ஏன் ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் ?-கட்டுரை-பவானி தம்பிராஜா

பவானி தம்பிராஜா ஒரு பெண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூகம் ஒரு பார்வையை வைத்திருக்கிறதோ, அதைப் போலவே ஆண் மீதும் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. கட்டுப்பாடுகள் என்பது இங்கு பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் இருக்கிறது. பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆண்களுக்கு அவ்வளவு கவனம் அளிக்கப்படுவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த சமூகம் ஆண்களை எந்த நிலையில் வைத்துள்ளது என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

ஓர் ஆண் மனிதனாக இருக்க வேண்டும் என்பதை விட ஆணாக இருக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள்.

ஆண்கள் மீது இந்த சமூகம் வைத்துள்ள அடிப்படைப் பார்வை இன்னும் மாறவில்லை. ஒரு ஆண் என்பவன், பாதுகாவலனாக இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பது அவர்கள் பொறுப்பு. இரண்டாவது. ஆண் வலிமையானவனாக இருக்க வேண்டும்.

மூன்றாவது பணம். “பெண்கள் என்றால் அழகாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும்.” இதுவும் இந்த சமூகத்தின் அபத்தமான பார்வைகளில் ஒன்று.

இது ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண்களின் பிரச்சனை பெரிதாக பேசி முன்னெடுக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஆண்களின் பிரச்சனையை அவர்களே பல நேரங்களில் பேசுவதில்லை.

“ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. ஆனால், அதனை வெளியே காண்பிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை”

சட்டம் பெண்களை அதிகம் பாதுகாக்கிறதா?

பெண்களுக்கு இருக்கும் அதே ஆசையும், காதலும், பொறுப்பும் ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால், குழந்தை பாதுகாப்பு (Child Custody) வழக்குகளை எடுத்துக் கொண்டால், குழந்தைகள் பெண்களுடனே அனுப்பப்படுகிறார்கள்.

பெண்களால் மட்டுமே குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. குழந்தை வளர்க்கும் பொறுப்பு ஆண் பெண் இருவருக்குமானது என்பதை ஏற்றுக் கொள்ள இன்னும் இந்த சமூகம் தயாராக இல்லை. சில நேரங்களில், ஆண்களிடம் இருந்து குழந்தையை வளர்ப்பதற்கான பணம் வாங்கப்படுகிறது.

“ஒரு காலத்தில் ஆண்கள் பக்கம்தான் சட்டம் இருந்தது. தற்போது அது மாறியுள்ளது என்று கூறலாம். அந்த காலத்தில் ஆண்களிடம் பணம் இருந்தது. தற்போது, பெண்களும் சமமாக சம்பாதிக்கிறார்கள். எனினும், ஆணை விட பெண்களால் தம் குழந்தைகளை உணர்வு ரீதியாக சிறப்பாக ஆதரிக்க முடியும். என்பதினால், அவர்களுடன் குழந்தைகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் இங்கு அதிகம்தான். அதே நேரத்தில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கின்றன.

ஆனால், அதனை வெளிப்படுத்தினால், எங்கு தான் வலிமையற்றவனாக தெரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் பலரும் இங்கு வெளியே சொல்ல தயங்குகிறார்கள். பெண்கள் பாலியல் புகார் அளிப்பது பெரிதாக பேசப்படுவது அல்லது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுபோல, ஆண்களின் புகார்கள் இங்கு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஒரு ஆண் கூறினால், “நீ ஆண் தானே. உன்னால் தடுக்க முடியவில்லையா என்று கேட்டு அவர்கள் மீதே குற்றம் சுமத்துகிறோம்” என்கிறார் ஒரு மனநல ஆலோசகர். பெண்களின் உடலமைப்பு ஆண்களின் உடலமைப்பைவிட வேறுபட்டது அதனால் சட்டரீதியாகப் பார்த்தாலும் பாலியல் வன்முறை சம்பந்தமான ஆண்களின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தாம்பத்தியம்

ஒரு தாம்பத்திய உறவை எடுத்துக் கொண்டால் கூட, ஒரு பெண்ணால் ஒத்துழைக்க முடியவில்லை என்றால் அவள் அச்சப்படுகிறாள் என்று கூறுவார்கள். அதனை ஏற்றுக் கொள்வதில் இங்கு யாருக்கும் பிரச்சனை இருந்ததில்லை. அதே நேரத்தில் ஒரு ஆணால் ஒத்துழைக்க முடியவில்லை என்றால், அவருக்கும் பதற்றம் அல்லது பயம் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது ஆண்மை சம்மந்தப்பட்ட விஷயமாக்கப்படுகிறது.

அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு அதிகளவு மன அழுத்தம் (Depression) இருந்தாலும், ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களது உணர்ச்சியை வெளிப்படுத்த நாம் விடுவதில்லை. இதே நேரத்தில் பெண்கள், மற்றவர்களிடம் புலம்பி அதனை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

உலக அளவில் ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக 2016ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

“ஆண்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அவருக்கு, ஒரு பெண்ணின் பிரச்சைனையையும் தீர்க்கும் வல்லமை இருப்பதாக நம்பப்படுகிறது. ஆண்கள், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்காளாக நிற்கின்றனர். அழுகை என்பது பெண்மையின் வெளிப்பாடாக பார்க்கப்படுவதால், ஒரு ஆண் அழுவது அவர்களின் ஆண்மைக்கு இழுக்காக பார்க்கப்படுகிறது.

ஆண்களுக்கும் பதற்றம், கவலை எல்லாமே உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆணின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

தான் பதற்றப்படக்கூடாது, கவலைப்படக்கூடாது, மனம் விட்டுப் புலம்பக்கூடாது, கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது, எல்லா இடங்களிலும் தானே எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும். இவ்வாறு அவர்களுக்கு நாம் அழுத்தம் தருகிறோம்.

ஆண்கள் வித்தியாசமாக விஷயங்களை அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும்,

மிகவும் வெளிப்படையான காரணம் என்னவென்றால், ஆண்கள் பிரச்சினைகளுக்கு உதவியை நாடுவதில்லை. பெண்களை விட உளவியல் உதவியை நாடுவதில் அவர்கள் பொதுவாக மிகவும் எதிர்மறையானவர்கள் என்று 2005 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறுகிறது.

மனச்சோர்வடைந்த இளைஞர்கள் பெரும்பாலும் நண்பர்களை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை மறக்க, வேடிக்கையாக விருந்துக்குச் செல்கின்றனர். அப்படித்தான் அவர்கள் உணர்ச்சி சுமையை குறைக்கின்றனர். அதுவும் அவர்களின் பிரச்சினைகளை பின்னர் சமாளிக்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

இளம் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்ய நண்பர்களை நாடி, அனைத்து வகையான தீர்வுகளையும் கொண்டு வரத் தொடங்குகிறார்கள். திறந்த உரையாடல்கள் தங்களைத் தாங்களே மீட்டெடுப்பதற்கான அவசியமான படியாகக் கருதுகின்றனர். அது அவர்களுக்கு மனநல பிரச்சினைகளை சமாளிக்க உதவுகின்றது.

ஆண்கள் தமது உணர்வுகளை வெளியே கூறமுடியாமல் மனங்குமுறுகிறார்கள். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்வுகளைப் பற்றி பேசுவது குறைவு. அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும்போது, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லது தொழில்முறை ஆலோசகர்களுடன் அவர்களின் சொந்த பிரச்சினை பற்றி சொல்வது குறைவு. ஆண்கள் உணர்திறன் உடையவர்களாக இருக்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள், வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியில், அது அவர்களின் சொந்த பிரச்சினைகளில் மூழ்குவதற்கு காரணமாகிறது, ஆனால் அதை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

மற்றொரு சமூக காரணம் என்னவென்றால், பெண்களை விட ஆண்கள் புதிய வாழ்க்கை நிலைகளை சமாளிப்பது குறைவு. “மாணவர் முதல் ஊழியர் வரை, சிறுவன் முதல் இளம் பருவம் வரை, காதலன் முதல் தந்தை வரை. அவர்களின் அனுபவத்தில், இந்த புதிய பாத்திரத்தை அவர்களால் சமாளிக்கமுடிவதில்லை. அது இழப்புக்கு வழிவகுக்கும் ”என்று மனநல மருத்துவர் ஜான் மொக்கன்ஸ்டார்ம் கூறுகிறார். ஆண்கள் தங்களுடைய மனக்கஷ்டங்களை மறக்க மதுபானம் மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பது அதிகம். அத்தருணங்களில் அவர்கள் மனங்குழம்பியிருப்பதால் தெளிவாகச் சிந்தக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்தக்கணங்களில் அவர்கள் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

விஞ்ஞானிகளுக்கு கூட, இந்த வகையான விடையங்கள் பற்றி அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் கடினம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், ஆண்கள் பொதுவாக மிகவும் ஆக்ரோஷமானவர்கள் மற்றும் கடுமையான முடிவுகளை விரைவாக எடுப்பார்கள் என்பது தெளிவாகிறது.

