மண் அதிகாரம்-கவிதை-பவானி தம்பிராஜா

மண் அதிகாரம்

அழகே உன்னை
ஆராதிக்கிறேன்
துளிராகித் தளிராகி
பூத்துக்குலுங்கி
காயாகிப் பழமாகி விதை சொரிந்து
உன் பொன்நிற உடை கழைந்து
மண்ணுக்குக் கொடுத்து
அதை உரமாக்கிவிட்டு
நீ மட்டும் நிர்வாணமாய் நிற்கின்றாயே
உன் கருணையை, தியாகத்தை என்னவென்பேன்.

மண்ணைத் தோண்டி
மாணிக்கக் கல்லும், பொன்னும் ,எரிவாயுவும் எடுப்போரும்
மண்ணுக்குள் தமது பிளாஸ்றிக்கையும்
களிவெண்ணைகளையும் புதைப்போரும்
மண்ணைக் குடைந்தொரு சுரங்கப் பாதை அமைப்போரும்
வாழும் இந்த உலகில் நீயொரு தியாகியே!
நீயொரு தியாகியே!

உன் தியாகச்சுடர் எழுந்து
சூரியனைச் சுடும்
வானம் பனி பொழியும்
அந்தப் பனிப்படலம் வந்துன்னை
போர்வையாய் மூடிக் கட்டியணைத்தொரு முத்தம் தரும்.
அந்த நிலவும் இறங்கி வந்து
உன்மீது அமர்ந்து ஔியை வீசும்.
அந்த விண்மீன்களும் உன்னைப்பார்த்துக் கண்சிமிட்டும்.
இரவின் மயக்கத்தில்
இயற்கையின் தாலாட்டில்
மெய்மறந்து உறங்குவாய் நீ.

காலைக்கதிரவன்
தன் கதிர்களை விரித்து
உன் போர்வை களைந்தொரு
வேடிக்கை செய்வான்.
மென்மையாய்க் கதகதப்பாய்
தன் கதிர்களால் உனையணைத்து
உன் அழகை ஆராதிப்பான்.

பவானி தம்பிராஜா -ஒல்லாந்து

பவானி தம்பிராஜா

(Visited 164 times, 1 visits today)