ஓவியர் வின்சென்ட் வான் கோக் (1853-1890) -அவரது ஓவிய வாழ்வு ஒரு நோக்கு-பவானி சற்குணசெல்வம்

பவானி தம்பிராசா நெதர்லாந்தின் கலை வரலாற்றில் மிகவும் பிரபலமான ஓவியர்களில் ஒருவர் வின்சென்ட் வான் கோக். இக் கலைஞர் உலகளவில் அறியப்பட்டவர். அவரது கலைப் படைப்புகள் மட்டுமல்ல, கலைஞரின் கொந்தளிப்பான வாழ்க்கையும். அறியப்படவேண்டிய ஒரு விடயம்தான்.

மாபெரும் ஓவியக்கலைஞனாகப் புகழின் உச்சியைத்தொட்ட இந்தக்கலைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் இருந்த சிக்கல்கள், இவரின் மென்மையான உள்ளம், காதல், பெறப்படாத அன்பு, அனுபவிக்கப்படாத ஆசை, ஏக்கம் , தவிப்பு, பரிவு, ஆற்றாமை, கலை உணர்வின் வெளிப்பாடுகள், தன்னையே தான் புரிந்து கொள்ள முடியாத நிலை, விரக்தி, மனக் கொந்தளிப்புகளின் விழிம்பில் நின்று படைக்கப்பட்ட கலை வடிவங்களுக்கு பிற்காலத்தில் கிடைத்த வெகுமதி போன்ற பல விடையங்கள் இன்றும் நுண்ணறிவு ஆய்வாளர்களினால் புருவத்தை உயர்த்தி வியந்து பார்க்கப்படும் விடயங்களாகவே காணப்படுகின்றன. இவரைப் போல் பல கலைஞர்களின் பின்னணிகள் இருந்திருக்கின்றன. அவை பேசாப்பொருட்களாக மறைக்கப்பட்டிருக்கலாம், தெரியாமலோ அல்லது புரியப்படாமலோ கூடப் போயிருக்கலாம். வான் கோக் இன் வரலாறு ஒரு கலைஞனை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கான ஒரு திறவுகோலாக அமைந்துள்ளதெனலாம். உலகின் புகழ்பூத்த பல கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணி வான் கோக்-ன் வாழ்க்கைப் பின்னணியுன் ஒப்பிடக்கூடியதாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

பவானி தம்பிராசா வின்சென்ட் வான் கோக் 1853 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி நெதர்லாந்திலுள்ள பிரபாண்டில் ஜுண்டர்ட் நகரில் தியோடரஸ் வான் கோக் மற்றும் அவரது மனைவி அன்னா கொர்னேலியா கார்பென்டஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை கிராமத்தில் சீர்திருத்த தேவாலயத்தின் போதகராக இருந்தார்.

தனது 16 வயதில், வான் கோக் , நெதர்லாந்திலுள்ள ஹேக்கிற்கு பிரெஞ்சு கலை மற்றும் அச்சு வர்த்தகக் கலை கற்பதற்காகவும் சீவின் ஹேக் கிளையில் பணியாற்றுவதற்காகவும் புறப்பட்டார். ( ஓவியங்களை வைத்துத் தள்ளிச் செல்வதற்கு) அவரிடம் ஒரு தள்ளுவண்டில் இருந்தது. அவரது மாமா இந்த நிறுவனத்தில் இணை பங்காளராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில், வின்சென்ட் தனது சகோதரர் தியோவுக்கு கடிதங்களை எழுதத் தொடங்கினார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இதைத் தொடர்ந்து செய்தார் என்பது இங்கு  குறிப்பிடத்தக்க விடயம்.

வின்சென்ட் வான் கோக் பாரிஸ் மற்றும் லண்டனில் உள்ள கலை விற்பனையாளர்களின் கிளைகளிலும் சிறிது காலம் பணியாற்றினார். லண்டனில் அவர் தனது வீட்டு உரிமையாளரின் மகளை காதலித்தார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே வேறொருவருக்கு நிட்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. திரும்பப் பெறப்படாத ஒருதலைக்காதல் வின்சென்ட் ஒரு காலகட்டத்தில் மனச்சோர்வின் எல்லைக்கு செல்ல வழிவகுத்தது. எனினும் வான் கோக் காட்சி கலைகளைப் பற்றிய  அறிவை அங்கு வளர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் அது அவருக்கு நன்மை பயக்கும் ஒன்றாக அமைந்தது. பாரிஸில் வசிக்கும் போது, ​​வின்சென்ட் கலைஞர் ஜீன்-பிரான்சுவா மில்லட்டின் விவசாயிகள் காட்சிகளையும் ஜூல்ஸ் பிரெட்டனின் யதார்த்தமான கிராமப்புற காட்சிகளையும் பார்த்தார். இந்தப் படைப்புகள்  வான் கோ மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, பின்னர் அவர் பல விவசாய காட்சிகளை வரைந்து வந்தார். அவரது ஓவியம் “உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள்” இதற்கு சிறந்த உதாரணம். வான் கோக் ஏழ்மையின் வலியை உணர்ந்த கலைஞன். உழைப்பின் உயர்வைப் போற்றிய கலைஞன். இவரின் படைப்புகளின் ஊடாக இது துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

