‘எனக்கு இரண்டுமே அதிகாரத்தின் மொழிகள்தான்’-நேர்காணல்- தில்லை

தில்லை
ஓவியம் : றஷ்மி

கோமகன்: நான் உங்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது நான் சுயமாக வந்தவள்என்று சொல்லி இருந்தீர்கள். அது என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அதெப்படி சுயமாக வர முடியும்

தில்லை: நான் உங்களுடன் கதையாடிய சுயம், சுயம்புலிங்கம் சார்ந்த எண்ணோட்ட கருத்தியலில்லை. நான் என் சிறுபராயத்திலிருந்தே தனித்து ஒத்தையாக வாழ்ந்துவருபவள். நான் அறியாப்பருவத்திலிருந்தே தாய் தந்தையைத் தொலைத்தவள். அந்தத்தொலைத்தலுக்கான பின்புலமும் வாழ்தலுக்கான முனைப்பும் என் ஒவ்வொரு காலடி வைப்புக்கும் என்னைச் சுயமானவளாக உருவாக்கியது. தீர்மானங்களும், உந்தலும், வெற்றிதோல்வியும் என்னை புடம் போட்டன. காக்கைக் கூட்டில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதால் கொத்தித் துரத்தப்பட்ட ஒரு குயில் குஞ்சைப்போல சுயமாக என் சிறகுகளை விரிக்கத் தொடங்கியிருந்தேன். ஆறுதல் சொல்வதற்கோ, வழிகாட்டுவதற்கோ, தூக்கிவிடுவதற்கோ குறைந்தது எனது துயரங்களை சொல்லி அழவோ எனக்கென்று என்னோடு கூட யாருமிருக்கவில்லை. எனக்கு நானே அனைத்துமாக வளர்ந்து வந்தேன். இந்த ஓர்மத்தை நான் எனக்கான உரிமையாகவும் சுயமாகச் சூடினேன். அது போன்றதே எனது கல்வித் தகமைகளும் அதை விபரிக்க தேவையில்லை. இப்பொழுதும் இனி எப்பொழுதும் எனக்கு பயன்படாத கல்விபற்றி எனக்கு புகழ் சேர்ப்பதற்காக நான் எங்கும் பேசியதில்லை. அது தேவையும் இல்லை. நான் வாழும் சுவிஸ் நாட்டில் எனது மொழியை கதைக்கும்படி யாரும் கேட்பதும் இல்லை. நான் தாய்மொழியில் பெற்றுக்கொண்ட தகைமைகள் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இங்கு அவர்களின் தேசிய மொழிக்கும் தொழில் கல்விக்கும் மட்டுமே மதிப்பும் பெறுமதியும்.

இலங்கையில் சிங்களம் தெரியுமா என்று கேட்ட தேசிய இராணுவத்தை முறைத்த கண்கள் சுவிசில் டொச் தெரியுமா என்று கேட்கும் சாதாரண மனிதர்களை முறைப்பதில்லை. எனக்கு இரண்டுமே அதிகாரத்தின் மொழிகள் தான்.    

கோமகன்: கவிதைகளை புனைவதற்கு ஏதாவது அகநிலைத் தூண்டல்கள் உங்களுக்கு இருந்ததா ?

தில்லை: ஏதாவது ஒன்று தூண்டல் இல்லாமல் செயல்வாதமாகாது. அகத்தூண்டலாக நானே என்னை உருவாக்கிக் கொண்டேன். உழைப்பும் வாழ்வும் கலையும் ஊடுபாயும் வெளிதான் என் படுவான்கரை. நான் கிட்டத்தட்ட முப்பது கிராமங்களில் ஊடாடியவள் சித்திரை பிறந்தாலே ஊஞ்சல் ஆடுவதில் தொடங்கி வைகாசி கண்ணகி குளிர்த்தி வரை பெண்கள் வாழ்வை பார்த்து மகிழ்ந்தவள். ஆடல் பாடல் இன்றுவரை என்னை பரவசத்தில் வைத்திருக்கிறது. இந்த அருட்டல்கள்தான் என்னை கவிதையின் பால் தள்ளியிருக்கவேண்டும்.

கவிதை மொழியின் உச்சவெளிப்பாடு. மொழியின் அத்தனை சாரங்களையும் சிறுவயதில் எனது கிராமத்தின் வெளிகளிலிருந்தே பெற்றுக்கொண்டேன். எனது உப்புக்கரைச்சையாக இருக்கலாம், கண்ணாக்காடாக இருக்கலாம், நான் விளையாடும் மண்திடலாக இருக்கலாம், ஏன் ஊர் வயல்களாகக் கூட இருக்கலாம் நான் பார்க்கும் திசைகளில் பிழிதல்களின் தூண்டல்கள் என்னைப் பண்படுத்தியது. எனது கவிதைகளுக்கு அவைகளே பெரும் வித்திட்டது.

கோமகன்: சமகாலத்து கவிதைப்போக்குகள் குறித்த உங்கள் பார்வை என்ன ?

தில்லை: பாரதியின் கட்டுடைப்புக்குப் பின் தமிழ்க்கவிதை உச்சம் பெறத்தொடங்கினாலும். என்பார்வையில் இன்று இருபோக்குகள் காணப்பட்டே வருகின்றன.

வெகுஜனத்தில் உள்ள தீவிரத்தைத் தட்டையாக எழுதி வெகுஜனத்திற்குப் பரிமாறி, தனக்கான பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு, தன்னை  கவித்துவ வித்தகனாக மலினமடைதல் அதில் உயிர்பில்லாத்தன்மை இருந்தால் அது  படைப்பிலக்கயமில்லை.

வெகுஜனத்தின் தீவிரத்தைத் தனதாக்கிக்கொண்டு வெகுஜனத்திற்கப்பால் அதனுடன் உரையாடுவது, இதில் வெகுஜனத்தை வெளியேற்றி, தீவிர உந்தலில் வாழ்வியல் ஊடுபாய்வைப்பேசுதல். ஆன்மா மையங்கொண்டு சுழலும் கவித்துவ நர்த்தனத்தைக் காணல்.

இந்த இரு நிலைபோக்குகளும் கவிதைகளில் களைகட்டினாலும். சலிப்படைந்து வரும் தன்மையே அதிகரிக்கின்றன.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போகும் தன்மையும். திடீரெனக் குதித்து முயல்க்கொம்பை பிடிக்கப்போகும் தீவிரத்தன்மையும். பின் அடையாளம் தெரியாத கானல்நீர் நீட்சியும். நம் பார்வைக்கு தரிசனங்களாகின்றன.

