சமூக நல்லிணக்கம்-கட்டுரை-பவானி தம்பிராஜா

பவானி தம்பிராஜா சமூக நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் இன, மத, மொழி, குடும்ப உறவுகள் என்பவற்றில் உண்டாகும் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு என்பவற்றை குறிக்கும். இது பல்வேறு அமைப்புக்களின் அடிப்படையில் வேறுபடுகின்ற இரு சாராருக்கு மத்தியில் ஏற்படுகின்ற ஒருமைப்பாட்டினை குறித்து நிற்கின்றது. (இக்கட்டுரையில் சமூக நல்லிணக்கம் எனச் சுட்டிக்காட்டப்படுவது இன, மத, மொழி சார்ந்த விடயங்களாகும்.)

மேற்படி சுட்டிக் காட்டப்பட்ட சமூகநல்லிணக்கம் என்பது எமது சமூகத்தில் பேசாப்பொருளாகவோ, வலியுறுத்தப்படாத ஒன்றாகவோ இல்லை. கோட்பாட்டு நிலையில் இருந்தும் இல்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது. எனது இனம், மதம், மொழி என்னும் உணர்வு ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கலாம். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்கலாம். அதாவது ஒரு மனிதனுக்கு இன, மத, மொழி பற்று இருக்கலாம். ஆனால் இவைகுறித்த வெறி இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் அதுவே முரண்பாடுகளைத் தோற்றுவித்து சமூக நல்லிணக்கத்திற்கான தேவையை ஏற்படுத்தும். எமது நாட்டிலும் இதுவே இன்று பாரிய பிரச்சினையாக உள்ளது.

எனவே,

ஒரு நாட்டில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும்  சமூக நல்லிணக்கமின்மை முதலிய ஆரோக்கியமற்ற, பிற்போக்கான சிந்தனைகள் இல்லாதொழிவதற்கு அந்நாட்டில் வாழும் பழைய தலைமுறையினரின் சிந்தனையோட்டங்கள் மரபுடன் இயைந்து காணப்படுவதும், புதியவற்றை ஏற்காது தவிர்த்தலும் ஒரு காரணமாகும்.

சுபீட்சமான எதிர்காலத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அது இன்றைய இளையோர்களின் சிந்தனைத் தெளிவின் மூலமே பெற முடியும். “இளங்கன்று பயம் அறியாது” என்னும் முதுமொழிக்கேற்ப இளையோர் மத்தியில் ஏற்படுத்தப்படும் நல்ல சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான அத்திவாரமாகும். அவ்வகையில் பின்வரும் மாற்றங்களை இளையோர்களினூடாக ஏற்படுத்தும்போது சமூக மாற்றமும், சுபீட்சமான எதிர்காலம் மலரும் என எதிர்பார்க்க முடியும்.

முதலில் குடும்பத்தில் பெற்றோர்கள், பெரியோர்களினூடாகச் சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு ஆண் – பெண் என்னும் வேறுபாட்டை ஏற்படுத்தி உள ரீதியாகப் பிளவுபடுத்தாது, பால் வேறுபாட்டிற்கு அப்பால் பெண்பிள்ளைகளை தைரியமாகச் சிந்திக்க வைப்பதற்கும், சமூகத்தில் எதையும் எதிர்கொள்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தப் பெரியோர்களுக்கான அறிவூறுத்தல்களை வழங்கச் சமூக நிறுவனங்கள் முன் வர வேண்டும். இளையோர்களின் சிந்தனை மாற வேண்டும் என்றால் முதற்கண் அவர்களை உருவாக்கும் இல்லம், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் இன, மத, மொழி என்பவற்றிட்கு அப்பால் நாம் அனைவரும் மனித இனம் என்னும் உயரிய சிந்தனைகளைப் பெற்றோர்களினூடாகப் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அடுத்து, பாடசாலை மட்டத்தில் பால்நிலை, பால்நிலை சமத்துவம், சமூகநல்லிணக்கம் ஆகிய எண்ணக்கரு சார்ந்த உயரிய சிந்தனைகளைப் பரீட்சைக்குரிய பாடமாக மாற்றாது எவ்வாறு ஒவ்வொரு பாடசாலையிலும் உடற்பயிற்சி கட்டாயமாகப் பின்பற்றப்படுகின்றதோ அதே போன்று செயன்முறைசார்ந்த விழிப்பூட்டலாகப் பால்நிலை சமத்துவம், சமூக நல்லிணக்கம் கட்டாய பாடமாக்கப்படல் வேண்டும். இவை தொடர்பான கருத்தரங்குகளைச் செயன்முறையினூடாக மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் சிறந்த சிந்தனை மிக்க இளையோர்களினூடாகச் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். பால்நிலை சமத்துவத்தை, சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போட்டிகளை இளையோர் மத்தியில் நடாத்துதன் மூலம் இவற்றை மேலும் ஊக்குவிக்க முடியும்.