1876 ​​ ஆம் ஆண்டு வின்சென்ட் வான் கோக் கலை வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் இங்கிலாந்தின் ராம்ஸ்கேட் புறப்பட்டார், அங்கு அவர் துணை பாதிரியார் ஆனார். பின்னர் அவர் இஸ்லேவொர்த்தில் உதவி பாதிரியார் ஆனார். 1878 ஆம் ஆண்டின் இறுதியில், வான் கோக் போரினேஜுக்கு (ஹைனாட்டின் வால்லூன் மாகாணத்தில் உள்ள பகுதி) அனுப்பப்பட்டார், அங்கு அவர் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு போதகராகப் பணியாற்றினார். வான் கோக் இங்கே ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து சென்றார். அவர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டார். பிரான்ஸ்சின் 1888 குளிர்காலத்தில், கலைஞர் பிரான்சின் தெற்கே பயணம் செய்தார். இயற்கையில் அவர் சந்தித்த புதிய வண்ணங்கள் மற்றும் விளக்குகள் அங்கு அவரின் மனதைத் தொட்டன. பிரெஞ்சு நகரமான ஆர்லஸில், வான் கோக் பல ஓவியங்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், பல  கடிதங்களையும் எழுதினார், குறிப்பாக அவரது சகோதரர் தியோவு அவரது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தார். தியோ தனது சகோதரனை நம்பினார், மேலும் அடிக்கடி வின்சென்ட்டுக்கு பணம் அனுப்பினார். ஆர்லஸ் பயணத்திற்கு தியோவும் நிதியளித்தார். வின்சென்ட் வான் கோவின் கடிதங்கள் ஒரு வகையான தொடர்ச்சியான நாட்குறிப்பை உருவாக்கி, கலைஞரின் எண்ணங்கள் மற்றும் கலை பற்றிய அவரது கருத்துக்கள் பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்கியுள்ளன. தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், கலைஞர் பிரான்சின் ஆவர்ஸ்-சுர்-ஓயிஸில் வசித்து வந்தார். கலை ரீதியாக அவர் இங்கு மிகவும் தனது திறமைகளைக் காட்டி வளர்ச்சி பெற்றார்.  வான் கோக் பொதுவாக கிராமப்புற சூழலில் மகிழ்ச்சியாக இருந்தார், அவருடைய மருத்துவர் டாக்டர் கச்செட், இந்த காலகட்டத்தில் முக்கியமாக ஓவியத்தில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார், கலைஞர் ஆவர்ஸ்-சுர்-ஓயிஸில் குறைந்தது எண்பது படைப்புகளைச் செய்தார், அவற்றில் சில படைப்புகள் இன்று மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இந்த படைப்புகளைப் பற்றி வின்சென்ட் வான் கோக் கலைஞரே ஒருமுறை எழுதியுள்ளார்

வின்சென்ட் வான் கோக் கலையைப் பொறுத்தவரை  நல்லதொரு காலத்தை இங்கு கடந்து சென்றபோதும் அவரின் மனநிலை பாதிக்கப் பட்டதால் மன அழுத்தம் காரணமாக ஒருவருடகாலம் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றார்.bஅவர் தனது மனநிலைபற்றிக் கூறும்போது “என்னால் என்னைப் புரிந்த கொள்ள முடியவில்லை சில கணங்களில் எந்தக் காரணமும் இல்லாமல் அதி கூடிய பயமாக இருக்கிறது. சிலகணங்களில் மனதில் ஒரு வெறுமை மனதில் சோர்வு,  களைப்பு…… ஒவ்வொரு நாளும் நான் மறக்க முடியாத தற்கொலைக்கு எதிராக பரிந்துரைக்கும் மருந்தைப் பயன்படுத்துகிறேன். அதில்  ஒரு கோப்பை வைன் ஒரு துண்டு பாண் ஒரு குழாயில் வைத்து ஊதும் புகையிலை ஆகியவையும் அடங்கும். ”என்று  கூறியுள்ளார்.