ஆனால், மென்மொழியில் எழுதப்பட்டு நவீன தமிழ்க்கவிதையின் பொதுக்குணாம்சமுடைய கவிதைகளும் கவிதையே. பயணம் முழுதும் உடன் வரும் அதன் சொற்களும், தொனியும், மௌனமும், லயமும், அதுமறைக்கும் வெளியும், உணர்வும் இன்னும் மரணிக்காமல் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

கோமகன்: உங்களுடைய கவிதை தொகுப்பு ஒன்று வந்திருக்கின்றது அது பற்றி சொல்லுங்கள் ?

தில்லை: சுருக்கமாகச் சொல்வதானால், அகப் புறச்சூழல் வாழ்தலின் எல்லாச் சாத்தியங்களையும் நெரித்து ஒடுக்குகின்ற வேளைகளில் உணர்வுகளைப் பேச இன்னுமொரு வாய் தேவைப்பட்டது அதுதான் அது.

கோமகன்:தாயதிஅமைப்பை நீங்கள் உருவாக்க வேண்டிய தேவை என்ன ? அதன் மூலம் நீங்கள் எதனைச் செய்ய நினைக்கின்றீர்கள் ?

தில்லை: “தாயதி” என் சிறுபராயத்திலிருந்தே என்னோடு வளர்ந்து வருகின்ற எண்ணத்தின் விரிசல். என் அம்மாவின் திருமணம் அவரின் குடும்பத்தின் விருப்பத்துடன் இயந்துபோகவில்லை என்ற காரணத்தினாலும், எனது அப்பாவுக்குப் போதுமானளவு சொத்துக்கள் இருந்ததாலும், அவர்களின் பிள்ளையான எனக்குத் தாயதியாக வருகின்ற சொத்துரிமைக்கு உரித்தற்றவளாக ஆக்கப்பட்டதுமல்லாமல்… நான் சிறு குழந்தையாக இருந்தபோதே அம்மாவின் அகால மரணம், மற்றும் எனது அப்பாவின் நான் இன்றுவரை அறியவே முடியாத மரணம், என்பவை எனக்குத் “தாயைத் தின்னி” என்கிற அடை மொழி என் சமூகத்தால் வழங்கப்பட்டு வளர்க்கப்பட்டவள். உரிமத்தை தொலைத்து அடைமொழியைச் சுமந்து நாளும்பொழுதும் கண்ணீர்சிந்தியவள். என்னைப் போல் உரிமங்களை அடையாளங்களைத் தொலைத்தவர்களுக்கு, குரலற்றவர்களுக்கு ஓர் குரலாகத் தாயதி இயங்க வேண்டும் என்ற முனைப்பில் தாயதி உருவானது. அது படைப்பின் குரலாக, வாழ்வின் குரலாகப் பேசுவதற்கு தாயதியின் கை கடவுளின் கையாகப் படைக்கவில்லை. என்னைச் சிதைத்து, உதிரத்தை பெறுதியாக்கி, குரலற்றவர்களின் குரலாகச் செயற்படுகிறது.

“தாயதி” நிச்சயம் என்னைப் போலவே மற்றவர்களையும் அரவணைத்துத் தானும் வளரும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது.

கோமகன்: //”தாயதிநிச்சயம் என்னைப் போலவே மற்றவர்களையும் அரவணைத்துத் தானும் வளரும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது. // உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் அதை மட்டும் வைத்து எப்படி அதனை அளவிட முடியும்? தாயதியின் செயற்பாடுகளைச் சிறிது விரிவு படுத்துங்கள்?

தில்லை: தாயதி இதுவரை என்ன செய்திருக்கிறது என்பதை நான் படங்காட்ட விரும்பவில்லை. அது வாழ்வாதாரம் சார்ந்தும், கலை இலக்கியம், நூலகங்கள் சார்ந்தும் நிறையவே இயங்கியுள்ளது. காதோடு காதாகப் பயணிப்பதில் எனக்கு ஆத்ம திருப்தி. பட்டியல் போட்டு என்பெயரை நாற அடிப்பதில் என்ன திருப்தியிருக்கு? அதைத்தான் சொன்னேன், தாயதி கடவுளின் கையில்லை என்றேன்.

கோமகன்: நீங்கள் ஊடகத்துறையில் இருந்ததாக அறிகின்றேன். எத்தகைய அனுபவங்களை அதில் எடுத்துக் கொண்டீர்கள் ?

தில்லை: எனக்கு கிடைத்த கல்வி அனுபவங்களுக்கு ஏற்றாற்போல் வேலைசெய்யும் சூழல் அங்கு இருக்கவில்லை, ஓரளவு என்னால் முடிந்ததை செய்தேன். பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் சுயமாக இயங்க விடவில்லை. நான் அதையிட்டு எனக்காக கவலை கொள்ளவில்லை. அந்த நிறுவனத்தை நம்பி வந்த பெண்களையும் தொண்டர்களையும் நான் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். நான் அங்கிருந்து வெளியேற காரணமாக இருந்தது சிவராம். அதன் பிற்பாடு என்வெளி அகன்றது. பல்வேறுபட்ட தொடர்புகளும் வாய்ப்புக்களும் கிடைத்தன. ஊடகத்துறை என்று எனது தளம் விரிந்தது.

சிவராம் கொல்லப்படும்வரை நான் யுத்தகால செய்தி ஆவணப்படுத்துனராக சிவராமுடன் சேர்ந்து செயற்பட்டேன். அதன் ஒரு செயற்திட்டமே தமிழ் இளம் ஊடகவியலார் ஒன்றியம் மட்டக்களப்பு -அம்பாறை என்ற அமைப்பை உருவாக்கி அதன் ஆலோசகராகவும் பயிற்றுனராகவும் சிவராம் செயற்பட்டார். எனது வாழ்வில் அது ஒரு மீதெழுந்த காலம். என்னை அறிந்தவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிச்சம். அது ஒரு போராட்டகால ஊடக வாழ்வு.

கோமகன்: //சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் சுயமாக இயங்க விடவில்லை.// எதற்காக உங்களது சுதந்திரமான செயற்பாடுகளை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் தடை செய்தது ?

தில்லை: மேலிருந்து கீழான கட்டமைப்பு போர்ச்சூழல் யாரும் யாரையும் நம்பாத சூழல்.

கோமகன்: சிறிது விரிவுபடுத்துங்கள் ?

தில்லை: நிர்வாகிகள் தன்னலம் கருதி நடந்து கொண்டார்கள், பணியாளர்களுக்கு சமூகம் பற்றிய புரிதல் இல்லை, அனைவரும் தங்களுடைய தேவைகளுக்காக அமைப்பை பயன்படுத்திக்கொண்டார்கள், அந்தக் காலகட்டத்தில் நானும் அந்த அமைப்பை நாடியிருந்தேன். எப்படியாவது தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசை பிடித்தவர்கள்.

