உங்களுடன் நாங்கள்- ஆசிரியர் குறிப்பு

வணக்கம் வாசகர்களே ,

நடு லோகோவெறும் பேச்சில் பெருநாட்டங் கொள்ளாது செயற்திறனில் மட்டும் நாட்டங் கொண்டுள்ள எங்களை மீண்டும் ஒருமுறை உங்களுடன் அளவளாவ வேண்டிய சந்தர்ப்பத்தைக் காலம் எங்கள் மீது சுமத்தி இருக்கிறது. இந்த வருடத்தில் ஈழத்தின் முத்த பெரும் எழுத்தாளரான பத்மா சோமகாந்தனை கடந்த மாதம் நாங்கள் இழந்திருக்கின்றோம். கடந்த சித்திரைத்திங்களில் நீர்வைப் பொன்னையனை இழந்திருந்தோம் . எங்கே மிச்சம் இருக்கின்ற எமது எழுத்துச் சொத்துக்களைக் காலத்தில் கரைத்து விடுவோமோ என்கின்ற அச்சம் மேலிடுகின்றது. சாதாரண மனிதர்களிலிருந்து விட்டு விலகி தமது எண்ணங்களையும் சிந்தனைகளியும் தம்மைச்சுற்றி இருக்கின்ற சமூகத்திரளுக்கு விட்டுச் செல்கின்ற அளப்பெரிய வழங்குதல்களை இந்த எழுத்தாளப்பெருந்தகைகள் செய்கின்றார்கள். அந்த வகையில் அவர்களது இழப்பு என்பது எமக்கு  ஈடுசெய்ய முடியாததாகி விடுகின்றது. அதனாலேயே இலக்கியவாதிகளை அவர்கள் காலத்திலும் சரி அவர்களது காலத்தின் பின்னாலும் சரி அந்தந்த நாட்டு அரசுகள் அவர்களுக்குரிய கௌரவங்களையும் அங்கீகாரங்களையும் வழங்கி அவர்களை பெருமைப்படுத்துகின்றன. இந்த விடயத்தில் ஈழத்து எழுத்தாளப் பெருந்தகைகளை அவர்களது வாழ்க்கைக்காலத்தில் எவ்வளவு தூரத்துக்கு நாம் மதிப்பளித்திருக்கின்றோம் அல்லது அங்கீகாரம் செய்திருக்கின்றோம் என்று பார்த்தால் விசனமும், வெஞ்சினமும், அயற்சியுமே மேலிடுகின்றது. எங்கோ தொலைவில் இருக்கின்ற வாழ்நாளில் பார்த்தறியாத எழுத்தாளர்களது பிறந்தநாட்களையும் அவர்கள் தொடர்பான அனைத்து சம்பத்துக்களையும் கொண்டாத்தெரிகின்ற  எமது ஒருசில படைப்பாளிகளுக்கு எமக்கு முன்னே பல சாதனைகளை செய்து விட்டு பல்லாயிரம் முட்டைகளையிட்ட ஆமை போலிருக்கும் எமது மூத்த ஈழத்து எழுத்து ஆளுமைகளைக் கொண்டாடத் தெரியாதிருக்கின்ற உளவியல் சிக்கலானது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

ஒரு பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் எழுத்துப்பரப்பிலும் பொதுவெளியிலும் அமிழ்த்தப்பட்டிருந்த அன்றைய காலகட்டத்தில், ஒரு உயர் குடியில் பிறந்திருந்தாலும் பத்மா சோமகாந்தனது எழுத்துக்கள் விளிம்புநிலை மக்களையே பாடிநின்றன என்பதில் அவரது தனித்துவம் அதிமுக்கியமாகின்றது. எந்தவொரு பிரச்சனைகளையும் நெத்திக்கு நேராகப் பேசுகின்ற துணிச்சலையும் நேர்மைத்தன்மையையும் அவர் கொண்டிருந்தார் என்பதனை இந்த நினைவுக்குறிப்பிதழில் எழுதியுள்ள இலக்கிய ஆளுமைகள் கோடுகாட்டியிருக்கின்றார்கள். அவரது இழப்பினால் ஆற்றொணாத்துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தினருடன் நாங்களும் பங்காளிகளாகின்றோம்.

காலம் அதன் கடமைகளை செவ்வெனே செய்யும், அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த எழுத்தாளப் பெருந்தகைகள் விட்டுச்சென்ற இடத்தையும் யாராலும் இட்டுநிரப்ப முடியாது.  இருந்தபோதிலும், அவர்கள் எங்களுக்கு எண்ணற்ற நூல்களை பெரும் சொத்துக்களாக விட்டுச்சென்றிருக்கின்றார்கள். அவற்றை நவீன தொழில் நுட்பத்தின் துணைகொண்டு பாதுகாத்து வருங்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்கின்ற பாரிய பொறுப்புணர்வு எமக்கிருக்கின்றது . இதனை எழுத்தின் மீது காதல் கொண்ட யாருமே ‘இது எமக்கானது இல்லை’ என்று இலகுவாகக் கடந்து சென்றுமுடியாது.

எமது செயற்பாடுகளை நீண்டகாலமாக உற்று நோக்கிய, இலங்கையை தளமாகக் கொண்டு உலகெங்கிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் ‘நூலகம்’ அமைப்பு தங்களது ‘வாசிகசாலை’ திட்டத்திற்கு எம்மை அனுசரணையாளராக இருத்துவதற்குப் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தினர். ஆசிரியர் குழுமத்துடன் இதுவிடயமாகத் தீர ஆலோசித்தன் பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில், ஏலவே இத்திட்டத்தை முன்னெடுக்கும் ஐக்கிய இராச்சியம், நோர்வே நூலக கிளையுடன் நாங்களும் அனுசரணையாளராக இணைகின்றோம். இது தொடர்பாக தனியான பதிவு ஒன்றின் மூலம் உங்களிடம் விளக்கமாக உரையாடுகின்றோம். நன்றி .

கோமகன்

நடு குழுமம்

(Visited 148 times, 1 visits today)
 

One thought on “உங்களுடன் நாங்கள்- ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.