்கள் இருந்துள்ளனவா?

ஓ… தாராளமாகவே. குழந்தையொன்றின் போர்த்தாக்கம் தொடர்பாக செய்த குறும்பட கதை ஒன்றை ஒரு சிங்கள படத் தயாரிப்பாளர்கள் நிராகரித்தார்கள். அடுத்த கிழமையே அதை முழுப்படத்துக்குரிய திரைக்கதையாக மாற்றி விட்டேன்.

ஆனால் அப்போது எனக்கு எழாத சீற்றம் அண்மையில் நிகழ்ந்தது. வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் பெண்கள், சிறுவர் எதிர் கொள்ளும் பிரச்சனை தொடர்பான குறும்படப் போட்டி ஒன்றுக்காக கதை சொல்ல சென்றேன். அக்கதை ஒரு உயர்தரம் படிக்கும் மாணவன் தன் இளம் விதவைத் தாய்க்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டு சமூகத்துடன் போராடி வெல்வதாகும். இக்கதையை சமூகம் ஏற்காது எம் கலாச்சார கட்டுமானத்தை இது சிதைக்கிறது யாருமே ஏற்காத கதை ஒன்றை எப்படி கொடுப்பது என முகத்துக்கு நேரே சொல்லி நிராகரித்தார்கள்.

முற்போக்குத்தனமாக சிந்திக்காத படித்த முட்டாள்களான அவர்கள் ஒரு மருத்துவ சேவையில் இருப்பதை நினைத்து மனம் வருந்திக் கொண்டேன். இறுதியில் அங்கு தெரிவான ஐந்தாறு கதைகள் என்னவென்று பார்த்தால் வேலைக்கு வந்த பெண்ணை கையில் பிடித்து இழுக்கும் கதைகளும், பக்கத்து வீட்டு சின்ன பிள்ளையை ஏமாற்றி பாலுறவு கொள்வதுமாகவே இருந்தது. இதை எத்தனை காலத்துக்கு தான் திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்க போகிறோம் ?

தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் வன்முறைகள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

சினிமா என்பது நடைமுறையின் பிரதிபலிப்பே (புனைவுக் கதைகள் தவிர) அப்படிப் பார்க்கையில் வன்முறை, சண்டை என்பதுவும் ஒரு மூலையில் நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் அதை தணிக்கை குழு வகைப்பிரிக்க வேண்டும். குடும்ப படங்களுக்கான யு(U) சான்றிதழ் கொடுக்கும் படங்களில் இவைகளைத் தவிர்த்து, ஏ (A) சான்றிதழைக் கொடுத்து படங்களை வகைப்பிரிக்கலாம்.

பணம் போடும் தயாரிப்பாளகர்களும் பணத்தை மீளப் பெற அந்தந்த ரசனைக்குரிய ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய தேவை உள்ளதல்லவா. அதற்காக சமூகப் பொறுப்பில்லாமல் நடப்பது மிகத் தவறானதும் ஆகும்.

ஓர் திரைப்படத்திலோ அல்லது குறும்படத்திலோ வடிவமா இல்லை அதன் உள்ளடக்கமா முக்கியமானது?

ஒரு திரைப்படத்துக்கு இவையிரண்டும் மிக முக்கியமானதாகும். ஆனால் உள்ளடக்கம் எவ்வளவு ஆழமானதாக இருந்தும் வடிவம் தவறுமாக இருந்தால் அப்படம் நிச்சயம் எடுபடாது. ஆனால் புதுமையில்லாத உள்ளடக்கத்தை வைத்து வடிவத்தால் வென்ற படங்கள் நிறையவே உண்டு. நான் அண்மையில் பார்த்தவற்றில் ‘உத்தம வில்லன்’ படம் நல்ல உள்ளடக்கம் இருந்தும் வடிவத் தவறால் தவறியிருந்தது. கமல் ரசிகர்கள் குழம்ப வேண்டாம். நான் குறிப்பிடுவது திரைக்கதையில் நிகழ்கால காட்சியில் ஒரு உச்சக்கட்டத்தில் வைத்து நகைச்சுவைப்பாத்திரத்துக்கான சாதரணகாட்சிக்கு கதை மாறும். அதே போல நகைச்சுவை காட்சியின் உச்சத்தில் காட்சி துண்டாக நிகழ்கால சாதாரண காட்சிக்கு திரைக்கதை பயணிக்கும். திகைக்க வைத்த நடிப்பு நல்ல கரு இருந்தும் இந்த வடிவம் என்னை கவரவே இல்லை.

