பறக்கும் யானைகள்-சினிமா விமர்சனம்-பாகம் 13-விஜய ராவணன்

Kothanodi  (Assamese, 2015)

கருநீல கண்கள் ஒளி வீசும் கடும்பச்சைநிற சிறகுகள் படைத்த பெயரறியா விலங்கொன்றின் சுவரோவியம் கண்ணில் பட்டது. முன்னங்கால்கள் அந்தரத்தில் மிதக்க , செதில் செதிலான உறுதியான சிறகுகள் படபடக்க  உள்ளொடுங்கி இறங்கும் வயிறு அதற்கு. செந்நிற ஜூவாலையைக் கக்கும் அந்த எட்டுக்கால் விலங்கினம் ஒரு வேட்டை நாயின் தோற்றத்தை ஒத்திருந்தது. ஓவியனின் சுதந்திரத்தில் வாய்க்கப்பெற்ற அதன் பாரமான சிறகுகள் உயர பறக்க எத்தனித்துக் கொண்டிருந்தன. மூச்சுக் காற்றாய் நெருப்பைக் கக்கும் ஆற்றலையும் அதன் முதிர்ந்த சிறகுகளையும் ஒரு வளர்ந்த டிராகனிடமிருந்து ஓவியன் அதற்கு கடனளித்திருக்கலாம்.

கண்டவையும் காணாதவையும் செம்மண்நிற ஓவியங்களாகக் குகைகளின் இருட்டில் உருவடிவம் கொடுத்த போதே இவ்வாறாக இட்டுக்கட்டிச் சொல்லும் செவிவழிக் கதைகளும் கற்பனைகளும் பிறந்திருக்க வேண்டும்.

ஒருவேளை அப்படியான கதைகள் உருப்பெறா விட்டால், நேரில் கண்ட காட்சிகளும் பழக்கப்பட்ட உருவங்களும் மட்டுமே புனைவுகளிலும் மீண்டும் மீண்டும் வலம் வந்திருக்கக் கூடும்…

நான்கு சிறகுகள் படைத்த யானைகள் பற்றி சொல்லும் நாட்டார் கதைகள் பிறந்திருக்காது. ஏனைய விலங்குகளைத் துன்புறுத்திய அதன் கறுத்தப் பெரிய சிறகுகளைப் பற்றி நாமறிந்திருக்க மாட்டோம். கனவுகளினூடே கடவுள் யானைகளை மயக்கமுறச் செய்து தந்திரமாக அதன் சிறகுகளை வெட்டி எறிந்த விவரமும் நாமறியா.

வெட்டப்பட்ட யானையின் சிறகுகளில் இரண்டை மயிலுக்கும் மற்ற இரண்டை வாழை மரத்துக்கும் கடவுள் அளித்ததாகவும், கடவுள் பறித்துக் கொடுத்த அச்சிறகுகளின் நினைவு எழும்போதெல்லாம் யானைகளுக்கு மதம் பிடித்து விடுவதாகச் சொல்லும் பழங்குடி கதைகளை மறுத்தலிப்பதற்கு இல்லை.

விஜய ராவணன்

செவிவழி உருமாற்றம் அடையும் Folk கதைகளில் யானைகளுக்கு மட்டுமல்ல மனிதன் கூட சிறகுகள் படைத்தவன். கடவுளுக்கும் தேவதைகளுக்கும் மட்டுமே சொந்தமான வானில் அவனும் சுதந்திரமாகச் சிறகடிக்க வல்லவன்.

Bhaskar Hazarika யின் ‘Kothanodi’ (The River of Fables), அப்படியான நான்கு அசாமிய Folk கதைகளின் பின்னப்பட்ட கதைக்களம். கற்பனைகளின் எல்லைக் கதவை முட்டி மோதும் நட்டார் கதைகளின் பிரத்யேகமான அமானுஷ்யமும் மாயமும் நிறைந்த பிரம்மபுத்திரா நதிக்கரைக் கதைகள்.