கோமகன்: //சிவராம் கொல்லப்படும்வரை// சிவராம் கொலை தொடர்பாகப் பல ஊகங்களும் வதந்திகளும் இருக்கின்றன. உண்மையில் என்னதான் நடந்தது?

தில்லை: பல தரப்பிலும் எதிரிகள் இருக்கிறார்கள் “என்னைப்போடுவார்கள்” என்று என்னிடம் மட்டுமில்லை பலரிடம் சிவராம் சொல்லியதாகவும் சிவராம் உயிரோடு இருக்கும்போதே நான் அறிந்தேன். இது சம்பந்தமாக துப்பறிய வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. அதை நான் செய்ய முடியாது, பல ஊகங்களும் வதந்திகளும் அது பற்றி எனக்குத்தெரியவில்லை. ஆனால்,

சிவாராம் மற்ற ஊடகவியலாளர்கள் போர்ச் சூழலில் செய்ய முடியாததை அவர்கள் செய்யப் பயந்ததை சிவராம்  துணிந்து செய்தார்  உலக அரங்கில் சிவராமின் எழுத்துக்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுதான் இறுதியில் அவரின் கொலைக்கு காரணமாயிற்று.

என்னைப் பொறுத்தளவில் ஒரு மனிதனாக சிவராம் சிறந்த அறிவாளி, சிவராமின் இழப்பு அவருடைய குழந்தைகளுக்கும் மனைவிக்கும் மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பு அவ்வளவுதான்.

கோமகன்: உங்களுக்கும் தாரக்கி சிவராமுக்கும் இடையிலான தொடர்புகளை பற்றி சொல்லுங்கள்… 

தில்லை: நான் ஏற்கனவே சொன்னது போல் சிவராம் கொல்லப்படும் வரை நான் யுத்தகால செய்தி ஆவணப்படுத்துனராக சிவராமுடன் சேர்ந்து செயற்பட்டேன்.

ஊடகத் துறையில் கிழக்கில் செயற்பட்ட மற்றவர்களோடு எனக்கு எப்படி தொடர்பு இருக்குமோ அது போன்றதுதான் சிவராமுடைய தொடர்பும்.

கோமகன்: //ஊடகத் துறையில் கிழக்கில் செயற்பட்ட மற்றவர்களோடு எனக்கு எப்படி தொடர்பு இருக்குமோ அது போன்றதுதான் சிவராமுடைய தொடர்பும். // நீங்கள் அவரின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகவும் போர் செய்தி சேகரிப்பாளராகவும் இருந்திருக்கின்றிர்கள் …?

தில்லை: நம்பிக்கைக்குரிய உதவியாளராக நான் மட்டும் இருக்கவில்லை வேறு பலரும் போர் செய்தி சேகரிப்பாளராக இருந்தார்கள்.

கோமகன்: பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்திச் சென்ற கருணா அம்மான் எதற்காக புலிகள் இயக்கத்தில் இருந்து விலக வேண்டி வந்தது ?

தில்லை: கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து விலகவில்லை, பிரிந்து சென்றார், கிழக்கு மாகாணத்தில் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கினார் தனிப்பட்டமுறையில் கருணா பிரபாகரனுக்கும் தலைமைக்கும் விசுவாசமான ஆள்தான். அதனால்தான் கருணாவால் தலைமைப் பொறுப்புக்கு வரமுடிந்தது. புலிகள் இயக்கத்தில் குழுவாதத்திற்கு இடமில்லை. அதனால் கருணா தனக்கு பாதுகாப்பான கிழக்கு மாகணத்தில் நின்றுகொண்டார்.

நான் அறிந்தவகையில் கருணா பிரிவதற்கு முதல் கிழக்கு மாகாண அரசியல் என்று எதுவும் அவருக்கு இருக்கவில்லை. புலிகள் இயக்கத்தில் பெருமளவில் கிழக்குப் போராளிகள் இருந்த போதிலும் அவர்களுக்கான முக்கியத்துவம் புலிகள் இயக்கத்தில் உணரப்படவில்லை என்ற ஆதங்கம் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலானோருக்கு இருந்தது. இதை கருணா தனது பிரிவுக்கான காரணமாக கூறினார். இன்றைக்கும் இந்த பிரச்சனை பற்றி யாரும் பேசத் தயாரில்லை. கருணா என்ற தனிமனிதனை பற்றி மட்டுமே நீங்கள் உட்பட பேசுகிறீர்கள் இது முறையா ?

கோமகன்: //புலிகள் இயக்கத்தில் பெருமளவில் கிழக்குப் போராளிகள் இருந்த போதிலும் அவர்களுக்கான முக்கியத்துவம் புலிகள் இயக்கத்தில் உணரப்படவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. // இது எவ்வளவு தூரத்திற்கு சரியானது ? கருணா அம்மானின் படையணியின் முக்கியத்துவம் உணராமலா அவர்கள் பல தாக்குதல்களில் தலைமைப்பீடத்தால் உள்வாங்கப்பட்டார்கள்

தில்லை: கருணா என்ற தனிமனிதனுக்கு திறமை அடிப்படையில்  பதவி கொடுத்தது வேறு. அதே போன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டது என்பது தான் உண்மை. ஆனால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகளின் பிரச்சனை வேறு. எப்பொழுதும் கிழக்கு மாகாணப் போராளிகளை முன்னரங்க படையணிகளில் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டதைச் சொல்லலாம். அத்தோடு விகிதாசார அடிப்படையில் பெருமளவு கிழக்குப்போராளிகள் இருந்தது உண்மை. அங்கு நடந்த பெருவாரியான யுத்தங்கள் வடமாகணத்தில் நடந்தன. அதன் விளைவு தான் இந்த ஆதங்கம்.

கோமகன்: //கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து விலகவில்லை, பிரிந்து சென்றார் கிழக்கு மாகாணத்தில் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கினார்// இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே …

தில்லை: கருணா புலிகள் இயக்கத்தின் அமைப்பு வடிவத்தில் தனிக்குழுவாக இருக்க விரும்பினார். அந்தக் கூட்டமைப்பை சீர்குலைக்காமல், அந்த யோசனையைக் கூட புலிகளின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

கோமகன்: இப்பொழுது தமிழ் முஸ்லீம் உறவுகள் எப்படி இருக்கின்றன ?