‘உதயம் என்எச்4’ என்ற படத்தை பார்த்தால் மிகப் பழைய கதையான இரு காதலர்களின் வீட்டை விட்டான ஓட்டம். ஆனால் அந்த திரைக்கதையின் வடிவமானது அனைவரையும் கவர்ந்திழுத்தது. (இங்கு தென்னிந்திய சினிமாவை வைத்து உதாரணம் சொன்னதற்குக் காரணம் அதிகளவானோரல் பார்த்திருப்பர் என்பதாலேயே)

இப்பொழுது உள்ள ஈழத்து திரைப்படத்துறையில் பெண்கள் பற்றிய பார்வை எப்படியாக இருக்கின்றது?

உண்மையில் பாவப்பட்ட பிறவிகள் என்று தான் சொல்வேன். ஏன் என்றால் எங்களது பமரத்தனமான இந்த சமூகத்துக்குள் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்களது தன்னம்பிக்கையும் முடிவும் மிகப் பெறுமதியானது. இன்றுவரை என் ஊரில் கூட மதிசுதா என்பது சுதாகரனாகிய நான் தான் என்பது தெரியாமல் வைத்திருக்கிறேன். ஏன் என்றால் எம் சமூகம் சினிமாவை மட்டுமல்ல கலைத்துறையையே வேறு ஒரு கண்ணாடி கொண்டு தான் பார்க்கிறது.

இந்த சினித்துறையில் இந்து, நிரோசா, பிரியதர்சினி, கவிதாயினி போன்றோர் எனக்கு தங்கைகளாக நடித்ததுமல்லாமல் சொந்த தங்கை போலவே தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவுக்கு இருக்கிறார்கள். இத்தனை வசைகள், தடைகள் எதிர் கொண்டும் அவர்கள் மனதுக்குள் இருப்பது தாம் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே.

நீங்கள் குறும்படங்களில் நிபுணத்துவம் பெற்று இருக்கின்றீர்கள் என்பதை அண்மைய செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. குறும்படங்கள் எந்தவகையில் எமது மக்களுக்கு அவசியமாக இருக்கின்றன?

மன்னிக்கவும் நிபுணத்துவம் என்றில்லை அது தவறாகும். ஏனென்றால் எனக்கு முன்னரே இங்கு சாதித்துக் காட்டிய பலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அப்படி நினைப்பதே இல்லை. என்னை இந்தளவுக்கு வளர்த்தமைக்கு காரணம் தேடல் மட்டுமே. உதாரணத்திற்கு நான் 2500 குறும்படங்களுக்கு மேல் பார்த்ததுமல்லாமல் சேமித்து வைத்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா?

சரி கேள்விக்கு வருகிறேன். தற்போது மக்களிடம் அதிகளவில் போய்ச் சேரக் கூடிய இடமாக காணொளி ஊடகம் மாறியிருக்கிறது. அதே போல ஒரு விடயத்தை குறுகிய நேரத்துக்குள் அறிந்து விட்டுக் கடந்து போகவே பலர் விரும்புகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் நான் தமிழில் எழுதினால் ஒரு தமிழன் மட்டுமே படித்துக் கொள்கிறான். அந்த வகையில் ஒரு விடயத்தை மொழி கடந்து கூடக் கொண்டு செல்வதற்கு குறும்படம் என்பது மிகச் சிறந்த ஊடகமாகும். உதாரணத்துக்கு என்னுடைய மிச்சக்காசு என்ற படத்தை ஆவணப்பட கற்பித்தலுக்கு வந்திருந்த அலெக்சான்டர் ரைடல் என்ற ஜேர்மனிய இயக்குனர் அதன் கைப்பேசித் தரத்தையும் திரைக்கதை அமைப்பையும் ரசித்து அதை அங்கு காட்ட என மாணவர்கள் முன்னிலையிலேயே வாங்கிச் சென்றார்.

ஓர் குறும்படத்தை இயக்கும் பொழுது எதையெதைக் கவனத்தில் கொள்கின்றீர்கள்?