கூடுதலாக, இயற்கையாகவே மனக்கிளர்ச்சி ( imspulsief)  உள்ளவர்கள் தற்கொலை செய்ய அல்லது அவ்வாறு செய்ய முயற்சிக்க அதிக வாய்ப்புள்ளது. குறைந்த செரோடோனின் ( serotonine )அளவும் ஆபத்து காரணி. ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் தற்கொலை நடத்தைக்கு வழிவகுக்கும். மனநலக் கோளாறு உள்ளவர்கள் தற்கொலை எண்ணங்களை உருவாக்கி தற்கொலை செய்து கொள்ளும் அபாயமும் அதிகம். அதனால்தான் ஆளுமைக் கோளாறுகள் குறித்து நிறைய அறிவு வைத்திருப்பது மற்றும் முந்தைய கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு உதவி வழங்குவது முக்கியம். வயதானவர்களை விட இளைய வயதில் எளிதாக உதவலாம்.

தற்கொலை எண்ணங்கள் பொதுவாக கடுமையான மன உளைச்சலுடன் இருக்கும். மனச்சோர்வடைந்தவர்கள், இருமுனைக் கோளாறு அல்லது ஸ்கிசோஃப்ரினியா இருப்பவர்கள் குறிப்பாக தற்கொலை செய்ய அல்லது அவ்வாறு செய்ய முயற்சிக்க அதிக வாய்ப்புள்ளது.

கலக்கத்தின் ஒரு கணம் மூலம் தற்கொலை (Suicide by a moment of bewilderment)

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவர் விருப்பத்துடன் குதிக்க முடிவு செய்தார். அவர் குதித்து தப்பித்து சிகிச்சையில் சென்றார். அவர் தனது உளவியலாளரிடம் உண்மையில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் இல்லை, ஆனால் திடீரென்று குதிக்கும் வேட்கையை உணர்ந்ததாக கூறினார். திகைப்பின் ஒரு பயங்கரமான தருணம். இந்த வகையான தற்கொலை முயற்சிகள் பெண்களை விட ஆண்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

குடும்ப அமைப்பு

ஆண் என்பது வேறு பெண் என்பது வேறு. ஒருவரையொருவர் புரிந்து கொள்வது என்பது சவாலான விடயந்தான். எனினும் ஒருவர் மற்றவரின் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு பரஸ்பர நம்பிக்கைகளை வளர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நமக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்து திருப்தியுடன் வாழப்பழகுவது முக்கியம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடாது  வாழ்க்கையில் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளித்து எமக்கென்று ஒரு குறிக்கோளுடன் திடமான நம்பிக்கையுடன் அந்த வாழ்க்கைப் பாதையில் சறுக்காமல் நடந்து செல்வதுதான் வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் ஒருவரை ஒருவர் சமமாக ஏற்றுக் கொண்டால், நீ அழுதால், நானும் அழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையை வளர்க்கும்போது ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி வளர்க்க வேண்டும். இது வாய் வார்த்தையாக மட்டும் அல்லாமல், ஆணும் பெண்ணும் சமம் என்பது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு முதல் சமுதாயமே குடும்பம்தான். அங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று நிரூபித்தால், வருங்காலத்தில் ஆண்கள் தினம், பெண்கள் தினம் என்று இல்லாமல் மனிதர்கள் தினம் என்ற ஒன்றை நாம் கொண்டாடலாம்

பவானி தம்பிராஜா -ஹொலண்ட்

பவானி தம்பிராஜா

 

(Visited 205 times, 1 visits today)
 

One thought on “ஏன் ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் ?-கட்டுரை-பவானி தம்பிராஜா”

Comments are closed.