அடர்கானகத்தின் நடு ஜாமத்தில், பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்கும் ஒரு தந்தையின் படபடப்போடு தொடங்கும் ‘Kothanodi’ யின் நான்கு கதைகளிலும் பெண்களே பிரதான கதைமாந்தர்கள்… ஒரு மண்ணின் வேர்வரை ஊடுருவிப் பாயும் நாட்டார் கதைகள் பேசும் மனித மனதின் ஆழத்தை அளந்து பார்க்க பெண் பாத்திரங்களே நுட்பமான அளவுகோல் .

பாட்டி சொல்லும் கதைகளின் முடிவுகளை நம்மால் ஊகிக்க முடியும் என்றபோதும் அதன் அமானுஷ்யங்களும் அற்புதங்களும் நம்மைச் சலிப்படைய செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் முன்பைவிட அதிகமான குறுகுறுப்புடனே செவிசாய்க்க வைக்கிறது. ஒருவேளை வாழ்வின் அனுபவங்களினூடே அவள் கதைசொல்லும் யுக்தியோ… அத்தனை திரிபுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அதன் வடிவமோ… ஏதோவொன்று விலகாத கனவைப் போல் மனதில் தங்கிவிடுகிறது.

நம்மைச் சுற்றி காற்றுவெளியெங்கும் வாய்மொழிக் கதைகளாய் நிறைந்திருப்பது, மூதாதையரின் முணுமுணுப்புகளும், ஆத்மாக்கள் தங்களுக்காகப் பேசிக்கொள்ளும் வாழ்நாள் அனுபவங்களின் எல்லைமீறிய கற்பனைகளும் தான். நித்யமாய் அழிவின்றி நம்மைச் சுற்றியே கதைகளாய் வாழ்கின்றன… மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட காட்சிகளுக்கும் மூச்சுமுட்டி நிற்கும் கற்பனைகளுக்கும் புனைவுகள் மட்டுமே ஊடுவழி.

அவ்விதத்தில் எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் அமானுஷ்யத்தைத் தழுவி ஆத்மாக்களைப் போல் அழிவற்றவையாகி விடுகின்றன போலும்…

Kwaidan (Japanese , 1965)

விஜய ராவணன்

கதைகளுக்கு நிறங்களை மொழியாக்கினால்…? அதிலும்  இருளின் நிழலுருவில் மறைந்துத் திரியும் அத்தகைய மாயப்புனைவுகள் வர்ணங்கொள்ளும் போது வெறும் அமானுஷ்ய கதைகள் என்ற படிநிலையைக் கடந்து நினைவுகளில் என்றென்றைக்குமாகக் கலையுருவம் கொள்கின்றன. மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று அத்தனை எளிதில் நம்மால் அவற்றைக் கடந்துவிட முடியாது.

‘Kwaidan’ வண்ணங்களினூடாய் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மர்மத்தைச் சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நான்கு ஜப்பானிய நாட்டார் கதைகள்.

காட்சிகளின் சாரத்திற்கேற்ப பிரம்மாண்ட வண்ணப் பின்னணித் திரையிட்டு மேடை நாடகத்தின் வடிவமைப்பில் நகரும் ‘Kwaidan’ திரைக்கதையில், பிரேதங்களும்… ஆவிகளும்… துர்தேவதைகளும் வெறுமனே நம்மைத் திகிலூட்ட முயலவில்லை. மாறாக அவற்றை எதிர்கொள்ளும் மனித மனங்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கு வெவ்வேறு வண்ணங்கள் தீட்டிக் காட்டுகின்றன.

ஒருவர் மீதொருவர் கதைகளை விட்டெறிந்து விளையாடவே மொழியினை நூற்றாண்டுகளாய் உழுது கொண்டிருக்கிறோம். வாய்மொழிக் கதைகளால் தன் ஆயிரம் கால்களை மெல்ல நகர்த்தி காலவெளியைக் கடந்து ஊர்ந்து செல்ல முடியும்… தன் அகண்ட பெரிய பழுப்புச் சிறகுகளால் கானல்நீரில் உலகின் எல்லை வரை நீந்திச் செல்ல முடியும்….

‘Kwaidan’ வரும் ‘Hoichi The Earless’ என்ற கதையில் போரில் உயிர் துறந்த ஆத்மாக்களும் அதையே விழைகின்றன. காலத்தின் ஜன்னல் கதவுகளை மூடிவைத்து தங்கள் வீரமரணத்தின் துதியினை அழியா கதைப்பாடல்களாக என்றைக்குமாக ஒலிக்கச் செய்வதன் மூலம் சாகா நிலையை எய்திட முற்படுகின்றன.