கடந்த 120 ஆண்டுகளில், பல மனநல மருத்துவர்கள் ஏற்கனவே ஓவியரின் மனநிலையை ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், வான் கோவின் கலைக்கும் அவரின் மனநோய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பதிலளிக்க கடினமான கேள்வியாகவே உள்ளது. வான் கோவின் சகோதரி வில்லெமியனுக்கு எழுதிய கடிதத்தில், அவரது சகோதரர் தியோ ஒருமுறை எழுதினார்:

“அவனுக்குள் இரண்டு பேர் இருப்பதைப் போன்று இருக்கிறது, ஒருவர் அன்பான அற்புதமானவர் நல்லவர், மென்மையானவர்; மற்றவர் தனக்குள் போராடும்  கடினமான உள்ளம் கொண்டவர்.” உலகப் பிரசித்தி பெற்ற ஓவியக் கலைஞன் வான் கோக் பித்தனா என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தத்தளிக்கும் மனநல வைத்தியர்களின் நிலை ஒருபுறமிருக்க ஒரு கலைஞனை மற்றவர்கள் எப்பொழுதாவது சரியாகப் புரிந்து கொள்ள முடியுமா ? மிகச் சிக்கலான உளவியல் தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கலைஞரா என்ற இன்னொரு கேள்வியுடன் அவன் கலைஞனா அல்லது பித்தனா அல்லது கலைப் பித்தனா என்ற கேள்விகளும் எளத்தான் செய்கின்றன.

உளவியல் ரீதியான நோய்த்தாக்கங்கள் பிறழ்வுகள் மிக உச்சக்கட்டத்திற்கு சென்றபோதெல்லாம், வின்சென்ட் மேலும் மேலும் விரைவாக வண்ணம் தீட்டத் தொடங்கினார். “நவீன வாழ்க்கையில் விஷயங்களை விரைவாக கடந்து செல்வதை” வெளிப்படுத்த அவரின் சொந்த வார்த்தைகளில். பிரபல கலை வரலாற்றாசிரியர் எர்ன்ஸ்ட் எச். கோம்ப்ரிச் ஒருமுறை வான் கோவின் ஓவிய நடை பற்றி எழுதினார்:

“அவர் பிரகாசமான, தூய்மையான வண்ணங்களை பரிசோதித்தார், அவர் தனது தட்டில் வைத்து அதைக் கலக்கவில்லை, ஆனால் அவற்றை நேரடியாக சிறிய கோடுகளாக அல்லது புள்ளிகளில் கேன்வாஸில் வைத்தார். அவர் அந்த இடத்தில் பார்வையாளரின் கண்ணை நம்புகிறார், அவர்கள் அதைப் ஒட்டுமொத்தமாக பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்க வேண்டும். வான் கோக் புள்ளிகள் மற்றும் கோடுகளில் ஓவியம் வரைவதற்கான நுட்பத்தை உணர்ந்தார், ஆனால் அவரது கைவரிசையில் அது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறியது. ஏனெனில் அவர் நிறங்களின் வலிமையை மாற்றியமைக்க மட்டும் அதைப் பாவிக்கவில்லை தனது அதீத உணர்வுகளையும் அதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்”

ஆர்லஸிலிருந்து வான் கோக் எழுதிய ஒரு கடிதத்தில், அவர் தனது உத்வேக நிலைகளை விவரிக்கிறார், “உணர்ச்சிகள் பெரும்பாலும் பலமாக இருப்பதால் நான் என்னை அறியாமல் படங்களை வரைகிறேன்… நான் வரையும் படங்களின் வரிகளும் பேசும் வார்த்தைகளின் வரிகளும் உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியபடியே…” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பவானி தம்பிராசா பிரான்ஸ்சில் வாழ்ந்த காலங்களில் பிரான்ஸ் ஓவியர் பால் கௌகுயினுடன் சில காலங்கள் நண்பர்களாக இருந்ததாகவும் அவருடன் சேர்ந்து ஒன்றாக ஓரிடத்தில் தங்கியிருந்த காலங்களில், நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை , நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை என்று தொடங்கிய உரையாடலின் போது இரு கலைஞர்களும் ஒரே பெண்ணைத்தான் காதலித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அதனால் இருவருக்குமிடையில் நடந்த  தகராரின் போது பால் கௌகுயின் வான்கோகைத் தனது சவரக்கத்தியைக் காட்டி (blade) பயமுறுத்தியதால் மனக்கிளர்ச்சி அடைந்த வான்கோக் ஒரு கணப்பொழுதில் தனது காதை வெட்டியதாகக் கூறப்படுகிறது.  வான் கோக் தனது காதைத் துண்டிக்கவில்லை என்றும், ஆனால் இந்த வாதத்தின் போது பிரெஞ்சு ஓவியர் பால் கௌகுயின் வான் கோகின் காதின் ஒருபகுதியை மட்டும் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆர்லஸில் வான் கோவுடன் சிறிது காலம் வாழ்ந்த கௌகுயின் தனது சுயசரிதையில் காது முழுவதும் துண்டிக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார். இருப்பினும், ஓவியர் சிக்னக் மற்றும் சகோதரர் தியோவின் விதவை உட்பட மற்றவர்கள் இது பற்றி தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை. புகழின் உச்சியைத் தொட்ட இந்த மாபெரும் கலைஞனுக்கு காதல் கைகூடி வரவில்லையென்பது வரலாற்றினூடே அறியப்படுகிறது.