தில்லை: நான் சின்னவயதில் பார்த்த அளவுக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும். ஒரு நம்பிக்கையீனமான உறவாக உள்ளது. இது நிலையான உறவுமல்ல. ஆளையாள் மனதிற்குள் தின்று கொண்டிருக்கும் உறவுதான் நீடிக்கிறது. தேர்தல் வரும்போது இதை வெளிப்படையாகக் காணலாம்.

இப்போது வளர்ந்துவரும் இளம் தலைமுறைக்குக்கூட இரு சமூகமும் நச்சுவிதையை விதைப்பதுதான் எனக்கு வேதனையாக உள்ளது.

கோமகன்: //இப்போது வளர்ந்துவரும் இளம் தலைமுறைக்குக்கூட இரு சமூகமும் நச்சுவிதையை விதைப்பதுதான் எனக்கு வேதனையாக உள்ளது. // எப்படியாக நச்சுவிதையை விதைக்கின்றார்கள் ?

தில்லை: குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இளந்தலைமுறைக்கு மற்ற சமூகம் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி எதிர் மனநிலையை உருவாக்கி இரு சமூகங்களிலும் பிரிவினையைத் தூண்டிவிடுதல்.

கோமகன்: இப்பொழுது எனக்கு இன்னுமொரு முக்கியமான கேள்வி ஒன்று நினைவுக்கு வருகின்றது. போருக்குப் பின்னரான காலங்களில் எழுத்துப்பரப்பிலும் சரி அரசியலிலும் சரி பகைமறப்புஎன்றவொரு சொல்லாடல் அதிகமாகப் பாவிக்கப்பட்டதை அவதானித்தேன். நீங்கள் கூட இந்த நேர்காணல் மூலமாக இளைய சந்ததிகளுக்கு இருபக்கமும் நஞ்சூட்டப்படுவதாகப் பதிவு செய்கின்றீர்கள். உண்மையில் கிழக்குப்பிராந்தியத்தில்பகைமறப்புக்குமுக்கிய தடைகளாக எதை இனம் காட்டுகின்றீர்கள்? ஏனெனில் இந்த விடயத்தில் எனக்கு கசப்பான அனுபவங்களே வந்திருந்தன. 

தில்லை: தேர்தல்தான் முக்கிய காரணியாகிறது…….

பிட்டும் தேங்காய்ப்பூவும்  போலவும் வாழ்கின்ற வாழ்வுகள் பாமரமக்களிடம் எந்த குரோத உள்ளீடுகளுமில்லாமல்த்தான் ஆரம்பத்தில்  நகர்ந்தன. பின்னர் ஏற்பட்ட கரியமிலப்பகைமைகள் எல்லாவற்றையும் அறுத்தெறிந்தாலும்.அதன் பின்னர் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் அயறாகின.

எனினும் காலத்துக்கு காலம் வந்த தேர்தல்கள் மீண்டும் மீண்டும் குரோதங்களுக்கு வித்திட்டன. . அரசியல் வங்குரோத்துத்தனத்திற்காக தங்கள் தங்கள் கதிரைகளை சூடாக்குவதற்காக… அப்பாவி மக்களை ஏவீனர்/ ஏவூகின்றனர்.

இப்பொழுதும்  காணிபிடித்தலின் பெயரால் … அதிகாரத்தின் சுழற்சிகளும் ,பழையதை மறக்காத அல்லது துறக்காத சிதல் கட்டிய மனங்களும் மீண்டும் மீண்டும் நச்சுவிதைப்புக்கே வித்திடுகின்றன.இவைகள்தான் பகைமறுப்புக்கு தடைக்கல்லாக இருக்கின்றன.

கோமகன்: மரபுவழித் தமிழர் பிரதேசங்களில் முஸ்லீம் குடியேற்றங்கள் தொடர்பாகப் பலவிதமான செய்திகளை கேள்விப்பட்டிருக்கின்றேன். இது உண்மையா ? இது தொடர்பான சரியானதும் விபரமானதுமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

தில்லை: ஒரு மனிதனுக்கான வாழ்விடம் முக்கியமானது. தமிழராக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், சிங்களவராக இருக்கலாம். இந்த வாழ்விடத்திற்காக குடியமர்த்தல்கள் நடைபெற்றிருக்கிறது. அது சமூக அபிவிருத்திக்கான குடியேற்றமாக இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி என்ற பெயரில் மற்றவர்களின் காணியை அடாவடித்தனமாக பறிப்பது தவறானது. எல்லாக் குடியேற்றங்களும் அத்துமீறல்கள் அல்ல ஆனால் அத்துமீறிய குடியேற்றங்கள் நீதியானவை அல்ல. உதாரணத்திற்கு தற்போது மட்டக்களப்பில் நடைபெறுகின்ற மைலந்தனை பிரச்சினை சாதாரண குடியேற்றம் அல்ல அது ஒரு அத்துமீறல். இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு நீதியான ஆணைக்குழு அவசியம்.

கோமகன்: //மைலந்தனை பிரச்சினை // இது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்… ?

தில்லை: மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப் பிரச்சினைதான் மைலந்தனை பிரச்சனை, மட்டக்களப்பில் வேளாண்மை செய்யும் காலங்களில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணிகள் தற்போது சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல்தரை காணிகளை அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழிலும் பாதிப்படைந்துள்ளது.

கோமகன்: //இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு நீதியான ஆணைக்குழு அவசியம். // ஆணைக்குழுக்கள் இலங்கையில் எப்பொழுதாவது வெற்றியடைந்ததாக எண்ணுகின்றிர்களா?

தில்லை: வெற்றி பெறுவது மட்டும் நோக்கமல்ல, தீர்வை நோக்கிச் செல்ல இருக்கும் ஒரு வழி. கடந்த வரலாற்றில் எங்களுக்கு எந்தளவு கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் இந்த முறையைத்தான் பின்பற்றலாம் வேறு என்ன தெரிவு இருகிறது சொல்லுங்கள்?

கோமகன்: எல்லா விதத்திலுமே தங்களுக்குரிய கௌரவத்தை கொடுக்காது தங்களின் எஜமானர்கள் போல் தமிழ்த்தரப்புகள் நடக்கின்றன என்று எனக்கு தந்த நேர்காணலில் மிஹாத் ஒரு காட்டமான விமர்சனத்தை முன் வைக்கின்றார். இதற்கு என்ன சொல்கின்றிர்கள்

தில்லை: நிச்சயமாக இந்த விமர்சனத்தை மறுக்கிறேன்.