எதைக் குறிப்பிட்டுச் சொல்வதெனத் தெரியவில்லை. என் வெற்றிக்குக் காரணம் என்னோடு இருக்கும் என் குழு தான். நான் இலகுவில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு பேர்வழி அப்படியிருந்தும் என்னோடு இத்தனை படைப்புக்களில் பயணிக்கிறார்கள் என்றால் எமக்கிடையிலான புரிந்துணர்வே காரணம். மதுரன், சன்சிகன், மதுசா, ஜனகன், சயன் போன்றோர் என் சகோதரர்கள் போலவே. அதனால் தான் எமக்குள் என்ன நடந்தாலும் எம்மால் வெற்றியோடு பயணிக்க முடிகிறது. நான் இயக்கிய 14 குறும்படங்களில் இதில் ஒருவராவது முழுமையாக பங்களித்திருப்பார்.

குறும்படம் என்று வரும் போது முதலில் நான் கவனிப்பது நான் வைத்திருக்கும் கதை, கதைக்குரிய களம், எம் வாழ்வியல், மொழி இவை சரியாக காட்டுகிறேனா என்பதே இந்த அடிப்படை தான் என் படத்தில் எத்தனை தவறிருந்தாலும் ஒருவரால் குறை சொல்ல மனம்வர வைக்காத விடயங்களாகும். சில படங்களுக்கு கதைக்களத்தில் வைத்துத் தான் திரைக்கதையே எழுதியிருக்கிறேன். இதனால் படத்துக்காக கலை இயக்குனருக்குரிய வேலையை தவிர்த்து இருக்கிறேன். ‘கருவறைத் தோழன்’பார்த்தால் இதை அடையாளம் காண்பீர்கள்.

கலையென்பது கலைக்காகவே இருக்கவேண்டும் என்றும் இல்லையில்லை கலை என்பது சமூககத்துக்காக இருக்கவேண்டும் என்றும் இருவேறுவகைப்பட்ட இயங்கியல் நிலைகள் உள்ளன. இதில் உங்கள் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது?

இதற்கான பதில் உங்கள் கேள்வியில் இருந்து முரண்பட்டதாக இருக்கலாம். ஆனால் என் உண்மை நிலைப்பாடு இது தான். நான் தொழிற்படும் இந்தக் கலையானது கலைக்கானதோ சமூகத்துக்கானதோ அல்ல இது எனக்கானது. வன்னியில் இருந்து வெளியே வரும் போது என் வயது 25 ஆகிவிட்டது. சாதாரண தரத்துக்கு முன்னர் ஒரு பெரிய தடகள மற்றும் கிரிக்கேட் வீரனாக வேண்டும் என்ற கனவிருந்தது. மாகாண மட்ட தடை தாண்டலில் தங்கப்பதக்கம் பெற்றும் அந்நேர குடும்ப வறுமையால் தொடர்ந்து விளையாட்டு உபகரணங்கள் கூட வாங்க முடியாமல் அதை கைவிட்டு உயர் தரம் வரும் போது ஒரு வைத்தியராகி சாதித்து என் குடும்பத்தை நிமிர்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்வியை முடித்து தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் சந்தர்ப்பம் கிடைத்து. இறுதி ஆண்டில் வன்னி இறுதிப் போரால் குழம்பிப் போக வேலை செய்த அனுபவத்துடன் தொடர பணமில்லாமல் வந்து கூலி வேலைக்கு போன எனக்கு, 3 வருடங்களின் முன்னர் கணக்குத் துறையில் நிரந்தர வேலை கிடைத்தாலும் நான் சாதிக்க  கையில் எடுத்த துறை தான் இந்த சினிமாத் துறையாகும்.

ஆனால் என் நோக்கம் அதுவாக இருந்தாலும் இதை ஒரு உன்னத கலையாகவே மதிக்கிறேன். எனக்கென்று ஒரு தனி அடையாளம் தனிப் பெயர் ஒன்றை பொறித்து விட்டு தனி வாழ்க்கைக்குள் நிரந்தரமாக புகுவதே என் நோக்கமாகும்.

ஈழத்து திரைப்படங்களிலோ அல்லது குறும்படங்களிலோ எத்தகைய மொழி பேசப்படவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?