காற்றிலே விதைகளாய்த் தூவப்பட்டு… கட்டி எழுப்பப்பட்டு… மீண்டும் இடிக்கப்படுவதுதானே வாய்மொழிக் கதைகள். இடிந்து கிடக்கும் அக்கதைக் குவியலின் மேல் தான் பெருங்காப்பியங்களின் அஸ்திவாரங்களும் மெல்ல மேலெழும்புகின்றன.

‘The black Hair’  மற்றும் ‘The woman of the Snow’ நுட்பமான பின்னிசையாலும் செறிவான மௌனத்தாலும் பின்னப்பட்ட அமானுடக் கதைகள். பிசாசு கதைகளின் வழக்கமான வரம்புமீறிய திகிலின் திணிப்பற்றவை. வெறும் கிலியடையச் செய்யும் நோக்கற்றவை.

நாடோடிக் கதையொன்றில் இயற்கையிடம் மரணத்தை யாசித்த மனிதன் இப்படியாகக் கேட்கிறான்…

“மிருகங்கள் மரணிக்கின்றன. ஏன் மனிதன் மட்டும் சாகாமல் உயிர் வாழ்கிறான்?”

“மனிதனும் சாக விரும்புகிறானா?” எனச் சந்திரனும் சூரியனும் ஆவிகளும் பதிலுக்கு வினவினர்.

“நிச்சயமாக… முதுமையின் கஷ்டபாடுகள் அலைகழிக்கின்றன… மரணம் வாய்க்கப்பெற்றால் அதுவே சிறந்த மருந்தாக அமையும்…”

“அப்படியானால் இறந்த அணிலின் உடலைச் சாப்பிட்டால் சாகாவாழ்வின் பிணி தீரும். மனிதர்களையும் மரணம் தழுவும்…”

இயற்கையின் கூற்றின்படி இறந்த அணிலின் உடலை வெட்டி உலகத்து மனிதர் அனவைருக்கும் அவன் கொடுத்தான். சாவும் வந்தது. நித்யப் பிரிவிற்காக அழவும் கற்றுக்கொண்டான்.

ஒருவேளை மனித ஆத்மாக்கள் குடுவை மாறி அடைபட்டால்? தன் வாழ்நாள் அடையாளத்தைத் துறந்து வேறொரு மனித பிம்பத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டால்…? தனக்கு பரிச்சயமற்றதொரு ஆத்மாவை உண்டு செரித்தவனின் உணர்வுத் தெறிப்புகள் என்னவாக இருக்கும்? ‘In a Cup of Tea’ கதையில் சொல்லப்பட்டது போல் வேறொரு ஆத்மாவை விழுங்கியவனுக்கு எழுத்தாளனால் என்ன முடிவைச் சொல்லிவிட முடியும்?

நாட்டார் கதைகளைக் காட்சிபடுத்துவதில் உள்ள சாதகமும் சவாலும்,  இயல்பிலேயே அது உண்டாக்கும் நெருக்கமும் அவற்றைப் பற்றிய நாமறிந்த முன்முடிவுகளும் தான். பழக்கப்பட்ட கதைக்களம் எளிதில் உண்டாக்கிவிடக் கூடிய சலிப்பைக் கடந்து, அதன் எல்லையற்ற கற்பனையையும் சுவாரஸ்யத்தையும் சிறிதும் குன்றாமல் உள்ளங்கைக் குளிர்ச்சி போல் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நிமிர்ந்து நிற்கும் கதைக் கட்டுமானத்தை அசைத்துப் பார்த்து நொடிப்பொழுதில் நம்மை விலகி நிறுத்தவல்ல அச்சவால்களை எதிர்கொள்ள நுட்பமான அதேநேரம் நெருக்கமான திரைமொழி இன்றியமையாதாகிறது,  ‘KWAIDAN’ யில் ‘Masaki Kobayashi’ க்கும், ‘KOTHANODI’ யில் Bhaskar Hazarika க்கு வாய்க்கப்பெற்றதைப் போல்…

விஜய ராவணன்

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

(Visited 79 times, 1 visits today)