முப்பதாண்டு கால யுத்தத்தில் மூவின மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை நான் இங்கும் பதிவு செய்திருக்கின்றேன். ஆனால் பாதிப்பின் அளவும் தன்மையும் வேறுபடலாம். அதில் தமிழர் தரப்பு முக்கியமாக கிழக்கு தமிழர் தரப்பின் இழப்புகள் மிக மோசமானது. கிழக்கின் படுவான்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் நேரடி அனுபவங்களையும் கதைகளையும் ஏராளமாய் என்னுள் புதைத்து வைத்திருக்கிறேன். அவற்றை கிண்டிக் கிளறிக்கொண்டிருப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

ஆனால் கடந்த காலத்தைப்பற்றிய சுய விமர்சனம் செய்ய முடியாத அல்லது விரும்பாத ஒருவரின் குற்றச்சாட்டடாகவேதான் அந்தக்கருத்தை நான் பார்க்கிறேன். இதனையே தான் இன்று பெரும்பாலானவர்கள் பொது வெளியில் செய்துகொண்டிருக்கிறார்கள் குற்றச் சாட்டுகள் ஒரு போதும் தீர்வாக அமைந்ததில்லை.

இப்போ இந்த கேள்விக்கான பதிலை எழுதிக் கொண்டிருக்கும்போது இலங்கையில் கொரோனா நெருக்கடிகாலத்தில் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிப்பு தெரிவித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரைக்காக ஏகப்பட்ட முஸ்லிம்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டிக் குவிக்கிறார்கள். இது போன்று சிறிது சிறிதாக தென்படும் நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டு நகர்வதே அனைத்து சமூகத்துக்கும் நன்மையானது. ஏனென்றால் எது எப்படியோ மூவின மக்களும் அந்த தீவிலேயே தான் வாழ வேண்டும்.

கோமகன்: //படுவான்கரை கிராமத்தில் // அங்கு என்னதான் நடந்தது …?

தில்லை: அவற்றை கிண்டிக் கிளறிக்கொண்டிருப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

கோமகன்: சத்துருக்கொண்டான் வெருகல் படுகொலைகளை ஒரு ஊடகவியலாளராக எப்படி பார்க்கின்றிர்கள் ? அங்கு என்ன தான் நடந்தது ?

தில்லை: ஒரு இனக்குழுமத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இனப்படுகொலையாகும். சத்துருக்கொண்டான் உட்பட கிழக்கில் உள்ள தமிழ் கிராமங்களில் தமிழர் என்ற காரணத்திற்காகவே நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர்.

போருடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கிழக்கில் நடந்த மிகப்பெரிய படுகொலைகளில் சத்துருக்கொண்டான் படுகொலையும் ஒன்றாகும். இந்த படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட வலுவான சாட்சியங்கள் இருந்த போதும் 30வருடங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழர் அரசியலில் சாகசம் செய்யும் தலைமைகள் எவரும் இப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணையோ உள்நாட்டு விசாரணையோ நடத்தப்பட வேண்டும் என கோரவில்லை.

தமிழர்களுக்கு நீதியையும் உரிமையையும் பெற்றுத்தருகிறோம் என ஐ.நாவரை செல்லும் தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள கிழக்குத் தமிழ் அமைப்புக்களும் சத்துருக்கொண்டான் உட்பட கிழக்கில் நடந்த படுகொலைகள் பற்றி உணர்ச்சிகரமான பேச்சுகளைத் தவிர நடைமுறைக்கு சாத்தியமாக எதுவுமே பேசியது கிடையாது.

சத்துருக்கொண்டான் படுகொலை ஒரு இன அழிப்பு, வெருகல் படுகொலை இயக்கத்துக்குள் பிளவு ஏற்ப்பட்டதால் நடந்த படுகொலை. வெருகல் படுகொலை ஒரே இயக்கத்திற்குள் இருந்த ஒரே உறுப்பினர்களுக்குள் நடந்த படுகொலை. இதே போன்று ஈழத்திற்காக போராட வெளிக்கிட்ட இயக்கங்களுக்குள் நடந்த சகோதர படுகொலையையும் மறுக்க முடியாது.

கோமகன்: உடல் உழைப்பிற்கே அதிக முக்கியத்துவம் கொண்டிருந்த கிழக்கிலங்கை சமூகத்திடம் இலக்கிய செயற்பாடும், வாசிப்பு பழக்கமும் எப்படியாக நுழைந்து கொண்டது ?

தில்லை: எப்பொழுதும் உழைக்கும் சமூகத்திடம்தான் இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் தூண்டலாகும். ஐம்பதுகளுக்குப் பின்னரான காலகட்டம் சுரண்டலுக்கான எதிர்புக்கள் மேற்கிளம்பியபோது. முதலாளித்துவத்தை எதிர்த்த சிலர் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டார்கள், சோவியத்யூனியன் தொடர்புகளும் சோவியத் வெளியீடுகளும் இலக்கியத்திலும், வாசிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இன்னொருபக்கம் மத்தியதர வர்க்கத்தினரின் எழுச்சியும், நான் ஏற்கனவே சொன்னதுபோல் திராவிட சிந்தனையும், தமிழ் நாட்டுச்சஞ்சிகைகளும், பெரியார் அண்ணாத்துரை கலைஞர் போன்றவர்களின் பாதிப்பும், வாசிப்பிலும் படைப்போட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த உள்நுழைவு தான் இன்றைய பாச்சலுக்கு வித்திட்டிருக்கவேண்டும்.

கோமகன்: கிழக்கிலங்கையில் இலக்கியச் செல்நெறிகள் மற்றும் சஞ்சிகைகளின் தாக்கங்கள் தொடர்பாக கொஞ்சம் விபரியுங்கள் ?

தில்லை: கிழக்கின் மரபுசார்ந்த பண்பாடு கூத்தோடும், வாய்மொழி இலங்கியங்களுடனும் தான் உருவாகிறது. புலவர்களும், அண்ணாவிகளின் உருவாக்கம் மரபுசார் இலக்கியங்களின் தோற்றுவாயாக பயணிக்கத்தொடங்கின. கிழக்கினுடைய ஒவ்வொரு பிரதேசங்களிலும் இந்தத்தோற்றுவாய் மக்களின் வாழ்வில் அறிவுச் சேர்க்கையைத் தூண்டிவிடுகின்றன.