ஒரு படம் எங்கு எடுக்கப்படுகிறதே அந்த இடத்துக்குரிய மொழி வழக்கை பயன்படுத்தினாலே மொழியை சரியாகப் பிரதிபலிக்க முடியும். நான் அவதானித்தவரை தென்னிந்தியாவுக்கு படத்தைக் கொண்டு செல்வதற்காகவே அம்மொழியை பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் ஒரு மாயை. ஈழ மொழியை அவர்கள் பேசும் போது எவ்வளவு நகைச்சுவையாகப் பார்க்கிறோமே அதே போலத் தான் அவர்களும் பார்ப்பர். காரணம், இங்கு சென்னை, மதுரை, திருநெல்வேலி என அனைத்து மொழியையும் கலந்து ஒரு கலவையாகவே பேசுவர். கடைசியில் அந்த பாத்திரம் எந்த ஊரையும் பிரதிபலிக்காமல் பிச்சைகாரன் எடுத்த சத்தி போல் கூழாம்பாணியாக பேசி அநாதரவாக நடு றோட்டில் நிற்கும்.

எம்முடைய பேச்சு மொழி திரைப்படத்துக்குத் தவறில்லை. ஆனால், எம் படங்களில் சற்று உறுத்தலாக இருக்கக் காரணம் நாம் டப்பிங் செய்யும் போது ஏற்படும் தவறுகளே. அதை தீர்ப்பதற்கோ சரியாக எடுப்பதற்கோ எம்மிடம் உள்ள தொழில்நுட்பக் கருவிகள் வளமும் ஒரு காரணமாகும். அத்துடன் டப்பிங் என்பது நடிப்பு என்பதற்கு அப்பால் ஒரு தனிப்பட்ட மிகப்பெரும் கலையாகும். நடித்தவரால் கூட தனக்குத் தானே குரல் கொடுத்தாலும் நடிக்கும் போதிருக்கும் இயல்பு நிலையைக் கொண்டு வருதல் மிகச் சிரமமானதாகும்.

சமகாலத்தில் ஈழத்து திரைப்படத்துறையில் பெண் இயக்குனர்களது வீச்சு அல்லது தொழில் நுட்பவியலாளர்களது வீச்சு எப்படியாக இருக்கின்றது?

ஈழத்து சினிமாவின் வளர்ச்சியில் பெண் இயக்குனர்களது பங்கும் தாராளமாக இருக்கிறது. என்னவொன்று ஆண்களின் தொகையே அதிகமாக இருப்பதாலும் பலர் கோழி போல் ஒரு முட்டையிட்டு புளகாங்கிதம் அடைவதாலும் அருகே உள்ள சக கலைஞர்களைக் கூட தெரியாமலே கடந்து போய் விடுவார்கள். சில நாட்களுக்கு முன்னர் கூட கனடாவில் இருக்கும் இயக்குனர் சுமதியின் ”நியோகா” சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியிருந்தது. செரின் சேவியர் (முற்றுப்புள்ளியா) ஈழவாணி(சிவலை) , இந்து(மௌன மொழி), மதுசா(நிழல் பொம்மைகள்), சாலினி(உயிர்வலி), சோபி(மாசறு), சுமதி(இங்கிருந்து) , பிரதீபா என விருது பெற்ற பெண் இயக்குனர்களின் பட்டியல் ஒன்று இருக்கவே செய்கிறது.

அதே போல சிந்து என்றொரு இசையமைப்பாளர் இருந்தார் பின்னர் ஒதுங்கிவிட்டார். இப்படி பல பெண்களது பட்டியல் ஒன்று இருக்கவே செய்கிறது. ஆனால் பலரால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. எங்கள் சமூகக் கட்டமைப்பு ஒரு குடும்பத்தின் பராமரிப்பு சுமையை முற்று முழுதாக பெண்கள் மீதே சுமத்துவதால் ஆண்களை போல அவர்களால் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலை இருக்கிறது. அது அவர்களது உண்மை திறமையை மழுங்கடிக்கவே செய்கிறது.

அண்மையில் தென்னிந்தியப்படம் ஒன்று இயக்க கிடைத்த சந்தர்ப்பம் பற்றி உள்ளுரில் விமர்சனங்கள் எழுந்துள்ளதே அது பற்றி?