பவானி தம்பிராசா ஜூலை 1890 இல், கலைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். சில தகவல்களின்படி, கலைஞர் ஆவர்ஸுக்கு அருகிலுள்ள கோதுமை வயலில் ஒரு ரிவால்வர் மூலம் மார்பில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், பின்னர் அவர் தங்கியிருந்த சத்திரத்தில் முப்பது மணி நேரம் கழித்து இறந்தார்  என்றும் கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது சகோதரர் தியோவும் இறந்தார். வின்சென்ட் மற்றும் அவரது சகோதரர் இருவரும் அருகருகே ஆவர்ஸ்-சுர்-ஓயிஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வின்சென்ட் மற்றும் தியோ இறந்த சில நாட்களுக்குப் பிறகு, பிந்தையவரின் விதவை ஜோஹன்னா வான் கோக்-போங்கர் மீண்டும் நெதர்லாந்து சென்றார். அவர் கணிசமான எண்ணிக்கையிலான வான் கோவின் ஓவியங்களையும் கொண்டு வந்தார். அவர்  மிக அரிதாகவே தனது மைத்துனரின் படைப்புகளை விற்றார். அது அதிக பணத்தை அவருக்கு சம்பாதித்துத்தரவில்லை. எனினும்1905 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்டெடெலிஜ்க் அருங்காட்சியகம் வின்சென்ட் வான் கோவின்

பவானி தம்பிராசா

படைப்புகளை ஒரு தனி கண்காட்சியில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்தது. ஹெலன் க்ரூலர்-முல்லர் என்ற பணக்கார பெண் வின்சென்ட் வான் கோவின் வேலையால் வசீகரிக்கப்பட்டார். இந்தப் பணக்காரப் பெண் வான்கோக் நவீன ஓவிய உலகின் மிகத்திறமைவாய்ந்த ஓவியன் என்று அவனைப் பாராட்டி அவரின் ஓவியங்களின் பால் ஈர்க்கப்பட்டாள். 1908 மற்றும் 1929 க்கு இடையில், அவரது கணவர் அன்டனுடன் சேர்ந்து, வின்சென்ட் வான் கோக்கின் பல படைப்புகளை வாங்கினார், இது அவரது படைப்புகளை  ஏனையோரும் பார்த்துப் பாராட்ட ஒரு முக்கியமான தூண்டுதலைக் கொடுத்தது. தற்போதைய க்ரூலர்-முல்லர் அருங்காட்சியகத்தில் அதன் சேகரிப்பில் 90 க்கும் குறைவான ஓவியங்களும் வான் கோவின் 180 க்கும் மேற்பட்ட வரைபடங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகின் இரண்டாவது பெரிய வான் கோ சேகரிப்பாக திகழ்கிறது. மிகப்பெரிய சேகரிப்பை ஆம்ஸ்டர்டாமில் உள்ள வான் கோ அருங்காட்சியகம் நிர்வகிக்கிறது, இது 1973 இல் திறக்கப்பட்டது மற்றும் நெதர்லாந்தில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் வான் கோ அருங்காட்சியகமும் ஒன்றாகும்.

36 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்த இந்த மாபெரும் ஓவியக் கலைஞன் வின்சன்ட் வான் கோக்கின் ஓவியக் கண்காட்சியைக் கண்டு களிக்க விரும்புவோர் பின்வரும் யூரியூப் இணையத்தை உபயோகிக்கலாம்.

பவானி சற்குணசெல்வம்-நெதர்லாந்து

(Visited 334 times, 1 visits today)