திருமலையிலிருந்து சரவணமுத்துப்பிள்ளையும்  அவரது தத்தைவிடு தூதுவின்   மேலெழுகையும், மட்டக்களப்பில் வித்துவான் ச. பூபாலபிள்ளையின் தோற்றுவாயும் புற உலகப்பார்வைக்கு வித்திட்டன. இந்த ஊடாட்டத்தின் பாச்சல் பல புலவர்கள் உருவாகக்காரணமாகிற்று. தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இந்த  அறுவடையைக் காணமுடிந்தன. “சந்தக்கவிகளும், இசைப்பாடல்களும் எழுதவல்லவன். தமிழ்க் கவிஞர்களுக்கு அரிதாக உள்ள எந்தக் கவிதையினையும் இனிதே அமைக்கும் கவிவாணன்…” என சுவாமி விபுலானந்தர் வியந்து பாடிய வித்துவான் அ.சரவணமுத்தன் போல் குமரசாமி ஐயர், மொட்டை வேலாப்போடியார், பண்டிதர் குஞ்சித்தம்பி, சின்ன ஆலிம் அப்பா, சேகுமதாறு சாகிப்புலவர் முகம்மது றாபிப் புலவர்… என நீண்ட  மரபின் அறாத்தொடர்ச்சியாக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளைக்கு பின்னரான   மேலெழுச்சி  பல மரபார்ந்த கவிஞர்களால்  செந்நெறி இலக்கியத்தில் பெரும் கட்டுடைப்புப் பயணத்தை நிகழ்த்தின. இந்த உடைப்புத்தான் கிழக்கின் நவீன இலக்கியத்தின் பாச்சலுக்கு வித்திட்டுள்ளது.

கிழக்கின் சிறுசஞ்சிகையின் அல்லது பெரும் சஞ்சிகையின் தாக்கம் மிகப் பிந்தியே காணப்படுகிறது. ஆரம்பத்தில் திராவிட கொள்கையின் மேலெழுச்சி காரணமாக இந்திய சஞ்சிகைகளின் வருகை கிழக்கினுடைய படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் தீனிபோட்டன  தமிழ் நாட்டின் தீபாவளி மலர்கள் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,திராவிடன்.. போன்றவை  திராவிடசார் கொள்கைப் போக்குக்கு வழிகோலின. இருந்தும் வீரகேசரி போன்ற பத்திரிகைகள் கிழக்கின் படைப்பாக்கச் செயற்பாட்டுக்கும் படைப்பாளிகளுக்கும்  உந்துதலையும் உத்வேகத்தையும்  உருவாக்கி வழிசமைத்தன. பின்னர் சுதந்திரனின் வருகை கிழக்கில் இன்னொரு பாச்சலை ஏற்படுத்தினாலும் கிழக்கின் (மட்டக்களப்பின்) முதல் சஞ்சிகை பாரதியின் வருகை ஈழத்தினுடைய படைப்பு உந்துதலுக்கு வழிகோலியது.. இதன் வருகையூடாக கிழக்கிலிருந்து புதுப்புது படைப்பாளிகள் உருவாகிறார்கள் தமிழ்தேசிய உணர்வு மெல்லமெல்ல மேற்கிளம்பத்தொடங்குகிறது. இதன்பின் நீலாவணனுடைய பாடுமீன் சஞ்சிகை இன்னொரு படியேறுகிறது. கவிஞன்,மலர், சுமைதாங்கி, என நீண்ட சஞ்சிகைகளின் வருகையின் பின், வியூகம், இருப்பு, மூன்றாவதுமனிதன், மறுகா, எதுவரை, தாகம், ஆகவே… போன்றன வாசகர்பரப்பை அகர்சித்து நவீன சிந்தனைத்தூண்டலை படைப்பிலும் சிந்தனையிலும் ஏற்படுத்தியிருக்கின்றன.

கோமகன்: நான் மட்டக்களப்பு சென்ற பொழுது அங்கே தமிழ் எழுத்துகள்‘, முஸ்லிம் எழுத்துகள்என்று இருவகையாக எழுத்து துறை இருந்ததாக அறிந்தேன். இது எந்த வகையில் உண்மையானது ?

தில்லை: எனக்கு இந்தப் பிரிப்பு இலங்கியங்களில் உடன்பாடுமில்லை நம்பிக்கையுமில்லை. நீங்கள் சொல்வதுபோல் முஸ்லிம் எழுத்துக்கள் எனும் வகையறையைத் தோற்றுவிக்க ஒன்றோ இரண்டொருபேர் முனைந்தார்கள் பின்னர் அவர்களாகவே அதைக் கைவிட்டார்கள். முஸ்லிம் இலக்கியம் என்றொரு போக்கிருந்திருக்கிறது. எண்பதுகளின் பின்னர் அது உணரப்பட்டது. சிலர் அதை வளர்த்து எடுக்க விரும்புகிறார்கள். இன்று அதன் பயன்பாடு அதில் அவர்கள் வெற்றிபெற்றதாக நான் கருதவில்லை.

கோமகன்: ஆனால் இன்று அவர்களின் வகிபாகத்தை அவ்வளவு இலகுவில் தட்டி விட்டு செல்ல முடியாது இருக்கிறதே… ?

தில்லை: நான் அதை தட்டிவிட்டுச் செல்லவில்லை . அவர்களின் வகிபாகத்தை ஏற்றுகொள்கிறேன். அது வளர்வது குறித்தும் இருப்பது குறித்தும் எனக்கு  எந்த ஆட்சேபணையும் இல்லை.

கோமகன்: பலவந்தமாக மௌனிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம் உங்களுக்கு எதைச் சொல்லி நின்றது ?

தில்லை: ஈழ விடுதலைப் போராட்டம் எல்லாக் காலகட்டங்களிலும் பல்வேறு வகையான அனுபவங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தந்தது. நானும் பல்வேறு வகையான அனுபவங்களையும், இன்னல்களையும் சந்தித்து இருக்கிறேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தால் ஏற்பட்ட இன்னல்களை இலங்கை மக்கள் அனைவருக்குமானதாகவே பார்க்கின்றேன். மௌனிக்கப்பட்டது ஆயுதங்களே. மக்கள் அவலங்களோடும், ஓலங்களோடுமே கொல்லப்பட்டார்கள். ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் பழுதடைந்து விட்டால் வேலை முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. அவ்வாறு தான் இறுதிப் போரை நான் பார்க்கிறேன்.   

கோமகன் : எனக்குத் தெரிந்து ஏறத்தாழ 30/35 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கிலங்கை பிராந்தியத்தில் இருந்து பெண்என்றவொரு கோதாவில் நின்று கொண்டு உண்மையின் குரலாக அரசியல் இலக்கியம் என்று பல புதிய விடயங்களை என்னுடன் கதைத்திருக்கின்றிர்கள். உங்களுக்குத் பிடித்தமான இன்னொரு பக்கத்தைத் தொடலாம் என எண்ணுகின்றேன்.  நாங்கள் கொஞ்சம் பெண்கள் தொடர்பாகப் பேசலாமே ……

தில்லை : ஓ ……..தாராளமாகப் பேசலாமே ..