ம்………… மறுப்பதற்கில்லை. ஆனால் விமர்சனம் எழுந்தது படைப்பாளிகள் (உருப்படியாய் படைக்காத) பக்கத்தில் இருந்து தான். என்மேல் வளர்ச்சியில் அபிமானம் கொண்ட அனைவரும் வரவேற்றார்கள். ஈழத்து சினிமாக்காரன் என்று விட்டு இந்தியப்படம் எடுக்க போனால் நீயெல்லாம் என்ன ஈழத்துப் படைப்பாளி என சில ஈழத்துப் படைப்பாளிகள் கேட்டிருக்கிறார்கள்.

அப்படி விமர்சித்தவர்களுக்கு நான் இன்னுமே பதில் அழிக்கவில்லை. தேவையுமில்லை. காரணம், அதைப் படிக்கும் போது அம்மாவை அணைத்த கையால் காதலியை அணைக்காதே என்று சொல்வது போல இருந்தது.

ஏனென்றால் நான் என் மண்ணுக்காகச் செய்த படத்தில் ஒரு படத்தில் கூட எம் அடையாளத்தை இழந்தேன் என உங்களால் சுட்ட முடியாது. இப்போது இன்னொருவருக்காகப் படம் செய்யப் போகிறேன்.

என்னிடம் உலகில் எந்த நாட்டிலும் வதிவிட உரிமை கோரக் கூடிய ஆவணங்கள் பெருந்தொகையாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக வீட்டோடே வசிக்கும் என்னைப் பார்த்து இக்கேள்விகளை அவர்கள் அடுக்கிய போது சிரித்துக் கொண்டே கடந்து போகிறேன்.

இறுதியாக இவ்வளவு அனுபவங்களை கொண்டுள்ள நீங்கள் வளர்ந்து வருகின்ற தாயகத்து அல்லது புலம்பெயர் திரைப்படத்துறை கலைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இந்த செவ்வியல்ல எந்த செவ்வியிலும் இதைத் தான் நான் கூறுவேன். நாம் தோற்றுப் போன இனமல்ல. எவ்வளவு தான் விழுந்தாலும் எப்போதும் எம் கையில் இருந்து பேனை விழுந்ததில்லை. இப்போது சுதந்திரமாக கமராவும் அளிக்கப்பட்டுள்ளது.எம் இனத்தின் வெற்றி விதியை எம்மால் எழுத முடியும். உலக அரங்கில் சிங்களப்படங்களுக்கு தனி இடம் இருப்பது போல எம் படங்களுக்கும் தனி இடம் பெற வேண்டும்.

இது நாள் வரை உலகின் எந்த மூலையிலும் தமிழன் என்றால் நினைவுக்கு வருவது இலங்கை தான். ஆனால் தமிழ் சினிமா என்றால் நினைவுக்கு வருவது இந்தியாவாகும். அந்த வரலாற்றை நாம் கைவசப்படுத்த வேண்டும். இது தான் என் நோக்கமாகும்.

மதி சுதா -இலங்கை

0000000000000000000000000000000

மதிசுதா பற்றிய சிறுகுறிப்பு :மதிசுதா

ஆரம்பத்தில் மதியோடை வலைத்தளத்தினால் எனக்கு அறிமுகமான மதிசுதா வானத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உள்ளவர். ஆரம்பத்தில் இருந்தே பல மேடுபள்ளங்களை தாண்டி முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன் உதாரணமாக இருந்து வருகின்றார். ஈழத்து சினிமாவில் இயக்கம்,நடிப்பு, குறும்படம் என்று பல் துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வந்திருக்கின்றார். இவரது குறும்படங்கள் பல விருதுகளை பெற்று தந்திருக்கின்றன. அதில் ‘மிச்சக்காசு’ முக்கியமானது. இவர் இயக்கிய படமாக ‘துலைக்கோ போறியள்’, ‘ரொக்கெட் ராஜா’ குறிப்பிடத்தக்கவை. இப்பொழுது தனது முதலாவது முழு நீளத் திரைப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கின்றார்.  அத்துடன் இவர் 14 குறும்படங்களுடன் ஏறத்தாழ ஐந்து ஆவணப்படங்களை இயக்கி இருக்கின்றார். அண்மையில் நான் தாயகம் சென்ற பொழுது நடு வாசகர்களுக்காக வழங்கிய நேர்காணல் இது …………..

கோமகன்

கோமகன்

(Visited 154 times, 1 visits today)