அறநெறி பாடசாலைகளில் சமய போதனைக்கு அப்பால் எப்படியொரு இன, மத, மொழி சார்ந்தவர்களைக் கௌரவிக்க வேண்டும் அவர்தம் கலாசார அடையாளங்களைப் பேண வேண்டும் என்பதை இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதப் போதனைகளினூடாக வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வியக்கங்கள் தத்தமது மதப் பெருமைகளைக் கட்டிக்காக்கும் அதே வேளை சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். மத குருமார்களும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர அரசாங்கம் இளையோர்களுக்கு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூகநல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டல்களை ஒரு சட்டமாகவும் கட்டாயத்திற்குரிய ஒன்றாகவும் மாற்ற வேண்டும். மேலும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில்புரியும் இளையோர்களுக்கும் கட்டாயத்திற்குரிய கருத்தரங்காக இவற்றை மேம்படுத்த வேண்டும். சிந்தனை மாற்றங்களுக்கான வழிகாட்டியாக அரச, தனியார் நிறுவனங்களின் கல்விகற்ற புத்தி ஜீவிகள் இளையோர் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வே எதிர்காலத்தில் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் வழிசமைக்கும்.

சமூகத்தில் ஏதாவதொரு பிரச்சினை நடைபெற்றால் உடனடியாக இவர் இந்த மதத்ததைச் சேர்ந்தவர். இந்த மொழியைச் சேர்ந்தவர். இந்த இனத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் மனிதன் என்பவன் குற்றங்களை இழைக்கக்கூடியவன். நன்மைகளையும் ஆற்றக் கூடியவன். ஆனால் எமது சமூகம் இன அடையாளத்தை ஏற்படுத்தவதாக எண்ணி இன்னுமொரு சமூகத்தின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை எள்ளி நகையாடி மனிதரிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலைமை மாற வேண்டும். ஒரு பிரச்சினை, கலவரம் ஏற்படும்போது நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் சிந்தனை கண்கொண்டு நோக்கிப் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறான சிந்தனைகளையும் இளையோரிடம் விதைக்க வேண்டும்.

ஒரு மதம், மொழி தொடர்பான கருத்துக்களை, சிந்தனைகளை இன்னுமொரு மதம், மொழி சார்ந்தவர் கற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் சமூக நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில் தன்னுடைய மதம்தான் பெரிது, தன்னுடைய மொழிதான் சிறந்தது என்னும் சிந்தனைகள் இன்றுவரை இளையோர் மத்தியிலும் இருந்து வரும் பாரிய பிரச்சினையாகும். இது இன ஐக்கியத்திற்கான சமூக நல்லிணக்கத்திற்கான வாயிலை மூடிவிட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். இலங்கையைப் பொருத்தவரையில் இங்கு வாழும் ஒவ்வொரு சமூகமும் தமது அடையாளங்களைப் பேணும் அதேநேரம் இன்னுமொரு மதம் தொடர்பான காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றை ஊடகங்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளில் எல்லாம் இவ்வாறான பிற்போக்கான சிந்தனைகளே உள்ளன.

ஒரு பிரதேசம் தனது கலாசார அடையாளத்தைப் பேணிவரும் இடத்தில் இன்னுமொரு கலாசாரத்தை சேர்ந்தவர் தமது மத அடையாளங்களையோ இன அடையாளங்களையோ பேண முடியாத, வெளிப்படுத்த முடியாத அவல நிலையும் எமது நாட்டில் உள்ளது. புனித தலங்களை அமைக்கவும், வழிபாடாற்றவும் முடியாத ஒரு போக்கு சிறந்த சமூகத்திற்கான தகுதியை அழித்து விடுகின்றது. ஒரு நாட்டில் பல் இனத்தன்மை இல்லாது இருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சொந்தம் ஆகும் என்னும் தேசிய உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். மாறாகப் பிரதேச உணர்வுடன் கூடிய இன, மத, மொழி மோதல்கள் இருக்கக் கூடாது என்னும் உயரிய சிந்தனையையும் இளையோர்களிடையே ஏற்படுத்தச் சமூக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

ஒரு நாட்டில் பின்பற்றப்படும் மொழிகள் அனைத்தையும் சம அளவில் அனைத்து மொழியினரும் அறிந்திருக்க வேண்டும் என்னும் சட்டம் இறுக்கமாக்கப்படுவதுடன், தமிழ் பிரதேசம், சிங்களப் பிரதேசம் என்னும் வகுப்பு வாதங்களை நீக்கிக் கலவன் முறையில் இருவேறு இன மக்களையும் ஊடாடிப் பழக விடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவற்றையும் இளையோர்களின் பொறுப்பாகப் பகிர்ந்தளித்து அவர்களையே செயலாற்றும்படி செய்தல் வேண்டும். மேலும் ஆண் – பெண் என்னும் பாகுபாடின்றி இருசாராரையும் இச்செயற்பாட்டில் பங்கேங்பதற்கு வழிவகுக்கும்போது பால்நிலை சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் ஒன்றில் ஒன்று செல்வாக்குச் செலுத்துவதுடன் இரண்டும் பரஸ்பரமாகச் சமூக வளர்ச்சிக்குத் துணை செய்யும் என உறுதியாகக் கூற முடியும்.

பவானி தம்பிராஜாஹொலண்ட்

பவானி தம்பிராஜா

(Visited 5,363 times, 1 visits today)