கோமகன்: சர்வதேச அளவில் பெண்ணியம் என்பது பிரான்ஸை தோற்றுவாயாக கொண்ட தீவிர பெண்ணியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை தோற்றுவாயாக கொண்ட லிபரல் பெண்ணியம் என்று இருவகைப்பட்டதாக அறிந்திருக்கின்றேன். நீங்கள் இதில் எங்கே இருக்கின்றீர்கள் ?

தில்லை: நீங்கள் ஒன்றில் தீவிரப் பெண்ணியமா? அல்லது மிதவாதப்பெண்ணியமா? என்று கேட்டிருக்கவேண்டும். அல்லது லிபரல் பெண்ணியமா? சோஷலிச பெண்ணியமா? என்று சித்தாந்த அடிப்படையில் கேட்டு இருக்கவேண்டும் அதேநேரம் பெண்ணியத்துக்குள் பல பிரிவுகள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். பெண்ணியச் சிந்தனைகள் ஒரு தேசிய அடிப்படையில் உருவாகவில்லை, அது ஒரு சர்வதேச அரசியல் போக்கு. நான் அதில் எந்த பிரிவு என்பதை குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. நான் முன்பு ஒரு ஒற்றப்படையான கடும்போக்கான பெண்ணியவாதியாக இருந்தேன்.

கோமகன்: நீங்கள் ஒற்றைப்படைத்தன்மையுள்ள கடும்போக்கான பெண்ணியவாதியாக இருந்ததாக சொல்கின்றிர்கள், அதனைக் கொஞ்சம் விரிவு படுத்துங்கள்

தில்லை: பெண் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சிறுவயதில் இருந்து பல்வேறு சமூகக் காரணங்களுக்காகவும் அடக்க, ஒடுக்க நான் போராடத் துணிந்தேன், இன்று வரை அதைத்தான் நான் செய்கின்றேன். என்னுடைய உரிமை என்னைப் பாதுகாத்தல். இதை நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை கைவிட்டதில்லை, இன்றும் பெண்கள் உரிமை என்று வரும்போது கடும்போக்கான பெண்ணாகவே இருக்கிறேன் இருப்பேன்.

கோமகன்: இதுவரையில் புலம்பெயர் நாட்டில் எமது பெண்களுக்காக ஒரு சட்டபூர்வமான பெண்கள் அமைப்பை உருவாக்க முடியாமைக்கு என்ன காரணம் என எண்ணுகின்றிர்கள்?

தில்லை: ஒருமுனைப்பு இல்லாமையே முதல் காரணம். பெண்ணியம் பேசும் எங்களிடம் சாதி, இனம், பிரதேசமென என இன்னும் பல அடுக்குகளும் பல உப கூறுகளும் இதற்கு தடையாக நிற்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் ஒருமித்தலுக்கான அமைப்பாவதற்கு தடையாக இருப்பதைக் காண்கின்றேன்.

கோமகன்: தென்கிழக்காசியப் பெண்களில் பெண்ணியம் மற்றும் பெண்விடுதலை தொடர்பான புரிதல்களில் பாரிய முரண்நகைகளை அவதானிக்கின்றேன்.

தில்லை: உதாரணத்திற்கு அண்மைக்காலம் வரையில் மாலைதீவில் தாய்வழிச் சமூகமாக பெண்களுக்கு அதிக உரிமைகள் இருந்தன. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் தந்தைவழி சமூகம் காரணமாக பெண்களுக்கு அதிக உரிமைகள் இருக்கவில்லை. மாலைதீவில் பெண்களின் பங்களிப்பு சமூகத்தில் கூடுதலாக இருந்தது. இப்போதும் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு பெண்கள் பங்கு வகிக்கின்றனர். இங்கு நிறையப்பேர் கவனிக்காத விடயம் நிறுவனமயப்படுத்தபட்ட மதத்தின் பெயரால் ஆணாதிக்க கலாச்சாரம் பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது, ஆணாதிக்க கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட இந்து, பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களால் உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. உதாரணத்திற்கு பாரம்பரிய கலாசாரத்தில் பெண்களுக்கு கூடுதல் அந்தஸ்து இருந்தது. மேற்கத்திய நாடுகளில் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்ததால் மட்டுமே ஆண்களுக்கு பெண்கள் சமம் என்ற சமூக மாற்றம் ஏற்பட்டது.

கோமகன்: உங்கள் பதில் எனக்கு ஆச்சரியத்தையே தருகின்றது. இலங்கை தாய்வழி சமூகத்தை கொண்டது. தென்கிழக்காசியாவில் இலங்கையின் தேசவழமைசட்டம்பெண்களுக்கே அதிக பாதுகாப்பை தருகின்றது. அதாவது சொத்து ரீதியாக உரித்தை பெறல். ஆனால் நீங்கள் சொல்வது நேர்முரணாக இருக்கிறது?

தில்லை: ‘தேசவழமைசட்டம்’ யாழ்குடா நாட்டில் மட்டும் தான் இருக்கிறது, இது பழமைவாதிகள் தமது ஆணாதிக்க மனநிலையிலிருந்து கொண்டுவந்த சட்டம்.  இதில் பெண்களுக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர இது பெண்களைப்பாதுகாக்க கொண்டு வந்த சட்டமில்லை. பொதுவாக தேசவழமைசட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான உரிமைகள் அங்கு இல்லை. ஆண்களில் தங்கியிருக்கும் உரிமைதான் அங்குள்ளது.

கோமகன்: //இதில் பெண்களுக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர இது பெண்களைப்பாதுகாக்க கொண்டுவந்த சட்டமில்லை.// புரியவில்லையே? விபரியுங்கள்?

தில்லை: யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம் பிரயோகிக்கப்படுவது தேசவழமைக்கு உரித்தான தமிழர்களுக்கு மட்டுமே. ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மணம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழும் காலத்தில் குறித்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர்களது முன்னோரிடமிருந்து திருமணத்திற்காக கொடுக்கும் சொத்துக்கள் ஆணுக்கு வரும் சொத்தை “முதுசொம்“ எனவும், பெண்ணுக்கு வரும் சொத்தை “சீதனம்“ எனவும் தேசவழமை குறிப்பிடுகிறது. தேசவழமைக்கு உரித்தான பெண் ஒருவர் அதற்கு உரித்தில்லாத ஒருவரைத் திருமணம் செய்தால், திருமணம் மூலமாக அவள் தேசவழமைக்கு உரிமையற்றவளாகிறாள். தேசவழமைக்கு உரித்தில்லாத பெண் ஒருவர் தேசவழமைக்கு உரித்தான ஆண் ஒருவரைத் திருமணம் செய்தால், திருமணம் மூலமாக அவள் தேசவழமைக்கு உரித்தாகிறாள். ஒரு திருமணமான பெண்ணுக்கு தேசவழமைச் சட்டப்படி திருமண  பந்தத்தால் உண்டாகும் அதிகாரம் கணவனுக்கே உண்டு. இந்த அதிகாரம் காரணமாக மனைவியின் அசையாச் சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யவோ,விற்கவோ அல்லது அடைவு வைப்பதற்கோ  தனது சம்மதத்தை தெரிவிக்க வேண்டிய உரிமை கணவனுக்கு உள்ளது. மனைவிக்கு சீதனமாக பணம் வழங்கப்பட்டிருந்தால் அவள் அதைக்கொண்டு அசையாச் சொத்துக்களை வாங்கியிருந்தால் அச் சொத்து கணவன் மனைவி இருவரின் தேடியதேட்டமாகக் கருதப்படும். பெண்கள் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திரமாகக் கையாளும் உரிமை இங்கு மறுக்கப்படுகிறது.

கோமகன்: தாய்வழி வந்த சமூகத்தில் வந்திருக்கின்ற ஆண்களில் (இலங்கை, இந்திய) எப்படியாக ஆணாதிக்கம் குடிகொண்டிருக்க முடியும் என சொல்கின்றிர்கள்

தில்லை: ஆதி காலத்தில் இருந்த தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இருந்திருக்கின்றன, நாகரீக வளர்ச்சி (மன்னராட்சி காலத்தையும் சேர்த்து) அடையும் போது அது ஒரு தந்தைவழிச் சமூகமாகத்தான் வளர்ந்தது, மத நிறுவனங்களும் அரசும் (அவர்களின் நன்மை கருதி) அப்படி ஒரு சமூகத்தைதான் ஊக்குவித்து வளர்த்தன.

கோமகன்: சமூகவலைத்தளங்களில் ஆண்கள் தொடர்பான பிம்பங்கள் மீது திட்டமிட்டவகையில் எதிரம்சமான கருத்துகள் அல்லது எடுகோள்கள் புறப்படுவதை அவதானிக்கின்றேன். இது சரியா ?

தில்லை: இல்லை , அவதூறுகள் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல ஆண்களுக்கு எதிராக வந்தாலும் நான் எதிர்ப்பேன், இந்த விடயத்தில் நான் ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்க மாட்டேன். நான் நியாயத்தின் பக்கம் நிற்பேன், நின்றும் இருக்கின்றேன். தெரியாத அறியாத விடயங்களை வைத்துக்கொண்டு ஊகங்களை உருவாக்குவதை வெறுப்பவள் நான். நான் ஒரு பெண் என்பதற்காக ஆண்களுக்கு எதிரான ஆதாரமற்ற அவதூறுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது.

கோமகன்: திருமணம் என்ற நிறுவனம் காலவதியாகி விட்ட ஒரு அமைப்பு என்றவோர் எண்ணப்போக்கினை இப்பொழுதெல்லாம் பார்க்கின்றேன். இந்த எண்ணப்பாடு எவ்வளவு தூரத்திற்கு சரியானது ?

தில்லை: இயற்கையிலேயே திருமணத்திற்கு பெண்களைத் தயார்படுத்தும் பொறுப்பு பெற்றோரின் கடமை என்பதை நாங்கள் மறுத்துவிட முடியாது. அது காலங்காலமாக நடந்துகொண்டிருப்பது அதை நாங்கள் காலாவதியாகி விட்டது என்று சொல்லமுடியாது. திருமணங்கள் பல தெரிவுகளில் இருக்கும்.

நாகரிகத்தின் வளர்ச்சியும், தனிமனித சிந்தனைச்சிதைவும், மனஒடுங்கலும், திருமணத்தை கட்டுடைப்புச் செய்ய முயன்றாலும், ஏதோ ஒருவகையில் திருமணம்  முளையம்  கொண்டு எழுந்து கொண்டேயிருக்கும். காலாவதியாவதற்கு அது ஒன்றும் தின்பண்டமில்லை. 

கோமகன்: தனித்திருத்தலில் உள்ள சாதக பாதகங்களைச் சொல்லுங்கள் ?

தில்லை: தனித்திருத்தல் என்பது உலகத்தில் எந்தச் சூழ்நிலைகளிலும் எவ்வாறான வாழ்க்கைத்தரத்திலும் வாழக்கூடிய பலத்தைக் கொடுக்கும்.  தனிமை என்ற உணர்வு எல்லா நேரத்திலும் இருக்காவிட்டாலும் அது இருந்துகொண்டே இருக்கும். அதை மறுக்க முடியாது. இடர்களைத் தனித்த பயணத்தில்  நான் அதிகம் கணக்கெடுப்பதில்லை.

கோமகன்: ஒரு பெண் எதை மீறலாம் எதை மீறக்கூடாது ?

தில்லை: தனி நபராக மனித இனத்தின் பிரதிநிதியாக அந்தப் பெண்ணின் முடிவு.

தில்லை-சுவிற்சர்லாந்து

தில்லை
ஓவியம் : றஷ்மி

000000000000000000000000
தில்லை: பற்றிய சிறு குறிப்பு :
கிழக்கிலங்கையை சேர்ந்த தில்லை 2006 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர். தாயகத்தில்  பல்வேறுபட்ட  சமூக நிறுவனங்களில் பணிபுரிந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளரான இவர், பெண்கள் அமைப்புக்கள், நூலகத்துறை, அச்சகம், பதிப்பகத்துறை, பத்திரிகைதுறை போன்றவற்றில் அனுபவம் மிக்கவர்.  தில்லை காலஞ்சென்ற தாராக்கி சிவராமனின் உதவியாளராக செயற்பட்டவர். தாராக்கியின் மரணம்  இவரை மேற்குலகிற்கு புலம்பெயரச்செய்தது. இந்த நேர்காணலில் கிழக்கிலங்கை தொடர்பாகப் பல வரலாற்றுச் சம்பவங்ககளை அறியமுடிந்தது . ஊடகவியலாளர், ஓவியர், சமூக செயற்பாட்டாளர்,கவிஞர், அரங்கச் செயற்ப்பாட்டாளர், பதிப்பாளர் என்று பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்ட தில்லையிடம் நான் கண்ட நேர்காணல் இது .
கோமகன்      
16 மாசி 2021

கோமகன்
ஓவியம்: டீன் கபூர்

        

(Visited 694 times, 1 visits today)
 

2 thoughts on “‘எனக்கு இரண்டுமே அதிகாரத்தின் மொழிகள்தான்’-நேர்காணல்- தில்லை”

Comments are closed.